World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குJapan's new government: Promise and reality ஜப்பானில் புது அரசாங்கம்: உறுதிமொழியும் யதார்த்தமும் John Chan கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தொடர்ந்து ஆட்சி நடத்தியபின் ஜப்பானின் லிபரல் டெமக்ராடிக் கட்சி (LDP) ஞாயிறன்று தேசியத் தேர்தல்களில் பெரும் தோல்வியை அடைந்ததை அடுத்து அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது. அமெரிக்காவில் ஒபாமாவை போல், DPJ யும் அதன் தலைவர் யூகியோ ஹடோயமாவும் "மாற்றம்" என்ற தெளிவற்ற கோஷத்தை பரப்பி மக்களுடைய விரோதப் போக்கிற்கு முறையிட்டும், குடும்பங்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உதவிகள் அளிப்பதாக உறுதியளித்தும் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஜனநாயகக் கட்சியினரின் குறைந்த வரம்புடைய தேர்தல் உறுதிமொழிகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகள் எதிர்கொள்ளும் சமூக உண்மைகளுக்கும் இடையே உள்ள பிளவு விரைவில் வெளிப்பட்டுவிடும். தன்னுடைய வெற்றியில் திளைத்திருக்கையிலேயே ஹடோயமா DPJ என்பதற்கு பதிலாக, மக்கள் LDP க்கு எதிராக தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர் என்பதையும் அடுத்த அரசாங்கத்தை ஆழ்ந்த சந்தேகத்துடன் கருதுகின்றனர் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார். "தற்போதைய அரசியல் பற்றி ஜப்பானியர் ஆழ்ந்த சீற்றம் கொண்டுள்ளனர்" என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இந்த உணர்வு பல செய்தி தகவல்களில் உறுதியாகியுள்ளது. திங்களன்று ஜப்பான் டைம்ஸ் தேர்தல் முடிவு "ஏமாற்ற திகைப்படைந்த" மக்கள் கொடுத்த விளைவு என்று எழுதியது. Gakushuin பல்கலைக்கழகத்தின் Hidekazu Kawai செய்தித்தாளிடம் கூறினார்: "மாற்றத்தை பற்றி மகத்தான எதிர்பார்ப்பு பனிப் பந்து விளைவைக் காட்டியது, அதுவும் ஆபத்து நிறைந்த பனிப்பந்து விளைவை." இளைஞர்களிடையே பெருகியுள்ள வேலையின்மையை மற்றும் முதியவர்களிடையே ஓய்வூதியம் பற்றி நிலவும் கவலைகளைப் பற்றிக் குறிப்பிட்டு அக்கட்டுரை முடிவுரையாகக் கூறியது: "மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது." இரு தசாப்தங்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்தபின், உலகப் பொருளாதார நெருக்கடி ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தை கடுமையாக தாக்கியது, குறிப்பாக மில்லியன் கணக்கான குறைவூதிய, இளைஞராக, முறையான வேலை பெறாதவர்களை. உத்தியோகபூர்வ வேலையின்மை ஜூலை மாதத்தில் மிக அதிகமாக 5.7 சதவிகிதம் என்று இருக்கையில், 15-24 வயதில் உள்ளவர்களிடையே வேலையின்மை விகிதம் 8.7 சதவிகிதமாக இருந்தது. ஏப்ரல்- ஜூன் காலாண்டில், கிட்டத்தட்ட அரை மில்லியன் "முறை சாரா" தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர் சில மதிப்பீடுகள் கிராமப்புற வேலையின்மையை 12 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஜூன் மாதத்தில் காட்டியுள்ளன. LDP யின் சந்தை சார்பு "சீர்திருத்தங்கள், குறிப்பாக வேலைகள் பற்றிய கட்டுப்பாடுகளை 1999ல் தளர்த்தியது, முன்னாள் பிரதம மந்திரி ஜூனிசிரோ கொய்சூமியின் தொழிலாளர் துறை 2004 ஆண்டு நடவடிக்கைகள் ஆகியவை வாழ்நாள் முழுவதும் வேலை என்பதில் இருந்து தற்போதைய வேலை என்ற பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. ஒரே தசாப்த காலத்தில், ஒப்பந்த மற்றும் பகுதி நேர ஊழியர்களின் விகிதம் மொத்தத் தொகுப்பில் 33.5 சதவிகிதம் என்று வெடித்தது. பல தற்காலிகத் தொழிலாளர்கள் முறையான தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் 40 சதவிகிதத்தைத்தான் பெறுகின்றனர்.தங்கள் வேலைகளை இழப்பவர்கள் ஒரு சில மாதங்களுக்குத்தான் வேலையின்மை நலன்களை நம்ப முடியும். அதற்குப் பின் அவர்கள் குடும்பம் அல்லது நண்பர்களின் உதவியை நாடவேண்டும் அல்லது வீடுகள் இல்லாமல் நீல கூடாரங்களில் பூங்காக்களில் அல்லது தெருக்களில் வாழ்பவர்களைத்தான் நம்ப வேண்டும். நாட்டின் ஆழ்ந்த சமூக நெருக்கடி செய்தி ஊடகத்தில் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டுவிட்டது. வீடுகள் இல்லாத நிலை, தற்கொலை, வறுமைப் பட்டியலின் பெருகிய புள்ளிவிவரங்களில் அது வெளிப்படுகிறது; செய்தி ஊடகத்தின் இருட்டடிப்பை ஒரு குறிப்பிடத்தக்க கோரமான நிகழ்வு வெடிக்கையிலும் வெளிப்படுகிறது. ஜனவரி மாதம் ஒரு 49 வயது மனிதர் அவருடைய ஒசாகா வீட்டில் பட்டினியில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது; குளிர்பதனப்பெட்டியில் உணவு ஏதும் இல்லை; அவருடைய பைகளில் ஒரு சில நூறு யென்கள் மட்டும்தான் இருந்தன. ஏப்ரல் மாதம் ஒரு 47 வயது வேலையற்ற தொழிலாளர் ஒசாகாவிற்கு அருகே தன்னுடைய மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்; அவர் விட்டுச் சென்ற குறிப்பில் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை இழந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. அதே மாதம் சாகா வட்டாரத்தில் ஒரு பெண்மணி தன் இரு இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இந்த அதிருப்தி லிபரல் ஜனநாயகக் கட்சியினரில் கிராமப்புற நடுப்பகுதிகளிலும் விரிவடைந்துள்ளது. 1955ல் LDP நிறுவப்பட்டபோது, ஜப்பானில் மூன்றில் ஒரு பகுதி மக்கள்தான் நகரங்களில் வாழ்ந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கை மூன்றில் இரு பகுதி என்று உள்ளது. தடையற்ற சந்தை "சீர்திருத்தங்கள்", குறிப்பாக கொய்சூமியின் கீழ் செயல்படுத்தப்பட்டவை பேரழிவு தரும் பதிப்பை கொடுத்தன. அவருடைய நிர்வாகம் சமூகப் பணிகளை தனியார்மயமாக்கியது, உணவு இறக்குமதிகளில் இருந்த தடைகளைத் தளர்த்தியது, கிராமப் புறங்களில் பன்றி இறைச்சிக்கு செலவு எனக் கூறப்பட்டதை குறைத்தது, உள்ளூர் அரசாங்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இதன் விளைவு வேலை இழப்புக்கள், சரிந்த வாழ்க்கைத் தரங்கள் மற்றும் இளைஞர்கள் குறிப்பாக நகரங்களுக்கு வெளியேறியது ஆகியவை ஆகும். வர்ணனையாளர் கெரால்ட் கர்ட் Sydney Morning Herald இடம் கூறினார்: "டோக்கியோ மற்றும் பெரிய நகரங்களில் இருந்து தொலைவில் செல்லுகையில் மக்கள் பெரும் சீற்றத்தில் இருப்பது தெரியவரும்.... அவர்களுக்கு சாலைகள், அணைகள், செலவு அதிமாகும் சமூக மையங்கள் தேவையில்லை. கிராமப்புற ஜப்பானில் இருக்கும் பெரிய சமூக மையம் அவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது--அதுதான் அஞ்சல் நிலையம். அவர்களுக்கு டாக்டர்கள், மருத்துவப் பாதுகாப்பு தேவை. இளைஞர்கள் நகரங்களுக்கு நகர வேண்டிய தேவையில்லாத ஒரு பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். LDP இவற்றையெல்லாம் அளிக்கவில்லை." ஜனநாயகக் கட்சியினர், தீர்ப்பது ஒரு புறம் இருக்க, இந்த நெருக்கடி பற்றி முகம் கொடுக்கும் திறன்கூட இல்லாதவர்கள். "அமெரிக்கத் தலைமையில் உள்ள தடையற்ற சந்தை அடிப்படைவாதம்" பற்றிக் குறைகூறுகையில் ஹடோயமா தன்னுடைய அரசாங்கம், மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு இருந்தாலும், பெருவணிகத்திடம் இருந்து உடனடி அழுத்தத்தை பொருளாதார மறுசீரமைப்பிற்கு பெறும் என்பதை நன்கு அறிவார். உண்மையில் கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரச் சரிவிற்கு முன்னதாகவே, இன்னும் விரைவாக செயல்படவில்லை என்றுதான் DPJ அரசாங்கத்தை வாடிக்கையாகக் குறைகூறிவந்தது. தன்னுடைய பொருளாதாரச் செயற்பட்டியலின் பல பிரிவுகளை DPJ திட்டத்தில் இருந்துதான் கொய்சுமி எடுத்துக் கொண்டார். இவருடைய கட்சியின் தேர்தல் உறுதிமொழிகளை பொறுத்தவரையில், ஹடோயமா ஏற்கனவே நிதானம் தேவை என்று வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார். 1990 களில் பங்குச் சந்தை சரிவு, கட்டிட விற்பனைக் குமிழ் சரிவிற்கு பின் இரு தசாப்தங்கள் மகத்தான ஊக்கப் பொதிகள் அவற்றிற்கு கொடுக்கப்பட்டபின், ஜப்பானிய பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் 200 சதவிகிதத்தை விரைவாக அடைய உள்ளது. அரசாங்கம் பத்திரம் வெளியிடுவதை இன்னும் குறைக்க இருப்பதாக ஹடோயமா உறுதி கொடுத்துள்ளார்: "கடந்த கால நடைமுறையால் வரம்பன்றி செயல்படுவது என்பது பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; அதன் பின்தான் பட்ஜேட் பற்றாக்குறை இருந்தால் பத்திரங்களை விற்க வேண்டும்." தேசிய ஒளிபரப்பாளர் NHK இடம் திங்களன்று பேசிய ஹடோயமா பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் தன் கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மையை, "எங்கள் கொள்கையை அதிரடியாகத் திணிக்க" பயன்படுத்த மாட்டேன் என்று அறிவித்தார். "நாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், மக்கள் உணர்வைப் பெற முற்பட வேண்டும், ஏனெனில் அத்தகைய வளைந்து கொடுக்குப் போக்கு எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது." என்று அவர் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய கட்சியின் குறைந்தபட்ச சமூகக் கொள்கையைக் கூட, தேர்தல் கட்டளையாக வந்ததை, பயன்படுத்த ஹடோயமா மறுத்துள்ளது, அடுத்த அரசாங்கம் அதை பதவியில் இருந்திய மில்லியன் கணக்கான வாக்களார்களுக்காக என்று இல்லாமல், பெருநிறுவன உயரடுக்கிற்காகத்தான் ஆட்சி நடத்தும் என்பதை தெளிவாக்கியுள்ளது. ஜப்பானில் தொழிலாளர்களும் இளைஞர்களும் உலகெங்கிலும் அவர்கள் நிலையில் உள்ளவர்களைப் போலவே அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர். முதலாளித்துவம் இன்னும் ஆழ்ந்த நெருக்கடியில் தீவிரமடைகையில், தொழிலாளர் வர்க்கத்தின்மீது சுமைகளை இறக்குவதற்கு அரசாங்கங்கள் பயன்படுத்தும் பொய்கள் பெருகிய முறையில் வெளிப்படையாகின்றன. ஜப்பானில் எந்த அரசியல் கட்சியும் தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்குப் போராடவில்லை. பழைய, இழிவுற்றுவிட்ட தொழிலாள வர்க்கத்தின் கட்சிகள்--சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுக்கள்--ஹடோயமா அரசாங்கத்திற்குப் பின் நிற்கின்றனர். DPJ உடன் சமூக ஜனநாயகக் கட்சி முறையாக கூட்டு கொண்டுள்ளது; தேர்தல் பிரச்சாரத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கஜூவோ ஷியி ஒரு "ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக" செயல்படுவதாக உறுதியளித்தார். ஒரு சோசலிச சர்வதேச முன்னோக்கை தளமாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சியை கட்டியமைப்பதற்கு தொழிலாளர்கள் முயல வேண்டும். ஜப்பானில் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினைகளும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்களை சுரண்டும் சர்வதேச பெருநிறுவனங்களுக்கு எதிரான ஒன்றுபட்ட இயக்கத்தின் வளர்ச்சிக்கு புறத்தே தீர்க்கப்பட முடியாது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜப்பானில் உள்ள அறிவுஜீவிகள் அனைவரையும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு, திட்டம் பற்றி தீவிமாக அறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்; அது சர்வதேச தொழிலாளர்களின் அனைத்து மூக்கிய மூலோபாய அனுபவங்களின் முக்கிய படிப்பினைகளை தளமாகக் கொண்டுள்ளது. இத்தகைய உறுதியான அஸ்திவாரங்களில்தான் ஜப்பானிய தொழிலாள வர்க்கம் காலம் கடந்து விட்ட முதலாளித்துவ முறையை அகற்றி, தனியார் இலாபமுறைக்காக அல்லாமல் சமூகத்தேவையை பூர்த்தி செய்யும் வரலாற்றுப் பணியை செய்து முடிக்க தன்னுடைய இடத்தைக் கொள்ள முடியும். |