World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's AfPak war intensifies on both sides of border

ஒபாமாவின் ஆப்-பாக் போர் எல்லைகளின் இருபுறமும் தீவிரமடைகிறது

By James Cogan
29 August 2009

Back to screen version

கடந்த வார ஆப்கானிய ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பதிவு மிகக் குறைவாக இருந்தது அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு பரந்த எதிர்ப்பு இருப்பதற்கு கூடுதலான சான்றைக் கொடுத்துள்ள நிலையில், ஆயுதமேந்திய எழுச்சியும் தொடர்ந்து விரிவாகிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை நேற்று 301 என உயர்ந்தது, எட்டு ஆண்டுகள் ஆக்கிரமிப்பின் ஆண்டு எண்ணிக்கையில் இது ஏற்கனவே அதிகமானது ஆகும்.

மிகச் சமீபத்திய இறப்புத் தகவல்களில் வெள்ளியன்று ஒரு சாலையோர குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட பெயர் குறிக்கப்படாத ஒரு சிப்பாயும், ஆகஸ்ட் 17 அன்று லூசியானா ஹாமண்டை சேர்ந்த 18 வயது மாத்யூ இ. வைல்ட்ஸும் அடங்குவர்; பிந்தையவர் ஒருகிளர்ச்சியாளரின் IED (கையிலுள்ள பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெடிபொருள்) அவருடைய வாகனத்தை தாக்கியதில் இறந்து போனார்.

ஆகஸ்ட் 26 அன்று உடாவைச் சேர்ந்த 27வயதான ஸ்டாப் சார்ஜென்ட் கர்ட் ஆர் கர்டிஸ், பாக்டிகா மாநிலத்தில் கிராமப்புற சுகாதாரமனையில் காயத்திற்கு மருத்துவ உதவி பெற்று வந்த உள்ளூர் தலிபான் தலைவரை கைப்பற்ற அமெரிக்க, ஆபிரிக்க அரசாங்கப் படைகள் சோதனை நடத்தியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். போராளிகளுடன் ஐந்து மணிநேரப் போர் அமெரிக்க ஹெலிகாப்டர் மருத்துவமனைக்குள் ஏவுகணைகளை செலுத்தியபின்தான் முடிவிற்கு வந்தது; போராளிகள் எனக் கூறப்படும் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன் கட்டிடம் தரைமட்டமாயிற்று.

வெளிநாட்டுத் துருப்புக்களுக்கு மக்களிடத்தில் உள்ள விரோத உணர்வு மற்றும் திறமையற்ற ஊழல் மலிந்த ஆட்சி காபூலில் இருப்பதன் காரணமாக ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எழுச்சி ஆதரவைப் பெற்று நாட்டின் பாதிப் பகுதியிலேனும் தீவிரமாக உள்ளது. கடந்த வாரம் ஏராளமான பேர் வாக்குப் பதிவு செய்யாததின் ஒரு கூறுபாடு தாலிபன் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது ஆகும்; இது அதன் பெருகிய செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்களில் 30ல் இருந்து 50 சதவிகிதத்தினர்தான் வாக்களித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வாக்குப் பதிவு 5 சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை.

ஆகஸ்ட் 20 தேர்தலுக்கு முன்பு, ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயி உடைய அரண்மனையின் மீதும் எறிகொண்டு வீசப்பட்டது உள்பட, தலிபான் தலைநகரத்தின் மையத்தில் இலக்குகளைத் தாக்கும் தன் திறனை எடுத்துக்காட்டியது. எழுச்சியாளர்களின் தாக்குதல்கள் மூலோபாய வடக்கு நகரமான குண்டூஸைச் சுற்றியும் அதிகரித்தன; ஒப்புமையில் சமீப மாதங்கள் வரை இங்கு ஸ்திரமான நிலைதான் இருந்தது.

இந்த வார நிகழ்வுகள் அமெரிக்க, நேட்டோ படைகளை எதிர்கொள்ளும் மோசமான நிலைமைக்கு சான்றாக உள்ளன. செவ்வாயன்று ஒரு மிகப் பெரிய வெடிகுண்டுகள் நிறைந்த டிரக் ஒன்று தெற்கு நகரமான காந்தகாரில் ஜப்பானிய கட்டுமான நிறுவனத்திற்கு அருகே வெடித்தது. அதில் குறைந்தது 43 பேர் இறந்தனர், 65 பேர் காயமுற்றனர். இதற்கு மறு இரவு, ராக்கெட்டுக்கள் காபூல் வங்கிக் கிளை அருகில் உள்ள நகர மையதை தாக்கின; இதையொட்டி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தெருக்கள் கிட்டத்தட்ட காலியாக இருந்ததால் இறப்பு ஏதும் இல்லை.

Associated Press கொடுத்துள்ள தகவல்படி, தாலிபன் காந்தகாரில் மீண்டும் உறுதியான பிடிப்பை மறுபடி ஏற்படுத்திவிட்டது; இது முன்பு இனவழி தெற்கு பஷ்டூனுக்கு ஆதரவு கொடுக்கும் மையமாக இருந்தது. ஒரு உதவி அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத ஆப்கானிய ஊழியர் ஒருவர், கூறினார்: "தாலிபன்கள் நகரத்திற்குள் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் செயலூக்கமுடன் உள்ளனர். விரும்பும் எதையும் அவர்கள் செய்ய முடியும்." பதட்டமடைந்த ஆப்கானிய இராணுவப் பிரிவுகள், நகரத்திற்கு வெளியே இருக்கும் கனேடிய, அமெரிக்க துருப்புக்களின் ஆதரவுடன் வியாழன் முதல் நகரத்தின் தெருக்களுடைய பாதுகாப்பை உள்ளூர் போலீசிடம் இருந்து எடுத்துக்கொள்ள நகர்ந்தன.

ஆப்கானிஸ்தானத்தில் உள்ள புதிய அமெரிக்கத் தளபதியான ஸ்ரான்லி மக்கிரிஸ்டல் அடுத்த சில வாரங்களில் தாலிபனிடம் இருந்து பெரும் பகுதியை மீட்பதற்கு ஆயிரக்கணக்கான கூடுதல் படைகள் தேவை என்று ஆலோசனை கூறவிருக்கிறார். அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவரான தளபதி டேவிட் பெட்ரீயஸ் "கடுமையான போர்" வரவிருப்பதாக எச்சரித்துள்ளார்; அமெரிக்க, சர்வதேச ஊடகத்தில் இது பற்றிய எவ்வித தகவல் அளிப்பும் பெரும் தணிக்கைக்கு உட்படும் என்பதும் தெளிவு.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தெற்கு மாநிலமான ஹெல்மாண்ட்டில் பெரும் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இதில் பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் ஒபாமாவால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆக்கிரமிப்பிற்கு வலுக்கூட்டும் விதத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படைப் பிரிவும் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் இதுவரை நடந்துள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புக்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை 69ல் குறைந்தது 29 இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளன.

இதற்கு முக்கிய காரணம் சாலையோரத் தாக்குதல்கள் ஆகும்; தாலிபன் கெரில்லாக்கள் சிவிலிய மக்களிடையே செயலூக்கமாக உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. ஆனால் அமெரிக்க, பிரிட்டிஷ் கிளர்ச்சி - எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி சுயாதீனத் தகவல் திரட்டல் இல்லை. போர் பற்றிய தகவல் எப்பொழுதாவது, துப்புரவாக்கப்பட்ட, பிரச்சாரவகை தகவல்கள் என்று தகவல் கொடுக்கும் செய்தியாளர்களின் அறிவிப்புக்கள்தான் கிடைக்கிறது. மக்கிரிஸ்டலின் உத்தரவின்பேரில், இறப்பு எண்ணிக்கைகள் இப்பொழுது வெளியிடப்படுவதில்லை; தாலிபன் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியவர்கள் கொலை மற்றும் காவலில் வைப்பதுமான எண்ணிக்கை கூட கொடுக்கப்படுவதில்லை.

2007ல் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட போது, மக்கிரிஸ்டல், பெட்ரீயசின்கீழ் பணியாற்றி சிறப்புப் படைகள் மற்றும் மரணமளிக்கும் குழுக்களின் செயல்களை வழிநடத்தினார்; அவை ஆயிரக்கணக்கான மக்களை, சுன்னி அடிப்படையாகக் கொண்ட எழுச்சி அல்லது ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக்காட்டும் ஷியைட் சதரிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புள்ளோர் என்ற சந்தேகத்திற்கு ஆளானவர்களை கொன்றது. அதே முறையில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கொலைகார உத்தியைக் கையாள்வதற்காக அவர் ஆப்கானிஸ்தானத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் எல்லைக்குள், வட மேற்கு எல்லைப் புற மாகாணத்திலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் நாட்டின் பஷ்டுன் மக்களிடையே தாலிபனுக்கு ஆதரவு கொடுக்கப்படுவதை நசுக்குவதற்கு அங்கு மிருகத்தனமான வழிவகைகள் பயன்படுத்தப்படுவது பற்றி தகவல்கள் கசிந்து வந்துள்ளன.
பாக்கிஸ்தானிய இராணுவம் ஏப்ரல், மே மாதங்களில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பஷ்டுன் இஸ்லாமிய இயக்கம், Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (TNSM) ஆகியவற்றின் மீது பெரும் தாக்குதலை தொடங்கியது; இவைகள் அமெரிக்க சார்புடைய அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சியை வழிநடத்தி மாவட்டத்தின் மீதான கட்டுப்பாட்டையும் எடுத்தன. இத்தாக்குதல் வாஷிங்டனால் கோரப்பட்டது; அது இந்த ஆண்டு முன்னதாக TNSமற்றும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சமாதான உடன்பாடு, நூற்றுக்கணக்கான போராளிகளை ஆப்கானிஸ்தானிற்குள் எழுச்சியில் சேர இட்டுச்செல்லும் என்று அஞ்சியது.

ஒரு மாத கால பூசலில் 1,800 TNSM போராளிகள் கொல்லப்பட்டதாகவும் மற்றவர்கள் 900 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இராணுவத்தின் கடுமையான, பொறுப்பற்ற தாக்குதல்கள் மற்றும் தரைத் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் குடிமக்கள் மாவட்டத்தில் இருந்து ஓடும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். இன்னும் நூறாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகள் அழிந்துள்ளதன் காரணமாகவோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ இன்னும் திரும்பவில்லை.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் 50,000 சிப்பாய்களும் போலீசாரும் ஆக்கிரமித்துள்ளனர். பாக்கிஸ்தானின் மனித உரிமைக் குழு பாதுகாப்புப் படைகள் TNSM ஆதவாளர்கள் மீது நீதிக்குப்புறம்பான கொலைகளை நடத்தியதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறது. அரசாங்க துருப்புக்களால் கொலை செய்யப்பட்ட போராளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களின் சடலங்கள் அடங்கிய இரு பெரும் சவக்குழிகள் பற்றிய தகவல் தனக்குக் கிடைத்துள்ளதாக அது ஆகஸ்ட் 11 அன்று அறிவித்தது. பின்னர் கபல் என்ற கிராமத்திற்கு அருகே இரு இடத்தில் 65 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படைகளால் காவலில் வைக்கப்பட்டவர்களின் சடலங்கள் இப்பொழுது தெருக்களில் எறியப்படுகின்றன--கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்டு, தலையினூடாக சுடப்பபட்டு இறந்த நிலையில். புதனன்று மிங்கோரா பகுதியில் இரு சடலங்கள் கண்டுபடிக்கப்பட்டன; திங்களன்று குறைந்தது 15 சடலங்கள் மற்றும் கடந்த வாரம் இன்னும் 18 கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 21ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இரு சடலங்களின் உறவினர் AP இடம் கூறினார்; "ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் போராளிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டனர்." இவர்களுடைய தந்தையார் முன்பு கொல்லப்பட்டார், நான்கு சகோதரர்கள் பாதுகாப்புப் படையில் காவலில் இன்னமும் உள்ளனர். அவர்களுடைய தாயார் பக்த் பேகம் கூறினார்: "என்னுடைய மகன்களுக்கு TNSM உடன் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் சண்டையிட்டிருக்கவில்லை, அவர்கள் நிரபராதிகள். என் கணவரும் குற்றமற்றவர். அவர்கள் என்னுடைய கணவரையும் இரு மகன்களையும் கொன்றுள்ளனர்; இப்பொழுது மற்றவர்களை அவர்கள் விடுவிக்க வேண்டும்."

போராளிகளை ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் NWFPயின் பிற இடங்களில் இருந்து அகற்றிய "வலுவான பாக்கிஸ்தானிய இராணுவ நடவடிக்கைகள்," என்று இந்த மிருகத்தனமான நடவடிகைக்கு தளபதி பெட்ரீயஸ், பாராட்டி ஆதரவு கொடுத்துள்ளார்.

ஒபாமா நிர்வாகம் இப்பொழுது ஜனாதிபதி அசிப் அல் ஜர்தாரி மற்றும் பிரதம மந்திரி யூசுப் ராஜா கிலானி அரசாங்கத்தையும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை தெற்கு, வடக்கு வஜீரிஸ்தானுக்கு அனுப்ப அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தப் பழங்குடிப் பகுதிகள் பாக்கிஸ்தானின் Tehrik-e-Taliban என்னும் இஸ்லாமிய பஷ்டூன் இயக்கத்தின் கோட்டையாகும்; இந்த அமைப்பு எல்லைப் பகுதியில் அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்கு பாதுகாப்பான புகலிடம் கொடுக்கிறது.

அமெரிக்க இராணுவம் தொடர்ந்து அதன் சட்டவிரோத செயற்பாடுகளான கிளர்ச்சித் தலைவர்களை படுகொலை செய்து, பிரிடேட்டர் ட்ரோன் விமானத்தைப் பயன்படுத்தி வஜீரிஸ்தானுக்குள் உள்ள குடிமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் தொடர்கிறது.

வியாழனன்று ஒரு ட்ரோன் தெற்கு வஜீரிஸ்தானில் வீடுகள் வளாகம் ஒன்றின்மீது இரு ஏவுகணை தாக்குதலை நடத்தி எட்டு பேரைக் கொன்றது. செவ்வாயன்று புதிய Tehrik-e-Taliban தலைவர் ஹகிமுல்லா மெசுத்துடன் ஒரு கூட்டு தொலைபேசி செய்தித்தொடர்பில் அமைப்பில் போராளிகள் மீதான கட்டுப்பாட்டைத் தான் கொண்டுவிட்டதாக அறிவித்த வலியுர் ரஹ்மான்தான் தாக்குதலுக்கு இலக்காவார். ஆகஸ்ட் 5ம் தேதி பிரிடேட்டரால் விடப்பட்ட ஏவுகணைகள் Tehrik-e-Taliban உடைய முன்னாள் தலைவர் பைதுல்லா மெசூதையும் அவருடைய இளைய மனைவியையும் மற்றும் 17 பேர்களையும் கொன்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இருந்து 700 பாக்கிஸ்தானிய குடிமக்கள் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பைதுல்லா மெசூத் கொலையின் முக்கிய பாதிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடி மக்களின் வெறுப்பு தீவிரமடைந்துள்ளதுதான். புதனன்று ஹகிமுல்லா மெசூத் Agence France Presse இடம் கூறினார்: "நாங்கள் பழிவாங்குவோம், விரைவிலேயே. இந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு விடை கொடுப்போம்."

அதே தினம் ஒரு தலிபான் தற்கொலை குண்டு வெடிப்பாளர் ஆப்கானிஸ்தானிற்குள் நுழையும் கைபர் கணவாய்க்கு அருகே உள்ள அரசாங்க சோதனைச் சாவடியைத் தாக்கி 22 எல்லை பாதுகாப்பு துருப்புகளைக் கொன்றார்; வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள நேட்டோ படைகளுக்கு எரிபொருள் எடுத்துச் சென்ற இரு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. ஒரு வாகனம் பேஷாவர் நெடுஞ்சாலையில் தாக்கப்பட்டது, மற்றொன்று ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழையும் இடமான டோர்க்கத்தில் தாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு பாக்கிஸ்தானில் கடுமையான குளிர்கால தொடக்கத்திற்கு முன்பு, அடுத்த சில மாதங்கள் குற்றகரமான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத்தின் எட்டு ஆண்டுகள் ஆக்கிரமிப்பில் மிக வன்முறை சார்ந்த இறப்புக்கள் நிறைந்த நிகழ்வுகள் வரவிருப்பதாக அச்சுறுத்துகின்றன..


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved