World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's visit underscores US crisis in Afghanistan

ஒபாமாவின் வருகை ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது

By Bill Van Auken
30 March 2010

Back to screen version

ஞாயிறன்று இருளின் மறைப்பில் காபூலிற்கு வந்து திரும்பிய விதத்தில், ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஆப்கானியப் பயணம் தற்பொழுதைய போரின் விரிவாக்கத்திற்கு இடையே அமெரிக்காவை எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத்தான் எடுத்துக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் சென்னி ஆகியோர் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்திற்கு வந்ததைப் போலவே, காபூலிற்கு ஒபாமா வருகையும் அசாதாரணமான இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் முழு உரிமை பெற்ற ஆட்சியாளர் எனப்படும் ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் கூட கடைசி வரை பயணத்தைப் பற்றி ஏதும் தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தார்.

விமானத்தில் கூடஅழைத்துவரப்பட்டிருந்த நிருபர்கள் விமானம் புறப்படும் வரை அது எங்கு செல்ல உள்ளது என்று கூறப்படவில்லை. அவர்களுடைய கைத் தொலைபேசிகளும் பறிமுதலுக்கு உட்பட்டன. விமானம் புறப்படும் முன்பு Air Force One ஒரு மூடப்பட்ட பாதையில் இருந்து புறப்பட்டது. இது அதிகாரமற்ற அமெரிக்க இராணுவத்தினர் ஜனாதிபதியின் புறப்பாடு பற்றி அறிந்து கொள்ளுவதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

ஆப்கானிஸ்தானத்திற்கு வந்த பிறகு, அங்கு வருவதற்கான நேரத்தில் அரைவாசியான ஒபாமாவின் ஆறு மணி நேர வருகை, மிக அதிக பாதுகாப்பிற்குட்பட்ட அமெரிக்க பக்ரம் விமானத் தளம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்றிருந்த காபூலில் உள்ள ஆப்கானிய ஜனாதிபதி அரண்மனை ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிட்டது.

இந்த முன்னெச்சரிக்கைகளின் அடித்தளத்தில் இருந்த உண்மை, எட்டரை ஆண்டுகள் போருக்குப் பிறகும் கர்சாய் ஆட்சி அல்லது அமெரிக்கத் தலைமையிலான 120,000 துருப்புக்களும் நாட்டின் தலைநகர் உட்பட எங்கும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது என்பதுதான்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் பெரும்பாலும் ஆப்கானியப் பயணத்தை ஒபமா அமெரிக்கத் துருப்புக்களின் உள்ளக்கிளர்ச்சியை அதிகரிப்பதற்கு என்றும்(அவரை வரவேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட படையினரும் மரைன்களும் வந்திருந்தனர்) மற்றும் கர்சாயியிடம் உத்தியோகபூர்வ ஊழல் மற்றும் ஆட்சி வழிவகைகள் பற்றிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் என்றும் சித்தரித்தது.

இந்தப் பயணம் "ஒரு வாரம் உயர்ந்த தன்மையில் இருந்து ஒபாமாவிற்கு மகுடம்வைத்தது போல் இருந்தது. சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்ட வகையில் அவர் குறிப்பிடத்தக்க வகையில் உள்நாட்டு வெற்றியை அடைந்திருந்தார்..." இந்த உள்நாட்டு சட்டத்தை நிறைவேற்றிய முறையில், அமெரிக்க ஜனாதிபதி இப்பொழுது தன்னுடைய கவனத்தை அவருடைய முக்கிய வெளியுறவுக் கொள்கையான ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் கூடுதலான 30,000 அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவது பற்றிய முயற்சியில் திருப்பலாம்'' என நியூயோர்க் டைம்ஸ் எழுதியது.

ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கத் தலையீடு பற்றி ஒபாமாவின் அலங்காரச் சொற்கள் சுகாதாரப் பாதுகாப்பு "சீர்திருத்தம்" பற்றிய அவருடை கூற்றுக்களைப் போலவே தவறு என்பதுதான் உண்மை ஆகும். இரண்டின் அடித்தளத்திலும் அமெரிக்க முதலாளித்தவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் அதைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது முழுத் தாக்குதல்கள் என்பவைதான் உள்ளன.

துருப்புக்களிடையே ஒபாமா உரையாற்றுகையில் ஆப்கானிஸ்தானத்தின் அமெரிக்க நோக்கங்கள் பற்றிய விளக்கங்களை விந்தையான, பொருத்தமற்ற "ஆம், நம்மால் முடியும்" என்ற ஒலிக்குறிப்பில்தான் வெளிப்படுத்தினார். "அல் குவேடா மற்றும் அதன் தீவிர நட்பு அமைப்புக்களை நம் தடைக்கு உட்படுத்தி, தகர்த்து மற்றும் அழிக்க இருக்கிறோம்" என்றார் அவர். மேலும் தொடர்ந்து, "அதுதான் நம் பணி. அந்த இலக்கை அடைவதற்கு, இங்கு ஆப்கானிஸ்தானத்தில் நம் நோக்கல்களும் தெளிவாக உள்ளன. அல் குவேடாவிற்கு ஒரு பாதுகாப்பான உறைவிடத்தை நாம் இல்லாதொழிக்கப் போகிறோம். தலிபானின் செயல் இயக்கத்தை நாம் மாற்றிவிடுவோம். ஆப்கானியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்தின் திறமையை நாம் வலுப்படுத்துவோம். அதனால் அப்பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆப்கானிய மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்."

அமெரிக்கப் போருக்கு இவருக்கும் முன்னால் பதவியில் இருந்தவர் நியாயப்படுத்திக் கூறிய பொய்களை வார்த்தைக்கு வார்த்தை இவர் மீண்டும் கூறி, அல் குவேடாவுடன் ஆப்கானிஸ்தானத்தில் போரிட 100,000 துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றார். ஆனால் அமெரிக்க இராணுவத் தளபதிகளோ மொத்தமே 100 அல் குவேடா உறுப்பினர்கள்தான் நாட்டில் இருப்பர் என்று மதிப்பிட்டுள்ளனர்.

இப்போர் "முற்றிலும் தேவையானது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகவும் அடிப்படையானது. உள்நாட்டில் இருக்கும் மக்கள் உங்களைத் தான் நம்பியுள்ளனர்." என்று அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் West Point இல் ஆப்கானிய "விரிவாக்கம்" பற்றி அறிவித்த உரையைப் போன்ற அவருடைய முந்தைய பேச்சுக்களைப் போல் இல்லாமல், ஜூல் 2011க்குள் படைகளைத் திரும்பப் பெறும் திட்டம் பற்றி ஒபாமா எந்தக் குறிப்பும் காட்டவில்லை. மாறாக, அவர் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலவரையின்றித் தொடரும் என்று வலியுறுத்தினார்.

"ஒரு காரியத்தை ஆரம்பித்தபின் அமெரிக்கா அதைப் பாதியில் கைவிடுவதில்லை" என்று அவர் துருப்புக்களிடம் கூறினார். "நீங்கள் கைவிடமாட்டீர்கள், அமெரிக்கப் படைகள் கைவிட மாட்டா, நாம் இதில் தீவிரமாக உள்ளோம், தொடர்ந்து ஈடுபடுவோம், நம்முடைய பங்காளிகளுடன் சேர்ந்து நாம் வெற்றி அடைவோம்."

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு கொடுத்த உரையில் ஒபாமா அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு கால அட்டவணை தேவை. அதுதான் "ஆப்கானிஸ்தானத்தில் முடிவில்லாப்போரை நடத்துவதில் அமெரிக்காவிற்கு ஆர்வம் இல்லை" என்பதை நிரூபிக்கும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனாள் களத்தில் உள்ள துருப்புக்களுக்கு அதை அவர் குறிப்பிடவில்லை என்பது நாட்டை விட்டு அகலும் நோக்கம் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு இல்லை என்பதை வலுவாகக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவம் மற்றொரு குருதி கொட்டும் தாக்குதலை ஆப்கானிஸ்தானின் தென் மாநிலமான காந்தகாரில் நடத்த தயாரிப்புக்களைக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனாதிபதியின் பயணம் வந்துள்ளது. அப்போர் 900,000 மக்கள் கொண்ட, நெரிசல் நிறைந்த, காந்தகார் நகரத்தில் அமெரிக்கத் துருப்புக்களை நகர்ப்புறப் போரில் ஈடுபட வைக்கும்.

ஒரு "மூத்த இராணுவ அதிகாரியை" மேற்கோளிட்டு, திங்களன்று அசோசியேட்டட் பிரஸ், அமெரிக்கத் தலைமையிலான படைகள் ஜூன் மாதம் தாக்குதலைத் துவக்கும். அது தலிபானின் முன்னாள் தலைநகரமான காந்தகார் நகரத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் முஸ்லிம் புனித மாதமான ரமளான் துவங்குவதற்கு முன்பு, தலிபானை விரட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது.

இத்தாக்குதலுக்கு முன்னதாகவே, ஆக்கிரமிப்புத் துருப்புக்களிடையே இறப்பு எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆப்கானிஸ்தானத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 57 என்று உயர்ந்தது. 2009 ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் கொல்லப்பட்ட 28 பேர் என்ற எண்ணிக்கையைவிட இது இரு மடங்கு அதிகமாகும்.

காயமுற்றவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகியுள்ளது 2010ன் முதல் இரு மாதங்களில் 381 என்று உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டு இதே காலத்தில் 85 என்பதுடன் ஒப்பிடத்தக்கது. அதாவது கிட்டத்தட்ட 350 சதவிகிதம் அதிகம். இம்மாதம் முதல் ஆறு நாட்களில் மட்டும், சராசரியாக நாள் ஒன்றிற்கு 7 என்ற விதத்தில் 44 அமெரிக்க படையினர்கள் காயமுற்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் காயமுற்ற அமெரிக்க தரைப்படை, கடற்படையினரின் எண்ணிக்கை 50 என்பதுடன் ஒப்பிடப்பட வேண்டும்.

வரவிருக்கும் காந்தகார் தாக்குதல் மற்றும் மரபார்ந்த விதத்தில் கோடையில் நடக்கும் போர் அதிகரிப்பும் இருக்கையில், இந்தப் பெருகும் இறப்பு எண்ணிக்கைகள் இன்னும் தீவிரமாக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டு அமெரிக்கச் செய்தி ஊடகம் ஒபாமா கர்சாயைச் சந்தித்தபோது காபூல் கைப்பாவை ஆட்சியில் நீண்ட காலமாக இருக்கும் ஊழல் பற்றி கடுமையான வாக்குவாதம் கொண்டதாகச் சித்தரித்துள்ளபோது, இவைவிட அதிக அழுத்தமும் உடனடிக் கவலைகளும் இருந்தன என்பதற்குத்தான் வலுவான குறிப்புக்கள் உள்ளன.

குறிப்பாக, கர்சாய் சமீபத்தில் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் என்று காணப்படும் ஈரானுக்கும், சீனாவிற்கும் பயணித்தது பற்றி வாஷிங்டனில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

"மேற்கின் பிடியில் இருந்து அவர் நழுவுகிறார்" என்று ஒரு மூத்த ஐரோப்பிய தூதர் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

ஒபாமா ஆப்கானிஸ்தானத்திற்கு வருவதற்கு முந்தைய வார இறுதியில் கர்சாய் தெஹரானில் பாரசிகப் புத்தாண்டை ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டுடன் கொண்டாடினார். அங்கு இருக்கையில் அவர் ஈரானின் மிக்குயர் தலைவர் அயதொல்லா அலி காமேனீயையும் சந்தித்தார். முன்னதாக இம்மாதம் ஈரானியத் தலைவர் காபூலுக்கு உத்தியோகபூர்வமாக அஹ்மதிநெஜாட்டை வரவேற்றதை அடுத்து இது தொடர்ந்து வந்துள்ளது.

வாஷிங்டன் பெருகிய முறையில் ஈரானுடன் ஆக்கிரோஷக் கொள்கையைத் தொடர்ந்து, கூடுதலான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று கோரியும், இராணுவ ஆக்கிரோஷ அச்சுறுதல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதன் ஆப்கானிய வாடிக்கை ஆட்சிக்கும் தெஹ்ரானுக்கும் இடையேயான இந்த மறுஇணப்பு என்பது ஒபாமா நிர்வாகத்திற்கு முகத்தில் அடிப்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

இம்மாதம் முன்னாதாக ஆப்கானிஸ்தானத்திற்கு பயணத்திருக்கையில், அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ஆதாரமற்ற குற்றசாட்டான ஈரான் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆப்கானிய சக்திகளுக்கு பெயரிடப்படாத உதவியை அளிக்கிறது என்று கூறி அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்திரித்தார்.

இதே போன்ற அக்கறைதான் சீனாவிற்கு கர்சாய் மூன்று நாட்கள் போன வாரம் சென்றதிலும் காட்டப்பட்டுள்ளது. ஆப்கானிய இயற்கை வளங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் பிற பகுதிகளிலும் சீன முதலீடுகள் பயன்படுத்தப்படுவது பற்றி வாஷங்டன் தன் எதிர்ப்புணர்வைக் காட்டியுள்ளது. சீனாவின் முயற்சிகள் நெறியற்றவை என்று காணப்படுகின்றன; ஏனெனில் பெய்ஜிங் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறது.

பெய்ஜிங்கிற்கு கர்சாய் பயணிப்பதற்கு முன்னதாக, "ஆப்கானியச் சங்கடத்தில் சீனாவின் பங்கு" என்று மார்ச் 25ல் வெளியட்ட தலையங்கத்தில், உத்தியோகபூர்வ China Daily பத்திரிகை முற்றிலும் எதிரிடையான நிலைப்பாட்டை வெளியிட்டு, வாஷிங்டன் தன்னுடைய இராணுவ நிலைநிறுத்தலின் மூலம் சுரண்டுகிறது, நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் ஆதிக்கத்திற்கு உட்படுத்த முயல்கிறது மற்றும் சீன நலன்களை அச்சுறுத்துகிறது என்று எழுதியது

"ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஏராளமான துருப்புக்கள் அதன் உதவித் திட்டங்களுக்கு பாதுகாப்பிற்கு அளிக்கப்படுகிறது. திட்டத் தேர்வில் அமெரிக்கா முன்னுரிமை பெறுகிறது, ஏனெனில் இது ஹமித் கர்சாய் அரசாங்கத்திற்கு "பாதுகாப்பு" கொடுக்கிறது. அதன் பொருளாதார உதவிகள் அதன் இராணுவச் செலவுகளை மீட்கும் நோக்கத்தைக் கொண்டவை. இதற்கு முற்றிலும் மாறாக, சீன முயற்சிகள் ஆப்கானிஸ்தானத்தின் மறுகட்டமைப்பிற்காக உழைக்கையில் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளுகின்றன, ஒப்பந்தம் பெறுவதற்கு கடுமையான சர்வதேசப் போட்டியை எதிர்கொள்ளுகின்றன. அமெரிக்காவைப் போல் இல்லாமல், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றில் சீன முதலீடுகள் செய்யப்படுவதுடன் மற்றும் அதற்கு எவ்வித உதவியும் இல்லாமல் இருக்கின்றன."

தலையங்கம் தொடர்ந்தது: "அமெரிக்காவிடம் பயங்கரவாத-எதிர்ப்பு மூலோபாயத் தாக்குதல் உள்ளது. இதில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கவும் போட்டியாளர்களைக் கட்டுப்படுத்தவும் ஆப்கானிஸ்தான் ஒரு பகடையாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாறாக சீனா ஒரு பாதுகாப்பு, தேசியக் கொள்கையைத் தொடர்கிறது, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடு என்னும் முறையில் நல்ல உறவுகளைக் கொள்ள விரும்புகிறது.

தவறுக்கு இடமில்லாத எச்சரிக்கையாகத் தலையங்கம் கூறியது: "ஆப்கானியப் பிரச்சினை பற்றிப் பொருட்படுத்தாமல் சீனா இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானத்தில் போரினால் ஏற்படும் குழப்பம் சீனாவின் வடமேற்குப் பகுதியின் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது."

USA Today இதழ் ஒபாமாவின் வருகைக்கு ஆப்கானியர்கள் பிரதிபலிப்பை, அவர்களுடன் நடத்திய தொடர்ச்சியான பேட்டிகளை வெளியிட்டுள்ளது. அம்மக்கள் அமெரிக்க பூகோளஅரசியல் நலன்கள், மோதல்கள் எப்படி பிராந்திய சக்திகளுடன் மோதுகின்றன என்பதை பிரித்தறிந்து காண்கின்றனர் என்பதை அவை குறிக்கின்றன.

மஜிப் ரஹ்மான் என்னும் கட்டுமானப் பொறியாளர் "ஒபாமா துருப்புக்கள் இங்கு நீண்ட காலம் இருக்கும் என்பதைக் காட்ட விரும்பினார். அவற்றின் நிலைப்பாடு பற்றி ஈரான், சீனா, ரஷியா ஆகியவற்றிற்கு தெரிவிக்க விரும்பினார்--இப்பகுதியில் இவர்களுக்கு உள்ள மேலாதிக்கம் பற்றியும் காட்ட விரும்பினார்" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

இதேபோல் ஆப்கானியப் பாராளுமன்ற உறுப்பினர் Mohamad Khan, USA Today இடம் ஒபாமா "ஈரான், பாக்கிஸ்தான், சீனா ஆகியவற்றிற்கு சமீபத்தில் சென்றதற்காக கர்சாயைக் கடிந்து கொள்ள" வந்திருந்தார் என்றார்.

"தனிப்பட்ட பேச்சுக்களில் ஒபாமா இப்பிரச்சினைகள் பற்றி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அமெரிக்கர்களுடன் நட்பு கொள்ளுவது, அதே நேரத்தில் அமெரிக்காவின் விரோதிகளுடன் திட்டங்கள் தீட்டவது என்னும் இரு மூலோபாயங்களை வைத்துக் கொள்ளுவது முடியாது" என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆக்கிரமிப்பின் போது அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் விற்ற 50 வயதான ஷம்சுதீன் பஜேலி, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிட அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானத்தில் இல்லை, இப்பகுதியில் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்தத்தான் என்று கூறினார்.

"தலிபான்கள் ஒரு சிறு குழுவினர். ஒபாமாவும் சர்வதேச சமூகமும் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினால் இரண்டு மாதங்களுக்குள் பெற்றிருப்பர். அவர்கள் முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைனை பாலைவனத்தில் நிலவரையில் கண்டுபிடித்தனர். ஆனால் தலிபான் தலைவரான ஒசாமா பின் லேடன் முல்லா ஒமரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதன் பொருள் சமாதானம் பற்றி அவர்கள் தீவிரமாக இல்லை என்பதுதான். ஆப்கானிஸ்தானத்தை ஒரு போர்க்களமாக, மற்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு மாற்ற அவர்கள் விரும்புகின்றனர்." என பஜேலி மேலும் கூறினார்.

இப்பொழுது ஒன்பதாவது ஆண்டில் உள்ள அமெரிக்கப் போர், இன்னும் பரந்த பூகோள-அரசியல் அழுத்தங்களைத் தூண்டிவிடுகிறது. அதன் விதைகள் இன்னும் பரந்த இரத்தம்தோய்ந்த பரந்த போர்களை ஏற்படுத்தும். காபூலிற்கு ஒபாமாவின் திடீர் வருகை அவருடைய இராணுவ "விரிவாக்கம் மற்றும் தொடர்ந்த அமெரிக்கத் துருப்புக்களின் தியாகம் தொடர்பான கவனத்தினாலாகினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானத்தில் தொடர்ந்து சரிந்துவரும் நிலைமையை எதிர்கொள்ளக்கூடும், இறுதியில் போட்டியாளர்களிடம் இழக்கக்கூடும் என்ற கவலையினால் அதிகம் தூண்டுகோல் பெற்றது ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved