World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The GM-Magna deal

German metal workers' union backs government in geostrategic power struggle

GM-மாக்னா உடன்பாடு

ஜேர்மனிய உலோகத் தொழிலாளர்கள் சங்கம் புவிசார் மூலோபாய அதிகாரப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறது.

Ulrich Rippert
17 September 2009

Back to screen version

செப்டம்பர் 10 அன்று ஜெனரல் மோட்டார்ஸின் நிர்வாகக் குழு டிட்ரோய்ட்டில் கனேடிய-ஆஸ்திரிய கார் விற்பனையாளர் மாக்னா, ரஷ்ய வங்கி Sbderbank, கார்த்தயாரிப்பு நிறுவனம் GAZ ஆகியவை அடங்கிய குழுவிற்கு ஓப்பலை விற்க இருப்பதாக அறிவித்தது. ஜேர்மனிய IG Metall தொழிற்சங்க அதிகாரிகளும் பணிக் குழு உறுப்பினர்களும் இதை பெரும் களிப்புடன் எதிர்கொண்டனர்.

குறைந்தது GM ன் ஐரோப்பிய ஆலைகளில் 11,000 வேலைகளையாவது இழப்பதை அவர்கள் ஏற்று, ஆன்ட்வெர்ப் (பெல்ஜியம்), லூடன் (பிரிட்டன்) மற்றும் Figueruelas (Spain) ஆகியவற்றிலுள்ள ஆலைகள் ஒருவேளை மூடப்படுவதை ஜேர்மனிய ஆலைகள் மூடப்படுவதை விட மேலானவை என்று பயனுள்ளமுறையில் ஆதரிக்கின்றனர்.

ஜேர்மனியில் உள்ள நான்கு ஓப்பல் ஆலைகளில் (Russelsheim, Bochum, Eisenach, Kaiserslautern) குறைக்கப்படும் வேலைகள் 2,500 அல்ல --முன்னர் அவ்வாறு கூறப்பட்டது-- 4,500 என்று இப்பொழுது தெளிவாகியுள்ளது. இன்னும் கடுமையான முறையில் பாதிக்கப்படும் ஆலைகள் பெல்ஜியம், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் போலந்தில் உள்ளன; அவற்றில் மொத்தம் 6,000 வேலைகள் குறைக்கப்பட்டுவிடும்.

இந்த வாரம் புதனன்று Deutschlandfunk க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் Klaus Franz (மத்திய ஓப்பல் பணிக்குழுத் தலைவர், ஐரோப்பியப் பணிக்குழுவின் தலைவரும்கூட), வேலைக் குறைப்புக்கள் தேவை என்று வாதிட்டு, நிலைமையை "நாடகமாக்க (வியக்கும் வகையில் கூற) தான் விரும்பவில்லை" என்றும் கூறினார். சற்றே ஆச்சரியப்பட்ட செய்தியாளர் ஒருவர் 10,000 வேலைகளுக்கும் மேலாக தகர்க்கப்படுவது "வியப்பைத் தரவில்லையா" என்று கேட்டபோது, பிரான்ஸ், இதற்கு மாற்றீடு திவால்தன்மை என்றும் "அது இதைவிட மோசமானது" என்றும் கூறினார்.

30 சதவிகித கூடுதல் உற்பத்தித் திறனை எதிர்கொண்டுள்ள நிலையில் ஓப்பல் குறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. இது ஒன்றும் மகிழ்ச்சி தருவது அல்ல, ஆனால் தவிர்க்க முடியாதது.

இதன்பின் அவர் GM ன் ஜேர்மனிக்கு வெளியே இருக்கும் ஐரோப்பியத் தொழிலாளர்கள்மீது குறைகூறும் வகையில், பெல்ஜியம், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் போலந்தில் இருக்கும் ஆலைகள் இருப்பதற்கே காரணம் ஜேர்மனிய அரசாங்கம் வசந்தகாலத்தில் விரைந்து செயல்பட்டு 1.5 பில்லியன் யூரோ என்ற இடைவெளித் தேவை நிதியளிக்க ஒப்புக் கொண்டதால்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு செய்திருக்காவிடில், ஐரோப்பிய GM டிட்ரோயிட் போல் திவாலாகியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஓப்பல் நெருக்கடி தொடங்கியதில் இருந்தே, டிட்ரோயிட்டில் இருக்கும் ஆக்கிரோஷத்தைவிடக் கூடுதலான தன்மை கொண்டிருக்கும் நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் மோதமாட்டார்கள் என்பது பெருகிய முறையில் தெளிவாயிற்று. ஓப்பல் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களில் முக்கிய பங்கு தொழிற்சங்கங்களால் --எல்லாவற்றிற்கும் மேலாக பணிக்குழு பிரதிநிதிகள் மற்றும் ஆலைப் பிரதிநிதிகள் பெரும்பாலோருடன் சேர்ந்து IG Metall ஆல் ஆற்றப்பட்டது.

இரண்டு புறத்தில் இருந்தும் தொழிலாளர்கள் தாக்குதலை எதிர்கொள்ளுகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பணிக்குழு பிரதிநிதிகளும், உறுப்பினர் கட்டணம் என்ற விதத்தில் அவர்கள் நிதியளிக்கும் தொழிற்சங்கமும் சிறிதும் தயக்கமின்றி மறுபக்கம் பெரிய பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளனர். கீழிருந்து வரும் எதிர்ப்புக்களை அடக்குகின்ற அதேவேளை, வேலைக்குறைப்புக்கள், குறைந்த ஊதியங்கள், நலன்களில் குறைப்புக்கள் என்பவற்றை இன்னும் அதிகமாக ஏற்பதை முதலாளிகளுக்கு வழங்கி, முதலாளிகளின் நலன்களைக் காக்கத்தான் அவர்கள் உழைக்கின்றனர்.

ஓப்பலை மாக்னாவிற்கு விற்பதற்கு ஒரு முன் தேவையாக GM, பணிக்குழு பிரதிநிதிகளிடம் இருந்து அவர்கள் தொழிலாளர்கள் பெரும் சலுகைகளை அளிப்பதை ஏற்றுள்ளதாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. "Klaus Franz விரைவில் இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்" என்று Berliner Zeitung கடந்த வார இறுதியில் எழுதியது. தொழிலாளர் தொகுப்பு ஆண்டு ஒன்றுக்கு 265 மில்லியன் யூரோக்களை கைவிடத் தயார் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்; ஆனால் இது பற்றி ஒரு தொழிலாளரிடம் கூட அவர் கேட்கவில்லை. பிரான்ஸைப் பொறுத்தவரையில் "ஊழியர்கள் அளிப்பு" அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு என்பது ஊதியங்கள் மற்றும் பிற நலன்களில் கிட்டத்தட்ட 1.6 பில்லியன் யூரோக்கள் குறைப்பு என்பதாகும்.

GM இன் ஐரோப்பியத் தொழிலாளர்களை தேசிய வழியில் பிரிக்க உதவி, மற்ற நாடுகளில் ஆலை மூடல்களைத் திணித்து, ஜேர்மனிக்குள் நிறைய வேலைக் குறைப்புக்கள், ஊதிய முடக்கங்கள் ஆகியவற்றையும் சுமத்தியுள்ள நிலையில், IG Metall, GM மற்றும் மாக்னாவின் கருவியாகப் செயல்படுவது மட்டும் இல்லாமல், ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய நலன்களின் பின்னே நேரடியாக அணிசேர்ந்து உள்ளது.

மாக்னா உடன்பாட்டுடன், பேர்லின் அதன் உறுதியான வெளியுறவுக் கொள்கை இலக்குகளைத் தொடர்கிறது. ரஷ்யாவின் Sberbank மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய பஸ்கள், டிரக்குகள், டிராம்கள் மற்றும் பெரிய டீசல் எஞ்சின்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும், கார்த்தயாரிப்பாளர் GAZ உடன் மாக்னா பிணைகிறது.

தன்னுடைய ஆலைகளையும் விற்பனை இணையத்தையும் ஓப்பல் கார்களைத் தயாரித்து "ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை" என்ற முத்திரையில் ரஷ்ய உள்நாட்டுச் சந்தைக்கு கொண்டுவர GAZ விரும்புகிறது. ஓப்பல் தொழில்நுட்பத்தை அளித்து, GAZ அதன் புகழை அதிகரித்துக் கொள்ள உதவும். தன்னுடைய மாக்னா உதவியுடன் 2008ல் கட்டப்பட்ட Nizhny Novgorod ஆலையை GAZ பயன்படுத்திக் கொள்ளும். பங்காளித்தன்மைக்கான பணம் Sberbank இடம் இருந்து வருகிறது; இவ்விதத்தில் மறைமுகமாக ரஷ்ய அரசிடம் இருந்து வருகிறது.

ஜேர்மனிய அரசாங்கம் மாக்னா மூலம் ரஷ்யவுடனான அதன் ஒத்துழைப்பைத் தீவிரமாக்க விரும்புகிறது. விசைக் கொள்கை உட்பட, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகள் தன் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய கூறுபாடு என்று அது கருதுகிறது. தன்னுடைய எண்ணெய், எரிவாயுப் பொருட்கள் தேவையின் பெரும்பகுதியை ஜேர்மனி ரஷ்யாவிடம் இருந்து பெருகிறது; ரஷ்ய இயற்கை எரிவாயு பெருநிறுவனமான Gazprom பல ஜேர்மனிய விசை பெருநிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி SPD) 1998-2005 ல் அதிபராக இருந்தபோது, பேர்லின்-மாஸ்கோ அச்சில் பொருளாதார ஒத்துழைப்பு விரிவாக்கம் அடைந்தது. அதற்குப் பின்னர் ஷ்ரோடர் Gazprom ல் முக்கிய பதவி வகிக்கச் சென்றார்; பால்டிக் கடல் குழாய்த்திட்டம் கட்டமைக்கும் பொறுப்பும் அதில் அடங்கியிருந்தது.

GM பங்குகளில் 60 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கம், மாக்னா-மாஸ்கோ தொடர்பு தெரியவந்தவுடன் அதை அமைதியாக எதிர்கொண்டது. ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே பெருகும் உறவுகள் பற்றி சந்தேகத்துடன், ஏன் நேரடியான விரோதப் போக்குடனேயே அமெரிக்கா பார்க்கிறது; தன் உலகளாவிய நலன்களுக்கு இது விரோதமானது என்றும் நினைக்கிறது.

GM நிர்வாகக் குழு பல மாதங்களாக வசந்த காலத்தில் மாக்னா கையெழுத்திட்டிருந்த விருப்ப அறிக்கைக்கு ஒப்புதல் கொடுக்க மறுத்திருந்தது; மாக்னாவில் போட்டியான RHJ international அதைவிட விருப்பமுடையதாக காணப்பட்டிருந்தது. ஆனால் ஜேர்மனிய அரசாங்கம் தன் முழு அரசியல், பொருளாதார கனத்தை மாக்னாவிற்கு கொடுத்துள்ளது.

IG Metall ம் பணிக்குழுக்களும் ஜேர்மனிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்தது, இந்த உடன்பாட்டை தகர்க்க அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எதிர்க்க முக்கியமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் IG Metall ன் தலைவர் Berthold Huber மாஸ்கோவிற்கு பயணித்து ரஷ்யப் பிரதம மந்திரி விளாடிமீர் புதினை சந்தித்து, புதிய மாக்னா கட்டுப்பாட்டிற்கு வரவுள்ள ஓப்பலுக்கு மாஸ்கோவிடம் இருந்து நிதிக்கொடை அளிக்குமாறு கேட்டார். "மாக்னா அதன் ரஷ்யப் பங்காளிகளுடன் சேர்ந்து உதவித் தொகை பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று அவர் ஜேர்மனிய செய்தி அமைப்பான DPA இடம் பின்னர் கூறினார்.

GM நிர்வாகக் குழு கடந்த வாரம் மாக்னாவுடன் அதன் பேச்சுக்களைப் புதுப்பித்தவுடன், அமெரிக்கச் செய்தி ஊடகப் பிரிவுகள் சில சீற்றத்துடன் செய்தியை எதிர்கொண்டன. ஜேர்மனிய வெளியுறவு கொள்கை சார்பு "சேறைப் போல் தெளிவாக உள்ளது" என்று நியூ யோர்க் டைம்ஸில் தலையங்கத்திற்கு எதிர்ப்புறத்தில் ஒரு கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

"ஜேர்மனி பெருகிய முறையில் ரஷ்யாவுடன் தெளிவற்ற உறவு கொண்டிருப்பதை" கட்டுரை கூறி, மாக்னாவிற்கு பேர்லினுடைய தீவிர ஆதரவின் மீது தன் கோபத்தைக் காட்டி, இதன் விளைவு GM ன் மூன்று ரஷ்ய இணைப்புமுறை ஆலைகளுக்கும் GAZ இடம் இருந்து பெருகிய முறையில் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளது. ஒரு பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி, "பொதுவாக நாம் அமெரிக்கா எப்படி நினைத்தாலும் நம் விருப்பப்படி நடந்து கொள்ளுவோம் என்று ஜேர்மனியர்கள் உணர்கிறார்கள் போலும், அவ்வாறு நடந்தும் கொள்ளுகின்றனர்" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகளும் அட்லான்டிக் கடந்த அச்சில் உறுதிப்பாடு என்பது அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) இடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் முற்றிலும் எதிரிடையானவைதான் நடந்து கொண்டிருக்கின்றன என்று வலியுறுத்தியுள்ளன.

CDU, SPD ஐ கொண்ட பேர்லினில் இருக்கும் பெரும் கூட்டணி அரசாங்கம், சர்வதேச பொருளாதார நெருக்கடியை இன்னும் ஆக்கிரோஷமான ஜேர்மனிய தேசிய நலன்கள் என்ற கருத்தின் மூலம் எதிர்கொள்ளுகிறது. ஜேர்மனிய அதிபர் அலுவலகமும் வெளியுறவு மந்திரியும் வெளிப்படையாக வாஷிங்டனுடன் பூசலைத் தவிர்க்க முற்படுகையில், இந்த நெருக்கடியை அவர்கள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதற்கான ஆரம்பம் என்று காண்கின்றனர்.

இச்சூழ்நிலையில், தொழிற்சங்கங்கள் பெருகிய முறையில் தீவிர தேசியச் சார்பை ஏற்று பேர்லினின் புவிசார் மூலோபாய நோக்கங்களை பெருக்குவதற்காக இன்னும் நெருக்கமாக அரசிடம் நகர்கின்றன. இவ்விதத்தில் பணிக்குழுத் தலைவர் பிரான்ஸ், GM குழு மாக்னாவிற்கு எதிராக முடிவெடுத்தால் அனைத்து ஒப்பல் ஆலைகளிலும் எதிர்ப்பு இருக்கும் என்று அமெரிக்காவை அச்சுறுத்துகிறார்.

ஜேர்மனிய பெரும் சக்தி என்னும் அரசியலுக்கு ஆதரவு தருவதில் தாங்களும் ஈடுபடுத்தப்படுவதை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ஏகாதிபத்திய நலன்களில் இவர்கள் சக்தியற்ற நிலைக்கு தள்ளிவிடப்படக் கூடாது.

தொழிற்சங்கங்கள் மற்றும் பணிக் குழுக்களின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு எழுச்சி தயாரிக்கப்பட்டால்தான் எல்லா இடங்களிலும் அனைத்து வேலைகளையும் காத்தல் இயலும்.

மற்ற ஆலைகள் தொழிலாளர் தொகுப்புக்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கு தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படும் ஆலைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அதேபோல் அனைத்து ஐரோப்பிய GM தொழிலாளர்களும் ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராக பொதுப் போராட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டும். இது அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இன்னும் பிற நாடுகளில் இருக்கும் GM தொழிலாளர்களையும் அரவணைக்கும் விதத்தில் விரிவாக்கப்பட வேண்டும்.

வேலைகள் பாதுகாப்பு என்பது ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்திற்கான அரசியல் தாக்குதலின் தொடக்கக் கட்டமாக ஆக்கப்பட வேண்டும். அத்தகைய அரசாங்கம் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றை சுவீகரித்து, ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை சமுதாயம் ஒட்டுமொத்தத்திற்குமான சேவையில் இருத்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved