WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Washington's "good war"
Death squads, disappearances and torture in Pakistan
வாஷிங்டனுடைய "நல்ல போர்"
பாக்கிஸ்தானில் மரணக்குழுக்கள், காணாமல் போவோர் மற்றும் சித்திரவதை
Bill Van Auken
16 September 2009
Use this
version to print | Send
feedback
AfPak போர் என்று கூறப்படுவதில்
ஒபாமா நிர்வாகம் பெரிய விரிவாக்கத்திற்கு தயாரிப்பு நடத்துகையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைக்கு
அருகே உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து வரும் தகவல்கள் பென்டகனும் அதன் உள்ளூர் கூட்டு அமைப்புக்களும்
நடத்திக்கொண்டிருக்கும் போரின் கொடூரத்தன்மை பற்றி வெளிப்படுத்துகின்றன.
ஒபாமா மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் "நல்ல போர்" என்று கூறப்பட்டாலும்,
பென்டகனும் CIA
ம் இப்பகுதியில் மக்களுக்கு எதிரான ஒரு போரில் மரணக்குழுக்கள், காணாமபோதல் மற்றும சித்திரவதை
ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு போரில் ஈடுபட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் பெருகியுள்ளன.
பாக்கிஸ்தானிய இராணுவம் நாட்டின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பகுதியான
ஸ்வாட்டிற்கு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க-நேட்டோ படைகளை எதிர்க்கும் எல்லைக்கு அப்பால்
இருக்கும் சக பஷ்டூன்களுக்கு ஆதரவளிக்கும் இனவழி பஷ்டூன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு (வாடிக்கையாக பாக்கிஸ்தானிய
தலிபான்கள் என்று கூறப்படுபவற்றிற்கு) எதிராகப் போர் புரிய கடந்த ஏப்ரல் மாதம் 20,000 படையினரை
அனுப்பிவைத்தது.
அமெரிக்கத் தூதர் ரிச்சார்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மூத்த அமெரிக்க இராணுவ
அதிகாரிகள் இஸ்லாமாபத்திற்கு பலமுறை சென்று பகிரங்கமாக அழுத்தும் கொடுத்தன் விளைவாக நடத்தப்படும்
இத்தாக்குதல், கடுமையான மனிதாபிமானமற்ற பேரழிவைக் கட்டவிழ்த்துள்ளது. கூட்டுத் தண்டனை விதிப்பில்
மிகப்பெரிய தன்மை என்று கூறப்படக்கூடிய விதத்தில் பல குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமுற்றனர்.
கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இப்பொழுது பாக்கிஸ்தானிய இராணுவம் தொடர்ந்து அப்பகுதியை ஆக்கிரமித்து, ஒரு
அச்சுறுத்தும் ஆட்சியை செயல்படுத்தியுள்ளது. இதில் அரசாங்கத்தின் விரோதிகள், எல்லை கடந்து அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு விரோதிகள் என்று அடையாளம் காணப்படும் தனிநபர்கள் பிடித்துச்செல்லப்பட்டு, சித்திரவதையினால்
கொல்லப்படுகின்றனர்.
செப்டம்பர் 15 அன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளிவந்த அறிக்கை
ஒன்றின்படி, ஸ்வாட் பள்ளத்தாக்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், "ஒரு புதிய அச்சம் தரும் பிரச்சாரம்
முடுக்கிவிடப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கு வாதிடுபவர்களாலும் மற்றும் உள்ளூர் மக்களாலும் இராணுவத்தின் செயல்
என்று கூறப்படும்வகையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் தெருக்களில் வீசியெறியப்பட்டுள்ளன.
பாக்கிஸ்தானிய இராணுவம் இந்த அலைபோன்ற கொலைகளுக்கு பொறுப்பேற்க
மறுத்துள்ளது. இவை அடிப்படைவாதிகளுக்கு எதிராக குடிமக்கள் பழிதீர்ப்பதின் விளைவு என்று கூறி, டைம்ஸ்
உள்ளூர்மக்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயலர்கள் இராணுவத்தை குறைகூறுவதாக
மேற்கோளிட்டுள்ளது. "பதிலடியின் அளவு, பல பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மாதிரியான வகையில்
சித்திரவதைக்குட்பட்டது மற்றும் இராணுவம் உறுதியாகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள இடத்தில் இறப்பின்
ஒரேமாதிரியான தன்மைகள் மற்றும் காணாமற்போதல்" ஆகியவற்றை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று
டைம்ஸ் கட்டுரை கூறுகிறது.
மிருகத்தனமான சித்திரவதைக்குரிய அடையாளங்களை கொண்டுள்ளதுடன் பல சடலங்கள்
கைகள் பின்னால் கட்டப்பட்டுள்ள நிலையில், கழுத்தின் பின்புறம் தோட்டாவுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில
பிணங்களில் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1ம் தேதி, பாக்கிஸ்தானின் நாளேடு
Dawn,
ஜூலை முதல் ஸ்வாட் பள்ளத்தாக்கில் சாலைகளுக்கு அருகே 251 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அரசாங்க
அதிகாரிகள் கூறியதை மேற்கோளிட்டுள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி செய்தித்தாள் 51 சடலங்கள் 24 மணி
நேரத்திற்குள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று கூறியுள்ளது.
இராணுவத் தாக்குதலில் பலியான ஏராளமான சடலங்கள் அடங்கிய பல பாரிய சவக்குழிகளையும்
கண்டுபிடித்துள்ளதாக Dawn
கூறியுள்ளது. உள்ளூர் மக்கள் "இத்தகைய மோசமான, மனிதத்தன்மையற்ற முறையில் உயிருள்ளவர்களையும் சடலங்களையும்"
ஒன்றாக தூக்கி எறிவது பற்றி குறிப்பட்டனர் என்று டான் கூறுகிறது.
28 வயதான அக்தர் அலி, அவருடைய மின்சாரப்பொருட்கள் பழுது போக்கும்
கடையில் செப்டம்பர் 1ம் தேதி இராணுத்தால் கைது செய்யப்பட்ட நிலையைப் பற்றி டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
அவருடைய குடும்பத்தினரிடம் இராணுவம் பலமுறையும் அவர் விடுவிக்கப்படுவார் என்று கூறியும், நான்கு நாட்களுக்கு
பின்னர் அவருடைய சடலம் வீட்டு வாசலில் தூக்கி எறியப்பட்டிருந்ததுடன் முழுவதும் சிகரெட் சூடுகளின் அடையாளமும்,
சதைக்குள் ஆணிகள் அடிக்கப்பட்டதின் அடையாளங்களும் இருந்தன. "உடலில் ஒரு பகுதி கூட சித்திரவதைக்கு உட்படாமல்
இல்லை" என்று நீதி கோரும் மனுவில் அவருடைய குடும்பம் எழுதியுள்ளது.
பாக்கிஸ்தானிய இராணுவத்தை ஸ்வாட் பள்ளத்தாக்கு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க
அதிகாரிகள் புகழ்ந்துள்ளனர். அமெரிக்க தூதர் ஆனி பாட்டர்சன், ஸ்வாட்டின் பெரிய நகரமான மிங்கோராவிற்கு
கடந்த வாரம் இராணுவத்தைப் பாராட்டச் சென்றிருந்தார்.
இப்பொழுது அமெரிக்க அதிகாரிகள் பாக்கிஸ்தான் அரசாங்கத்திடம் இந்த இரத்தம்
தோய்ந்த நடவடிக்கையை தெற்கு வஜீரிஸ்தானில் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. ஏற்கனவே இதேபோன்ற
தாக்குதல் கைபர் பகுதி, கைபர் கணவாயருகே நடக்கிறது. இது ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் அமெரிக்கப்
படைகளுக்கு பொருட்களை அனுப்பும் முக்கிய பாதையாகும். தாக்குதலையொட்டி 100,000 மக்கள் இடம்
பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாக்கிஸ்தான் மக்குள்கு எதிராக நடத்தப்படும் கொடூரங்களின் பின்னணியில் வாஷிங்டன்தான்
உள்ளது. பாக்கிஸ்தானிய இராணுவ நடவடிக்கைகளுக்கு அது நிதியளிக்கிறது. $2.5 பில்லியன் வெளிப்படையான இராணுவ
உதவியாக இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்
CIA இன் ஆளில்லாத
விமான டிரோன் தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 600 பாக்கிஸ்தானிய உயிர்களை இது
குடித்தது; அவற்றுள் பெரும்பாலனவர்கள் சாதாரணக் குடிமக்கள் ஆவர்.
பாக்கிஸ்தானில் நடக்கும் இத்தகைய அலையென காணாமற்போகுதல், சித்திரவதை
மற்றும் மரணம் இயக்கும் குழுக்கள் நடத்தும் படுகொலைகள் அனைத்தும் "அமெரிக்காவில் தயாரிக்கப்படுபவை (made
in the USA)" என்று சந்தேகிப்பது சிறிதும் தவறாகாது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதியாவதற்கு முன்பு தளபதி ஸ்ரான்லி மக்கிரிஸ்டல்
இராணுவத்தின் கூட்டு சிறப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டு அதிகாரத்தின்
(JSOC) தலைவராக
இருந்தார். இதனை விசாரணை செய்தியாளரான சேமொவர் ஹெர்ஷ் "படுகொலை நிறைவேற்றும் பிரிவு" என்று
விவரித்துள்ளார்.
அமெரிக்க சிறப்புப் படைகளின் "பயிற்சியாளர்கள்" பாக்கிஸ்தான் மண்ணில்
செயல்பட்டு, பாக்கிஸ்தானிய படைகள் JSOC
விரும்பும் வகையிலான தந்திரோபாயங்களை பற்றி விளக்கும்
கொடுக்கின்றனர். இந்த தந்திரோபாயங்கள் ஸ்வாட் தெருக்களில் கட்டுண்டு, சிதைந்து தூக்கி எறியப்பட்டுள்ள
சடலங்களை உருவாக்கியுள்ளன.
இந்த உத்திகள் அமெரிக்காவின் எழுச்சி-எதிர்ப்பு போர்முறையின் நீண்டகால
வடிவமைப்புடன் முற்றிலும் இயைந்துள்ளன; Operations
Phoenix என்று வியட்நாமில் தொடங்கி 1980களில் எல்
சால்வடோர் மக்களை அச்சுறுத்திய அமெரிக்க ஆதரவு பெற்ற மரணக்குழுக்கள் வரை இந்நிலைதான் இருந்தது.
கூட்டுப்படைகள் கட்டுப்பாட்டுத் தலைவர் அட்மைரல் மைக் முல்லன் செவ்வாயன்று செனட்டின்
இராணுவக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படும் படைகள்
70,000 தரைப்படையினர் மற்றும் மரைன்கள் என்று உயர்த்தப்படுவது முக்கியமான தேவையாகும் என்று மீண்டும்
எச்சரித்தார்.
இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோளிட்டு
Dawn தளபதி மக்கிரிஸ்டல்
ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லைக் பகுதியில் போரின் குவிப்பு இருக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஆப்கானிய பகுதிகள் மீது எட்டு ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
பின்னரும் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், பென்டகன் மக்களுக்கு எதிராக புதிய அலையென இரத்தம் சிந்துதல்,
அச்சுறுத்தல் ஆகியவற்றை தொடக்க தயாராக உள்ளது. இது மக்கள் எதிர்ப்பை எல்லையின் இரு பக்கங்களிலும்
இல்லாதொழித்துவிடும் என்று நம்புகிறது.
போர் எதிர்ப்பு உணர்வில் தேர்தலில் வெற்றி பெற்று வந்த பாரக் ஒபாமாவின்
நிர்வாகம், ஏற்கனவே இதற்கு முந்தைய நிர்வாகம் நடத்திய போர்க் குற்றங்களுக்கு ஈடான, போட்டியான
வகையில் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவிற்குள் போருக்கான ஆதரவு ஈராக்கிற்கு இருந்த அளவிற்கு குறைந்துவிட்டது.
சமீபத்திய CNN
கருத்துக் கணிப்பு அமெரிக்கர்களில் 58 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர் என்றும் 30 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு கொடுப்பதாகக்
காட்டியுள்ளது.
அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களால் உந்துதல் பெற்றுள்ள, இந்த கறைபடிந்த
போரின் விரிவாக்கம், மற்றும் உள்நாட்டில் வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மீதான பெருகிய தாக்குதல்கள்
ஆகியவற்றுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஏகாதிபத்திப்
போருக்கு உந்துதல் சக்தியாக இருக்கும் இலாப முறை இவற்றிற்கு எதிராக வெளிப்படும் சூழ்நிலையை தோற்றுவித்துக்
கொண்டிருக்கின்றன.
|