WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US commander pushes for rapid escalation of Afghanistan
war
ஆப்கானிஸ்தான் போரை துரிதமாக தீவிரப்படுத்த அமெரிக்கத் தளபதி வலியுறுத்துகிறார்
By Bill Van Auken
22 September 2009
Use this
version to print | Send
feedback
ஜெனரல் ஸ்ரான்லி மக்கிரிஸ்டலின் ஆப்கானிஸ்தானிற்கான பாதை மாற்ற பரிந்துரைகளின்
இரகசிய அந்தஸ்து நீக்கப்பட்ட ஆவண பதிப்பை வெளியிட்டதன் மூலம், அமெரிக்கத் தலைமையிலான போரில் மற்றொரு
பெரும் துருப்பு அதிகப்படுத்தலுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க பென்டகன் தலைமை, ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு
அழுத்தம் கொடுக்கிறது.
இந்த அறிக்கை முதலில் திங்களன்று வாஷிங்டன் போஸ்ட்டின் வலைத் தளத்தில் பகிரங்கம்
ஆக்கப்பட்டது; இந்த பத்திரிகை ஆவணத்தைக் கசிய விட்டு, பின்னர் பென்டகனுடன் ஒரு உடன்பாடு செய்து
கொண்டது, அமெரிக்க மூலோபாயம் பற்றி முக்கிய பத்திகளை மட்டும் கொண்ட ஒரு பதிப்பை மட்டும் போட
ஒப்புக் கொண்டது.
மக்கிரிஸ்டலால் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸிற்கு கடந்த
மாதம் கொடுக்கப்பட்ட இந்த ஆவணத்தின் முக்கிய உந்ததுதல் வியப்பைக் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும்
அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதன் மூலம் இன்னும் ஆக்கிரோஷமான--குருதி சிந்துவதும்
கூட--போர் ஆப்கனிஸ்தானத்தில் நடத்தப்பெறுவதற்கு அந்த ஆவணம் வாதிட்டுள்ளது.
மக்கிரிஸ்டல் ஆப்கன் "துருப்பு அதிகரிப்பு நடவடிக்கைகளில்" எத்தனை எண்ணிக்கையில்
கூடுதலான சிப்பாய்கள், கடற்படையினர் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்த எண்ணிக்கை விவரம் ஏதும் தரவில்லை
என்றாலும், வெள்ளை மாளிகைக்கு அது பற்றிய தன் திட்டத்தை விரைவில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கிரிஸ்டலின் 66 பக்க அறிக்கை ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை அப்பட்டமாக
"சீர்குலைந்துவருவதாக" விவரிக்கிறது. ஆக்கிரமிப்பிற்கு எழுந்த "தளர்வில்லாத, பெருகிய" எதிர்ப்பு அமெரிக்க
தலைமையிலான படைகளிடம் இருந்து "அனுகூலத்தை" பறித்து விட்டிருப்பதாக ஜெனரல் ஒப்புக் கொள்கிறார். ஏராளமான
அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருப்பதும், ஒரு ஊழலுற்ற வெறுப்புக்குள்ளான கைப்பாவை அரசுக்கு முட்டுக் கொடுப்பதும்
வெகுஜன மக்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளன.
மெக்கிரிஸ்டல் முன்வைத்த மூலோபாய மாற்றம் குறித்த ஊடக செய்திகளில்,
"கிளர்ச்சியாளர்களை" வேட்டையாடுவதில் இருந்து ஆப்கானிஸ்தான் மக்களை "பாதுகாக்கும்" நிலைக்கான மாற்றம்
குறித்த குறிப்புகள் பரவலாக இடம்பெறுகின்றன. கபடமற்றதாய் தோற்றமளிக்கும் இந்த வனப்புரை முன்மொழிவின்
உண்மையான உள்ளடக்கத்திற்கு வேடம் தரிக்கிறது. காந்தகார் நகரம் போன்ற மக்களுடைய எதிர்ப்பு
மையங்களாக இருப்பவற்றுக்குள் அமெரிக்க துருப்புகளை அனுப்பி, அமெரிக்க நோக்கங்களுக்கு எதிரான வெகுஜன
எதிர்ப்பை திட்டமிட்டு அடக்குவது மற்றும் அச்சுறுத்துவதன் மூலம் கூடுதலான கிளர்ச்சியெதிர்ப்பு பரப்புரையை
முன்னெடுப்பது தான் அதன் உண்மையான உள்ளடக்கம்.
அமெரிக்கத் தளபதி பல முறையும், அமெரிக்க மற்றும் நேட்டோத் தளபதிகள்
"படைப் பாதுகாப்பில்" அதிக கவனம் செலுத்துவது பற்றி குறைகூறியிருப்பதுடன், "மக்களிடம் இருந்து குறைந்த
இடைவெளியில், குறைந்த ஆயுதங்களுடன்" ஆக்கிரமிப்புப் படைகள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கிரிஸ்டல் இதையொட்டி இன்னும் கூடுதலான குருதியாறு இருக்கும் என்பதை ஒப்புக்
கொள்ளுகிறார். "ஆப்கானிய மற்றும் கூட்டுப்படைகளின் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதும்
யதார்த்தமானதே."
அமெரிக்க அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என்று கருதப்படும் தனிநபர்களைத்
தேடி வேட்டையாடிப் படுகொலை செய்வதைப் பணியாகக் கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் சிறப்பு
நடவடிக்கைகள் கூட்டுப் படை தலைவர் என்ற மக்கிரிஸ்டலின் பின்னணியைக் காணும்போது அதே போன்ற
நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் பெருகிய முறையில் பயன்படுத்தப்படுவதை எதிர்பார்க்கலாம். ஆப்கானிய
பாதுகாப்பு படையினர்களையும் மற்றும் அமெரிக்க "ஆலோசகர்களையும்" கொண்ட கொலைப் படையினர்
உருவாக்கப்படுவதும் இதில் அடக்கம், இப்படையினர் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் என்று கருதப்படுபவர்களை
கொல்லவும் எஞ்சிய மக்களை மிரட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவார்கள்.
ஜெனரலின் அறிக்கையில் "கிளர்ச்சியாளர்களுக்கான" சிறைக்காவல் அமைப்பு பற்றிய
ஒரு பகுதியும் உள்ளது; இது "ஆப்கானியர்களால் நடத்தப்படும் அமைப்பாக"வும் அமெரிக்கப் படைகளுக்கு
"காவலில் வைத்திருப்பவர்களை விசாரிக்க இடமளிக்க" உத்தரவாதமளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அந்த
பகுதி வலியுறுத்துகிறது. ஈராக்கில் கற்ற படிப்பினைகளை மக்கிரிஸ்டல் இணைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை;
அங்கு அவர் தலைமைவகித்த பிரிவு அது நடத்திய சிறையில் காவலில் இருந்தவர்களைச் சித்திரவதை செய்த இழிந்த
பெயரைப் பெற்றது. ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு சிறைக்காவல் அமைப்புக்கான உத்தியோகப்பூர்வ
பொறுப்பை அளித்தல் என்பது அமெரிக்க இராணுவம் அத்தகைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில்
ஒரு அதிர்வுதாங்கியாக பாதுகாப்பளிக்கும்.
மக்கிரிஸ்டலின் அறிக்கையில் ஒரு பளீரென்ற முரண்பாடு உள்ளது. ஆக்கிரமிப்பை
எதிர்க்கும் சக்திகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் அரசாங்கத்தை ஆதரித்தால் தான்
கிளர்ச்சியெதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற முடியும் என்று அது தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், அதே
சமயத்தில், "பல்வேறு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, ஆப்கானிஸ்தான் மக்கள்
தங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான காரணம் அதிகமாக இல்லை" என்றும் அது ஒப்புக் கொள்கிறது. கடந்த
மாதம் ஆப்கானியத் தேர்தலில் நடந்த ஒட்டு மொத்த மோசடி ஜனாதிபதி ஹமித் கர்சாயின் அங்கீகார நிலை
மீதான கடைசிப் போலித்தனத்தையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய பின் அடுத்த ஒரு மாத கால
இடைவெளியில் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
"ஆட்சி நிர்வாகத்தில் மேம்பாடு" பெறுவதற்கு பல குறிப்புக்களை
கொண்டிருந்தாலும், இந்த நோக்கம் எப்படிச் சாதிக்கப்படும் என்பதற்கான அடையாளங்கள் இல்லை. கர்சாயியை
சில ஆய்வாளர்கள் ஆப்கானிஸ்தானின் டியம் ( Diem)
என்று குறிப்பிடத் துவங்கியுள்ளனர். வியட்நாமில் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்ட டியமின் ஊழல் மற்றும்
அதிகார துஷ்பிரயோகம் அமெரிக்காவின் கிளர்ச்சியெதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக
உணரப்பட்டு, 1963 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதரவுடனான ஒரு இராணுவப் புரட்சியில் அவரது ஆட்சி
தூக்கியெறியப்படுவதற்கும் அவர் படுகொலை செய்யப்படுவதற்கும் இட்டுச் சென்றது.
ஆப்கானிஸ்தானத்தின் இராணுவ "ஆதாரவளங்களின்" போதாக்குறை நிலை பற்றி
மக்கிரிஸ்டல் அறிக்கையில் பல முறை வந்துள்ள குறிப்புக்கள், அவர் அங்கு பயன்படுத்த இன்னும் பல்லாயிரக்கணக்கான
துருப்புகளைக் கோருவார் என்பதை ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டுகின்றன.
"போதுமான ஆதாரவளங்களை அளிக்க தவறினால், போரின் கூடுதல் கால நீடிப்பு,
கூடுதலான பலி எண்ணிக்கை, கூடுதல் ஒட்டுமொத்த செலவுகள், மற்றும் இறுதியாக முக்கிய அரசியல் ஆதரவு இழப்பு
ஆகியவை ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ளன. இவற்றுள் எந்த ஆபத்தும் இலக்கினில் தோல்வியைக் கொடுத்துவிடக்கூடும்"
என்று அவர் எழுதியுள்ளார்.
அவர் மேலும் கூறினார்: "ஆப்கானிஸ்தானில் நம்முடைய பிரச்சாரம் வரலாற்றளவில்
குறைந்த வள ஆதாரங்களுடனானதாக இருந்திருக்கிறது, இன்றளவும் இருக்கிறது. ஏறக்குறைய நம்முடைய கூட்டு
முயற்சி மற்றும் துணை வள ஆதாரங்களின் ஒவ்வொரு அம்சமுமே பெருகி வரும் கிளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதாய்
இல்லை - வரலாற்றளவில் இது தோல்விக்கான தயாரிப்பு வழிமுறை ஆகும்."
இந்த அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் அது செய்தி ஊடகத்திற்கு கசிய
விடப்பட்டதானது ஆப்கானிஸ்தானில் போரை இன்னும் தீவிரப்படுத்த வெள்ளை மாளிகை விரைவாய் ஒப்புதலளிக்க
ஒபாமாவிற்கு பென்டகனுக்குள் இருந்து பெருகி வரும் அழுத்தத்தின் ஒரு பகுதியாகும்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று தெரிவித்தது: "இந்த மதிப்பீடு இரகசியம்
என்று வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பானது என்ற அளவில்தான் இது இருந்ததாக மூத்த இராணுவ
அதிகாரிகள் தெரிவித்தனர்; அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தளபதி மக்கிரிஸ்டல்
மேற்கொள்ளும் புதிய நடவடிக்கையின் தன்மையை விளக்குவதற்கு இதனை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று
பலர் வலியுறுத்தினர்."
"ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகவும் சீர்குலைந்தும் வருகிறது,
அநேகமாய் கூடுதல் படைகளுக்கு அவசியமாகலாம் என்று இணை படைத் தலைவர்களின் தலைவரான அட்மிரல்
மைக் முல்லன் போன்றவர்கள் அளிக்கும் பொது அறிக்கைகள் மூலம் இராணுவம் ஒபாமாவை வேறு வழியற்ற ஒரு
மூலைக்கு தள்ள முயற்சி செய்வதாக" ஒபாமா நிர்வாக அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர் என்று
வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.
ஒபாமா மீதான ஒப்புதல் மதிப்பீடு சரிவுற்றுக் கொண்டிருப்பதையும், அவரது
சுகாதார மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து பெருகி வரும் பொது சர்ச்சையையும் கொண்டு பார்க்கும் போது,
மக்களின், அதிலும் குறிப்பாக ஜனநாயகக் கட்சியை அதிகாரத்திலமர்த்த வாக்களித்த மக்களின், ஆழமான
வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் போரை பெருமளவில் தீவிரப்படுத்துவதற்கு வெள்ளை மாளிகை எந்த
ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இராணுவ உயர் தலைமைகளோ இதற்கு மேலும்
தாமதத்தை சகித்து கொள்ள விருப்பமில்லாததாய் தோன்றுகிறது.
இந்தத் தாமதம் "இராணுவத்திற்குள் பெருகும் மிரட்சிக்கு ஒரு ஆதார வளமாகும்"
என்று பென்டகன் அதிகாரி குறிப்பிட்டதாக போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. செய்தித் தாளிடம் அதிகாரி கூறியது:
"ஒரு விரக்தி நிலவுகிறது. கணிசமான விரக்தி. தீவிரமான விரக்தி."
இராணுவத் தலைமையின் இந்த பிரச்சாரத்தால் குடியரசுக் கட்சியினர் தங்களை
ஒற்றுமையாக்கிக் கொண்டு, நாடாளுமன்றத்தின் முன் சாட்சியம் அளிக்க வாஷிங்டனுக்கு மக்கிரிஸ்டலை மறுபடியும்
அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். புஷ் நிர்வாகத்தின்கீழ் இதேபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
அப்பொழுது ஈராக் படைகளுக்குத் தளபதியாக இருந்த டேவிட் பெட்ரீயஸ் கொடுத்த சாட்சியம் அந்த நாட்டில்
போரை விரிவாக்குவதற்கு நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பை அடக்க உதவியிருந்தது.
தன்னுடைய பங்கிற்கு ஒபாமா, கடந்த மார்ச் மாதம் தான் உத்தரவிட்டிருந்த
கூடுதலான 21,000 துருப்புக்களுக்கு அதிகமாக துருப்பு எண்ணிக்கையை உயர்த்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என்று வலியுறுத்தியுள்ளார்; அந்த அதிகரிப்பே அமெரிக்கப் படைகளை அங்கு 68,000 என்று ஆக்கியுள்ளது.
"குதிரைக்கு முன்னால் நாம் வண்டியை நிறுத்திக் கொள்வதோ, இன்னும் கூடுதலான
படைகளை அனுப்புவதால் மட்டும் தானாக அமெரிக்கர்களை பாதுகாப்பானவர்களாக ஆக்கி விடுவோம் என்று
சிந்தித்துக் கொண்டிருக்கப் போவதோ இல்லை" என்று
தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும்
நோக்கத்துடனான செய்தி ஊடகப் பிரச்சாரத்திற்காக தான் அளித்த பல தொலைக்காட்சி நேர்காணல்களில்
ஒன்றில் ஞாயிறன்று அவர் கூறினார். "இப்போதைய உடனடியான கேள்வி, முதல் கேள்வி, இதுதான்: நாம்
சரியாக நடந்து கொண்டு வருகிறோமா? சரியான மூலோபாயத்தைத் தொடர்கிறோமா?" என்று மற்றொரு
நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
இக்கருத்துக்களின் மூலம் "அதிக துருப்புக்கு இராணுவ அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படும்
கோரிக்கைக்கு அப்படியே ஒபாமா ஒப்புதல் முத்திரையிட்டு விடப் போவதில்லை, வெள்ளை மாளிகை ஆப்கானிஸ்தானில்
தனது மூலோபாயத்தை மறுமதிப்பீடு செய்யக் கூடும்" என்றே ஊகிக்க முடிவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
தெரிவித்தது.
ஆனால் "புதிய வள ஆதாரங்கள் மையப்பிரச்சினை இல்லை. வெற்றிபெறுவதற்கு
சர்வதேச பாதுகாப்பு
உதவிப்படை (ISAF)
ஒரு புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டும்."; "ஒரு புதிய மூலோபாயம் இல்லாமல், இந்த இலக்குக்கு வள
ஆதாரங்கள் அளிக்கப்படக் கூடாது" என்று ஜெனரல் எழுதியிருக்கும் மெக்கிரிஸ்டல் அறிக்கையுடன் ஒபாமாவின்
கூற்றுகள் நேரடியாக முரண்படவில்லை.
மேலும் ஆப்கானிய துருப்பு விரிவாக்கம் ஏற்கனவே செயலாக்கப்பட தொடங்கி
விட்டதற்கான அடையாளங்களும் உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருத்தப்பட்டுள்ள "ஒற்றர்கள், இராணுவ ஆய்வாளர்கள்,
துணை இராணுவச் செயலர்கள்" எண்ணிக்கையை
CIA
மிகப் பெரிய அளவில் அதிகப்படுத்தியுள்ளதாகவும், அந்நாட்டில் அதன் இருப்பு ஈராக் மற்றும் வியட்நாம் யுத்தங்கள்
உச்சத்தில் இருந்த சமயங்களில் அந்த நாடுகளில் இருந்தது போன்ற அளவிற்கு இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுவதாகவும்" கடந்த வார இறுதியில் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் துருப்பு எண்ணிக்கை மீதான பரிந்துரைகளை தான் ஆய்வு
செய்திருக்கும் நிலையில் "அமெரிக்க மக்களுக்கு நான் கூறவிருப்பது அந்த தருணத்து அரசியலால் உந்தப்பட்டதாக
இருக்காது" என்றும் ஒபாமா சண்டே பத்திரிகையில் தெரிவித்திருக்கிறார். பெரும்பான்மை அமெரிக்க மக்கள்
ஆப்கானியப் போரை எதிர்க்கின்றனர், அதனினும் அதிகம் பேர் போர் துருப்பு அதிகரிப்பை எதிர்க்கின்றனர் என்று
கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டியிருப்பதைக் கொண்டு பார்த்தால், இத்தகைய மக்கள் உணர்வுகளால் எல்லாம்
தன்னுடைய முடிவுகள் ஆதிக்கம் செய்யப்படாது என்று ஜோர்ஜ் புஷ் அடிக்கடி கூறி வந்ததன் ஒரு எதிரொலியாகத்
தான் ஒபாமாவின் அக்கூற்று தோன்றியது. |