World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிOpen letter to Opel and Vauxhall auto workers from German SEP candidate ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரிடம் இருந்து ஒப்பல், வாக்ஸ்ஹால் கார்த்
தொழிலாளர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் By Ulrich Rippert அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, ஜெனரல் மோட்டார்ஸுக்கும் மக்னாவிற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தை நிராகரிப்பது மிகவும் அவசியமாகும்; ஏன் அவ்வாறு என்று அதை நான் விளக்க விரும்புறேன். மக்னாவிற்கு ஐரோப்பிய GM ஐ விற்பது ஓப்பலின் "மீட்பை" நோக்கமாகக் கொண்டது அல்ல. அந்த உடன்பாட்டின் நோக்கம் உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமையை உங்கள் தோள்களுக்கு மாற்றுவதுதான். தொழிலாள வர்க்கத்தின் மீது உலகம் முழுவதும் நடத்தப்படும் நேரடித்தாக்குதலின் ஒரு பகுதிதான் இது; தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் 1930 களில் இருந்த மட்டத்திற்கு தரம் தாழ்த்தப்பட இருக்கிறது. அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள்! ஜெனரல் மோட்டார்ஸை ஒபாமா நிர்வாகம் திவால்தன்மைக்கு தள்ளியபின், வியத்தகு முறையில் ஆறே வாரங்களில் நிறுவனத்தை "மறு சீரமைத்தது" செல்வம் படைத்த முதலீட்டாளர்களும் வங்கிகளும் அவர்களுடைய முழுப் பணத்தையும் பெற்றனர், தொழிலாளர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நான்கு ஆலைகளும், 2000 விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. 27,000 தொழிலாளர்கள் அதையொட்டி வேலையை இழந்துள்ளனர். நிறுவன ஓய்வூதியங்களும், ஓய்வு பெற்றவர்களுக்கு சுகாதாரக்காப்பீடும் குறைக்கப்பட்டுவிட்டன அல்லது அகற்றப்பட்டுவிட்டன; இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் ஓய்வு என்பவர்களுக்கும் இதே நிலைமைதான். வயதான தொழிலாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 10 யூரோக்களையும் விடக்குறைவான சம்பளத்தில் புதிய பணியிலே பலர் சேர்க்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் நிறுவனம் 130 பில்லியன் டாலருக்கும் மேல் சேமிக்கின்றது. மக்னா ஒப்பந்தமும் இதேபோன்ற நோக்கங்களைத்தான் கொண்டிருக்கிறது. இதுவரை 10,500 வேலைகள் நீக்கப்பட்டுவிட்டன; அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊதிய வெட்டுக்களாக 1.6 பில்லியன் யூரோக்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இது மிதக்கும் பனிப்பாறையின் உச்சி மட்டுமே ஆகும். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SDP) இரண்டும் ஜேர்மனியில் மக்னாவுடன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில், ஆட்சிபுரியும் இரு கட்சிகளும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை அச்சுறுத்தத் தயாராக இல்லை. எனவே வாக்குச் சாவடிகள் ஞாயிறன்று மூடப்பட்டவுடன் அனைத்தும் இவர்களால் மீண்டும் கவரப்படும். வல்லுனர்கள் இந்த உடன்பாட்டின் பெரும்பகுதி முடிவடையவில்லை என்றுதான் சுட்டிக் காட்டியுள்ளனர். இன்னும் கூடுதலான ஆலைகள் மூடப்படும், அதிக பட்சம் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஓப்பல் அறக்கட்டளையில் ஜேர்மனியப் பிரதிநிதியான Manfred Wennemer மக்னா உடன்பாட்டிற்கு எதிராக வாக்களித்தார்; எனெனில் இது நடைமுறைக்கு ஒத்து வரும் என்று அவர் நினைக்கவில்லை. "புதிய ஓப்பல்" 2010ல் அதனுடைய வணிகத்திட்டம் நிறைவேறினாலும், திவாலாகிவிடும் என்று அவர் நினைக்கிறார். அதன் விளைவுகளை எளிதில் சிந்தித்துப் பார்க்க முடியும். வரவிருக்கும் வாரங்களில் GM, Magna இரண்டும் புதிய சலுகைகளை ஊழியர்கள் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிடும். திட்டமிட்ட பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள், ஊதியக் குறைப்புக்களுக்கு எதிர்ப்புக்கள் இப்பொழுதே தொடக்கப்பட்டாக வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவில்லை என்றால், அனைத்தையும் இழந்துவிடும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும்; அடுத்த தலைமுறைக்கு வருங்காலம் என்பதே இராது. அத்தகைய எதிர்ப்பை அமைப்பதற்கு மிகப் பெரிய தடைகளாக இருப்பது தொழிற்சங்கங்களும் பணிக்குழுக்களும்தான். ஜேர்மன் IG Metall மற்றும் ஐரோப்பிய பணிக்குழுவின் தலைவர் Klaus Franz ஆகியோர் மக்னா உடன்பாடு ஏற்படுவதற்கு பெரிதும் உதவியுள்ளனர். நல்ல ஊதியம் பெற்றுவரும் தொழிற்சங்க, பணிக்குழு அதிகாரிகளை அவர்கள் நம்பியுள்ளனர்; அவர்களோ ஒரு ஆலையில் இருக்கும் தொழிலாளர் தொகுப்பை மற்ற ஆலைகளில் இருப்பவற்றுடன் மோதவிட்டு எதிர்ப்பை அடக்க முற்படுவர். இப்பொழுது Klaus Franz திட்டமிட்ட வேலைக் குறைப்புக்களை ஏற்கத் தான் தயாராக இல்லை என்று அறிவிக்கிறார் என்றால் தொழிலாளர்கள் அவருடைய கருத்துக்களை உரிய இழிவுடன் தள்ளவேண்டும். Deutschlandfunk க்கிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் Franz 10,500 வேலைகள் தகர்ப்பை "ஒன்றும் வியப்பிற்குரிய விஷயம் இல்லை" என்று விவரித்தார். இன்றைய ஆர்ப்பாட்டமும் வேலைகள் குறைப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக, மீண்டும் Franz கூறுவது போல், "உற்பத்தி அளவுகளும், சுமைகளும் ஐரோப்பிய குழுக்களால் சமமாகப் பிரிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்." ஏதோ இது போதாது என்பது போல்! ஜேர்மனிய அரசாங்கம் ஜேர்மனியின் உறவுகளை அதன் மிகப் பெரிய விசை அளிக்கும் நாடாகிய ரஷ்யாவுடன் முன்னேற்றுவிக்கும் என்பதற்குத்தான் எல்லாவற்றிற்கும் மேலாக மக்னாவுடன் உடன்பாட்டை விரும்புகிறது. அரசாங்கத்தின் பகுதி உரிமை நிறுவனமான Russian Sberbank மற்றும் கார்த்தயாரிப்பு GAZ இரண்டும் மக்னாவிற்கு பக்க பலமாக உள்ளன. தங்கள் பங்கிற்கு அமெரிக்க அரசாங்கமும், டிட்ரோயிட்டில் உள்ள GM நிர்வாகமும் GM தொழில்நுட்பம் எப்படியும் ரஷ்யர்களிடம் சேர்ந்துவிடக்கூடாது என்று தடைசெய்ய விரும்புகின்றன. IG Metall மற்றும் பணிக்குழுக்களும் இப்பூசலில் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளன. IG Metall இன் தலைவர் Berthold Huber தனிப்பட்ட முறையில் மாஸ்கோவிற்கு பயணித்து பிரதம மந்திரி விளாடிமீர் புட்டினை சந்தித்தார். இந்த ஏகாதிபத்திய விளையாட்டில் நீங்கள் சிறு பொம்மைகள் போல் பயன்படுத்தப்படுகிறீர்கள். பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் ஸ்பெயின் தொழிற்சங்கங்கள் IG Metall ஐ விட சிறந்தவை அல்ல. அவர்கள் மக்னா உடன்பாட்டை எதிர்ப்பதற்கு காரணம் அது ஜேர்மனிய ஆலைகளை தக்கவைப்பதற்கு ஆதரவு கொடுக்கின்றன; பின்னர் அவை மற்றொரு முதலீட்டாளர் RHJ International க்கு ஆதரவைக் கொடுக்கின்றன; அது ஒன்றும் கடுகளவு கூட மக்னாவை விடச் சிறந்தது அல்ல. IG Metall ஐ போலவே அவையும் கொள்கையளவில் அனைத்து வேலைகளும் காக்கப்பட வேண்டும் என்று கூறுவதை வலுவாக எதிர்க்கின்றன; மாறாக, "என்னுடைய வீட்டிற்குப் பதிலாக என்னுடைய அண்டை வீட்டான் இல்லத்தை எரிக்க" என்ற கொள்கைப்படி நடக்க விரும்புகின்றன. இத்தகைய கொள்கையின் விளைவுகள் பேரழிவு தரக்கூடியவை. வணிகப் பூசல்கள் பெருகும்போது, தொழிற்சங்கங்கள் வேறு இடங்கள், நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களை ஒருவர்மீது ஒருவருக்கு எதிராகத் தூண்டுகின்றன. முதலாளித்துவத்தின் நெருக்கடி 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இரு உலகப் போர்களுக்கு வழிவகுத்தது போலவே, தொழிற்சங்கங்கள் மீண்டும் தேசியவாதம், நாட்டு வெறி என்ற நச்சைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பணிகளுக்கு அவை பெரும் வெகுமதியை பெறுகின்றன. அமெரிக்காவில் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் (UAW) ஜெனரல் மோட்டார்ஸின் கூட்டு உரிமையாளர் ஆகியுள்ளது. UAW நிர்வகிக்கும் அறக்கட்டளை ஒன்று மறுசீரமைக்கப்பட்ட நிறுவனத்தின் 17.5 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் வருமானம் முன்பு GM இன் பொறுப்பில் இருந்த ஓய்வூதியம் பெற்றவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை ஈடு செய்வதற்கு பயன்படுத்தப்படும். ஆனால் கிடைக்கும் விகிதம் அதற்குப் போதாது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழப்பர். மாறாக, UAW அலுவலர்கள், அறக்கட்டளையை நிர்வகிப்பவர்கள், கொழிக்கும் வருமானம் பெற உத்தரவாதம் பெறுகின்றனர். நிறுவனம் இலாபம் ஈட்டவேண்டும் என்பதில் அவர்களுக்கு சொந்த அக்கறை உள்ளது; நிறுவனம் செலவினங்களைக் குறைக்க வேண்டும், அதாவது ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூக நலன்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். இதே போன்ற தீர்வுதான் "புதிய ஓப்பலுக்கும்" காத்திருக்கின்றது. ஏற்கனவே கூட்டுப் பணிக்குழுக்கள் விடுமுறை, கிறிஸ்துமஸ் நலன்களை நிறுத்தவும், ஒப்பந்தம் மூலம் வரும் ஊதிய உயர்வுகள் மட்டுமே என்றும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நிதிகள் இப்பொழுது தொழிலாளர் பங்கு பெறும் முதலீட்டு நிறுவனம் (MKBG) ஆல் இயக்கப்படும். இது ஓப்பலுக்கு அதிக மூலதனத்தை கொடுக்கும்; இது ஆலையை தளமாகக் கொண்டுள்ள தொழிற்சங்க அலுவலர்களால் நிர்வகிக்கப்படும். இத்தகைய கருவியின் மூலம் இந்த அலுவலர்கள் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ இணை மேலாளர்களாக ஆவதுடன், அதையொட்டி தாராளமான ஊதியங்களையும் பெறுவர். உங்கள் வேலைகள், வருமானங்களை காத்துக் கொள்ள, நீங்கள் தொழிற்சங்கம், பணிக்குழுக்கள் என்ற ஊழல் நிறைந்த கருவிகளிடம் இருந்து முறித்துக் கொண்டு, சுயாதீன ஆலைக் குழுக்களை வளர்த்தெடுக்க வேண்டும். அக்குழுக்கள் கீழ்க்கண்ட பணிகளை செய்ய வேண்டும். * அவை அனைத்து ஐரோப்பிய GM ஆலைகள், மற்றும் அமெரிக்காவில் இருக்கும் GM தொழிலாளர்களுடனும் மற்றய கார்த்தயாரிப்பு ஆலைகள், தொழிலில் இருக்கும் தொழிலாளர்களுடனும் தொடர்பினை நிறுவிக்கொள்ள வேண்டும். சர்வதேச நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் தேவை.* ஆலை மூடல்கள், நிதிய சலுகைகளை கொடுத்தல்களை தடுத்து நிறுத்த, ஏற்கனவே தொழிலாளர்களுக்கு விரோதமாக கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை திரும்பப்பெற ஆலை ஆக்கிரமிப்புக்கள், வேலை நிறுத்தங்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை, அவர்கள் கட்டாயம் தயாரிக்க வேண்டும்.* சமூகத்தில் ஒரு சோசலிச மாற்றத்திற்கு பாடுபடும் மக்கள் இயக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக அவர்கள் மாற வேண்டும்.கார்த் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சமூக உறவுகளில் ஒரு மாற்றம் என்ற அடிப்படையில்தான் தீர்க்கப்பட முடியும். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பான வங்கிகளின் சக்தியும் இப்பொழுது அவை மீண்டும் பெரும் இலாபங்களை ஈட்டும் முறையும் முறிக்கப்பட வேண்டும். அப்பணங்கள் கைப்பற்றப்பட்டு, அவை பொது நிறுவனங்களாக மாற்றப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். கார்த் தயாரிப்பு நிறுவனங்களும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட்டு தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இயக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் பொருளாதாரம் தனியார் இலாபக் குவிப்பு என்பதற்குப் பதிலாக சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மேலும் வளர்க்கப்படும். என்னுடைய கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய சர்வதேச சோசலிச வேலைத் திட்டம் ஒன்றிற்காக போராடுகிறது. எங்கள் பணியை நாங்கள் எங்களுடன் இணைந்துள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் செய்து வருகிறோம். உலக சோசலிச வலைத் தளம் எங்களது அன்றாட இணைய சோசலிச வெளியீடு ஆகும். வேலைகள் தகர்ப்பு, கார்த்தயாரிப்புத் தொழிலில் பணிநிலைகள் தகர்ப்பு இவறிற்கு எதிராக போராட்டத்தை வழிநடத்த உங்களுக்கு எமது அரசியல் ஆதரவை நாங்கள் அளிக்கிறோம்; PSG, WSWS ன் ஆசிரியர் குழு ஆகிவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுகிறோம். சோசலிச வாழ்த்துக்களுடன், |