World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிWhat happened in Kunduz? The German army steps up its deployment in Afghanistan குண்டுஸில் நடந்தது என்ன? ஜேர்மன் இராணுவம் ஆப்கானிஸ்தானில் தனது போரை விரிவாக்குகிறது By Ludwig Weller and Peter Schwarz இரண்டாம் உலக போருக்குப் பின்னரான ஜேர்மனிய இராணுவத்தின் வரலாற்றில் மிகவும் இரத்தம் சிந்திய இராணுவ நடவடிக்கை நடந்து இரு வாரங்களுக்கு பின்னர் செப்டம்பர் 4ம் தேதி குண்டுஸில் என்ன நடந்தது என்பது பற்றிய கேள்விகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. குண்டுஸில் ''மாகாண மறுகட்டமைப்பு குழுவின்'' (Province Reconstruction Team) தளபதியான கேர்னல் ஜோர்ஜ் கிளைன் அதிகாலை கடத்தப்பட்ட பெட்ரோல் நிரம்பிய வண்டியின் மீது ஒரு வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். உத்தியோகபூர்வ ஆப்கான் அறிக்கைகளின் படி 119 பேர் இதில் இறந்தனர். ஜனாதிபதி ஹமித் கர்சாய் நிறுவியிருந்த குழுவின் அறிக்கை 60 தலிபான்கள் மற்றும் 30 குடிமக்கள் மடிந்தனர் என்றும் 11 தலிபான்கள், 9 குடிமக்கள் காயமுற்றனர் என்றும் தகவல் கொடுத்துள்ளது. காயமுற்றவர்களை அருகில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்த ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் இருந்ததாகவும் உறுதிபடுத்தினார். இப்படுகொலை பற்றி ஜேர்மனிய அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தவறான தகவல்களை வழங்கும் பிரச்சாரத்தை விடையிறுப்பாக கொடுத்தது. ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் பரந்த பிரிவுகளுடன் அரசாங்கம் வான்வழித் தாக்குதலை ஆதரித்து இன்றளவும் அதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த கலப்படமற்ற பொய்களை அடுக்காக வெளியிட்டார். பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் ஜோசப் யுங் இனால் "தகவல் பேரழிவு" என விளக்கப்படுவது உண்மையில் பொதுமக்களை ஏமாற்றும் வேண்டுமேன்றே நடத்தப்படும் பிரச்சாரம் ஆகும். தாக்குதல் பற்றிய முதல் விவரங்கள் நடந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே வெளிப்பட்டிருந்தாலும்கூட, நேட்டோவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒப்புக் கொண்டிருந்தும்கூட, பல நாட்களுக்கு யுங் அப்படி நடக்கவில்லை என்றே கூறிவந்தார். வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளருடன் தாக்குதல் நடந்து இரு நாட்களில் இடத்திற்கு சென்றிருந்த ISAF தளபதி அமெரிக்க ஜெனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் என்ன நடந்தது என்பது பற்றி பல விவரங்களை வெளியிட்டிருந்தபோதிலும், யுங் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. செப்டம்பர் 7ம் தேதி பேர்லினுக்கு வந்திருந்த ஒரு இடைக்கால நேட்டோ அறிக்கையின் உள்ளடக்கத்தை குறைந்தது நான்கு நாட்கள் வரை பாதுகாப்பு அமைச்சரகம் மறுத்தது. அதில் ஜேர்மனிய இராணும் படுகொலையில் வலுவாக தொடர்புபடுத்தப்படுத்திருந்தது. 30 குடிமக்கள் இறந்தது பற்றி உறுதிபடுத்திய உத்தியோகபூர்வ ஆப்கான் பற்றிய அறிக்கை வெளிவந்த பின்னரும், யுங் கடந்த திங்களன்று ஒரு செய்தித்தொடர்பாளர் மூலம் சிறிதும் பொருட்படுத்தாமல் பின்வருமாறு அறிவித்தார்: "இத்தாக்குதல் ஒரு இராணுவரீதியாக தேவைப்பட்டிருந்தது"; அவருடைய அமைச்சரகம் எவ்வித "முன்கூட்டிய தீர்ப்புரைகளையும் நிராகரிக்கிறது." கூட்டாட்சி அரசாங்கம் நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் விசாரணைகளை நடத்தி முடிக்கப்படும் வரை காத்திருக்க விரும்பியது. செப்டம்பர் 8ம் தேதி அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) ஜேர்மனியப் பாராளுமன்றமான புண்டஸ்டாக்கில் பாதுகாப்பு மந்திரிக்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அரசாங்க அறிக்கை ஒன்றை அறிவித்தார். ஜேர்மனிய இராணுவம் பற்றி "முன்கூட்டிய தீர்ப்புரைகளை" அவரும் நிராகரித்து பகிரங்கமாக, "இத்தகைய (தீர்ப்பரைகளை) கருத்துக்கள் உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ வருவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று அச்சுறுத்தினார். வழமையாக மறுபக்க கருத்தைக் கேட்கத் தயாராக இருக்கும் சமரசப்போக்கை விரும்புபவராக காட்டிக்கொள்ளும் மேர்க்கெல் ஒரு கணத்திற்கு மறைப்பு கீழே விழ அனுமதித்துவிட்டார். "இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனியின் கொடூரமான இராணுவ நடவடிக்கை" என்று பிரிட்டிஷ் கார்டியன் விளக்கியதை அடுத்து, மேர்க்கெல் எந்தக் குறைகூறலையும் பொறுத்துக் கொள்ள மறுத்துவிட்டார்! இவ்வாறு செய்கையில், அவரை பகிரங்கமாக வான் தாக்குதலுக்காக குறைகூறிய நேட்டோ நட்புநாடுகளை அவர் குறைகூற முற்பட்டது மட்டும் இல்லாமல், ஜேர்மனிக்குள்ளும் குறைகூறும் வகையில் தகவல் கொடுத்தல், எதிர்ப்புத் தெரிவிப்பது ஆகியவற்றையும் அச்சுறுத்த முற்பட்டார். மேர்க்கெலின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு, பாதுகாப்பு அமைச்சரகத்தின் தவறான தகவல் தரும் பிரச்சாரத்துடன் இணைந்து தணிக்கை முறை போன்றதை உருவாக்கியது. படுகொலைகளுக்கு இரு வாரங்களுக்குப் பின்னர் ஜேர்மனிய அரசாங்கம் தன்னைச் சுற்றி மெளனச் சுவரை எழுப்பித் தடுத்துக் கொண்டது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி பல விவரங்கள் வெளிப்பட்டிருந்தன. ஆனால் யார் இறுதிப் பொறுப்பு, தாக்குதலுககு யார் உத்தரவிட்டது, எந்த அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த வினாக்களை பொறுத்தவரையில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அறியப்பட்டுள்ள உண்மைகளுக்கு முற்றிலும் மாறாகத்தான் உள்ளன. குண்டுஸில் இருக்கும் ஜேர்மனிய தள முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடக்கக்கூடும், அவகாசம் இல்லாத அழுத்தம் ஆகியவற்றினால் கேர்னல் கிளைன் உயரதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் இரண்டு வண்டிகளையும் அழிக்க உத்தரவிட்டார் என்ற பல முறையும் கூறப்பட்டுள்ள அறிக்கை அறிந்துள்ள உண்மைகளுக்கு பொருந்தாமல் உள்ளது. அதன் சமீபத்திய பதிப்பில் ஜேர்மனிய இதழான Der Spiegel இப்பகுதியின் வரைபடம் மற்றும் சரியான நேரத்திட்டம் இரண்டையும் வெளியிட்டுள்ளது. இது டாங்கர்கள் ஜேர்மனிய முகாமில் இருந்து ஒரு சில நூறு மீட்டர்களுக்குள் கடத்தப்பட்டு நிறுத்தபட்டது என்றும் பின்னர் குண்டுஸ் ஆற்றின் மணல் கரையில் பாதி புதையுண்டு போவதற்கு முன் ஆறு கிலோ மீட்டர்கள் செலுத்தப்பட்டிருந்தது என்பதையும் தெளிவாக்கியுள்ளது. இரவில் காணும் வசதியுடைய ஒரு அமெரிக்க குண்டு வீசும் விமானத்தால் இது 21;14 க்கு கண்டுபிடிக்கப்பட்டு, நேரடி ஒளிப்பதிவுகள் ஜேர்மனிய தள முகாமிற்கு அனுப்பப்பட்டன. கடத்தியவர்கள் இது நள்ளிரவு வரை கண்காணித்து அதற்குப் பின் இரு F-15 போர் விமானங்கள் 1:08 முதல் கண்காணித்தன. F15 விமானங்கள் 1;50 க்கு தாங்கள் குண்டுவீசும் வரை ஐந்து நேரடி படங்களை அனுப்பின. இதன் பொருள் கிளைன் விமானத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு நாலரை மணி நேரம் கண்காணித்துக்கொண்டிருந்தார் என்பதாகும். ஒரு நிதானமான, அனுபவமிக்க அதிகாரி என்று அறியப்பட்ட விதத்தில், இந்தக் காலக்கட்டத்தில் அவர் மேலதிகாரிகளை கலந்து ஆலோசிக்கவில்லை என்பது நடந்திருக்காது. குண்டுவீசச் சொல்லுவது ISAF போர் விதிகளை மீறியவை என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும். அவற்றின்படி படையினர் போரிடும்போது அல்லது நேரடி ஆபத்தில் இருக்கும்போதுதான் அத்தகைய தாக்குதல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் குண்டுஸிற்குப் பொருந்தாது. கடத்தியவர்கள் உண்மையிலேயே தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தனர் என்றால் அவர்கள் மணலில் இருந்து இரண்டு டாங்கர்களையும் மீட்டு ஏற்கனவே தாங்கள் பயணித்திருந்த ஆறு கிலோ மீட்டர்களையும் திரும்ப பயணித்து வரவேண்டும். ஜேர்மனிய இராணுவத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க இது போதுமான நேரத்தைக் கொடுத்திருக்கும். புதையுண்டு போவதற்கு முன் ஜேர்மனிய முகாமினை விலகி டாங்கர்கள் ஓட்டிச் செல்லப்பட்டன என்னும் உண்மை கடத்தல்காரர்களுக்கு அத்தகைய தாக்குதல் திட்டம் இல்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது. அதேபோல் ஜேர்மனியத் தளபதிகள் தீவிர வான்வழி நோக்கலை அடிப்படையாகக் கொண்டு டாங்கர்களுக்கு அருகே குடிமக்கள் இருந்தனர் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். தாக்குதலில் அழிக்கப்பட்டுவிட்ட டாங்கியின் அருகே ஒரு டிராக்டர் இருந்ததின் மூலம் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இதனால் பின்வரும் வினா எழுகின்றது: தாக்குதலுக்கு உயர்மட்டத்தில் உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், விளைவு எவ்வாறிருக்கும் என்பதை அறிவதற்கு கேர்னர் கிளைன் பலிக்கடா ஆக்கப்பட்டாரா? போர் முறைகளைத் தீவிரமாக மீறியும், கிளைன் பதவியில் இருக்கிறார், தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவில்லை. முக்கிய அரசியல்வாதிகளினதும் மற்றும் ஜேர்மனிய இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரியான Wolfgang Schneiderhan உடைய ஆதரவும் அவருக்கு இருக்கிறது. இவர்தான் குண்டுஸுக்கு பயணித்து நிகழ்வுகள் பற்றி கிளைன் கூறிய தகவலுக்கு ஆதரவு கொடுத்தார். கணிசமான காலத்திற்கு இராணுவம் மற்றும் வலதுசாரி அரசியல் வட்டங்களில் ஜேர்மனிய இராணுவம் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு ஆப்கானிஸ்தானில் "தக்க" போரைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பல குரல்கள் ஒன்றாக இணைந்து கூறின. ஆப்கானிஸ்தானிற்குள் இருக்கும் பல நாடுகளின் படைப்பிரிவுகளின் துருப்புக்களுக்குள் தீவிர பூசல்களும் உள்ளன. ஜேர்மனிய இராணுவம் நாட்டின் தெற்குப் பகுதியில் வன்முறை போரில் பங்கு கொள்ளாததால் ஜேர்மனிய துருப்புக்கள் "கோழைகள்" என்று ஏளனப்படுத்தப்பட்டனர். தங்கள் பங்கிற்கு ஜேர்மனிய பிரிவினர் பலமுறையும் குடிமக்கள்மீது அமெரிக்கர்கள் நடத்தும் செயல்களைப் பற்றி பலமுறை குறைகூறினர். தளபதி மக்கிரிஸ்டல் வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு நிருபருடன் குண்டுஸுக்கு வந்து பகிரங்கமாக சமீபத்திய விமானத் தாக்குதலைக் குறைகூறியபோது, ஜேர்மனிய அரசியல் மற்றும் இராணுவ வட்டங்கள் "பதிலுக்குப் பதில்" நடவடிக்கை பற்றிப் பேசின. போர் முன்னணியில் இருந்து வரும் தகவல்கள்படி, ஜேர்மனிய படையினரின் உணர்விலும் குறிப்பிடத்தக்க மாறுதல் வந்துள்ளது. குண்டுஸ் படுகொலை ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவத்தின் பங்கு மறுகட்டமைப்பிற்கு ஆதரவு கொடுத்து ஜனநாயகத்தை நிறுவுதல் என்ற கற்பனைக்கதைகளை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. மாறாக இப்பொழுது வெளிப்படையாக போர், பதிலடி என்ற பேச்சுக்கள் வந்துள்ளன. விமானத்தாக்குதல் நடந்த சிறிது காலத்திற்குள் குண்டுஸ் தள முகாமிற்குச் சென்றிருந்த Der Spiegel நிருபரின் கருத்துப்படி; "இன்று அந்த டாங்கர்கள்மீது தாக்குதல் நடத்தது முற்றிலும் சரி என்று நினைத்தேன். இந்த இழிமக்கள் அதிகமாகக் கொல்லப்பட வேண்டும்" என்று அதிகாரி ஒருவர் கூறியதாக அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் மற்றைய காலனித்துவவகைப் போர்களில் இருப்பதைப் போலவே, போரின் உள்ளடக்கம் அதன் வடிவத்தை நிர்ணயிக்கிறதே அன்றி எதிர்மாறாக இல்லை. உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு முற்றிலும் மாறாக நாட்டின் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய நோக்கங்களுக்குத்தான் உதவும். உலகின் பெரும் கொழிப்பு உடைய எரிசக்தி இருப்புக்களின் நடுவில் இருக்கும் பகுதி உள்ளது, அது கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் மையத்தானத்தில் உள்ள கருத்து. இந்தப் போரின் வேர்கள் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் முன்னதாகச் செல்கின்றன. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நாட்டின் விவகாரங்களில் பல ஆண்டுகளாக தலையிட்டு வந்துள்ளதுடன், தற்காலிகமாக அவற்றின் தற்பொழுதைய விரோதிகளுக்கும் (அல் குவைடா மற்றும் தலிபான்) மற்றும் அவர்களுடைய தற்பொழுதைய நண்பர்களுக்கும் (போர்ப்பிரபுக்கள், போதை கடத்தல் பிரபுக்கள்) ஆதரவு கொடுத்து வந்துள்ளன. நாட்டை ஏகாதிபத்திய சக்திகள் ஆக்கிரமித்துள்ளது தவிர்க்க முடியாமல் வெளிநாட்டுத் துருப்புக்களை உள்ளூர் மக்களுடன் பெருகிய முறையில் பூசல்களில் ஈடுபடுத்துகிறது. "எழுச்சியாளர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது" என்று Der Spiegel எழுதுகிறது, "ஒவ்வொரு புது இறப்பும் புதிதாக டஜன் எதிரிகளை உருவாக்குகிறது; சில சமயம் நூற்றுக்கணக்கான புது விரோதிகளை, சகோதரர்கள், மகன்கள், நெருங்கிய உறவினர்கள் பழிதீர்க்கப் புறப்புடும் வகையில் ஏற்படுத்துகிறது." இந்த நிலைமைக்கு அமெரிக்கா விடையிறுக்கும் வகையில் அதன் துருப்புக்கள் எண்ணிக்கையை அதிகரித்து பாக்கிஸ்தானுக்கும் போரை விரிவாக்கம் செய்கிறது. ஜேர்மனிய அரசாங்கம் தான் பின்தங்கிவிடக்கூடாது என்ற உறுதியில் அமெரிக்காதான் களத்தில் ஏகபோக உரிமை கொண்டிருப்பதை விரும்பவில்லை. இவ்விதத்தில் குண்டுஸ் படுகொலை ஒரு திருப்புமுனையைப் பிரதிபலிக்கிறது. இப்பொழுது எல்லா பக்கங்களில் இருந்தும் ஜேர்மனிய துருப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும், தங்கள் உயிரை ஆப்கானிஸ்தானில் பணயம் வைத்திருக்கும் ஜேர்மனிய துருப்புக்களின் முதுகில் குத்தாமல் தக்க ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்ற வாதம் பிறக்கிறது. இவ்விதத்தில் கடந்த சனிக்கிழமையன்று Süddeutsche Zeitung பத்திரிகையில் வந்துள்ள கருத்து முன்மாதிரியாக இருக்கிறது. Peter Blechshmidt அரசியல் வட்டங்களும் செய்தி ஊடகமும் இறுதியில் ஜேர்மனி போரில் ஈடுபட்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளன என எழுதுகின்றார். "ஜேர்மனிய படையினர் தாக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கின்றனர், ஜேர்மனிய படையினர் பதிலடி கொடுத்து மனித உயிர்களைக் கவர்கின்றனர்....இந்த நிலைமை நல்லதாக இருக்கின்றது என்ற வகையில் கூறப்படும் முயற்சிகளுக்கு முடிவு வேண்டும்." படைகள் அனுப்பப்பட்டதை ஏற்றால், "அது சரியாகச் செய்யப்பட வேண்டும்...", "படைகள் நிலைநிறுத்தப்படுவதின் தன்மையை அடிப்படையில் மாற்றுக" என்று Blechschmidt கோருகிறார். "தற்பொழுதுள்ள 4,500 படையினர் மிகவலிமையான தலிபான்களோடு போரிட போதாது." ஜேர்மனி "இனியும் விமான ஆதரவு அளித்தல் என்ற நயமான பணியில் ஈடுபடாமல் இருக்கக்கூடாது", இதன் படையினர்களுக்கு "இன்னும் சட்டபூர்வ பாதுகாப்பு வேண்டும்". தெளிவாகக் கூற வேண்டும் என்றால், கூடுதலான ஜேர்மனியத் துருப்புக்கள், தாக்கும் விமானங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் படையினருக்கு தண்டனையில் இருந்து விலக்கு ஆகியவை வேண்டும் என்று Blechschmidt கோருகிறார். பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளுமே இப்படித்தான் குண்டுஸ் படுகொலைகளுக்கு விடையிறுத்துள்ளன. CDU வின் பாராளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவரான Ruprecht Polenz திங்களன்று கூறினார்: "நாம் பொறுப்பேற்றுள்ள வட பகுதியின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துதவதற்கு நம்முடைய படையின் அளவை உயர்த்துதல் தேவை என்றால், பின் அதைப்பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.Kölner Stadtanzeiger பத்திரிகையில் பசுமைவாதிகளின் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிய செய்தித் தொடர்பாளர் Winfried Nachtwei தன்னுடைய ஆதரவை கேர்னல் கிளைனுக்கு வெளிப்படுத்தி குண்டுத் தாக்குதல் "கடந்த சில மாதங்களாக இருக்கும் நிலைமையின் வளர்ச்சியின் உள்ளடக்கத்தில் வைத்து காணப்பட வேண்டும்....ஒவ்வொரு நாளும் கைகலப்புக்கள், பூசல்கள் என்று உள்ளன. இந்தப் பின்னணியில் இது போன்றவை நடக்கக்கூடியதுதான்...." மேலும் ஹிந்துகுஷ் பகுதியில் தலிபானுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வேறுபாட்டை எளிதில் காண முடியாது. ஜேர்மனிய இராணுவம் காட்டும் நிதானத்தை ஒட்டி உள்ளூர் இரகசிய உளவுப் பிரிவுகளின் தலைவர் கேர்னல் கிளைனை ஜூன் மாதம் எப்படி குறைகூறினார் என்பதைத் தான் நேரில் உணர்ந்ததாக Nachtwei கூறினார். கடுமையாகத் தாக்குவது ஒன்றுதான் செய்ய வேண்டிய நடவடிக்கையாகும் என்றார்'' அவர்.சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய வெளியுறவு மந்திரியுமான பிராங் வால்ட்ர் ஸ்ரைன்மயர் குண்டுஸ் படுகொலையை எதிர்கொள்ளும் வகையில் ஒரு 10 அம்சத் திட்டத்தைக் கூறினார்; இதில் ஜேர்மனிய பாதுகாப்புப் படைகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளது. மற்ற கோரிக்கைகளுடன் ஸ்ரைன்மயர் ஜேர்மனிய செல்வாக்குப் பொறுப்பு மண்டலத்தில் போலீஸிற்கு பயிற்சி கொடுப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக ஆக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்' அதுதான் ஆப்கானிய இராணுவத்தை வலுப்படுத்தும், அப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தும் என்கிறார். இந்த நடவடிக்கைகள் பின்னர் "ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனியப் படைகள் திரும்பப் பெறப்படுவதற்கு" அடிப்படையாக அமையும்; இது அடுத்த சட்டமன்றத் தேர்தல் காலத்திற்கு முன் நடக்க வேண்டும் என்பது ஸ்ரைன்மயரின் திட்டம் ஆகும். சில செய்தித் தாட்கள் 2013 சட்டமன்றக்கால முடிவிற்குள் ஜேர்மனிய படைகள் திரும்பப் பெறுவதற்கு ஸ்ரைன்மயர் அழைப்பு கொடுப்பார் என்று தகவல் கொடுத்த போது தன்னுடைய நிலைப்பாடு அது அல்ல என்று அவர் விரைவில் விளக்கம் கொடுத்தார். இடது கட்சியின் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனை ஸ்ரைன்மயரை மிகச் சிறப்பாகப் பாராட்டுவதில் இருந்து தடை செய்ய இது போதுமானதாக இல்லை. "செய்தி மெதுவாக மற்ற கட்சிகளையும் அடைந்து வருகிறது என்பது வெளிப்படை. ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய ஆயுதப் படைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்பது" என்று அவர் கூறினார். உண்மையில் ஸ்ரைன்மயரின் திட்டத்திற்கு லாபொன்டைனின் ஆதரவு இடதுகட்சி ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவப் பணிக்குத் தன்னை முற்றிலும் சமரசப்படுத்திக் கண்டுவிடத் தயார் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. |