World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Reject wage sell-out by plantation unions

இலங்கை: பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் ஊதிய வியாபாரத்தை நிராகரி
By W.A Sunil
15 September 2009

Back to screen version

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் (இ.தொ.கா.) இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் சம்பள உடன்படிக்கையை நிராகரிக்க வேண்டும். நாளை கைச்சாத்திடப்படவுள்ள புதிய கூட்டு ஒப்பந்தமானது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அரை மில்லியன் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டத் தொழிலாளர்களை வறிய மட்டத்திலான சம்பளத்துடன் கட்டிப்போடும் ஒரு வியாபாரமாகும்.

ஆரம்பத்தில் 750 ரூபா (6.50 டொர்) மொத்த நாள் சம்பளத்தை கோரிய இ.தொ.கா. வேகமாக 500 ரூபாவுக்கு இறங்கி வந்தது. முதலாளிமார் குழுவுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையில் வெறும் 405 ரூபாவுக்கு இணங்கியதாக இ.தொ.கா. சனிக்கிழமை அறிவித்தது. 290 ரூபா அடிப்படை சம்பளத்துடன், வருகைக்கான கொடுப்பணவு 85 ரூபாவும் மற்றும் 30 ரூபா விலை போனஸ் உள்ளடங்களாகவே இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

2007 மார்ச்சில் கடைசியாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து 55 வீதமாக உயர்ந்த வாழ்க்கைச் செலவை கூட இந்த சம்பள அதிகரிப்பு ஈடு செய்யாத நிலையில், இந்த உடன்படிக்கை உண்மையில் ஒரு சம்பளக் குறைப்பாகும். கொடுப்பணவுகள் உள்ளடங்களாக தற்போதைய நாள் சம்பளம் 290 ரூபாவாகும்.

தொழிலாளர்கள் மாதம் 25 நாட்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே 85 ரூபா வருகைக்கான கொடுப்பணவு வழங்கப்படும். கம்பனிகள் அடிக்கடி 25 நாட்கள் வேலை வழங்குவதில்லை. "ஒரு பெரும் முன்னேற்றம்" என இந்த உடன்படிக்கையை பாராட்டிய முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலர் லலித் ஒபேசேகர, இப்போது சம்பளம் உற்பத்தியுடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார். முதலில் 30 ரூபா அதிகரிப்பு மட்டும் வழங்க உடன்பட்ட முதலாளிமார் குழு, தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது "குறைந்த உற்பத்தியையே" தருவதாக தொழிலாளர்களை குற்றஞ்சாட்டியது.

ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த உடன்படிக்கையை ஒரு "வெற்றியாக" பாராட்டிய இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தான் 360 ரூபாவுக்கும் 400 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தினார். இந்தத் தொழிற்சங்கம் அதனது மட்டுப்படுத்தப்பட்ட "ஒத்துழையாமை" பிரச்சாரத்தையும் உடனடியாக நிறுத்திக்கொண்டது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ் கொழும்புக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கும் தோட்ட முகாமையாளர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் ஏற்கனவே இந்த உடன்படிக்கையை ஆதரித்ததோடு அதை ஏற்றுக்கொள்ளுமாறு சகல தொழிற்சங்கங்களிடமும் கேட்டுக்கொண்டது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜயரட்ன நேற்று தெரிவித்ததாவது: "தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்துவதனால், அரசாங்கம் என்ற முறையில் நாம் பல தொழிற்சங்கங்கள் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எவ்வாறெனினும் [பொருளாதார] நெருக்கடியின் காரணமாக 405 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்."

சகல தோட்டத் தொழிற்சங்கங்களும், 2006 டிசம்பர் மாதம் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய இரண்டு வாரகால வேலை நிறுத்தத்தை கவிழ்த்துவிட்டது போலவே, இம்முறையும் அதே துரோகப் பாத்திரத்தை இட்டு நிரப்பின. அதே சமயம், இ.தொ.கா. எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் எதிர்த்ததோடு, உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக தொழிலாளர்களின் முதுகுகளின் பின்னால் முதலாளிமாருடனும் அரசாங்கத்துடனும் நேரடியாக ஒத்துழைத்தது.

அரசியல் கட்சியாகவும் செயற்படும் இ.தொ.கா. ஆளும் கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது. தனியார் மற்றும் அரசாங்க துறையில் "சம்பள கட்டுப்பாட்டை" மேற்கொள்ள வலியுறுத்தும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இ.தொ.கா. தலைவர் தொண்டமான் அமைச்சராக இருக்கின்றார். பொருளாதாரமானது பூகோள பொருளாதார பின்னடைவினாலும் மற்றும் மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்த இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கான பிரமாண்டமான செலவினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளும் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (ல.தே.தோ.தொ.ச.) மற்றும் ஐக்கிய பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகிய ஏனைய இரு சங்கங்களும் இ.தொ.கா. வின் பின்னால் உடனடியாக அணிதிரண்டுள்ளதாகத் தெரிகிறது. ல.தே.தோ.தொ.ச. செயலாளர் கே. வேலாயுதன், தனது தொழிற்சங்கமும் இந்த உடன்படிக்கை தொடர்பாக கலந்துரையாடியதை ஏற்றுக்கொண்டார். இந்த சங்கம், பெரும் வர்த்தகர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதில் பிரசித்தி பெற்ற பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானதாகும்.

மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய ஏனைய மூன்று சங்கங்களும் தற்போது இ.தொ.கா. வையும் அதன் உடன்படிக்கையையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கின்றன. 2006ல் போலவே, இந்த சம்பள வியாபாரத்துக்கு தொழிலாளர் மத்தியில் உள்ள பரந்த சீற்றத்தை சுரண்டிக்கொள்ள அவை முயற்சிக்கின்றன.

அரசாங்க அமைச்சரான ம.ம.மு. தலைவர் பெ. சந்திரசேகரன், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் எதிர்த்ததோடு ஜனாதிபதி இராஜபக்ஷவை தலையீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். சுமார் 250 தொழிலாளர்கள் மத்தியில் ஹட்டனில் கடந்த சனியன்று நடந்த ம.ம.மு. கூட்டத்தில், தனது தொழிற்சங்கம் தொடர்ந்தும் 500 ரூபா சம்பளத்துக்காகப் போராடும் என பிரகடனம் செய்தார். 2006ம் ஆண்டும், இராஜபக்ஷ தலையீடு செய்து வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்களை கோருவதற்கு முன்னதாக, இதே போன்று 500 ரூபாவுக்காகப் போராடுவதாக சந்திரசேகரன் வெற்று வாக்குறுதியளித்து வந்தார்.

ஜ.தொ.கா. தலைவர் மனோ கனேசனும் ம.ம.மு. எடுத்தது போன்ற அதே தந்திரோபாயத்தை எடுத்துக்கொண்டார். ஞாயிரன்று பொகவந்தலாவை நகரில் ஜ.தொ.கா. நடத்திய ஆர்ப்பாட்டத்தை இ.தொ.கா. ஏற்பாடு செய்த குண்டர்கள் குழப்பினர். பொலிசார் தொழிலாளர்களை கலைத்துவிட கண்ணீர் புகையையும் எச்சரிக்கை வேட்டுக்களையும் பிரயோகிக்க இந்தக் குண்டர்கள் சாக்குப் போக்கை வழங்கினர்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அ.இ.தோ.தொ. சங்கத்திடம் இருந்து மிகவும் போராளிக் குணம்மிக்க வாய்வீச்சு வெளிப்பட்டது. அதனது தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்ததாவது: "தோட்ட சமுதாயத்தின் தலைவர்கள் என சொல்லப்படுபவர்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்பை தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களது உரிமைகளுக்காகப் போராடுவதன் பேரில் அரசியல் அல்லது வேறு வேறுபாடுகள் இன்றி தொழிலாளர்களை அணிதிரட்டத் தயாராகிறது."

இந்தப் பிரகடனத்தை எந்தவொரு தொழிலாளியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. 2006ல், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த பொது வேலை நிறுத்தமொன்றுக்கு அதனது தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கும் என ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவர் லால் காந்த அறிவித்தார். ஆயினும், இ.தொ.கா. மற்றும் அரசாங்கமும் முதலாளிமாருடன் சேர்ந்து உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட உடன், அதற்கு வளைந்துகொடுத்த ஜே.வி.பி. யும் அதன் தொழிற்சங்கமும், "வேலை நிறுத்தத்துக்கு முடிவுகட்டுவதைத் தவிர வேறு மாற்றீடு இல்லை" என தெரிவித்தன.

ஜே.வி.பி.யும் அதனது சங்கங்களும் முற்றிலும் தேசியவாத மற்றும் இனவாத முன்நோக்கைக் கொண்டுள்ளன. அந்தக் கட்சி இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு அதனது இராணுவ வரவுசெலவுத் திட்டத்துக்கும் வாக்களித்தது. 2006ல் "பயங்கரவாத புலிகளுக்கு" உதவுவதாக வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை அரசாங்கம் கண்டனம் செய்த போது, ஜே.வி.பி. யும் அதன் தொழிற்சங்கங்களும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டன.

இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கம் "தேசத்தைக் கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தம்" ஒன்றை அறிவித்துள்ளது. பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்குவதில் இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் இரக்கமற்றவர்களாக இருப்பர். "தேசத்தை கட்டியெழுப்ப" தனது சொந்த திட்டத்தை வைத்துக்கொண்டுள்ள ஜே.வி.பி., "பொருளாதார யுத்தத்தின்" சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, 2006ல் செய்தது போல் அதே பாத்திரத்தை இட்டு நிரப்பும்.

இ.தொ.கா. வின் சம்பள வியாபாரம் தொடர்பாக மட்டுமன்றி சகல தொழிற்சங்கங்கள் தொடர்பாகவும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றமும் பகைமையும் பரந்து காணப்படுகிறது. மத்திய மலையகப் பிரதேசத்தில் பல பாகங்களிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று "ஒத்துழையாமை" பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள மறுத்ததோடு அடுத்து என்ன செய்வது என கலந்துரையாடியதாக தெரிவித்தனர்.

ஹட்டனில் வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி நமது நிருபரிடம் தெரிவித்ததாவது: "இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ராக்கட் வேகத்தில் உயர்கின்ற நிலையில் 500 ரூபா சம்பளம் எமக்கு கிடைத்தாலும் எங்களது செலவுகளை சமாளித்துக்கொள்ள முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்கள் இதே தலைவிதியை எதிர்கொள்கின்றனர். எங்களுக்கு நிரந்தர மாத சம்பளம் கிடையாது. நாள் சம்பளம் மட்டுமே. சகல தொழிற்சங்கங்களும் பயனற்றவை. அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள். எமது தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை விட்டு விலகப் போவதாகத் தெரிவிக்கின்றனர்.

நாயபெத்த தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி இ.தொ.கா. வின் காட்டிக்கொடுப்பை கண்டனம் செய்தார். "எமது தோட்டத்தில் 2,000 தொழிலாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் ஐந்து தொழிற்சங்கங்களாகப் பிரிந்துள்ளனர். தொழிலாளர்கள் போராடுவதற்காக ஐக்கியப்பட விரும்புகிறார்கள். எமது தலைவர்கள் எங்களை கைவிடும் நிலையில் என்ன செய்வது என அவர்கள் கேட்கிறார்கள். தொழிற்சங்கத் தலைவர்களான தொண்டமான், சந்திரசேகரன் மற்றும் வடிவேல் சுரேசும் அமைச்சர்கள். அவர்கள் அரசாங்கத்துக்காகவும் கம்பனிகளுக்காகவும் வேலை செய்கிறார்களே அன்றி தொழிலாளர்களுக்காக அல்ல," என அவர் கூறினார்.

தொழிலாளர்கள் இந்த உடன்படிக்கையை நிராகரிப்பதோடு ஒழுங்கான சம்பளம் மற்றும் சிறந்த நிலைமைகளுக்காக தமது சொந்த சுயாதீனமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியமாகும். ஒரு தொகை கோரிக்கைகளை அமைக்கவும் பரந்த தொழிலாளர் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். நாள் சம்பள முறைக்கு முடிவு மற்றும் உற்பத்தி, வருகை மற்றும் இலாபத்துடன் இணைக்கப்படாத மாத சம்பள உத்தரவாதம் உட்பட கோரிக்கைகள் அவற்றில் அடங்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது, முதலாளிமாருக்கு எதிராக மட்டுமன்றி, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக சகல தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தாம் ஒரு அரசியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2006 வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் எதிர்கொண்ட மையப் பிரச்சினை போராளிக்குணம் இல்லாமை அல்ல. மாறாக, ஒரு அரசியல் முன்நோக்கும் வேலைத்திட்டமும் இல்லாமையே ஆகும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரு வாரங்களாக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்த போதிலும், அரசாங்கத்துக்கும் மற்றும் தமது சொந்த தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கும் எதிராக அரசியல் ரீதியில் போராட இலாயக்கற்றவர்களாக இருந்தனர்.

ஏற்றுமதி வீழ்ச்சிக்காக முதலாளிமாரும் அரசாங்கமும் தொழிலாளர்கள் மீது குற்றஞ்சாட்டிய போதிலும், பூகோள பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல. உழைக்கும் மக்களின் மிகவும் இன்றியமையாத தேவையை வங்குரோத்து இலாப சமூக அமைப்பால் பூர்த்தி செய்ய முடியாதெனில், அது தூக்கி வீசப்படல் வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள், சோசலிச வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்ய, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்காகப் போராடுவதன் பேரில், ஏனைய தொழிலாளர் பகுதியினரின் பக்கம் திரும்புதல் அவசியமாகும்.

தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்துக்காகவும் மற்றும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்துக்காகவும் சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்நோக்கையே பரிந்துரைக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் எமது முன்நோக்கை கவனமாக வாசிக்குமாறும் நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved