World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SEP holds election campaign meetings in four cities

ஜேர்மனி: SEP நான்கு நகரங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துகிறது

By our correspondents
24 September 2009

Back to screen version

கடந்த வார இறுதியில் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி (PSG) லைப்சிக், பொஹ்கும், பிலபெல்ட் மற்றும் ஹம்பேர்க் நகரங்களில் இந்த ஞாயிறன்று நடக்க இருக்கும் கூட்டாட்சி தேர்தல்களுக்காக அதன் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக கூட்டங்களை நடாத்தியது. அதற்கு முந்தைய வாரம் PSG ஆதரவாளர்கள் மூனிச்சிலும் பிராங்பேர்ட்டிலும் கூடி தற்போதைய அரசியல் போக்குகள் பற்றி விவாதித்தனர். சனிக்கிழமை, செப்டம்பர் 26 அன்று இப்பிரச்சாரம் பேர்லினில் ஒரு மத்திய தேர்தல் கூட்டத்தில் உச்சக்கட்டத்தை அடையும்; நாடு முழுவதில் இருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டங்கள் ஒரு வலுவான பிரச்சாரத்தை அடுத்து தயாரிக்கப்பட்டவை ஆகும்; இவற்றில் ஆயிரக்கணக்கான தேர்தல் பிரசுரங்கள் வழங்கப்பட்டன, நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, டஜன் கணக்கான தகவல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன; இவையனைத்தும் மாணவர்கள், தொழிற்பயிற்சி பெறுபவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடையே கணக்கிலடங்கா விவாதங்களைத் தூண்டின.

இக்கூட்டங்கள் ஒவ்வொன்றும் கட்சியின் வேட்பாளர் அல்லது PSG நிர்வாகக் குழு ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. பொஹ்குமில் எதிர்பார்த்தபடி ஓப்பல் சம்பவங்கள் விவாதத்தில் மைய இடத்தைப் பெற்றன. கார் பாகங்கள் தயாரிப்பாளர் மக்னா மற்றும் அதன் இரு ரஷ்ய பங்காளிகள் அரச Sberbank மற்றும் வாகன உற்பத்தியாளர் GAZ இரண்டும் பொஹ்குமில் இருக்கும் 5,200 வேலைகளில் 2,000க்கும் மேற்பட்டதை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. மொத்தத்தில் 10,500 வேலைகள் ஐரோப்பா பூராவவும் அழிக்கப்பட உள்ளன; ஜேர்மனியில் மட்டும் 4,500 பேர் வேலையின்மையை எதிர்கொள்வர்.

ஒப்பலின் பொஹ்கும் ஆலை II, அதன் மாற்றுதல் மற்றும் அச்சு உற்பத்தி சாலைகளுடன் முற்றிலும் மூடப்பட உள்ளது. பொஹ்கும் கூட்டத்தில் பேசிய வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா (NRW), PSG வேட்பாளர் Dietmar Gaisenkersting மக்னாவின் திட்டங்கள் பொஹ்குமில் ஒப்பல் செயற்பாடுகளை படிப்படியாக மூடிவிடும் தன்மையைக் கொண்டுள்ளன என்றார்.

ஓப்பல் தொழிலாளர்கள் டெட்ரோயிட்டில் இருக்கும் GM தலைமையகத்தில் இருந்து ஆக்கிரோஷமான நிர்வாகத்தை மட்டும் எதிர்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. மாறாக அவர்கள் இரட்டைக் கத்தி முறையில் ஒருபுறம் டெட்ரோயிட் நிர்வாகம், தொழிற்சாலை தொழிற்சங்ககுழுக்கள், IG Metall தொழிற்சங்கம் ஆகியவற்றையும் மறுபுறம் இணையற்ற முறையில் நடத்தப்படும் வேலை, ஊதிய, நலன் குறைப்புக்கள் ஆகியவற்றை ஏற்கும் கட்டாயத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.

Gaisenkersting ஓப்பல் எடுத்துக் கொள்ளப்படுவதால் ஏற்படும் சர்வதேச விளைவுகள் பற்றியும் பேசினார். மாக்னா குழுமத்திற்கு ஆதரவு கொடுத்துள்ள விதத்தில் ஜேர்மனிய அரசாங்கம் தன்னுடைய சொந்த பூகோள மூலோபாயம் மற்றும் அது தொடர்புடைய எரிசக்தி கொள்கை நலன்களையும் தொடர முயற்சிக்கிறது. முழு உணர்வுடன் இது பேர்லின்-மாஸ்கோ அச்சை அமெரிக்காவிற்கு எதிராக வலுப்படுத்தி வருகின்றது. "ஓப்பல் தொழிலாளர்கள் இந்த ஏகாதிபத்திய நோக்கங்களைக் கொண்டுள்ள தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்கள் தங்களை சுரண்ட அனுமதிக்கக்கூடாது" என்று Gaisenkersting கூறினார். PSG தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட் பின்னர் ஆப்கானிஸ்தான போரினால் ஏற்பட்டுள்ள பெருகிய சர்வதேச அழுத்தங்கள் பற்றிச் சுட்டிக் காட்டினார்.

லைப்சிக்கிலும் ஆப்கானிஸ்தான் மைய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது. PSG நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பீட்டர் சுவார்ட்ஸ் பல புள்ளி விவரங்களை மேற்கோளிட்டு இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி பல பெரும் செல்வம் கொழித்தவர்கள் தங்களை இன்னும் செல்வமுடையவர்களாக ஆக்க பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர், தேர்தலுக்கு பின்னர் எப்படி தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களின் அளவு பெருகும் என்று எடுத்துக் கூறினார். விவாதம் பின்னர் குண்டுஸில் ஜேர்மனிய இராணுவப் படைகளால் நடத்தப்பட்ட மிருகத்தனமான படுகொலைகளைப் பற்றி திரும்பியது. இங்கு ஜேர்மனிய மாநில மறுகட்டமைப்புக் குழுவின் இராணுவத் தளபதி கேர்னல் ஜோர்ஜ் கிளைன் உத்தரவிட்ட தாக்குதலை அடுத்து குறைந்தது 125 பேர் கொல்லப்பட்டனர்; அத்தாக்குதல் அண்டைக் கிராமங்களில் பல சாதாரண குடிமக்களை முற்றிலும் அழித்து விட்டது.

இரண்டு லாரிகள் கைப்பற்றப்பட்டது பின்னர் அவை குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட்ட சூழ்நிலையை பற்றி விவரித்த சுவார்ட்ஸ், கிளைன் கொடுத்த ஆபத்தான உத்தரவு "ஒரு பீதியை எதிர்கொள்ளும் தன்மையை" பெற்றிருக்கவில்லை என்றும் அதிகார உயர்மட்டத்தில் இருந்து ஆதரவைப் பெற்றிருக்கும் என்றும் கூறினார். "இந்தப் போர் விரிவாக்கப்படுவதற்கு அரசியல் மற்றும் இராணுவ வட்டங்களில் செல்வாக்கான பிரிவுகள் விரும்புகின்றன" என்றார் சுவார்ட்ஸ். பேர்லினில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் படுகொலைபற்றி எதிர்கொள்கையில் போரை நியாயப்படுத்திப் பேசியுள்ளன. உடனடியாக படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்த இடது கட்சி கூட அக்கோரிக்கையைக் கைவிட்ட வெளியுறவு மந்திரி பிராங்க் வால்ட்டர் ஸ்ரையின்மயரின் "வெளியேறும் மூலோபாயத்திற்கு" ஆதரவு கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பார்வையாளர் ஒருவர் சுவார்ட்ஸ் முன்வைத்த பகுப்பாய்விற்கு ஆதரவு கொடுத்தார். நீண்ட காலமாக நாட்டில் தாலிபன்கள் மட்டும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார். "ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் வெறுக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆதரவு வந்துள்ளது." நேட்டோ தலைமையிலான மிருகத்தனமான போர் மக்களிடையே மகத்தான எதிர்ப்புணர்வை கட்டவிழ்த்துள்ளது. குண்டுஸ் படுகொலையில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகம் உயர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கூட்டங்களில் கலந்து கொண்ட மற்றவர்களும் போரின் மிருகத்தனமான பண்பு அதன் காலனித்துவ தன்மையில் இருந்து வெளிப்பட்டுள்ளது என்றனர். ஏனைய கட்சிகளைப் போலவே இடது கட்சியும் இதை மறைக்கிறது, இப்பொழுது தெளிவாக ஆக்கிரமிப்பு சக்திகளின் பக்கத்தில் சேர்ந்துள்ளது.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் PSG வேட்பாளர் எலிசபெத் சிம்மர்மான், Didtmar Gaisenkersting உடன் Bielefeld கூட்டத்தில் பேசினார்; ஆப்கானிஸ்தான் போர் மற்றும் PSG க்கும் இடது கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது.

இடது கட்சி பற்றிய PSG யின் மதிப்பீடு பற்றி, Bielefeld ல் இருந்து வந்திருந்த பேராசரியர் ஒருவர் உடன்பட்டார். "இடது கட்சி, எதிர்ப்புக்களின் முன்னிலையில் தன்னை இருத்திக் கொள்கிறது, இதற்குக் காரணம் அவற்றை மழுங்கச் செய்வதுதான்" என்று விவாதத்தின் போது அவர் கூறிப்பிட்டார். மாணவர் இயக்கங்களை அமைக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து இதை அறிந்ததாகவும் அவர் கூறினார்.

PSG யின் சர்வதேசியம், அடிக்கடி பறைசாற்றப்படும் "சர்வதேச ஒற்றுமையில் இருந்து" எப்படி வேறுபட்டிருப்பது, இதன் உண்மைப் பொருள் யாது என்று கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் ஒருவர் கேட்ட வினாவை அடுத்து சர்வதேசியம் மற்றும் முதலாளித்துவ தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய ஆழ்ந்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டது;.

PSG நான்காம் அகிலத்தின் ஜேர்மனியப் பிரிவு என்பதை Gaisenkersting விளக்கினார். இதன் பொருள் தம்மை சோசலிச அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் மற்ற அனைத்து அமைப்புக்களில் இருந்து வேறுபட்டது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் பிரச்சினைகளையும் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வது என்றார். எந்த ஒரு பிரச்சினையும் தேசிய வடிவமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது என்று Gaisenkersting விளக்கினார்.

இலங்கை, ஸ்பெயின் மற்றும் பாலஸ்தீனத்தில் புதிய "சிறு அரசுகள்" நிறுவப்படல் என்ற கருத்தை PSG நிராகரிக்கிறது. இது பல தேசிய விடுதலை இயக்கங்களின் இலக்காக உள்ளது. இத்தகைய முன்னோக்கு, முட்டுச்சந்து என்பதைத்தான் நிரூபிக்கிறது என்று சிம்மர்மான் கூறினார். யூகோஸ்லேவியா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு அந்நாடுகளில் இருந்து தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பேரழிவை கொடுத்துள்ளது; ஆனால் ஒரு சிறு அதிகாரத்துவ, குண்டர்கள் கூட்டம் அசாதாரண அளவில் தங்களை செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொண்டுவிட்டது.

கூட்டங்கள் முடிந்த பின்னும் விவாதங்கள் அருகில் இருந்த உணவு விடுதிகளில் தொடர்ந்தன. பலரும் தங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்களை கொடுத்து PSG உடன் தொடர்பு கொள்ளுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்; அல்லது சனிக்கிழமை பேர்லினில் நடக்க இருக்கும் கூட்டத்திற்கு போக்குவரத்து ஏற்பாட்டை நாடினர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved