World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan power workers strike for pay increase இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம் By W.A. Sunil இலங்கை மின்சார சபையின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், 40 வீத சம்பள உயர்வும் முந்தைய வேலை நிலைமைகளை மீண்டும் ஏற்படுத்துமாறும் மற்றும் இந்த ஆண்டு முற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்யுமாறும் கோரி கடந்த வெள்ளிக் கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை தகர்க்கும் முயற்சியில், அரசாங்கம் சகல விடுமுறைகளையும் இரத்துச் செய்ததோடு வேலை நிறுத்தம் செய்யும் எவருக்கும் எதிராக "கடுமையான நடவடிக்கை" எடுப்பதாக அச்சுறுத்தியது. ஆயினும் குமாஸ்தாக்கள், மெக்கானிக்குகள், மின்சார நிபுணர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மீட்டர் வாசிப்பவர்கள் உட்பட சக்திவாய்ந்த 14,000 தொழிலாளர் படையில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை மீறினர். நிர்வாகம் அலுவலகங்களை பாரமரிக்கவும் வெளி வேலைகளை முன்னெடுக்கவும் ஒப்பந்த மற்றும் தகுதிகாண் தொழிலாளர்களை பயன்படுத்தியது. அதிகளவிலான தொழிலாளர்கள் பங்குபற்றியமை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு எதிரான முழு தொழிலாள வர்க்கத்தினதும் சீற்றம் வளர்ச்சியடைந்து வருவதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பிரமாண்டமான செலவாலும் தற்போது பூகோள பொருளாதார பின்னடைவாலும் குவிந்துபோயுள்ள பொருளாதார நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. மின்சார சபை ஊழியர்கள் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 17 அன்று சுகவீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதை தொடர்ந்து அனுராதபுரம், குருணாகல், கல்முனை, காலி உட்பட பல நகரங்களில் தொடர்ச்சியான மறியல் போராட்டங்களில் இறங்கியதோடு இறுதியாக கடந்த புதன் கிழமை கொழும்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் சாதாரணமாக சுகவீன விடுமுறை எடுக்கும் பிரச்சாரத்தில் பங்குபற்றியதை விட வேலை நிறுத்தத்தில் ஆகக் கூடுதலான தொழிலாளர்கள் பங்குபற்றினர். ஐக்கிய தொழிற்சங்க முன்னணி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இது சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் தலைமையிலான 27 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகும். நவசமசமாஜக் கட்சி சார்ந்த பட்டியல் அலுவலர்கள் சங்கம் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கமும் இதில் இணைந்துகொண்டன. முன்னைய சுகவீன விடுமுறை போராட்டத்தில் பங்குபற்றாத இந்த இரு தொழிற்சங்கங்களும், தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என அதற்கு நொண்டி சாக்கு கூறின. ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் பொறியியலாளர்கள் சங்கமும் உள்ளடங்கிய அரசாங்க சார்பு தொழிற்சங்க கூட்டு, வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. தமது உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எவ்வாறெனினும் ஐக்கிய தொழிற்சங்க முன்னணி வேலை நிறுத்தத்தை மட்டுப்படுத்த முயற்சித்தது. பிரச்சாரத்தில் அடுத்த கட்டத்தைப் பற்றி தொழிலாளர்கள் கலந்துரையாட தொழிற்சங்கம் வேலைத் தளங்களில் மறியல் போராட்டங்களையோ அல்லது கூட்டங்களையோ ஏற்பாடு செய்யவில்லை. இந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தன்று தொழிலாளர்களை வெறுமனே வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொண்டமை இராஜபக்ஷ அரசாங்கத்துடன் மோதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள தெளிவாக திட்டமிட்ட நடவடிக்கையாகும். கடந்த வாரம் "பிரமாண்டமான யுத்த செலவுகளையும் உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களையும்" மேற்கோள் காட்டிய மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நேரடியாக நிராகரித்தார். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் "அரசாங்கம் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்" என அவர் எச்சரித்தார். பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உக்கிரமாக்கிய அரசாங்கம், வருடாந்த பாதுகாப்புச் செலவை 166 பில்லியன் ரூபா (1.44 பில்லியன் டொலர்) வரை உயர்த்தியது. மே மாதம் புலிகளை தோற்கடித்த பின்னர், அரசாங்கம் "தேசத்தை கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தம்" ஒன்றை உடனடியாக அறிவித்தது. இது தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற ஏழைகளதும் சமூக நிலைமைகளை மேலும் கீழறுத்தது. மார்ச் மாதம், அரசாங்கம் மின்சார சபையை தனியார்மயமாக்க வழிவகுக்கும் வகையில் மின்சார மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இந்த சட்டம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கான தெளிவான தயாரிப்பாகும். மின்சார சபை போன்ற நட்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது. "2011 இறுதியில் இலங்கை மின்சார சபையும் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் சொந்த வருவாயில் இயங்க வேண்டும்" என நாணய நிதியம் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்களில் நட்டத்தில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனம் மின்சார சபையாகும். 2008 அளவில், அதன் நீண்ட கால கடன் 64 பில்லியன் ரூபாவாக இருந்த அதே வேளை, அந்த ஆண்டில் மட்டும் நடப்பு நட்டம் 35 பில்லியன் ரூபாவாக இருந்தது. அது பெற்றோலியம் கூட்டத்தாபனத்துக்கும் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும் 57 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாவது: "மின்சார சபையின் ஆட்டங்கண்டுள்ள நிதி நிலைமையானது இந்தப் பிரச்சினையையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது." அரசாங்கம் மேலதிக வேலை நேரத்தை குறைத்தல் மற்றும் சில மின்சார சபை சேவைகளை தனியார் கம்பனிகளுக்கு கொடுத்தல் உட்பட ஏற்கனவே பலவித செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்க சார்பு தொழிற்சங்க கூட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைக்காக எந்தவொரு போராட்டத்தையும் நடத்த மறுத்துள்ளதோடு தனியார்மயமாக்கல் திட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றது. ஜே.வி.பி. தலைமையிலான ஐக்கிய தொழிற்சங்க முன்னணி, மின்சார மசோதாவுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான மதிய நேர கூட்டங்களை நடத்துவதுடன் பிரச்சாரத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்திக்கொண்டது. ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் ஒரு எதிர்க் கட்சியாக இருக்கும் அதே வேளை, மின்சார துறை அல்லது வேறு எந்த துறை தொடர்பாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு ஒட்டு மொத்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் எண்ணம் அதற்கு இல்லை. 2005 இராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாவதற்கு பகிரங்கமாக ஆதரவளித்த ஜே.வி.பி., எதிர்க் கட்சியில் இருந்த போதிலும் அவரது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்ததோடு அவரது பிரமாண்டமான யுத்த வரவு செலவுத் திட்டத்துக்கும் வாக்களித்தது. புலிகளின் தோல்வியை அடுத்து, அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான நிபந்தனையாக ஜே.வி.பி. "தேசத்தை கட்டியெழுப்பும்" தனது சொந்த திட்டத்தை முன்வைத்தது. எந்தவொரு சலுகையும் வழங்கப்படாது என அரசாங்கம் கடுமையாக அறிவித்த போதிலும், ஐக்கிய தொழிற்சங்க முன்னணி தலைவர்கள், இராஜபக்ஷ தமது பக்கம் இருக்கின்றார் என்ற ஆபத்தான மாயையை பரப்புகின்றனர். கடந்த புதன் கிழமை கொழும்பில் உள்ள மின்சார சபை தலைமையகத்துக்கு முன்னால் நடந்த மறியல் போராட்டத்தின் போது உரையாற்றிய ஐக்கிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்ததாவது: "அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தொந்தரவுகளை ஏற்படுத்தி எமது கோரிக்கைகளை வெல்ல நாம் விரும்பவில்லை. ஜனாதிபதி இராஜபக்ஷ ஒரு நல்ல மனிதர். நாம் அவருக்கு ஆத்திரமூட்ட விரும்பவில்லை. அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்தது நாங்களே. அவர் முன்னாள் தொழில் அமைச்சராகவும் இருந்தவர். எனவே அவர் எங்களுக்கு எதிராக இருப்பார் என நாம் நினைக்கவில்லை." உடன்படிக்கை ஒன்றை ஏக்கத்துடன் எதிர்பார்த்திருக்கும் ஜெயலால் மேலும் தெரிவித்ததாவது: "எமது குரல் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அமைச்சரவையில் தெரிவிக்கப்படுமானால், நான் நினைக்கிறேன் அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் எமது கோரிக்கைக்கு தீர்வு கிட்டும்." அரசாங்கம் செவிமடுக்க மறுக்குமானால் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதாக ஒரு வெற்று அச்சுறுத்தலுடன் அவர் பேசி முடித்தார். கடந்த வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தை அடுத்து, வேறு வேலை நிறுத்தங்களையோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளையோ ஐக்கிய தொழிற்சங்க முன்னணி அறிவிக்கவில்லை. உலக சோலிச வலைத் தள நிருபருடன் பேசிய மின்சார சபை ஊழியர் ஒருவர் தெரிவித்ததாவது: "நான் பட்டியலிடும் அலுவலர்கள் சங்க உறுப்பினர். தொழிற்சங்கத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நான் உட்பட பல உறுப்பினர்கள், சங்கம் மசோதாவை ஆதரித்ததையும் சம்பள போராட்டம் தொடர்பாக அவர்களின் குழுவாத போக்கையும் அங்கீகரிக்கவில்லை. சங்கத் தலைவர்களின் இந்த குறுங்குழுவாதத்தின் காரணமாகவே அரசாங்கத்தால் மசோதாவை நிறைவேற்றவும் சம்பள உயர்வை தாமதப்படுத்தவும் முடிந்தது." "மேலதிக வேலை நேர குறைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் வெட்டின் காரணமாக நாங்கள் மாதம் குறைந்தபட்சம் 10,000 15,000 ரூபா வரை இழக்கின்றோம். இழந்த மேலதிக நேர வேலை வருமானத்தை சமாளிக்க, பொதுவில் எல்லா தொழிலாளர்களும் வீட்டு கடன் மற்றும் ஏனைய கடன்களைப் பெற்றுள்ளனர். இப்போது மாத செலவுகளை சமாளிப்பது கடினம், அதனாலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகிறார்கள்," என அவர் மேலும் தெரிவித்தார். கொத்மலை மின் உற்பத்தி நிலைய தொழிலாளி தெரிவித்ததாவது: "யுத்த செலவு காரணமாகவும் உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பணம் கிடையாது என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்புச் செலவைக் குறைக்க தீர்மானிக்கவில்லை மற்றும் உலக நெருக்கடி தொடரும். எனவே அரசாங்கம் இதே விளக்கத்தை அடுத்த ஆண்டும் கூறும்." களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய ஊழியர் கூறுகையில், "ஜே.வி.பி. தொழிற்சங்கம் தமது அரசியல் நலனுக்காக செயற்படுகின்றது. அவர்களது அரசியலின் காரணமாகவே மசோதாவை நிறைவேற்றவும் சம்பள உயர்வை ஒத்திப் போடவும் அரசாங்கத்தால் முடிந்தது. அவர்கள் யுத்தத்துக்காக எமது ஒரு நாள் சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு தூண்டிவிட்டனர். இப்போது அரசாங்கம் 2009ம் ஆண்டுக்கான நிலுவையை வழங்க மறுப்பதோடு அரசாங்கத்துக்கும் சேர்த்து எங்களை அர்ப்பணிக்குமாறு கோருகிறது. "அரசியல்வாதிகளும் முதலாளிகளும் சகல வசதிகளையும் அனுபவிக்கும் அதே வேளை, எதற்காக தொழிலாளர்கள் மட்டும் அர்ப்பணிக்க வேண்டும்?" என அவர் கடுமையான எதிர்ப்புடன் கேட்டார். |