World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The historic decline of Japan's Liberal Democratic Party

ஜப்பானில் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்று வீழ்ச்சி

Peter Symonds
9 September 2009

Back to screen version

கடந்த மாதம் ஜப்பானிய தேர்தலில் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) மிகப்பெரிய தோல்வி அரசியல் அதிகாரத்தின்மீது நீண்ட காலம் கட்சி கொண்டிருந்த பிடியின் முடிவை விட அதிகமான தன்மையைக் கொண்டது ஆகும். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர் ஜப்பானிய முதலாளித்துவத்தின் எழுச்சி, அத்துடன் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நிலையும் உயர்தல் என்பது இப்பொழுது குறைந்து கொண்டு இருக்கும் அமெரிக்காவின் சர்வதேச மூலோபாய மற்றும் பொருளாதார கட்டமைப்பில் தங்கியிருந்தது. 1930களுக்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே தாராளவாத ஜனநாயக கட்சியின் அவமானகரமான தேர்தல் சரிவு அந்த அரசியலின் மற்றொரு அடையாளம் ஆகும். இது ஜப்பானில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் திசைதெரியாத மற்றும் சீற்றம் நிறைந்த நீரோடடத்தில் நுழைந்துள்ளது.

ஜப்பானிய அரசியலைப் பற்றிய பொது கட்டுக் கதைகளான ஒரு கட்டுப்பாடு நிறைந்த சமூதாயத்தில் பழைமைவாத கட்சிகளில் இயல்பான ஆதிக்கம், கட்டுப்பாடு நிறைந்த தொழிலாளர் தொகுப்பு ஆகியவை ஜப்பானிய முதலாளித்துவத்தின் விதி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பெரும் புரட்சிகர எழுச்சிகளினால் நிலையற்று இருந்தை வசதியுடன் மறந்துவிட்டது. பல சாதாரண குடிமக்கள் உட்பட, இரு மில்லியன் மக்கள் போரில் இறந்து விட்டதுடன், நகரங்களின் மொத்த பரப்பில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் அழிக்கப்பட்டு, தொழில்துறை ஸ்தம்பித்துவிட்டது. போரின் கொடூரங்களை அனுபவித்த பின் பொருளாதார பற்றாக்குறை மற்றும் போலீஸ்-அரச அடக்குமுறையை அறிந்தபின், தொழிலாள வர்க்கம் போர்க்கால இராணுவ ஆட்சிக்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக்காட்டி அதன் அடிப்படை உரிமைகளுக்கு போராடத் தொடங்கியது.

முக்கிய முதலாளித்துவ கட்சிகள் பரந்த அளவில் தூற்றப்பட்ட சூழ்நிலையில், ஐரோப்பாவைப் போலவே ஜப்பானிலும் போருக்குப் பிந்தைய அரசியல் ஸ்திரத்தன்மை சமூக ஜனநாயகக் கட்சி, எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பில்தான் தங்கியிருந்தது. ஜப்பானிய சோசலிஸ்ட் கட்சி (JSP), ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) மற்றும் இவற்றுடன் பிணைந்திருந்த தொழிற்சங்கங்கள் வெடித்தெழுந்து வளர்ந்தன. தொடர்ந்திருந்த பட்டினி, வறுமை, வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் பெருகி பரந்த தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்தன. 1947 பெப்ருவரி மாதப் பொது வேலைநிறுத்தம் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தலைவர் தளபதி டுக்லாஸ் மக்கார்தரின் உத்தரவின் பேரில் திரும்பப்பெறப்பட்டுவிட்டது. கம்யூனிஸ்ட்டுக்களை பொறுத்தவரையில், வேலைநிறுத்தத்தை கைவிடும் முடிவு அவர்களுடைய ஸ்ராலினிச இரண்டுகட்ட கோட்பாட்டின் அடிப்படையின் தர்க்கரீதியான விளைவாகும். அது அமெரிக்க ஆக்கிரமிப்பின் குறைந்தபட்ச சீர்திருத்தங்களை ஜனநாயக புரட்சியின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி என்று அழைத்தது.

உண்மையில் தொழிலாள வர்க்கப் போராளித்தனத்தை கட்டுப்படுத்தியவிதத்தில், ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் ஜப்பானிய முதலாளித்துவத்திற்கும் மிகவும் தேவைப்பட்ட கால அவகாசத்தை கொடுத்தது. போரைத் தொடர்ந்து உடனடியாக அமெரிக்க இராணுவம் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட அரசியல் கைதிகளை விடுவித்து, போர் ஆட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல் வாதிகளையும் அதிகாரத்துவத்தினரையும் அகற்றியது. 1947க்குப் பின்னர் பனிப்போர் வெடித்த காலத்தில் வாஷிங்டன் இப்போக்கை மாற்றி, வலதுசாரி அரசியல்வாதிகள் மீண்டும் அரசியல் வாழ்விற்கு வந்து கம்யூனிஸ்ட்டுக்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் அரசாங்க அதிகாரத்தில் "கம்யூனிஸ்ட் களையெடுத்தலுக்கு" ("red purge") உட்படுத்தி அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் உதவியுடன் தொழிற்சங்கங்களில் இருந்த அதன் ஆதரவாளர்களையும் அகற்றியது.

1955ல் பழைமைவாத தாராளவாத, ஜனநாயகக் கட்சிகளின் கலப்பில் அமைக்கப்பட்ட தாராளவாத ஜனநாயக கட்சி (LDP) அமெரிக்க ஆக்கிரமிப்பினால் நிறுவப்பட்ட கட்டமைப்பில் முழுமையாக நிலைகொண்டது. அதன் வெளியுறவுக் கொள்கை 1952ம் ஆண்டு அமெரிக்க-ஜப்பானிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். அதுதான் ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவந்து பனிப்போரின்போது அமெரிக்காவின் முக்கிய ஆசிய நட்பு நாடாக ஜப்பானை நிறுவியது. பொருளாதாரத்தை பொறுத்தவரையில், தொழில்துறை புதுப்பித்தல் அமெரிக்காவுடனான கூடுதல்விருப்ப நட்புறவுகளின் மீது நம்பியிருந்தது. 1950-53ல் நடைபெற்ற கொரியப் போர் ஜப்பானுக்கு பாரிய பொருளாதார ஏற்றத்தை கொடுத்தது. ஜப்பான் அமெரிக்கத் துருப்புக்களின் செயல்களுக்கு ஒரு தளமாயிற்று. அரசியல்ரீதியாக, தாராளவாத ஜனநாயகக் கட்சி பதவியின் மீதான பிடியை விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் வரிப்பாதுகாப்பு மூலமும், உதவித்தொகைகள் மூலமும், கிராமப்புறப் பகுதிகளில் பன்றி இறைச்சிக்கூட திட்டங்கள் மூலமும் பெருக்கியது.

1960களில் தொடர்ந்த உலகளாவிய விரிவாக்கத்தின் நடுவே ஜப்பான் முதன்மையான ஆசிய "பொருளாதார அற்புதமாக" விளங்கியது. ஜப்பானிய வணிகங்கள் சர்வதேச வணிகம், தொழில் துறையின் சக்திவாய்ந்த காப்புவரித்தடைகளினால் வளர்ச்சியுற்று நாட்டின் குறைவூதியத் தொகுப்பை பயன்படுத்தி அமெரிக்காவிலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பெரும் பங்கைக் கொண்டது. ஒரு தசாப்தத்தில் பொருளாதாரம் 10 சதவிகித ஆண்டு வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து கண்டது.

ஆனால் உலக போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றத்தைப் போலவே, ஜப்பானிய "அற்புதமும்" ஒப்புமையில் குறைந்த காலம்தான் நீடித்தது. உலகப் பொருளாதார வடிவமைப்பின் தளத்தில் இருந்த அமெரிக்க டாலருக்கு உறுதியான தங்க மாற்றுவிகிதத்தை அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் 1971ல் முடித்தபோது முதல் அதிர்வுகள் வெளிப்பட்டன. இதற்கு அடுத்த ஆண்டு நிக்சன் நிர்வாகம் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை பனிப்போர் நட்புநாட்டிடம் ஆலோசிக்காமல் நிறுவியது ஜப்பானிய ஆளும்வர்க்கத்தை பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியது. 1970களில் எண்ணெய் விலைகளில் பெரும் அதிகரிப்பு ஜப்பானையும் கடுமையாகத் தாக்கியது. பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும், உயர்ந்துவிட்ட ஊதியங்கள் ஜப்பானிய நிறுவனங்களை தொழிலாளர் செலவினங்கள் குறைவாக இருக்கும் மற்ற ஆசிய நாடுகளில் முதலீடு செய்ய வைத்தது. மேலும் ஜப்பானை உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமாக மாற்றிய பொருளாதார வெற்றி அமெரிக்காவுடன் வணிக அழுத்தங்கள் தீவிரமாவதற்கு வழிவகுத்தது.

பொருளாதார உயர்ச்சியினால் ஏற்பட்டிருந்த தாராளவாத ஜனநாயக கட்சியின் அரசியல் ஆதிக்கம் 1990களில் குறையத் தொடங்கியது. பங்குகள், சொத்துச் சந்தைகளில் மகத்தான ஊகக் குமிழிகள் கிட்டத்தட்ட ஒரே இரவில் சரிந்து ஒரு தசாப்த பொருளாதாரத் தேக்கத்தைத் தொடக்கியது. சோவியத் ஒன்றியத்தின் சிதைவும் பனிப்போரின் முடிவும் ஜப்பானிய முதலாளித்துவத்திற்கு புதிய சங்கடங்களை கொடுத்தது. அரசியல் ஆளும்வர்க்கம் 1990-91ல் நடைபெற்ற முதல் வளைகுடாப் போரில் இருந்து ஒதுக்கப்பட்டதால் ஆழ்ந்த உளைச்சலை கொண்டது. அதற்குக் காரணம் ஜப்பானிய அரசியலமைப்பில் இருந்து அமைதிவாதம் பற்றிய விதியாகும். ஆனால் அமெரிக்கா ஏகாதிபத்திய தீரச்செயலுக்கான முழுச்செலவையும் அது ஏற்க நேர்ந்தது. அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டை வினாவிற்கு உட்படுத்தி இன்னும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை பற்றி விமர்சனங்கள் எழுந்தன. மேலும் 1980 களில் உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது சோவியத் ஒன்றியத்தை இல்லாதொழித்ததுடன், ஒதுக்கமாக இருந்த ஜப்பானிய பொருளாதாரத்தையும் சர்வதேச அளவில் குறைந்த போட்டித்தன்மையுடையதாகச் செய்தது.

தாராளவாத ஜனநாயகவாதிகளின் முறிவு 1993ல் இன்னும் கூடுதலான சந்தைச் சார்பு சீர்திருத்தம், வெளியுறவுக் கொள்கைக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்டது. தாராளவாத ஜனநாயகக் கட்சி 1993-94ல் 11 மாதங்களுக்கு ஒரு உறுதியற்ற சிறு புது பழைமைவாத கட்சிகள் மற்றும் சோசலிஸ்ட்டுக்களிடம் பதவியை இழந்தது. மீண்டும் 1994ல் சோசலிஸ்ட் கட்சியுடன் வினோதமான கூட்டணி கொண்டு, சோசலிஸ்ட் தலைவர் Tomiichi Muryama பிரதம மந்திரி என்ற நிலையில் அதிகாரத்திற்கு வந்தது. தாராளவாத ஜனநாயகவாதிகளும், அவர்களுக்கு அடிபணிந்த எதிர்ப்பாளர்களுமான சோசலிஸ்ட் கட்சினருமே யுத்தத்திற்கு பிந்திய ஜப்பான் முதலாளித்துவத்தின் முக்கிய முண்டுகோல்களாவர். இந்த பெரும் கூட்டணி சோசலிஸ்ட் கட்சி ஆதரவாளர்களை ஆழ்ந்த முறையில் விரோதப்படுத்தியதுடன் அக்கட்சியை ஒரு முக்கிய அரசியல் சக்தி என்பதிலிருந்து துண்டுதுண்டாகி உடைந்துபோக செய்தது. தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) ஒரு நெருக்கடியில் இருந்து மற்றதற்கு தள்ளாடிச் சென்றது. அது தொடர்ந்து வலிமையற்ற, குறுகிய காலம் மட்டுமே இருந்த பல அரசாங்கங்களை அமைத்தது. அவை உட்பூசல்களின் பாதிப்பிற்கு உட்பட்டு பெருவணிகம் கோரிய பொருளாதார மறுகட்டமைப்பைச் செயல்படுத்தும் திறன் இல்லாமல் இருந்தன.

ஜூனிசிரோ கொய்சுமி 2001-2006 வரைகாலத்தில் பிரதமராக இருந்தது ஒரு விதிவிலக்கு போல் தோன்றியது. ஆனால் கொய்சுமியின் அரசியல் வெற்றி முற்றிலும் கட்சி அதிகாரப் படிநிலையில் தன்னை "ஒரு எதிர்ப்பாளர்" என்று காட்டிக் கொள்ளும் திறனில்தான் இருந்தது. ஒரு பொருளாதரத் தகுதியற்றவர் என்று கட்சிக்குள் எப்பொழுதும் கருதப்பட்ட கொய்சுமியிடம்தான் கட்சி அதன் அரசியல் வெற்றிடத்தை வெறித்துநோக்கும்போது ஆதரவிற்கு நின்றன. இந்த தன்னுடைய வெகுஜனத்திருப்தி அளிக்கும் தோற்றத்தை கொய்சுமி பயன்படுத்தி பல வலதுசாரிக் கொள்கைகளான ஜப்பானிய இராணுவவாதம், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இன்னும் பல பொருளாதார மறுகட்டமைப்புக்களை தொடர்ச்சியாக நிறைவேற்றினார். 2005ம் ஆண்டு மேல் மன்றத்தில் தாராளவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இவருடைய அஞ்சல்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கான திட்டத்தை குலைத்தவுடன், இவர் எதிர்ப்பாளர்களை வெளியேற்றி அவசரத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். ஜப்பானிய அரசியலில் இது முன்னோடியில்லாத செயல் ஆகும். அஞ்சல் தனியார்மயம் மீது முக்கியத்துவம் காட்டிய வகையில் அவர் திறைமையுடன் ஈராக் போருக்கு மக்களின் பரந்த எதிர்ப்பு உள்ளடங்கலான மற்றைய பிரச்சினைகளை ஒதுக்கினார் .

ஆனால், கொய்சுமியின் பரந்த சந்தைச் சார்புடைய மறுசீரமைப்பின் பாதிப்பு வெளிவந்ததும், விரைவில் "வெற்றிபெற்றவர்கள்", "இழந்தவர்கள்" பற்றிய ஒரு பொதுவிவாதத்திற்கு வழிவகுத்தது. 2006ல் அவர் விலகும் நேரத்திலேயே அவருடைய புகழ் சரிவடையத் தொடங்கியிருந்தது. அவருக்குப் பின் பிரதம மந்திரியாக வந்த எவரும்--Shizon Abe, Yasuo Fukuda, Taro Aso என--கொய்சுமி போல் அரசியலில் நம்பிக்கையூட்டும் தந்திரத்தைக் கையாளமுடியவில்லை. கடந்த ஆண்டு தொடங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆழ்ந்திருந்த வெறுப்புணர்வையும் மற்றும் விரோதப் போக்கையும் வீழ்ச்சியடைந்த வாழ்க்கைத்தரங்கள், ஆழ்ந்த சமூகச் சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதம் புதுப்பிக்கப்பட்டது ஆகியவற்றினால் தாராளவாத ஜனநாயகவாதிகளுக்கு எதிராக மட்டும் இல்லாமல் முழு ஜப்பானிய அரசியல் ஆளும்வர்க்கத்தின் மீதும் வெளியே கொண்டுவந்துவிட்டது.

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் சரிவு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெடித்தெழுந்த, ஆனால் அப்பொழுது போருக்குப் பின் இருந்த இறுக்கமான அரசியல் பின்னணியில் நெரிக்கப்பட்டிருந்த, அனைத்து தீர்க்கப்படாத அரசியல், சமூகப் பிரச்சினைகளை மீண்டும் திறக்கிறது. ஆளும் வர்க்கம் இப்பொழுது முன்னாள் தாராளவாத ஜனநாயகக் கட்சி, சோசலிஸ்ட் பிரிவுகளில் தற்காலிகக் கலவையான ஜனநாயகக் கட்சியை அதன் செயற்பட்டியலை செயல்படுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகும். இந்த நிகழ்வுபோக்கு தவிர்க்க முடியாமல் புதிய அரசாங்கத்தை தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு கொண்டுவரும். வரலாறு ஏதேனும் வழிகாட்டுகிறது என்றால், இப்போராட்டங்கள் பின்னர் என்பதை விட முன்பாகவே ஒரு புரட்சிகரத் தன்மையை கொள்ளும். இத்தகைய அதிர்வுகளுக்கு தயாரிக்கும் விதத்தில் நாங்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டம் வரலாறு பற்றித் தீவிர ஆய்வை மேற்கோள்ளுமாறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜப்பானிய பிரிவை கட்டமைப்பதற்கு முதல் படியாக கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved