WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Seventy years since the beginning of World War II
இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர்
Nick Beams
3 September 2009
Use this
version to print | Send
feedback
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலக யுத்தம் வெடித்ததானது, பல தொடர்
நிகழ்வுகளுக்கு வழிவகுத்து கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்களின் மரணத்தையும் விளைவித்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில்
இந்த யுத்தம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாட்டை கண்டது.
ரஷ்ய யுத்த முனையில் நடந்த கொடூரங்கள், டோக்கியோ மற்றும் டிரேஸ்டனில் பெரும் குண்டுவீச்சுக்கள், 6 மில்லியன்
ஐரோப்பிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்டது, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டது
ஆகியவை உடனடியாக நினைவிற்கு வரும் நிகழ்ச்சிகளாகும்.
உண்மையை யுத்தத்தில் முதலில் பலியாவது என பலமுறையும் கூறப்படுகிறது. ஏழு தசாப்தங்களுக்கு
பின்னரும் பொதுக்கருத்தை உருவாக்கும் உத்தியோகபூர்வ அமைப்புக்கள் அனைத்தும் அதிக நேரம் உழைத்து யுத்தத்தின்
காரணங்களையும் மற்றும் அதிலிருந்து எடுக்கவேண்டிய படிப்பினைகளையும் மூடி மறைக்கின்றன.
நடைமுறையில் இருக்கும் பல கட்டுக்கதைகளுக்கும் முற்றிலும் மாறாக, இந்த யுத்தம்
ஒன்றும் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான யுத்தமல்ல. எவ்வாறு முதலாம் உலக யுத்தம் "அனைத்து
போர்களையும் முடிக்கும் ஒரு போராக" இருக்கவில்லையோ அவ்வாறுதான் இதுவும். ''ஜனநாயக" மற்றும் பாசிச
முதலாளித்துவ பெரும் சக்திகளால் உலகை பிரித்து அதன் மூலவளங்களை இலாப நலன்களுக்காக பங்கு போட்டுக்
கொள்ளுவதற்காக நடத்தப்பட்ட ஒரு ஏகாதிபத்திய யுத்தமாகும்.
முதல் உலக யுத்தம் ஆரம்பித்ததற்கு பின்னர் லெனின் தொழிலாள வர்க்கம் ஒரு
சோசலிச புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஒழுங்கமைப்பை தூக்கியெறிந்தால் ஒழிய தவிர்க்க முடியாமல் இன்னும் பல
யுத்தங்கள் தொடரும் என்றார். ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான எவ்விதமான "சமாதானமும்" அடுத்த
மோதல் வெடிப்பதற்கு முன் ஒரு இடைவெளிதான் என்று அவர் வலியுறுத்தினார். அந்த எச்சரிக்கை பின்னர் உறுதி
செய்யப்பட்டது.
யுத்தத்தின் உடனடிக் காரணம் செப்டம்பர் 1, 1939 அன்று போலந்தின் மீது
நாஜிப் படையெடுப்பு நடத்தப்பட்டது ஆகும். இதற்கு முந்தைய ஆண்டு, இகழ்வுற்ற மூனிச் மாநாட்டில், பிரதம
மந்திரி நெவில் சேம்பர்லின் தலைமையில் பிரிட்டிஷ் அரசாங்கம் செக்கோஸ்லோவாக்கியாவை ஜேர்மனி
ஆதிக்கத்திற்குள் கொள்வதை ஒப்புக்கொண்டது. ஜேர்மனிய விரிவாக்கம் மத்திய ஐரோப்பாவுடன் நின்றுவிடும் என்று
நம்பிய சேம்பர்லின் மூனிச்சில் இருந்து தான் "எமது காலத்தின் சமாதானத்தை" அடைந்துவிட்டதாக அறிவித்துக்
கொண்டு திரும்பினார். 11 மாதங்களுக்கு பின்னர் அவர் யுத்த அறிவிப்பை செய்தார்.
போலந்தின் மீது படையெடுப்பு ஐரோப்பாவில் மட்டும் தன்னுடைய நிலைமையை
ஜேர்மனி முன்னேற்றிக் கொள்ள விரும்புவதோடு நிறுத்தத் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக்கியதுடன் ஒரு
உலக சக்தியாக வருவதற்கு விழைந்ததையும் காட்டியது. இந்த முனைப்பை உலகின் முக்கிய காலனித்துவ சக்தி என்ற
முறையில், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ஆபிரிக்காவில் பரந்த பகுதிகள் ஆகியவற்றில் மேலாதிக்கம் கொண்டு
உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பொருளாதாய, நிதிய இருப்புக்களை அபகரித்த பிரிட்டனால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை.
யுத்தம் மூளுவதற்கு ஓராண்டிற்கு முன்பு, நான்காம் அகிலம் நிறுவப்பட்டிருந்தது.
தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடியைத் தீர்க்கும் பணியை அது எடுத்துக் கொண்டு, சோசலிச புரட்சிக்கு
தயாரிப்பு செய்தது. ஒரு சோசலிசப் புரட்சி இல்லாவிடின் "மனிதகுலத்தின் முழுபண்பாட்டையும் ஒரு பேரழிவு
அச்சுறுத்தும்." என புதிய அகிலம் அறிவித்தது.
தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கைத் துரோக தலைமைகளான சமூக ஜனநாயகக்
கட்சி மற்றும் ஸ்ரானிலிச கம்யூனிஸ்ட் கட்சிகள் யுத்தம் மூள்வதற்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டிருந்தன. 1936ல்
வெடித்த ஸ்பானிய புரட்சி வெற்றி பெற்றிருந்தால், அது ஐரோப்பா முழுவதிலும் புரட்சிப் போராட்டங்களுக்கு
வழிவகுத்திருக்கும், ஜேர்மனியில் சக்தி வாய்ந்தது எனக் கருதப்பட்ட நாஜி ஆட்சியைக் கூட அச்சுறுத்தியிருக்கும்.
அதேபோல் 1936ம் ஆண்டு பிரஞ்சு பொது வேலைநிறுத்தம் அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்ற நேரடிப் போராட்டமாக முன்னேறியிருந்தால், அது சக்திகளின் சமநிலையை வியத்தகு முறையில்
மாற்றியிருக்கும். ஆனால் இந்த இரு புரட்சி இயக்கங்களும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக தலைமைகளால்
குரல்வளையில் நெரிக்கப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியபடி, முதலாளித்துவம் "இத்தகைய
"தொழிலாளர் தலைவர்கள்" தன் ஆணைப்படி நடக்கவிருக்கையில், மக்களைப் படுகொலை செய்வது உட்பட தான்
எதையும் செய்யலாம் என்று தன்னையே நம்ப வைத்துக் கொண்டது."
மே 1940ல் ஜேர்மனிய துருப்புக்கள் பிரான்சின் மீது படையெடுத்தபோது, விடுத்த
அறிக்கை ஒன்றில் நான்காம் அகிலம் ஹிட்லர் மற்றும் அவர் தலைமை தாங்கிய பாசிச இயக்கத்தின் அடிப்படை சமூக
முக்கியத்துவத்தை விளக்கினார்.
"தங்கள் எழுச்சியான நாட்களில் போல்ஷிவிசத்திற்கு எதிரான பெரும் போர்
புரிபவர் என்ற ஹிட்லரை பாராட்டிய ஜனநாயக அரசாங்கங்கள் இப்பொழுது அவரை ஒருவித சாத்தான்,
நரகத்தின் ஆழ்ந்த பகுதிகளில் இருந்து எதிர்பாராமல் கட்டவிழ்த்துவிட்டப்பட்டவர், உடன்பாடுகளின் புனிதத்தை
மீறுபவர், எல்லைகள், விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மீறுபவர் என்று காட்டுகின்றனர். ஹிட்லர்
இல்லாவிடின், முதலாளித்துவ உலகம் ஒரு பூங்கா போல் மலர்ந்திருக்கும் என்கின்றனர். எத்தகைய பரிதாபமான
பொய்! இந்த ஜேர்மனிய நரம்புத் தளர்ச்சி உடையவர், தன்னுடை மண்டையோட்டில் கணக்குப் போடும்
இயந்திரத்தையும், கைகளில் வரம்பற்ற அதிகாரத்தையும் கொண்டவர், ஆகாயத்தில் இருந்தோ அல்லது நரகத்தில்
இருந்தோ வந்துவிடவில்லை. ஏகாதிபத்தியத்தின் அனைத்து அழிவு சக்திகளின் உருவகம்தான் இவர். செங்கிஸ்கானும்,
தாமர்லேனும் வலுவற்ற மேய்க்கும் மக்களுக்கு இறைவனின் அழிக்கும் சக்தி என்றுதோன்றியது போல், உண்மையில்
அவர்கள் எல்லா மேய்க்கும் மக்களைப் போல் கூடுதலான மேய்ச்சல் நிலத்தை விரும்பி, காலனிகளை
கொள்ளையடிக்கத்தான் விரும்பினர் என்பதுபோல், ஹிட்லரும் பழைய காலனித்துவ சக்திகளை அவர்களின்
அஸ்திவாரங்களை ஆட்டிவைத்து, ஏகாதிபத்திய சக்தி அதிகாரத்தைக் கைப்பற்ற விழைவதன் இன்னும் சிறந்த
வெளிப்பாட்டைத்தான் கொடுத்தார்."
ஒரு ஐரோப்பிய மோதலாக ஆரம்பித்த யுத்தம் விரைவில் உலகம் முழுவதும்
விரிவாக்கம் அடைந்தது. 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவ சக்திகள் ஒன்றோடு ஒன்று உலகச் சந்தை
விரிவாக்குவதன் அடிப்படையில் போட்டியிட்டன. ஆனால் பெரு மந்த நிலையும் உலகச் சந்தையின் சுருக்கமும் உலகப்
பொருளாதாரத்தை போட்டி முகாம்களாகப் பிளவு செய்தது.
அதன் ஏற்றுமதி சந்தைகளின் சரிவை எதிர்கொண்ட ஜப்பான் நெருக்கடியைக்
கடப்பதற்கு சீனாவை வெற்றி கொண்டு கிழக்கே ஒரு பேரரசை நிறுவ முற்பட்டது. அது அமெரிக்காவினால்
பொறுத்தக் கொள்ள முடியாதது ஆகும். அதுவும் பசிபிக்கில் விரிவடைய வேண்டும் என முற்பட்டது. இதையொட்டி
யுத்தம் தவிர்க்க முடியாததாயிற்று. டிசம்பர் 1941ல் பேர்ல் ஹார்பரை ஜப்பானியர் தாக்கியது ஒரு போரைத்
தொடக்கும் முயற்சிதான். ஆனால் இதற்கான தயாரிப்பு முந்தைய தசாப்தத்தில் நடந்திருந்தது.
ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை, மத்திய, தென்கிழக்கு
ஐரோப்பாவின் மூலவளங்கள் மிகப்பெரிய முதலாளித்துவ சக்தியான அமெரிக்காவை சவாலுக்கு அழைக்கக்கூடிய
திறனை வளர்க்கப் போதுமானதாக இல்லை. ஜூன் 22, 1941 அன்று சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பு
ஆரம்பித்தது ஒரு உலக சக்தி என்னும் நிலைமையை ஜேர்மனிய பேரரசு கொள்ளுவதற்கு தேவையான பொருளாதார
அடித்தளத்தை நிறுவும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
அமெரிக்காவை பொறுத்தவரையில், அமெரிக்க கண்டத்தின் பரந்த மூலளவங்களின்
அடிப்படையில் அது அதிகார ஏற்றத்தைக் கண்டது. ஆனால் அந்த அஸ்திவாரத்தில் மட்டும் அது நீடித்துத் தொடர்ந்து
இருக்க முடியாது. அதுதான் அதன் பொருளாதாரத்தை கடுமையாகத் தாக்கிய பெருமந்த நிலையின் படிப்பினை
ஆகும். உலகத்தின் சந்தைகள் அமெரிக்க ஏற்றுமதிக்கு திறந்துவிடப்பட வேண்டும், அமெரிக்க முதலீடு மற்றும்
தொழில்நுட்பத்திற்கு திறந்துவிடப்பட வேண்டும் அப்பொழுதுதான் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும். இந்த
முன்னோக்கு தமக்கென பேரரசை நிறுவிக் கொள்ளும் ஜேர்மனியினதும் ஜப்பானினதும் முயற்சிகளுடனும் மற்றும்
அதேபோல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த வாஷிங்டனின் நட்பு நாடான பிரிட்டனுடைய நிலையோடும்
இயைந்திருக்கவில்லை. அனைத்துமே அமெரிக்காவின் "திறந்த கதவுகள்" திட்டத்திற்கு வழிவிட வேண்டியிருந்தது.
அதனது பொருளாதார தகமையும் மற்றும் களைப்படைந்திருந்த அதன் போட்டியாளர்கள்
மீது அது கொண்டிருந்த பெரும் மேலாதிக்கநிலை ஆகியவற்றின் அடிப்படையில், அமெரிக்கா உலக முதலாளித்துவ
முறைக்கு இரண்டாம் உலகப் யுத்தம் முடிந்த நிலையில் ஒரு உறுதிப்பாட்டைக் கொடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்த
போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றமும் சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போரும் ஏகாதிபத்தியப் போட்டிகளுக்கு
இடையேயான தன்மையைக் கட்டுப்படுத்த ஒரு கட்டமைப்பைக் கொடுத்தது. அது மூன்று தசாப்தங்களுக்குள் இருமுறை
உலக யுத்தமாக வெடித்தது.
இன்று இந்த சமசீர்நிலைக்கான அஸ்திவாரங்கள் தொடர்ந்து நீடித்திருக்கவில்லை.
பெருமந்த நிலைக்குப் பிறகு மிக ஆழ்ந்த பொருளாதார, நிதிய நெருக்கடி மீண்டும் உலகில் உலகச் சந்தையில்
போட்டியில் மாற்றம் என்பதை ஒவ்வொருவரும் மற்றவரை எதிர்த்து கடுமையாகப் போரிடும் சூழ்நிலையை
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, அதன் இழந்த பொருளாதார சக்தியை
ஈடுகட்ட பெருகிய முறையில் இராணுவ வழிவகைகளை நாடுவதும் மற்றும் புதிய சக்திகளின் எழுச்சி மற்றும் பழைய
சக்திகளின் புதுப்பிக்கப்பட்ட முனைவுகள் ஆகியவை கடந்ததைவிட இன்னும் கொடூரமான முறையில் மற்றொரு ஏகாதிபத்திய
மோதலுக்கான சூழ்நிலையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
இதிலிருந்து படிப்பினைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ இலாபமுறையை
அகற்றி, பகுத்தறிவார்ந்த, ஜனநாயக கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை
நிறுவுவதின் மூலம் மனித தேவைகளை நிறைவு செய்வதின் ஊடாகத்தான் ஏகாதிபத்தியப் போர் நிரந்தரமாக
இல்லாதொழிக்ககப்பட முடியும். இதுதான் உலக சோசலிசப் புரட்சிக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக்
குழுவின் முன்னோக்கு ஆகும். |