World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Labour government in Britain increases state control of the Internet

பிரிட்டனின் தொழிற் கட்சி அரசாங்கம் இணைய பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது

By Marcus Morgan
23 September 2009

Back to screen version

தொழிற் கட்சி அரசாங்கம் இணைய பயன்பாட்டின் மீதான கடுமையான புதிய நடவடிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், இணையத்திலிருந்து எதையெல்லாம் பெறலாம், யாரால் அதை பெற முடியும் போன்றவற்றின் மீது அரசின் அதிகாரங்கள் வலுப்படும்.

இங்கிலாந்தின் படைப்புத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்துறைகளைக் பாதுகாக்கும் போர்வையில், அரசாங்கம் கடும் சட்டங்களின் மூலம் இறுக்கி வருகிறது, அது தனிநபர்களின் சுதந்திரங்கள், பிரத்யோக இரகசிங்களுக்கான உரிமை, அத்துடன் பத்திரிகைகள் மற்றும் தொலைத்தொடர்பின் சுதந்திரத்தையும் கைக்கு எட்டாமல் செய்துவிடும்.

வியாபாரம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் திறமைகளுக்கான அரசு செயலாளர் பீட்டர் மேன்டல்சன், புதிய முன்மொழிவுகளின் மிகக் கடுமையான விஷயங்களை, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார். இது தனிநபர் இணைய இணைப்புகளை முழுவதுமாகவோ அல்லது சில வேளைகளிலோ நிறுத்திவிடக்கூடிய அதிகாரத்தை அரசிற்கு அளிக்கும்.

சுயாதீனமாக செயல்படவும், தொலைத்தொடர்பு ஆணையத்தின் மீது அதிகாரம் செலுத்தவும் மன்டல்சனின் அலுவலகத்திற்கு பிரத்யேக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனா போன்ற சில விரல்விட்டு எண்ணக் கூடிய நாடுகள் மட்டுமே அந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன.

சட்டவிரோதமான கோப்பு பகிர்வுகளின் மீது அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை விரைவுபடுத்துவது தான் இந்த புதிய திட்டங்களின் மறைமுகமான நோக்கம். திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் இசை போன்ற நகலெடுக்கப்பட்ட கோப்புகளைப் பகிர்வதை 70 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு தேவையான சட்டமுறைகளைச் செய்வதற்கு, திட்டமிடப்பட்டுள்ள 2012 ல் என்ற காலக்கெடு மிகவும் தாமதமானது என்று அது வாதிடுகிறது.

தொலைத்தொடர்பு மந்திரி ஸ்டீபன் டிம்ஸ் கூறுகையில், "இந்த திட்டங்கள், காப்புரிமையாளர்களை பாதித்து, நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் என்ற பரவலான அதிருப்திகள் இருப்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.

இந்த கோடை காலத்தில் தான் கார்டர் பிரபுக்கு மாற்றாக டிம்ஸ் பதவியேற்றார். 2009 ஜூனில் அரசாங்கத்தின் "டிஜிட்டல் பிரிட்டன் அறிக்கையை" கார்டர் வெளியிட்டிருந்தார். "உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை முன்னணிக்கு கொண்டு வருவதற்கான ஒரு மூலோபாய நோக்கத்தை" அளிப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களான BSkyB மற்றும் Channel 4 ஆகியவை உட்பட ஊடக தொழில்துறையின் அதிகார நலன்களின் ஒத்துழைப்புடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்த போதிலும், கோப்புகளைச் சட்டவிரோதமாக பகிர்ந்து கொள்பவர்களை படிப்படியாக 'கவனிப்பதை' அவர்கள் கோடிட்டு காட்டியிருந்தார்கள். அதாவது, குற்றத்திற்கான கடித எச்சரிக்கையுடன் தொடங்கி, இணைப்புகளைத் துண்டிப்பது வரை அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த கொள்கை தோல்வியடைந்தால் மட்டும், மேலும் பல தொழில்நுட்ப முறைமைகளை நிறுவ Ofcom அழைக்கப்படும். இந்த அறிக்கை, கோப்பு பகிர்வால் பாதிக்கப்பட்ட பல இணைய சேவை வழங்குனர்களின் மற்றும் தகவல் சேவை அளிப்போரின் ஒப்புதலைப் பெற்றது.

எவ்வாறிருப்பினும், கார்டர் வெளியேறிய பின்னர், தொடர்ந்து விதிகளை மீறுபவர்களின் இணைப்புகளுக்கு கெடுபிடியை அதிகரிக்க வேண்டும் அல்லது அவை துண்டிக்கப்பட வேண்டும் என்று பெரிய உலகளாவிய ஊடக பெருநிறுவனங்களில் சில வலியுறுத்தின. கோப்பு பகிர்வை இணையத்தின் வேகம் முன்பில்லாத வகையில் மிகவும் பிரபலமாகி விட்டிருப்பதால், சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்க முடிவுகளில் ஊடக தொழில்துறையின் தலையீடு அதிகரித்திருக்கிறது. பெருமளவிலான பொறுப்புகளையும், இணைய சேவையை முடக்குவதற்கான கட்டணத்தையும் இணைய சேவை வழங்குனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சிலர் அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளார்கள்.

வியாபாரத்திற்கான மன்டல்சனின் அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது, அது, "ஆலோசனையை தொடங்கிய போதிலிருந்தே, கீழ்படிய மறுப்பவர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அளவிற்கு எந்த தொழில்நுட்ப முறைமைகளும் போதியளவிற்கு சக்திவாய்ந்ததாக இல்லை என்று சில பங்குதாரர்கள் வாதிட்டு வருகிறார்கள்" என்று குறிப்பிட்டது.

டிஜிட்டல் பிரிட்டன் அறிக்கையில் உத்தியோகபூர்வமாக அவர் கையெழுத்திட்டிருந்த போதும் கூட, இந்த விதிகளை மேலும் கடுமையாக்குவதற்கான பிரச்சாரத்திற்கும் மன்டல்சன் தலைமை ஏற்றிருக்கிறார். கோப்புகளைச் சட்டவிரோதமாக பகிர்வதற்கு கடுமையான எதிர்ப்பாளரான ஹாலிவுட் ஊடகவியலாளர் மொகுல் டேவிட் ஜெஃபனை கடந்த மாதம் மேன்டல்சன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், ஜெஃபன் போன்ற முக்கிய பிரபலம் இணைய கொள்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க ஸ்டிஃபென் மன்டல்சனின் மனஉறுதிக்கு உதவியாக இருக்க கூடும் என்று அறியப்படுகிறது. Universal Musicன் சேர்மேன் Lucian Grainge உட்பட, ஊடக தொழில்துறையின் ஏனைய பல பிரதிநிதிகளையும் மன்டல்சன் சமீபத்தில் சந்தித்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

அவரின் திருத்தங்கள் இணைய சேவை வழங்குனர்கள் இடையே விரோதத்தைச் சந்தித்துள்ளது. இணைய போலீஸாக இருப்பதற்கும், மேற்படி தொழிலாளர்கள் மற்றும் சாதனங்களின் செலவுகள் மொத்தமாக தங்கள் தோள்களில் விழுவதைக் கருதி அவை அஞ்சுகின்றன. மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை அளிப்பு நிறுவனமான TalkTalk, இந்த புதிய முன்வரைவுகளை, "அடிப்படை உரிமைமீறல்கள்" என்று விமர்சித்துள்ளது, அத்துடன் கணிணி பகிர்வு கொண்டிருக்கும் மற்றும் பாதுகாப்பற்ற இணைப்புகள் வைத்திருக்கும் ஒன்றும் அறியாதவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு இந்த புதிய சட்டங்களுக்கு இரையாக நேரிடலாம் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

TalkTalkன் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், "மிக முக்கியமான மற்றும் பிடிவாதமான முறைமைகளை வெளியிட்டு வெறும் இரண்டு மாதங்களுக்கு பின்னர், தகவல் சேமிப்பு/அளிப்பு தொழில்துறையின் சக்திவாய்ந்த தலையீடுகளின் அழுத்தத்தால் பிரச்சனையைச் சமாளிக்க மேன்டல்சன் பிரபு குடையப்படுகிறார் என்பதாக தெரிகிறது" என்றார்.

Virgin Mediaன் ஒரு செய்தி தொடர்பாளரும் விமர்சனங்களை முன்வைத்தார், "இரும்பு கரங்களுடன், தண்டிக்கும் ஆட்சி நுகர்வோருக்கு தொந்தரவு கொடுக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

தொழிற் கட்சிக்குள்ளேயே கூட சில உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள். டிஜிட்டல் துறையின் முன்னாள் மந்திரி ரொம் வாட்சன் கூறுகையில், "இது இங்கிலாந்தின் பெருமளவிலான பொதுமக்களைக் கிரிமினல்களாக்கும் ஆபத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக சமூகத்தை மாற்றுவதற்கான சக்தியைக் கொண்டிருக்கும் ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மீதும் தாங்க முடியாத வரையறைகளை இணைக்கிறது, அதிலும் இறுதியாக நமது கலைஞர்களும், நமது கலாச்சாரமும் இதனால் சிறந்த நன்மைகளை அடைய முடியும் என்ற எந்த உத்திரவாதங்களும் இதில் இல்லை" என்று தெரிவித்தார்.

ஒரு உத்தியோகபூர்வமற்ற அரசாங்க அறிக்கையில் மட்டும் தான், பெரும்பாலான செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பதற்கான சிறிய அறிகுறிகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கின்றன. "இந்த கடமைகளுக்கு விளைவாக ஏற்படும் செலவுகளை அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் தான் ஏற்க வேண்டும்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த திட்டங்கள் மிகவும் சிக்கலானது என்பதுடன் நிறுவுவதிலும் செலவு பிடிக்கும் என்று இணைய சேவைகளில் வேலை செய்யும் பலரும் இதை விமர்சித்திருக்கிறார்கள். உதாரணமாக, பகிர்ந்து கொள்ளப்படும் கோப்புகள் சட்டத்திற்குட்பட்டவை, சட்டவிரோதமானவை என்று வேறுபடுத்தி பார்ப்பதோ, அல்லது குறிப்பாக என்க்ரிப்ட் (encrypted) செய்யப்பட்ட கோப்புகளில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதோ சாதாரண விஷயமில்லை. ஐபி முகவரிகளை மறைத்தும் கூட சுலபமாக அனுப்பலாம்.

Open Rights குழுமத்தின் செயல் இயக்குனர் ஜிம் கில்லோக் கூறுகையில், "இணைய பயன்பாட்டை சந்தேகிப்பதென்பது மக்களின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையைத் தடுப்பதாகும். இது சர்வதேச பிராட்பேண்ட் பயன்பாடு மீதான அரசாங்க கொள்கையின் முகத்தையும் அது தொட்டுப் பார்க்கும்" என்றார்.

Privacy Internationalன் இயக்குனர் சைமன் டேவிஸ் கூறுகையில், "இந்த முன்வரைவு அடிப்படையில் ஆதார சுமையையே திருப்பி போடுகிறது. திட்டமிட்ட பழிகளை உருவாக்கும். இது, தொழில்நுட்பரீதியாகவும் சாத்தியமில்லை, அத்துடன் மேற்செலவுகளை இழுக்கும். இது, காப்புரிமையாளர்களுக்கும், பயனார்களுக்கும் இடையில் பெரிய ஆன்லைன் முரண்பாட்டை உருவாக்குகிறது. மேலும் அடிப்படை உரிமைகளும் இதில் மீறப்படுகிறது."

இணையத்தின் எல்லையில்லா வளர்ச்சிக்கு பல உலக அரசாங்கங்கள் காட்டும் அதிருப்தி போக்கானது, தங்களின் இலாபங்களை மட்டுமே கருத்தில் கொண்ட உலகளாவிய ஊடக செயலதிகாரிகளின் வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.

செய்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜேம்ஸ் முர்டோக், எடின்பேர்க் சர்வதேச தொலைக்காட்சி விழாவில் உரையாற்றும் போது, தடையற்ற மற்றும் "அரசின் ஏகபோக உரிமையில்" இருக்கும் இணைய பயன்பாட்டால் இலாபங்கள் குறைகின்றன என்று குற்றஞ்சாட்டினார். இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதால், முர்டோக்கின் பல தனியார் தொலைகாட்சி சேனல்களும், செய்தி பத்திரிகைகளும் சமீபத்திய ஆண்டுகளில் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

அரசின் பிபிசி -ஐ சுட்டி காட்டிய அவர், ஜோர்ஜ் ஓர்வெல்லின் 1984ஐ மேற்கோளாக காட்டி, சர்வாதிகாரத்திற்காக அந்த நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டினார். அவரின் பேச்சு, பிபிசி -ன் ஐபிளேயரை மறைமுகமாக குறி வைத்திருந்ததாக தோன்றியது. ஐபிளேயர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இலவசமான மற்றும் நம்பிக்கைக்குரிய சேவையான அதன் மூலம் நேயர்கள் இணையம் வழியாக ஒளிபரப்புகளை நேரடியாக பார்க்க முடியும், ஒரு வாரத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளைக் கூட அதன் மூலம் பார்க்க முடியும். ஊகித்த வகையில், "நம்பிக்கையான, நிரந்தரமான, தொடர்ச்சியாக சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்க கூடியது இலாபம் மட்டும் தான்" என்பதை தான் முர்டோக் தீர்மானமாக அளித்தார்.

பொருளாதார நெருக்கடியின் கடுமையான தாக்குதலுக்கு இடையில், நிதிய மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் சக்திமிக்க பிரிவுகள் இணையத் தளத்தின் பரந்த ஜனநாயக மற்றும் சர்வதேச தன்மையை அவற்றின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக காண்கின்றன. இந்த பரந்த வர்க்கப் பிரச்சனைதான், புதிய விதிமுறைகளைக் கொண்டுள்ள அதிகாரங்களுக்கான அழைப்புகளின் பின்னணியில் உள்ளன. இன்று கோப்பு-பகிர்விற்கு எதிராக பயன்படுத்தப்படுவது எதுவோ, அதே தான் நாளை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக முரண்படுபவர்களுக்கு எதிராகவும் திருப்பிவிடப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved