WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
ஜப்பான்
Democrat government installed in Japan
ஜனநாயக் கட்சி அரசாங்கம் ஜப்பானில் பதவியில் இருத்தப்படுகிறது
By Peter Symonds
17 September 2009
Use this
version to print | Send
feedback
ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் (DPJ)
யுகியோ ஹடோயாமா நேற்று முறையாக ஜப்பானின் டயட் எனப்படும் பாராளுமன்றத்தில் வாக்களிப்பை அடுத்து
பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். ஆகஸ்ட் 30ம் தேதி கீழ்மன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியை
அடைந்து, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த தாராளவாத ஜனநாயகக்
கட்சியை (LDP)
தோற்கடித்திருந்தனர்.
தெளிவற்ற உறுதிமொழிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு இருந்த பரந்த
விரோதம் ஆகியவற்றின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் அரசாங்கச் செலவுகளைக்
குறைக்கவும், சிறு குழந்தைகளுக்கு உதவிகள், இலவசக் கல்வி, விவசாயிகளுக்கு ஆதரவு, சாலை சுங்க வரி
குறைப்பு ஆகிய மிகக் குறைந்த தேர்தல் உறுதிமொழிகளைக் கைவிடுமாறும் பெருவணிகத்திடம் இருந்து அழுத்தங்களை
எதிர்கொண்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியால் கடும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள ஜப்பான் மொத்த
உள்நாட்டு உற்பத்தியைப் போல் 170 சதவிகிதம் பொதுக் கடனைக் கொண்டுள்ளது. இது தொழிற்துறைமயமாகியுள்ள
நாடுகளில் மிகவும் அதிகமானதாகும்.
1998 ல் அமைப்பட்ட ஜப்பானிய
ஜனநாயகக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி உடைவுகளால் வெளிவந்த பிரிவுகள், முன்னாள் ஜப்பானிய
சோசலிசக் கட்சி மற்றும் பிற சிறு கட்சிகளின் கலவை ஆகும். ஆனால் 18 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையின்
பெரும்பாலான உயர் பதவிகள் முன்னாள் தாராளவாத ஜனநாயக உறுப்பினர்களால் வகிக்கப்படுகின்றன. ஹடோயாமா
உறுதியான தாராளவாத ஜனநாயகக் கட்சி மரபில் இருந்து வருபவர். 1993ல் கட்சியை விட்டு நீங்கும் வரை தாராளவாத
ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவருடைய பாட்டனார் இச்சிரோ ஹடோயாமா
1955ல்தாராளவாத ஜனநாயகக் கட்சியை நிறுவி அக்கட்சி சார்பில் முதல் பிரதம மந்திரியாக இருந்தார்.
இரு உயர்மட்ட மந்திரிசபை பதவிகள் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி நபர்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சந்தை மறுகட்டமைப்பிற்கு ஆதரவு கொடுப்பவர்கள் என்று பெயர்
பெற்றவர்களாவர். துணைப் பிரதம மந்திரி, நாவோடோ கான் ஒரு புதிய பொதுக் கொள்கைகள் வழிகாட்டியை
அமைக்கும் தேசிய மூலோபாயப் பிரிவிற்கு தலைமை தாங்கி கட்சியின் உறுதிமொழியான "வீணடித்தலை"("waste")
அகற்றுதல் என்பதைச் செயல்படுத்தி, நாட்டின் செல்வாக்கு மிக்க அதிகாரத்துவத்தையும் கட்டுப்படுத்துவார். இந்த
உறுதிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக பேசப்படவில்லை என்றாலும், கட்சி மொத்தத்தில் கொடுக்கும்
ஊதியப் பணத்தை 2013க்குள் 20 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது; வேலைகள் அகற்றப்படல்,
ஊதியங்கள் குறைப்பு ஆகியவற்றின் மூலம் இது நடைபெறும். தாராளவாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வராத
ஒரே மூத்த மந்திரி கான் ஆவார்.
வரவிருக்கும் புதிய நிதி மந்திரி ஹிரோஹிசா ப்யூஜி, தாராளவாத ஜனநாயகக் கட்சி
பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன் நிதி அமைச்சரகத்தில் ஒரு
மூத்த அதிகாரியாக இருந்தவர். 1993ல் தாராளவாத ஜனநாயகவாதிகள் அலையென நீங்கிய நேரத்தில் இவர்
சேர்ந்து, 1993-94 இல் பிளவிற்குப் பின் குறுகிய காலம் மட்டுமே பதவியில் இருந்த இரு தாராளவாத
ஜனநாயகக் கட்சி இல்லாத அரசாங்கங்களில் நிதி மந்திரியாக இருந்தார். கடந்த வாரம் ப்யூஜி பைனான்சியல்
டைம்ஸிடம் அடுத்த அரசாங்கம் உடனடியாக முந்தைய ஊக்கப்பொதி செலவு பற்றி பரிசீலித்து "கணிசமான
குறைப்புக்களை" செய்யும் என்றார். அரசாங்க நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2.9 டிரில்லியன் யென்கள் (US$31
பில்லியன்)
மற்றும் விருப்புச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4.3 டிரில்லியன்
அரசாங்க செலவின நிதி ஆகியவை குறைப்புக்களின் முதல் இலக்குகளாக இருக்கும் என்றார்.
ஷிசுகா கமேய் அஞ்சல் மற்றும் நிதியப் பிரிவு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளமை
நிதிய வர்ணணையாளர்களிடம் கவலையைத் தூண்டியுள்ளது. கமேய் தாராளவாத ஜனநாயகக் கட்சி பிரிவு ஒன்றில்
பிரதம மந்திரி ஜூனிச்சிரோ கொய்சுமியால் 2005ல் வெளியேற்றப்படுவதற்குமுன் வலுப் பெற்றிருந்தவர்.
மேல்மன்றத்தில் அஞ்சல்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு வந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்ததற்காக இவ்வாறு
செய்யப்பட்டது. இப்பொழுது மக்கள் புதிய கட்சி (People's
New Party) என்றும் ஆளும் கூட்டணியில் இருக்கும் இரு சிறு
கட்சிகள் ஒன்றின் தலைவரான இவர் ஜப்பானிய அஞ்சல்துறை மறுகட்டமைப்பை மெதுவாகச் செயல்படுத்தக் கூடும்.
பெருவணிகமோ அதன் பரந்த சேமிப்புக்கள் தனியார் நிதிய நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று
கோரி வருகிறது.
நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்று புதிய அமைச்சரவையில்
"சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்களை சோசலிஸ்ட்டுகள், தொழிற்சங்கத் தலைவர்கள், மற்றும் தடையற்ற சந்தைகள்,
கட்டுப்பாடுகளை அகற்றுதல், தொழில்வழங்கவோரை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு வெளிப்படையாக
விரோதப்போக்கு கொண்டவர்கள் மற்றும் ஒரு எளிமையான, நியாயமான, பொருளாதார, சமூக முறை வேண்டும்
என்ற ஆர்வத்தைக் கொண்டவர்கள்" இருப்பது பற்றி புலம்பியுள்ளது. ஆனால் கமேய் பற்றி உயர்த்திப் பேசுகையில்
அது 1990 களில் அவர் 200 பொதுப்பணித் திட்டங்களை அகற்றி, அப்பொழுது இருந்த மாற்றுவிகிதப்படி 3
டிரில்லியன் யென் அல்லது $33 அமெரிக்க பில்லியனை சேமிப்பதற்குக் காரணமாக இருந்தவர் என்று
கூறிப்பிட்டுள்ளது.
முன்பு சோசலிஸ்ட்டுக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், மற்றும் தொழிற்சங்கத்
தலைவர்கள் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நிறைய எண்ணிக்கையில் உள்ளனர் என்பது உண்மைதான். விவசாய
மந்திரிப் பொறுப்பை ஏற்றுள்ள ஹிரோடகா அகமட்சு சோசலிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக, அது தாராளவாத
ஜனநாயகக் கட்சியுடன் கொண்டிருந்த பெரும் கூட்டணியில் இருந்து 1994-96 பிளவு ஏற்படும் வரை இருந்தார்.
நீதித்துறை மந்திரி கேய்கோ சிபாவும் ஒரு முன்னாள் சோசலிஸ்டுக் கட்சி பாராளமன்ற உறுப்பினர்தான், இன்னும்
நான்கு பேர் ஜனநாயக சோசலிச கட்சியின் (DSP)
உறுப்பினர்கள். இது 1960ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சியில் இருந்து
ஒரு வலதுசாரிப் பிளவுக் கட்சியாக வெளிவந்தது. மிகவும் முக்கியமானவர் புதிய பொருளாதார வணிக, தொழில்துறை
மந்திரியான மசயுகி நவோஷிமா ஆவர்; இவர் ஒரு முன்னாள் மூத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தை
சேர்ந்தவரும், ஜப்பானிய கார்த்தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பில் இருப்பவருமாவர்.
ஜனநாயக சோசலிச கட்சி தன்னை
New Frontier Party
என்னும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பிளவுப் பிரிவுகளில் ஒன்றுடன் 1994 கரைத்துக் கொண்டது. குழப்பத்தை
அதிகரிக்கும் வகையில், சரிவைத் தொடர்ந்து சோசலிஸ்ட் கட்சி தன்மை 1996ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி
என்று புதுப் பெயரிட்டுக் கொண்டது. இப்பொழுது ஒரு சிறிய எஞ்சிய கட்சியாக இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள்
புது அரசாங்கத்தில் இரண்டாம் கூட்டணிக் கட்சியினராக உள்ளனர். இதன் தலைவர் மிசுஹோ புகுஷிமா ஒப்புமையில்
சிறிய பதவியாகிய மக்கள் தொகை, நுகர்வோர் விவகாரங்கள், பாலியல் சமத்துவம், உணவுப்பாதுகாப்பு மந்திரி
என்பதைக் கொண்டுள்ளார்.
"சோசலிஸ்ட்" மந்திரிகள் இருப்பதின் உண்மையான முக்கியத்துவம் அரசாங்கத்திற்கும்
அதன் கொள்கைகளுக்கும் எதிராக உள்ள தொழிலாளர் வர்க்கத்திடையே தவிர்க்க முடியாமல் வரவிருக்கும்
எதிர்ப்பை கட்டுப்படுத்தி, அடக்குவதற்காகும். உத்தியோகபூர்வ வேலையின்மை ஜப்பானில் ஏற்கனவே போருக்குப்
பின் மிக அதிகமான 5.7 சதவிகிதத்தை அடைந்துள்ளது. வீடுகள் இன்மை, வறுமை ஆகியவையும் வேலையின்மையில்
இருப்பவர்களுக்குக் குறைந்த பொதுநல ஆதாயங்கள் என்ற நிலையில் உயர்ந்து கொண்டிருக்கின்றன.
ஹடோயாமா அரசாங்கம் இன்னும் நேரடியாக தாராளவாத ஜனநாயகக் கட்சியை
விட முன்னாள் சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வரும்
எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தம் என்பவற்றை அழிக்க நம்பியிருக்கும். ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் (JCP)
சேவையையும் அது அழைக்க வேண்டியிருக்கும்; ஆளும் கூட்டணியில் அது பங்கு பெறவில்லை என்றாலும், தேர்தல்
பிரச்சாரத்தின்போது ஒரு விசுவாசமான பாராளுமன்ற எதிர்க் கட்சியாக செயல்படுவதாக உறுதியளித்திருந்தது.
நேற்று ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கசுவோ ஷிய் கட்சி புது அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது
பிரச்சனைகளை ஒட்டி தனித்தனிய முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.
"சோசலிஸ்ட்" மந்திரிகளும் ஓரளவு ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தவர்களில்
கோபத்தை குறைக்கும் பங்கைக் கொள்வர். ஏனெனில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமை
ஆக்கிரமிப்பிற்கு எதிராக அவர்கள் இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளனர். வெளியுறவுக் கொள்கையில்,
உள்நாட்டுக் கொள்கையைப் போலவே, உயர் பதவிகள் முன்னாள் தாராளவாத ஜனநாயகக் கட்சி
அரசியல்வாதிகளிடம் உள்ளன. புதிய வெளியுறவு மந்திரி கட்சுயா ஒகாடா ஆவர்; இவர் 2005 தேர்தல்களில்
தோற்கும் வரை ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்தார். டொஷிமி கிடஜாவா வரவிருக்கும்
பாதுகாப்பு மந்திரி ஆவார்.
பதவியேற்பதற்கு முன்பே ஹடோயாமா நியூயோர்க் டைம்ஸிற்கு கருத்துத்
தெரிவிக்கையில் அமெரிக்க-ஜப்பானிய உடன்பாடு ஜப்பானிய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக இருக்கும்
என்று அறிவித்தார். வாஷிங்டனுடனான உறவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இருக்காது என்று ஒகடா அடையாளம்
காட்டி ஆப்கானிஸ்தான் போருக்கு ஆதரவாக ஜப்பானிய கடற்படை எரிபொருள் அளித்தல் நிறுத்தப்படும் என்ற
கட்சியின் தேர்தல் உறுதிமொழியில் இருந்து பின்வாங்கினார். நேற்று அவர் ஒருக்கால் வேறு நிபந்தனைகளில்
இப்பணியைத் தொடர்தல் அல்லது ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு வேறுவிதத்தில் பங்களிப்புக்கள் கொடுக்கப்படுவது
தொடரும் என்பதை நிராகரிக்கவில்லை.
நேற்று அமெரிக்க உறவுகளுடன் மறு ஆய்வு வேண்டும் என்று ஹடோயாமா
எச்சரிக்கையுடன் அழைப்பு விடுத்தார். வாஷிங்டனுடன் ஜப்பான் கொண்டிருக்கும் "ஓரளவு பெரும் இணக்கம்"
மாற்றப்படுவதைத் தான் விரும்புவதாகவும் கூறினார். ஜப்பானின் ஆசிய அண்டை நாடுகளுடன், குறிப்பாக அதன்
மிகப் பெரிய வணிகப் பங்காளியான சீனாவுடன் சிறந்த உறவுகளைக் கொள்ள வேண்டும் என்று முன்னதாக அவர்
குறிப்புக் காட்டியிருந்தார். ராய்ட்டர்ஸுக்கு ஜூலையில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஒகடா கட்சி நிதானமாகச்
செயல்படும் என்று வலியுறுத்தினார். "[வருகை புரிந்திருந்த] அமெரிக்க அதிகாரிகளிடம் நான் கூறியது....
அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க ஒரேதரத்தில் மேசையில் வைத்து, 'இது பற்றி
என்ன செய்யலாம்' என்று கேட்க மாட்டோம்" என்றார்.
ஆனால் தீவிர வேறுபாடுகளுக்கான சாத்தியமுள்ள விடயங்கள் உள்ளன. ஜனநாயக கட்சியினர்
ஓகினாவாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மறுகட்டமைப்பதற்கான ஏற்பாடுகள் தங்களால் பரிசீலிக்கப்படும்
என்ற விருப்பத்தை குறிப்பிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக முந்தைய அரசாங்கம் 8,000 அமெரிக்க மரைன்கள்
குவாம் பகுதிக்கு மாறிச் செல்வதற்கான செலவான $6 பில்லியனை ஏற்போம் என்று கூறியிருப்பது பற்றி. அதேபோல்
சமூக ஜனநாயக கட்சியிடம் இருந்து அமெரிக்க போர்க்கப்பல்கள் ஜப்பானியத் துறைமுகங்களில் வரலாம் என்று
அனுமதிப்பதாகக் கூறப்படும் இரகசிய உடன்பாட்டின் விவரங்களை வெளியிடுவதற்கும் அழுத்தம் வந்துள்ளது.
உலகப் பெருமந்த நிலைச் சூழலில், வாஷிங்டனுடன் தீவிரப் பூசல்கள் என்பவை வணிகம்
மற்றும் காப்புவரிக் கொள்கை பற்றிதாக எழக்கூடும். ஜப்பானிய ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு வியத்தகு அளவில்
குறைந்துவிட்டன. மேலும் தாராளவாத ஜனநாயகக் கட்சியிடம் இருந்து கிராமப்புற வாக்காளர்களை கைப்பற்றிக்கொள்வதற்காக
ஜனநாயகக் கட்சியினர் ஜப்பானிய விவசாயிகளை அமெரிக்காவுடனான எந்த வணிக உடன்பாட்டிலும் பாதுகாப்பதாக
உறுதியளித்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் விவசாயம், தொழில்துறை அமைச்சரகங்கள் "சோசலிஸ்ட்" மந்திரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இருக்கும் பல சோசலிஸ்ட் கட்சி எனக் கூறப்படுபவை எப்பொழுதும் சோசலிசத்தைத்
தளமாகக் கொண்டிராமல், தேசியப் பொருளாதாரக் கட்டுப்பாடு, காப்புவரி ஆகியவற்றையும், அமெரிக்காவில்
இருந்து கூடுதலான ஜப்பானிய சுயாதீனத்தையும் அடித்தளமாகக் கொண்டவையாகும்.
ஹடோயாமா அரசாங்கம் பதவியேற்றிருப்பது 1970, 1980 களில் சர்வதேசரீதியாக
போருக்குப் பின் அரசியல் பொருளாதார உறவுகள் உறவுகளின் உடைவின் நீண்டகால நிகழ்போக்கின் இறுதி விளைவு
ஆகும். அரசியல் மற்றும் வணிக நடைமுறையின் சக்திவாய்ந்த பிரிவுகள் 1990களின் துவக்கத்திலிருந்தே ஜப்பானிய முதலாளித்துவத்தை
உள்நாட்டிலும் வெளியேயும் ஆக்கிரோஷமாகத் தொடர்வதற்கு ஒரு புதிய கருவி தேவை என்ற முடிவிற்கு வந்தன.
இதைத்தான் புதிய நிர்வாகம் இப்பொழுது பெரும் அழுத்தத்தின் கீழ் துல்லியமாகச் செயல்படுத்த வேண்டும். |