செவ்வாயன்று மாசாச்சுசட்ஸ் செனட்டர் எட்வார்ட் (ரெட்) கென்னடி இறந்தது
அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் சக்தியான கென்னடியின் குடும்பத்தின் பங்கு முடிவிற்கு வந்ததை குறிக்கிறது. 77
வயதில் மூளைப் புற்றுநோய்க்கு இரையான ரெட் கென்னடி செனட் மன்றத்தில் 47 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவார்.
அவர் அரை நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்க அரசியல் உணர்மையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஒரு குடும்பத்தின்
கடைசி முக்கியமான அரசியல் பிரதிநிதியாவார்.
இவருடைய சகோதரர் ஜோன் எப். கென்னடியின் நிர்வாகத்தையும் வாழ்வையும் டல்லாசில்
முடிந்த பயங்கர நிகழ்வுகளுக்கு 46 ஆண்டுகளுக்கு பின்னும், எஞ்சியிருந்த 41 வயது சகோதரர் ரொபேர்ட் எப்.
கென்னடி படுகொலை செய்யப்பட்ட 41 ஆண்டுகளுக்கு பின்னரும் ரெட் கென்னடி காலமானார் (மூத்த சகோதரரான
ஜூனியர் ஜோ இரண்டாம் உலகப் போரில் கடற்படையில் விமானியாக இருந்தார். ஆகஸ்ட் 1944ல் அவருடைய
விமானம் வெடித்தபோது கொல்லப்பட்டார்.)
கென்னடிகளின் அரசியல் பதவிகள் போருக்கு பிந்தைய காலம் முழுவதும் படர்ந்திருந்தன.
அவர்களுடைய சொந்த துன்பியல்கள் அமெரிக்க அரசியல் போக்கினதும் மற்றும் அமெரிக்காவின் வெடிப்புத்தன்மை
நிறைந்த வர்க்க உறவுகள் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தன. ஜோன் மற்றும் ரொபேர்ட் கென்னடி
படுகொலை செய்யப்பட்டது கென்னடி குடும்பத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது மட்டும் அல்லாமல் அமெரிக்க தாராளவாததின்
ஒரு முழுக் கட்டத்தையும் முடிவிற்குக் கொண்டுவந்தது.
ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாட்டில் (New
Deal) இருந்து உருவமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின்
அனைத்து முரண்பாடுகளுடன் கூட ஜோன் எப். கென்னடி அதைப் பிரதிபலித்தார். மாசாச்சூசட்ஸின் 11வது
காங்கிரஸ் தொகுதியில் இருந்து 1946ம் ஆண்டு பிரதிநிதிகள் மன்றத்திற்கும் பின்னர் அமெரிக்க செனட்டிற்கு 1952
இலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூஸ்வெல்ட் மரணம் அடைந்து, இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற
ஓராண்டிற்குள் இவர் காங்கிரசில் நுழைந்தார். ஒரு மில்லியனர் வணிகரான ஜோசப் கென்னடி ரூஸ்வெல்ட்
நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.
கென்னடி தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியபோது, அமெரிக்க தாராளவாதம்
ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் கம்யூனிச எதிர்ப்பை தழுவிக்கொண்டதுடன் ஆழ்ந்த சமரசத்திற்கு
உட்பட்டுவிட்டது. இதன் வீழ்ச்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் மகத்தான வளங்களால் படிப்படியாக
மறைக்கப்பட்டிருந்தது. அது ஜனநாயகக் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு சில சலுகைகளை கொடுக்கும்
கட்டாயத்திற்கு உட்படுத்தியது. இது மறுபக்கத்தில் வலதுசாரி தொழிலாளர் அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக
ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப்போரில் இருந்து அமெரிக்கா மேலாதிக்கம் கொண்ட உலக
ஏகாதிபத்திய சக்தியாக வெளிப்பட்டது. அமெரிக்கத் தாராளவாதம் தனது சீரிய வனப்புரையையும் சர்வதேசத்
தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அமெரிக்க வெளிவிவகாரத்துறை,
CIA மற்றும்
இராணுவம் செய்த குற்றம்சார்ந்த தலையீடுகளில் ஒத்துழைப்பையும் இணைத்த முறையை எடுத்துக்கொண்டது.
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உலகளவில் பாதுகாத்து நிற்பவனாக தன்னை
காட்டிக்கொண்டாலும், ஜனநாயகக் கட்சி தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு "Solid
South" எனப்படும் "வலுவான தெற்கின்" மீதான
கட்டுப்பாட்டை நம்பியிருந்தது. அவ்வாறான ஆதரவை பெற்றதற்கு காரணம் அது அமெரிக்காவிலுள்ள இன ஒதுக்கல்
கொள்கையை பாதுகாப்பதால் ஆகும்.
இந்த முரண்பாடுகள் கென்னடி நிர்வாகம் மற்றும் அதற்குப் பின் வந்த லிண்டன் பி.
ஜோன்சன் ஆகியோரை எதிர்கொண்ட பெருகிய நெருக்கடியில் முக்கிய பங்கைக் கொள்ளவிருந்தன. ஜோன்சனின்
Great Society
எனப்படும் சமூக சீர்திருத்தத் திட்டம் வியட்நாம் பேரழிவுப் போரினாலும், போருக்குப் பிந்தைய பொருளாதார
உயர்ச்சியின் முடிவினால் உருவாகிய பொருளாதார பிரச்சனையினாலும் சரிவுற்றது.
ஜோன் கென்னடியின் அரசியல் வாழ்வு அமெரிக்காவின் உலக மேலாதிக்க சிறந்த
நாட்களில் படர்ந்து, அந்த ஆதிக்கம் உடையத் தொடங்கியதின் ஆரம்பத்திலும் இருந்தது. 1960ம் ஆண்டு குளிர்யுத்த
காலத்தில் ஒரு தாராளவாதி என்ற முறையில் கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளை
மாளிகையில் ஒரு நிதானமான உள்நாட்டுச் சீர்திருத்தத்தை அமெரிக்காவின் சக்தியை சர்வதேசரீதியாக
ஆக்கிரோஷமாக காட்டுவதுடன் இணைத்துச் செயல்பட முற்பட்டார். இவருடைய நிர்வாகம் விரைவில் உள்நாட்டிலும்
வெளியிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் சிக்குண்டது.
முதலில் குடி உரிமைகள் பற்றி பொருட்படுத்தாமல் இருந்தாலும், கென்னடி விரைவில்
1950கள், 1960களின் முதலாண்டுகளில் இருந்த ஆபிரிக்க-அமெரிக்க குடி உரிமைகள் இயக்கம் வெகுஜன அளவில்
திரட்டப்பட்டதின் அரசியல் எதிரொலிகளில் சிக்கிக் கொண்டார். நவம்பர் 1963ல் அவர் படுகொலை
செய்யப்பட்டார்.
ஒரு இராணுவ மோதல் முழுப் போர் நிலை என்பதை நோக்கி வியட்நாம் நிகழ்வுகள்
உந்துதல் பெற்ற நிலையில் கென்னடி நிர்வாகம் முடிவிற்கு வந்தது. அக்கொள்கை ஜோன்சன் நிர்வாகத்தால்
செயல்படுத்தப்பட்டது.
வியட்நாம் போருக்கு தாமதித்து எதிர்ப்பை காட்டியவர் என்றவகையில் கென்னடியின்
இளைய சகோதரர் ரொபேர்ட்டின் ஜனாதிபதி பதவிக்கான வேட்கை ஜூன் 1968ல் குண்டுக் காயங்களால்
முடிவிற்கு வந்தது. வரலாற்று விந்தைகள் பொதிந்த நிகழ்வுகளின் மாற்றத்தில் ரொபேர்ட்டின் மரணம் ரிச்சர்ட்
நிக்சனுக்கு பாதை அமைத்தது. 1960ல் ஜோன் கென்னடியினால் ஜனாதிபதி பதவி வாய்ப்பை இழந்த அவர் எட்டு
ஆண்டுகளுக்குப் பின்தான் வெள்ளை மாளிகையை வெற்றி கொண்டார்.
நிக்சன் அதிகாரத்திற்கு வந்தது அமெரிக்க தாராளவாதத்திற்கு ஒரு திருப்பு
முனையாகும். ஒரு குறைந்தபட்ச சமூக சீர்திருத்தத்தையேனும் ஜனநாயகக் கட்சி பிரதிபலித்த காலத்தின் முடிவை
அது குறித்தது.
கடைசித் தம்பியான எட்வார்ட் கென்னடி 1962ம் ஆண்டு அமெரிக்க செனட்டிற்கான
தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடைய அரசியல் போக்கு தனிப்பட்ட பொறுப்பற்ற தன்மையினால் நிரந்தரமான
பாதிப்பிற்கு உட்பட்டது. இது ஜூலை 1969ல் சாப்பாக்விட்டிக்கில் நடந்த விந்தையான நிகழ்வில் வெடிப்பைக்
கண்டது. அதில் கென்னடியின் பிரச்சார உதவியாளர் ஒருவர் இறந்துபோனார். ஆனால் மிகவும் முக்கியமான
மாற்றங்கள் அமெரிக்க அரசியலிலும் ஜனநாயகக் கட்சியிலும் ஏற்பட்டு, 1970களில் வலுப்பெறத் தொடங்கியது.
1972TM McGovern
பிரச்சாரத்தில் நேர்ந்த சங்கடத்திற்குப் பின்னர், ஜனநாயகக்
கட்சி வலதிற்குத் தீவிரமாக திரும்பியது. இந்த போக்கின் அடித்தளத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகப்
பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட ஆழ்ந்த மாறுதல்கள் இருந்தன. அதற்கு அடையாளம் பிரெட்டன் வூட்ஸ் நிதிய
முறை பொறிந்ததும், 1971 ஆகஸ்ட் முதல் டாலர்-தங்க மாற்றுவிகிதம் முடிவிற்கு வந்ததும்தான்.
1976ல் ஜனநாயகக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு ஒரு
பழைமைவாத தென்புல ஆளுனரான ஜிம்மி கார்ட்டரை நோக்கியது. கார்ட்டருக்கும் கென்னடிக்கும் இடையே இருந்த
இறுக்கமான உறவு 1970ன் பிற்பகுதிகளில் முறிந்தது. 1980ல் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவை
பெறுவதற்கு கார்ட்டரை அகற்றும் கென்னடியின் முயற்சிக்கு இது இட்டுச் சென்றது. அதற்குள் கென்னடியே
பழைமைவாத திசையில் மாறிவிட்டார். இது விமானப்பிரிவு மற்றும் டிரக்குகள் தொழிற்துறைபிரிவில் கட்டுப்பாடுகளை
அகற்றுவதற்கு அவர் கொடுத்த உரத்த ஆதரவில் முழு வடிவம் பெற்றது.
தான் வலதிற்கு மாறியதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கென்னடியை
ஜனநாயகக் கட்சி நிராகரித்தது. ஆனால் "கனவு ஒருபோதும் மடியாது" என்று பல முறையும் மேற்கோளிடப்பட்ட
1980 ஜனநாயகக் கட்சி தேசியப் பேரவையில் நிகழ்த்திய உரை அமெரிக்க தாராளவாதத்தின் கடைசி உற்சாகக்
குரல் ஆகும். அதற்குள் அமெரிக்க தாராளவாதம் நெடுங்காலமாகவே வெற்றுத்தனமாகிவிட்டது. அரசியல்
உள்ளடக்கம் ஏதும் இல்லாத நிலையில், அது ஒரு வார்த்தைஜால தன்மையையே எடுத்துக்கொண்டது.
1984 ல் மின்னிசோட்டா கவர்னர் வால்டர் மோன்டேல் அரைமனத்துடன் ஜனாதிபதி
பதவி பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் 1988ல் அதிகம் அறியப்படாத ஆளுனரான
மைக்கேல் டுகாகிஸின் பால் திரும்பியது. 1992ல் பழைமைவாத தென்புல ஆளுனரான பில் கிளன்டனை விரும்பியது.
1980க்குப் பின்னர் சமூக சீருத்திருத்தத்திற்கு காட்டிய கென்னடியின் விசுவாசத்தில்
அதிகம் உள்ளடக்கமும் இல்லை. குடியரசுக் கட்சியின் வலதுசாரிகள் இவரை நிரந்தரமாகத் தாக்கியும் இந்நிலை
தொடர்ந்தது. அது அவரை சிறிதும் வருத்தப்படாத தாராளவாதி என்று அரக்கத்தனமாக சுட்டிக்காட்டியது.
அப்பொழுது முதல் கென்னடி மிகக் குறைந்த அரசியல் ஈடுபாடு உடையவர் என்ற அழைக்கப்படும் தன்மையில்
இருந்தார்--அதாவது முக்கிய சமூக சீர்திருத்தங்களை இயற்ற எந்த தீவிர முயற்சியையும் எடுக்காதவர் என.
அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கம் முற்றிலும் வலதின் தீவிரத்திற்கு மாறிவிட்டது. இது
ரேகனின் தடையற்ற சந்தை பற்றிய வருங்கால கணிப்புக்களில் வடிவம் பெற்றது. இவை தொழிலாள வர்ககத்தின்
வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலையில் இடையறாத் தாக்குதலுக்கு அரசியல் நியாயத்தை கொடுத்தன. இது
கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகத்தில் தொடர்ந்ததுடன் இன்றும் ஒபாமாவின்கீழ் தொடர்கிறது.
மரணத்தின் பின்னர் கென்னடி ஓர் உயர்ந்த சட்டமியற்றுபவர், சாதாரண மனிதனுக்கு
வாதிட்டவர் என "செனட்டின் சிங்கம்" என்று புகழப்படுகிறார். கென்னடிகளின் தனிப்பட்ட பெரும் சோகங்கள்
ரெட் கென்னடியின் பால் பொது பரிவுணர்வை ஏற்படுத்துகையில், ஒரு தீவிர சமூக சீர்திருத்ததுடன்கூட அவர் பெயர்
தொடர்பு கொள்ளவில்லை என்ற உண்மையும் உள்ளது. தன்னுடைய இறுதி தசாப்தத்தை வலதுசாரித் தன்மை நிறைந்த
இருகட்சி நடவடிக்கைகளுக்கு அவர் செலவழித்தார். ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் பொதுக்கல்வி முறையில் ஒரு தாக்குதலான
"எந்தக் குழந்தையும் சட்டத்தின்பின் விடப்படலாகாது" போன்றவற்றிலும் மற்றும் காங்கிரசில் நிறைவேற்றப்படாதுபோன
ஆவணமற்ற குடியேறுபவர்களுக்கான கடும் தண்டனைகளை வழங்க இலக்கு கொண்டிருந்த சட்ட வரைவிற்கும் ஆதரவை
காட்டினார்.
2008 தேர்தலில் கென்னடி, ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்தார். இது ஓரளவு பில்
கிளின்டன் மீது கொண்டிருந்த விரோதப் போக்கினாலாகும். அவரை இவர் தனிப்பட்ட முறையில் வெறுத்தார்.
இவருடைய வாழ்வின் இருண்ட விந்தை 50 ஆண்டுகாலமாக இவர் போராடியிருந்த அனைவருக்கும் சுகாதாரப்
பாதுகாப்பு என்ற அரசியல் கருத்து ஒபாமாவினால் மில்லியன் கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு இரக்கமற்ற
முறையில் சுகாதாரப் பாதுகாப்பை அகற்றும் ஒரு மறைப்பாக மாற்றப்பட்டதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
பெருவணிகத்தினதும் அரசாங்கத்தினதும் சுகாதாரப் பாதுகாப்பு செலவை பெரிதும் குறைக்கும் சட்ட வரைவு ஒன்று
கென்னடி மரணத்தை எதிர்நோக்கியிருக்கையில் காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.