World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

One year after the financial crash

Obama goes cap in hand to Wall Street

நிதியச் சரிவின் ஓராண்டிற்குப் பின்னர்

ஒபாமா வோல் ஸ்ட்ரீட்டிற்கு கையேந்திக்கொண்டு செல்லுகிறார்

By Barry Grey
15 September 2009

Back to screen version

லெஹ்மன் பிரதர்ஸ் சரிவின் ஓராண்டு முடிவிற்குப் பின்னரும் பெரு மந்த நிலைக்குப் பின்னர் மிகப் பெரிய உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்தும் ஜனாதிபதி பாரக் ஒபாமா திங்களன்று நிதியக் கட்டுப்பாடுகளில் அவர் கொண்டுவர இருக்கும் சிறிய மாறுதல்களை தடுக்காமல் இருப்பதற்கு வங்கியாளர்களை கேட்க வோல் ஸ்ட்ரீட்டிற்கு வந்தார்.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி நிதிய தலைநகரின் கோட்டைக்குள் விண்ணப்பம் கொடுப்பவர்போல் வந்தது வியப்பானதல்ல என்றாலும், மதிப்பிழந்த காட்சியாகத்தான் இருந்தது. நிதிய உயரடுக்கிற்கு ஒபாமாவின் சவால் என்று கூறப்பட்டது அவருடைய நிர்வாகமும், அரசாங்கத்தின் ஒவ்வொரு மற்றைய பிரிவும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு தாழ்ந்து நிற்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நியூயோர்க் பங்குச் சந்தையில் இருந்து வெகு அருகில் இருக்கும் Federal Hill ல் பேசுகையில், ஒபாமா தன்னுடைய கட்டுப்பாடுகள் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டினார். இவை ஜூன் மாதம் அவை வெளியிடப்பட்டதில் இருந்து காங்கிரஸில் தேங்கி நிற்கின்றன. இதற்கு ஒரளவு காரணம் 150 வங்கியாளர்கள், வணிகர்கள், நிதிய நிர்வாகிகள் என்று அங்கு அவருடைய உரையைக் கேட்கக் கூடியிருந்தவர்களின் பலருடைய எதிர்ப்புத்தான்.

அவர்களும் அவர்களுடைய சக நிர்வாகிகளும் ஒபாமாவும் அவருக்கு முன் பதவியில் இருந்தவரும் தொடக்கிய பல டிரில்லியன் டாலர் பிணை எடுப்பில் இருந்து மகத்தான முறையில் இலாபம் அடைந்திருந்த உண்மை இருந்தபோதிலும் அவர்கள் அவருடைய உரையை அதிகம் வரவேற்கவில்லை. அவருடைய முப்பது நிமிஷ உரையில் ஒரே ஒரு முறைதான் கைதட்டினர்.

ஒரு கடுமையான சாடல் என்று தோன்றக்கூடிய விதத்தில் ஒபாமா அறிவித்தார்: "இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய சொற்களை கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நெருக்கடியின் இதயத்தானத்தில் இருந்த பொறுப்பற்ற நடவடிக்கை, தடையற்ற அத்துமீறல்கள் போன்றவை நடந்த காலத்திற்கு நாம் மீண்டும் செல்லக் கூடாது. அப்பொழுது பலரும் விரைவில் பணம் ஈட்டவேண்டும், கொழுத்த மேலதிக கொடுப்பனவுகளை பெறவேண்டும் என்ற ஆர்வத்தினால்தான் பலர் உந்துதல் பெற்றனர். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணயத்தை மீண்டும் கொள்ளுவதற்கு வோல் ஸ்ட்ரீட்டில் இருப்பவர்கள் செய்துவிட்டு அடுத்த முறையும் அமெரிக்க வரிப்பணம் செலுத்துபவர்கள் இவர்களுடைய சரிவைத் தடுக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது."

அவர்களுக்கு உரிய இந்த சொற்களை வோல் ஸ்ட்ரீட் அதிக உப்புடன் எடுத்துக்கொண்டது. நெருக்கடியில் பங்கு பெற்றிருந்த வங்கியாளர்களும், ஊகவணிகர்களும் தங்கள் செல்வம் அதிகாரம் இவற்றைப் பாதுகாப்பதற்கும் அவர்களுடைய சூதாட்ட கடன்களை அமெரிக்க மக்கள் மீது சுமத்துவதற்கும் ஒபாமா நிர்வாகம் பதவியேற்றதில் இருந்து செய்தது அனைத்தையும் அறிவர். எப்படியும் தாங்கள் பதவியில் இருந்துவதற்கு பல மில்லியன் டாலர்களை பிரச்சார நிதிக்கு அளிக்கும்போதே இந்த மனிதரைப்பற்றி நன்கு கணக்குப் போட்டிருந்தனர்.

கடந்த மாதம் தான் பென் பெர்னான்கேயே மீண்டும் மத்திய வங்கிக்கூட்டமைப்பு தலைவராக நியமிக்க இருக்கும் ஒபாமாவின் அறிவிப்பை அவர்கள் இந்த நிர்வாகத்திடம் எதிர்காலத்தில் பயப்பட வேண்டியதற்கு ஒன்றுமில்லை என்ற அடையாளத்தையும் சரியாகப் புரிந்து கொண்டனர்.

உரை முடிந்தவுடன் கோல்ட்மன் சாஷ்ஸின் தலைவர் ஹரி கோன் ஜனாதிபதி உரைக்கு சொற்களால் தலையில் தட்டிக் கொடுக்கும் விதத்தில், "அவர் நன்கு பேசினார் என நினைக்கிறேன்" என்று கூறி, "சரியான முறையைக் கையாண்டார்" என்றும் சேர்த்துக் கொண்டார்.

வோல் ஸ்ட்ரீட் கூட்டாக இந்த உரையை பொருட்படுத்தவில்லை. ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்த சந்தைகள் உரைக்குப் பின் நிதானமான இலாபத்தைக் கண்டன. நிதியச் சந்தைகளில் வியக்கத்தக்க வகையில் இருந்த மீட்பு, S&P 500 குறியீடு கடந்த மார்ச்சில் இருந்து 54 சதவிகிதம் உயர்ந்ததால் காட்டப்பட்டது.

செப்டம்பர் 2008 நிதியச் சரிவின் ஓராண்டு முடிவைப் பற்றி பல கட்டுரைகள் குறிப்பிட்டுள்ளது போல், இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களின் நடைமுறைகளில் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக நிர்வாகத்தின் கொள்கைகள் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய நிதிய நிறுவனங்களின் பிடியை வலுப்படுத்தியுள்ளன. இதையொட்டி அவை மீண்டும் சரிவிற்கு வழிவகுத்த ஊக நடவடிக்கைகளையிலேயே ஈடுபட முடிகிறது.

வரிப்பணத்தில் இருந்து பிணை எடுக்கப்பட்ட வங்கிகள் எவற்றின்மீதும் எந்த குறிப்பிடத்தக்க தடையும் விதிக்கப்படவில்லை. வங்கிகளின் இலாபங்கள் மீண்டும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகிகளின் ஊதியங்கள் சில சந்தர்ப்பங்களில் கோல்ட்மன் சாஷ்ஸ் போன்ற நிறுவனங்களில் இதுகாறும் இல்லாத உயர்ந்த தரத்திற்குச் சென்றுவிட்டன.

உண்மையில் நிதிய முறையின் அடித்தளத்தலுள்ள நெருக்கடியும் உறுதியற்ற தன்மையும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் எடுத்துக்காட்டப்பட்டனன. லெஹ்மன் பிரதர்ஸ், மெரில் லின்ஞ், பேர் ஸ்டேர்ன்ஸ், வாஷிங்டன் மியூச்சுவல், வாஹ்கோவியா மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் மறைந்துவிட்டது பெரிய வங்கிகளுக்கு சந்தையின்மீது கூடுதலான கட்டுப்பாட்டை கொடுத்தள்ளது; அதுவும் இப்பொழுது இந்த வங்கிகள், "மிகப் பெரியவை தோற்காது" என்றுநிறுவப்பட்ட நிலையில், நடைமுறையில் அவை விருப்பத்திற்கு ஊக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளன. அவை ஏதேனும் ஆபத்திற்குட்பட்டால் அரசாங்கத்தால் பிணை எடுக்கப்பட்டுவிடும் என்ற உத்தரவாதமும் கிடைத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனரான Joseph Stiglitz ஞாயிறன்று கூறினார்: "அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும், மிகப் பெரிய தோல்விடைய முடியாத வங்கிகள் இன்னும் பெரிதாகிவிட்டன. 2007 நெருக்கடிக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது பிரச்சினைகள் மிக அதிகமாகிவிட்டன."

வெள்ளிக்கிழமையன்று நியூயோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையில் தொடங்கியதைப் போல், "லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்கு ஓராண்டிற்குப்பின் நிதியத் தொழிலில் எவ்வளவு மாற்றம் வந்துள்ளது என்பது வியப்பல்ல, எவ்வளவு குறைவாக உள்ளது என்பதுதான்." அரசாங்கம் ஏற்றுக் கொண்ட மகத்தான வங்கிக் கடன் தொகையைச் சுட்டிக்காட்டிய பொருளாதார வல்லுனர்களை மேற்கோளிட்டு, தொழில்துறையில் இயல்பான பணயங்கள் "இன்னும் பெரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும் --ஆண்டுகளிலும், தசாப்தங்களிலும். அடுத்த முறை அமெரிக்க அரசாங்கத்தின் கடன்கொடுக்கும் நம்பிக்கையையே ஆபத்திற்கு உட்படும் என்ற அவர்கள் கூறுகின்றனர்."

தன்னுடைய உரையில் ஒபாமா "நிதியத் துறையில் சிலர் நிலைமை பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நாம் மீண்டு கொண்டிருக்கும் லெஹ்மன் மற்றும் நெருக்கடியில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளுவதற்கு பதிலாக அவர்கள் அவற்றை புறக்கணிக்க விரும்புகின்றனர்." ஆனால் பிணை எடுக்கப்பட்ட வங்கிகள் பெற்றுள்ள மிக உயர்ந்த இலாபங்களைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை. அதே போல் நிர்வாகிகள் தங்களுக்கே அளித்துக் கொள்ளும் மிகப் பெரிய ஊதியதொகுப்புக்கள் பற்றியும் ஏதும் கூறவில்லை.

நிர்வாகிகள் ஊதியத்தில் எவ்வித கட்டுப்பாடுகளை எதிர்த்தபின், அதிக பட்சம் ஒபாமா கூறக்கூடியது வங்கிகள் நிர்வாகிகளின் மேலதிக கொடுப்பனவுகள் மீது பங்குதாரர்களுக்கு கட்டுப்பாடு இல்லாத வாக்களிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்ற பெயரளவுத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்பதுதான்.

ஒபாமா உரையாற்றிய நிதியப் பிரபுத்துவத்தின் உணர்வு Kian Abouhossein என்னும் லண்டலின் JPMorgan Chase ல் இருக்கும் பகுப்பாய்வாளர் ஒருவரால் சுருக்கமாக நியூயோர்க் டைம்ஸிடம் கூறப்பட்டது: "எனக்குத் தெரிந்து தங்கள் மேலதிக கொடுப்பனவுகளை எப்படி அதிகரித்துக் கொள்ளலாம் என்று அன்றாடம் சிந்தித்துக் கொண்டு வோல் ஸ்ட்ரீட்டில் வேலைக்கு போகாமல் இருக்கும் எவரையும் எனக்குத் தெரியாது."

Politico வலைத்தளம் American International Group (AIG) என்னும் நிதியக் கரைப்பின் மையத்தில் இருந்த, அரசாங்கம் கொடுத்த பிணையெடுப்புப் பணத்தில் இருந்து $183 பில்லியனை பெற்ற காப்பீட்டு பெரு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி Robert Benmosche, "சமீபத்தில் குரோஷியாவில் ஆட்ரியாடிக் கடற்கரையில் இருக்கும் அவருடைய அரண்மனை போன்ற இடத்தைக் காட்டினார், அதில் 12 குளியலறைகள், இத்தாலிய கற்களிலான தரை, 18ம் நூற்றாண்டு பிரெஞ்சுத் திரைச்சீலைகள் மற்றும் நிறைய அடுக்கிவைக்கப்பட்ட மதுபான வகைகள் ஆகியவை இருந்தன. ("ஒவ்வொரு குளியல் அறையும் ஒரு கலைப்படைப்பு என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: இங்கு வரும்போது பெண்கள் பெரும் களிப்படைகின்றனர்') " என்று எழுதியுள்ளது. Benmosche உடைய 2009க்கான சம்பளம் $9 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுண்ணித்தன சமூக அடுக்குதான் அரசாங்கக் கொள்கைகளை முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. திங்களன்று ஒபாமா கூறியது எதுவும் இத்தன்னலக்குழுவின் உறுப்பினர் எவரும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மீது அழிவைத் தொடர்ந்து கொடுக்கும் நெருக்கடிக்கு காரணமான மோசடிக்கோ, சட்டவிரோத செயலுக்கோ பொறுப்புக்கூற வைக்கப்படுவர் என்பதை காட்டவில்லை.

மாறாக, ஒபாமா தன்னுடைய சொல் தாக்குதலை முதலாளித்துவச் சந்தைகள் பற்றி புகழ்வதின் மூலம் சமச்சீராக்கினார். அவர் அறிவித்தது: "தடையற்ற சந்தையின் சக்தியை எப்பொழுதும் நான் வலுவாக நம்புவன். வேலைகள் அரசாங்கத்தால் என்று இல்லாமல் வணிகங்கள், தொழில்வழங்குனர்கள் ஆகியோரால் நல்ல விடயத்திற்காக அபாயத்தை சந்திக்க தயாராக இருப்பவர்களால்தான் தோற்றுவிக்கப்பட முடியும் என்றுதான் நம்புகிறேன். அவர்களுடைய செல்வக்கொழிப்பை இகழ்வது அரசாங்கத்தின் வேலை இல்லை. அவற்றின் செயற்பாட்டை விரிவாக்குவதே தவிர சந்தைகளை நெரிப்பது அல்ல. சட்டங்களை உருவாக்கி அனைவரும் சமவாய்ப்பு அதில் பெறவேண்டும், அதையொட்டி அது கூடுதலான துடிப்புடன் இருக்க வேண்டும் என்ற விதத்தில் செயற்பட செய்யவேண்டும்."

இன்னும் ஒரு படி மேலே சென்று தாங்கள் எந்தப் பொறுப்பும் கொண்டிராத, ஆனால் பெரும் பாதிப்பிற்குட்பட்ட அமெரிக்க மக்களையும் உட்குறிப்பாகத் தாக்கினார். "மிக வலுவான நிதிய நிறுவனங்கள் எடுத்த முடிவுகளினால் மட்டும் நெருக்கடி வந்துவிடவில்லை. சாதாரண அமெரிக்கர்கள் கடன் அட்டைகளை வாங்கியவர்கள், அடைமானத்தை நாடியவர்கள் ஆகியோர் எடுத்த முடிவுகளின் விளைவாகவும் அது இருந்தது." என்று அவர் அறிவித்தார்.

இதே கருத்தை மீண்டும் அறிவித்த வகையில் நெருக்கடி, "பொறுப்பில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து வீடுகள் வாங்கியவர்கள், இரண்டாம்தர வணிகம் நடத்தியவர்கள் இருவருமே தாங்கள் சந்திக்க முடியாத பொறுப்பற்ற ஆபத்துக்களை மேற்கொண்டனர். வாஷிங்டன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்கா நெடுகிலும் பொறுப்பு கூட்டாகத் தோல்வியுற்றதின் விளைவுதான் இது...."

"கூட்டுப் பொறுப்பு" என்ற தன் கோரிக்கையை அமெரிக்க மக்கள் மீது கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்த கொண்டுள்ள உறுதியுடன் அவர் பிணைத்தார். நல்ல வசதியுடன் இருக்கும் பார்வையாளர்களிடம் அவர் நாட்டை "பாதுகாப்பான நிதிய அடித்தளத்தில் இருத்தப்போவதாகவும்", "செயல்படாத பல திட்டங்களைக் குறைக்க இருப்பதாகவும்" கூறினார். தொழிலாள வர்க்கத்திற்கு "சீர்திருத்தம்" என்ற பெயரில் சுகாதார பாதுகாப்புத் திட்டச் செலவுகளை குறைக்கும் திட்டத்தில், "பற்றாக்குறையில் ஒரு சல்லிக் காசைக் கூட அதிகரிக்கவிடப்போவதில்லை" என்றார்.

தன்னுடைய கட்டுப்பாட்டுத் திட்டங்கள் "பெரு மந்த நிலைக்குப் பின்னர் பெரும் மீட்கும்நோக்கங்களை கொண்ட நிதிய முறையை மாற்றும் தன்மை உடையது" என்று ஒபாமா குறிப்பிட்டார். இது ஒரு மோசடிப் பேச்சு ஆகும். பிராங்களின் டி. ரூஸ்வெல்ட்டின் கீழ் இயற்றப்பட்ட அடிப்படை சீர்திருத்தங்களோடு சிறிதும் இவருடைய திட்டங்கள் ஒப்பிடப்பட முடியாதவை. மாறாக புதிய உடன்பாட்டின் வங்கிச் சீர்திருத்தங்களின் முக்கிய கூறுபாடுகளை மீட்க இவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்; அவை கடந்த மூன்று தசாப்தங்களாக அகற்றப்பட்டுவிட்டன. இதில் Glass-Steagall தடை என்று முதலீட்டு, வணிக வங்கிகள் மீது பல கட்டுப்பாடுகள் இருந்தன.

மாறாக, சிறு நடவடிக்கைளின் தொகுப்பு ஒன்றை அவர் கூறியுள்ளார். இது வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டுநிதிகளின் ஊக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஏதும் செய்யாது. இவருடைய பாவனையாளர் நிதி பாதுகாப்பு அமைப்பு (Consumer Financial Protection Agency) என்பது வெறுமே ஒரு புதிய அமைப்பை நுகர்வோர் கடனை மேற்பார்வையிட நிறுவும். அதற்கு இப்பொழுது பல கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட கூடுதலாக எதுவும் கிடையாது. எப்படியும், இத்திட்டம் நடைமுறைக்கு வராது. ஏனெனில் வங்கிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

பரந்த, கட்டுப்படுத்தப்படாத எஞ்சிய நிதிகள் சந்தையைக் கட்டுப்படுத்த விரும்பும் அவருடைய திட்டம் "நிழல் வங்கி முறை" என அழைக்கப்படுவதின் முக்கிய கூறுபாடு. பல குறைகளைக் கொண்டுள்ளது, நியூயோர்க் டைம்ஸ் கூட அது சிறிதும் உதவாது என்று திங்களன்று ஒரு தலையங்கத்தில் கூறியுள்ளது.

அவருடைய திட்டத்தின் முக்கிய கூறுபாடுகள் மத்திய வங்கிக்கூட்டமைப்பிற்கு கூடுதல் அதிகாரத்தை நிதியச் சந்தைகளை மேற்பார்வையிடவும் தோல்வியுறும் வங்கியல்லாத நிறுவனங்கள் உட்பட நிதிய அமைப்புக்களை பிணை எடுக்க ஒரு புதிய வழிவகையை நிறுவவும் கொடுக்கும். இதில் அடித்தளத்தில் உள்ள கருத்து வங்கிகள்மீது எந்தத் தீவிர தடைகளும் சுமத்தப்படக்கூடாது, எனவே புதிய விதிகள் அடுத்த நெருக்கடிகள் வரும்போது கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகும்.

எந்த "சீர்திருத்த" கட்டுப்பாடு காங்கிரசில் இருந்து வெளிப்பட்டாலும், அது வோல் ஸ்ட்ரீடின் செல்வாக்கு திரட்டுபவர்கள், திரைக்குப் பின்னால் அரசியல் பிரச்சார நன்கொடைகள், பிற இலஞ்சங்கள் மூலம் வாங்கப்பட்டுவிட்ட அரசியல்வாதிகளுடன் இணைந்த முறையில் தயாரிக்கப்படும். The Center for Responsive Politics என்னும் அரசியலுக்குள் பணம் புகும் வழிகளை ஆராயும் அமைப்பு சமீபத்தில் நிதியத் தொழில்துறை, காப்பீடு மற்றும் சொத்துவாங்கி விற்கும் துறையுடன் ஏற்கனவே $50 மில்லியனை இதுவரை இந்த ஆண்டு பிரச்சார நன்கொடையாக அளித்துள்ளதாக கூறியுள்ளது. நிதியத் துறை $222 மில்லியனுக்கு மேல் வாஷிங்டனில் செல்வாக்குத் திரட்ட செலவழித்துள்ளது. அங்கு அது 2,300 செல்வாக்குத் திரட்டுபவர்களை நியமித்துள்ளது.

இறுதியில், வோல் ஸ்ட்ரீட்டிடம் நாட்டிற்கு அது கொண்டுள்ள "கடமையை" இதயத்தில் எடுத்துக் கொள்ளுமாறும், "தீவிர நிதிய சீர்திருத்தத்தை தழுவுக, அதை எதிர்க்காதீர்கள்" என்று வாதிடும் நிலைக்கு ஒபாமா தள்ளப்பட்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved