World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan plantation unions sign sell-out pay deal இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் சம்பள வியாபாரத்தில் கைச்சாத்திட்டன By our correspondents இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியும் கடந்த புதனன்று இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் கீழ் 500,000 தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மேலும் இரு ஆண்டுகளுக்கு வறிய மட்ட சம்பளமான 405 ரூபாவுக்கு (3.50 அமெரிக்க டொலர்) வரையறுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 750 ரூபா நாள் சம்பளத்தை கோரிய இ.தொ.கா, துரிதமாக அந்தத் தொகையை குறைத்துக் கொண்டது. இ.தொ.கா. பொதுச் செயலாளர் முத்து சிவலிங்கம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்து நன்மையடைவார்கள் என தெரிவித்த போதும், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு விபரங்கள் வழங்கப்படாததோடு அவர்கள் அதற்கு வாக்களிக்கவும் இல்லை. முதலாளிமார் இந்த உடன்படிக்கையை பாராட்டியுள்ளனர். இந்த உடன்படிக்கையில் 290 ரூபா அடிப்படை சம்பளமும், 85 ரூபா வருகைக்கான கொடுப்பணவும் மற்றும் 30 ரூபா உற்பத்தி கொடுப்பணவும் உள்ளடங்கியுள்ளன. தேயிலை கொழுந்து பறிப்பவர்கள் தோட்டத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு 16, 18, அல்லது 20 கிலோ பறித்துக்கொடுக்க நெருக்கப்படுவதோடு அந்தப் பங்கை பூர்த்தி செய்யத் தவறினால் அவர்களுக்கு மேலதிக 30 ரூபா கிடைக்காது. இதே போல், முதலாளிமார் அடிக்கடி மாதம் 25 நாள் வேலை வழங்கவிட்டாலும் கூட, 25 நாட்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வருகைக்கான கொடுப்பணவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். இந்த உடன்படிக்கை தொடர்பாக தொழிலாளர் மத்தியில் பரந்தளவான எதிர்ப்பினதும் சீற்றத்தினதும் அறிகுறிகள் காணப்படுகின்றன. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடன்படிக்கையை நிராகரித்துள்ளதோடு செப்டெம்பர் 2 தொடங்கிய ஒத்துழையாமை பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். இ.தொ.கா. ஆரம்பித்து வைத்த இந்த நடவடிக்கையில், கொழும்புக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கும் முகாமையாளர்களின் வீடுகளில் வேலை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தக் கட்டத்தில் பிரச்சாரத்தின் குறிக்கோள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதோடு மற்றும் இன்னமும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாத சங்கங்களில் போலி நம்பிக்கை இருப்பதோடு அவை 500 ரூபா சம்பளத்துக்கு கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த புதன் கிழமை, ஹட்டனுக்கு அருகில் உள்ள கொட்டகலை தோட்டத்தில் 500 ரூபா சம்பளம் கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். புதன் கிழமையும், பொகவந்தலாவை பிரதேசத்தில் சகல தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், முதல்நாள் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக கண்டனம் செய்து வேலை நிறுத்தம் செய்தனர். ஒப்பந்தத்துக்கு எதிராக பொகவந்தலாவை நகரில் தொழிலாளர்கள் ஊர்வலம் சென்றதோடு பொலிசார் கண்ணீர் புகை மற்றும் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து தொழிலாளர்களை கலைத்தனர். புதன் கிழமை, இ.தொ.கா, லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலர்கள், தொழிலாளர்களை 405 ரூபா உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு வழமை போல் வேலைக்குத் திரும்ப நெருக்குவதற்காக பண்டாரவளைக்கு அருகில் நாயபெத்த தோட்டத்தில் கூட்டமொன்றை நடத்தினர். தாம் ஒட்டு மொத்தமாக ஒப்பந்தத்தை நிராகரிப்பதாகவும் ஒத்துழையாமை பிரச்சாரத்தை தொடர்வதாகவும் தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.) தெரிவித்தனர். ஒரு குறிப்பிடத்தக்க ஆரம்பிப்பில், ஹட்டனுக்கு அருகில் உள்ள பெல்மோரல் தோட்டத்தில் சுமார் 50 தொழிலாளர் பிரதிநிதிகள் சேர்ந்து, சோ.ச.க. உடன் செயற்பட்டு நேற்று ஒரு சுயாதீன நடவடிக்கை குழுவை ஸ்தாபித்தனர். இந்த நடவடிக்கை குழு, தோட்டங்கள் பூராவும் மற்றும் ஏனைய தொழிற்துறைகளிலும் உள்ள தொழிலாளர்களை இது போன்ற நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்க முடிவெடுத்தது. உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி, அதன் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளும் தொழிற்சங்கங்களில் இருந்தும் முழுமையாக விலகுமாறு சோ.ச.க. விடுத்த அறிக்கை தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. 2006 வேலை நிறுத்தத்தில் இருந்து படிப்பினைகளை பெறுமாறு கட்சி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. அந்த வேலை நிறுத்தத்தின் போது, இ.தொ.கா. வுக்கு எதிராக தீர்க்கமான பாத்திரம் வகித்த எதிர் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுத்ததோடு வேலை நிறுத்தத்துக்கு முடிவுகட்டன. தற்போதைய உடன்படிக்கையை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் பல தொழிற்சங்கங்கள், நேற்று கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தின. மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு) தலைவர் பெ. சந்திரசேகரன், இலங்கை தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மனோ கனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ஆர். திகாம்பரம் மற்றும் பாட்டாளி வர்க்க ஜனநாயக சங்கத்தின் தலைவரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர். இந்தத் தொழிற்சங்கங்கள் இந்த உடன்படிக்கையை அமுல்படுத்த ஒரு வழி தேடுவதற்காக அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் ஒத்துழைக்கும் அதே வேளை, தொழிலாளர்களின் சீற்றத்தை அடக்க முயற்சிப்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் 2006ல் செய்தது போலவே அதே துரோக வேண்டுகோளை அரசாங்கத்துக்கு விடுக்கின்றன. அந்த வேலை நிறுத்தத்தின் போது, தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக தொழிலாளர்களை கண்டனம் செய்யவே ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ "தலையிட்டார்". அவரது வலியுறுத்தலின் கீழ், சகல தொழிற்சங்கங்களும் இ.தொ.கா. செய்த வியாபாரத்தை ஆதரித்தன. நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், இந்த புதிய உடன்படிக்கையை ஒரு "மோசடி" என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) தலைவர் மனோ கனேசன் வாய்வீச்சுடன் கண்டனம் செய்தார். அவர் சட்டத்தில் கோரப்பட்டுள்ளவாறு தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்னவை இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம் என கோரினார். ஆயினும், பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சம்பள கட்டுப்பாட்டை ஊக்குவித்தும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இந்த உடன்படிக்கையை ஆதரிக்குமாறு கோரியும் அரசாங்கம் இந்த உடன்படிக்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை தொழிலாளர் முன்னணி (இ.தொ.மு.) செயலாளர் சதாசிவம், உடன்படிக்கைக்கு எதிராக பிரச்சாரமொன்றை முன்னெடுக்கும் திட்டம் தொழிற்சங்க கூட்டணிக்கு இல்லை என்பதை பிரகடனம் செய்தார். "நாங்கள் தொழிலாளர்களை தொடர்புகொண்டோம். அவர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு முன்னதாக தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லத் தயாரில்லை. எனவே நாங்கள் கொண்டாட்டம் முடியும் வரை காத்திருப்போம்." இந்த இந்துமத கொண்டாட்டம் இந்த ஆண்டு அக்டோபர் 17 கொண்டாடப்படவுள்ள நிலையில், தமது உறுப்பினர்களை காட்டிக்கொடுக்க ஒரு சூத்திரத்தை தேடுவதன் பேரில், அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் பின் அறைகளில் கலந்துரையாடல் நடத்த தொழிற்சங்க கூட்டணிக்கு இதன் மூலம் போதுமான காலம் கிடைக்கிறது. ம.ம.மு. தலைவர் பெ. சந்திரசேகரன், "தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தலையிடும் உரிமை நாட்டின் தலைவருக்கு உள்ளது" எனக் கூறி, "இந்தப் பிரச்சினையை தீர்க்க தலையிடுமாறு" ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு மீண்டுமொருமுறை அழைப்பு விடுத்தார். உலக சோசலிச வலைத் தள நிருபர் ஒருவர் சவால் செய்த போது, 2006ல் இராஜபக்ஷவின் தலையீட்டின் விளைவே 2007ல் கைச்சாத்திட்ட முன்னைய சம்பள வியாபார உடன்படிக்கை என்பதை சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டார்.இராஜபக்ஷ 405 ரூபா உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்ட போது, பதலிளிக்க மறுத்த ம.ம.மு. தலைவர், "அதை நான் இப்போது சொல்ல முடியாது" என்றார். உண்மையில், இ.தொ.கா. வில் உள்ள தனது சமதரப்பினரான ஆறுமுகம் தொண்டமானைப் போலவே, சந்திரசேகரனும் இராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதோடு அதனது "சம்பளக் கட்டுப்பாட்டு" கொள்கையையும் ஆதரிக்கின்றார். அமைச்சரவையில் இருந்து இராஜனாமா செய்வது பற்றி கேட்ட போது சந்திரசேகரன் அதை நிராகரித்தார். எதிர்க் கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இந்த நிருபர்கள் சந்திப்பில் பங்குபற்றாத ஒரு பிரதான தொழிற்சங்கமாகும். தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுக்க மாட்டோம் என முதலில் தெரிவித்திருந்தாலும், ஜே.வி.பி. அல்லது அதன் தொழிற்சங்கமோ இ.தொ.கா. வின் உடன்படிக்கை பற்றி அறிக்கை எதையும் வெளியிடவில்லை. தற்போது அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் சம்பள உயர்வு கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துவரும் ஜே.வி.பி. யின் தேசிய தொழிற்சங்க மையம், தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் "பொது வேலை நிறுத்தம்" செய்வதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி. யின் பகட்டாரவார மிக்க வாய்வீச்சில் நம்பிக்கை வைக்கக் கூடாது. ஜே.வி.பி. யும் அதன் தொழிற்சங்கங்களும் மீண்டும் மீண்டும் வேலை நிறுத்தம் தொடர்பாக கூச்சலிடுவதோடு அரசாங்கத்துக்கும் வளைந்துகொடுக்கின்றன. சிங்கள பேரினவாதத்தில் ஆழமாக ஊறிப்போயுள்ள ஜே.வி.பி., தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை ஆதரித்ததோடு அதன் யுத்த வரவு செலவுத் திட்டத்துக்கும் வாக்களித்தது. 2006ல் "பயங்கரவாத புலிகளுக்கு" உதவுவதாக வேலை நிறுத்தம் செய்த தோட்டத் தொழிலாளர்களை இராஜபக்ஷ தாக்கிய போது, ஜே.வி.பி. உடனடியாக தனது பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டது. கடந்த மே மாதம் புலிகள் இராணுவ ரீதியில் தோல்விகண்ட பின்னர், அரசாங்கம் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதன் பேரில் ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுத்துள்ளது. வீன் செலவு மற்றும் மோசடி தொடர்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, அதன் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக ஜே.வி.பி. க்கு அடிப்படை முரண்பாடுகள் கிடையாது. அது பெரும் வர்த்தகர்கள், தொழில் நிபுணர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றாக சம்பந்தப்படுத்தும் ஒரு "வெகுஜன பொருளாதார" திட்டம் என்ற தனது சொந்த வர்க்க ஒத்துழைப்புத் திட்டத்தை வெளியட்டுள்ளதோடு, அதன் அடிப்படையில் அரசாங்கத்துடன் இணைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி அதன் அறிக்கையில் விளக்கியிருப்பது போல்: "தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதோடு தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. ஒழுங்கான சம்பளம் மற்றும் நிலைமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு தொகை கோரிக்கைகளை தீர்மானிக்கவும் மற்றும் அதற்காக போராட ஒரு பரந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டமொன்று கூட்டப்பட வேண்டும். "ஆயினும், போராளிக்குணம் மிக்க நடவடிக்கை மட்டும் போதாது. முதலாளிமார், அரசாங்கம் மற்றும் அரச இயந்திரத்துக்கும் எதிராக போராடுவதில் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு அரசியல் வேலைத் திட்டமும் முன்நோக்கும் தேவை. சம்பள உயர்வு கொடுக்க பணம் இல்லை என முதலாளிமார் சொன்னால், கம்பனியின் கணக்குப் புத்தகங்களை திறக்குமாறு நாம் கூறுகிறோம். முதலாளிமார் எவ்வாறு தொழிலாளர்களிடம் இருந்து இலாபங்களை கறந்துள்ளார்கள் என நாம் அதில் பார்ப்போம். "பூகோள முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல. தற்போதைய பொருளாதார முறையால் உழைக்கும் மக்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியாதெனில், சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களுக்காக அல்லாமல் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முழுமையாக மறு சீரமைக்கப்படல் வேண்டும். அதற்காக, முதலாளித்துவத்தின் சகல கன்னைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் சுயாதீனமடைந்து சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராடுவது அவசியமாகும்." |