World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Massive police mobilization prepared for G20 summit in Pittsburgh

பிட்ஸ்பர்க்கில் G20 மாநாட்டிற்காக மிகப் பெரிய போலீஸ் படை திரட்டப்படல்

By Phyllis Steele and Bryan Dyne
25 August 2009

Back to screen version

பிட்ஸ்பர்க் போலீஸ் துறையும் அமெரிக்க இரகசியப் பிரிவும், நகரத்தில் செப்டம்பர் 24, 25 திகதிகளில் நடக்கவிருக்கும் G20 உச்சிமாநாட்டிற்கு பிட்ஸ்பர்க்கை ஒரு இராணுவமயமாக்கப்பட்ட பகுதி போல் மாற்றி வருகின்றன.

நகரத்தின் மிகப் புகழ்பெற்ற சின்னங்களில் ஒன்றான Point State Park இனை உச்சிமாநாட்டிற்கு முன்னும், நடைபெறும்போதும் ஆக்கிரமிக்க உள்ளனர். இங்கு ஏராளமான எதிர்ப்பாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியிலும் மற்றும் நாடு முழுவதில் இருந்தும் 100 போலீஸ் பிரிவுகளில் இருந்து 4,000 போலீசார் பிட்ஸ்பர்க்கிற்கு வந்து உச்சிமாநாட்டில் பங்கு பெற உள்ள 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வரும் 320 பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர்.

G20 கூட்டம் ஒரு தேசிய சிறப்புப் பாதுகாப்பு நிகழ்வு என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் குறிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஒருங்கிணைப்பை இரகசியப் பணிப்பிரிவின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இப்பிரிவு 1997ல் பில் கிளின்டனுடைய "நிர்வாக ஆணையால்" நிறுவப்பட்டது. அரசாங்கம் பெரும் மக்கள் எதிர்ப்பு வரும் என்ற அச்சம் கொண்ட இரு டஜன் நிகழ்வுகள்தான் இதற்கு முன் இந்தத் தர பாதுகாப்பை பெற்றுள்ளன. 2008ல் ஜனநாயகக் கட்சியின், கொலராடோ டென்வர் மாநாடு மற்றும் குடியரசுக் கட்சியின் மின்னிசோட்டா செயின்ட் பால் மாநாடு ஆகியவையும் இத்தரத்தைப் பெற்றிருந்தன.

உச்சிமாநாடு நடக்க இருக்கும் டேவிட் லாரன்ஸ் மாநாட்டு மையத்தைச் சுற்றி ஒரு வேலியமைக்கும் திட்டங்களும் உள்ளன. இது மக்கள் மாநாட்டில் இருந்து மூன்று கட்டிட சுற்று எல்லைக்குள் நுழைய முடியாமல் தடுத்துவிடும். பாதுகாப்பு வளையத்திற்குள் வசிக்கும், வேலை பார்க்கும் மக்கள் உள்ளே வருவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் அல்லது மாநாட்டு காலத்தில் வெளியே இருக்க வேண்டும்.

இதைத்தவிர, கண்காணிப்பு மிகப் பெரிய அளவிற்கு அதிகரிக்கப்பட்டு, முக்கிய படையினர் நகரக் கட்டிடங்களின் கூரைகளின் மீதும் இருத்தப்படுவர். மாநாட்டுக் காலத்தில் விமானங்கள் பறத்தலுக்கு தடைகள் இருக்கும். கடற்படைப் பாதுகாப்புப் பிரிவு நகரப் பகுதியை ஒட்டி இருக்கும் மூன்று ஆறுகளில் ரோந்துப்பணிகளை அதிகப்படுத்தும். இன்னும் பல பலருக்கும் தெரியாத "விரிவாக்கங்களும்" பாதுகாப்பில் செயல்படுத்தப்படும். பென்சில்வானியா மாநில போலீஸ் குறைந்தது ஒரு சிறப்பு அவசரச் சிறப்புக் குழுவையும் சில ஹெலிகாப்டர்களையும் கொடுக்கும். மாநில தேசியப் பாதுகாப்புப் படை நிகழ்விற்காக சில பிரிவுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

அதிகாரிகள் நகரப் பகுதியில் இருக்கும் வணிகங்கள் மற்றும் அலுவலகங்களை மாநாடு நடக்கும் காலத்தில் மூடிவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நகரத்தில் நிலத்தடிப் போக்குவரத்துபணிகள் இரத்து செய்யப்படும், பஸ்கள் நகரத்தின் எல்லைப் பகுதிகளுடன் நிறுத்தப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே செல்லாது. பிட்ஸ்பர்க் பொதுப் பள்ளிக் குழுவும் நகரத்தில் உள்ள அனைத்து 66 பொதுப்பள்ளிகளையும் செப்டம்பர் 23 புதனன்று மூடி அவற்றை அடுத்த இரு நாட்களுக்கும் மூடிவைக்கும் திட்டத்திற்கு வாக்களித்துள்ளன.

இரு நாள் நிகழ்விற்கு மொத்தப் பாதுகாப்புச் செலவினம் 19 மில்லியன் டாலரையும்விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரத்தின் முக்கிய பகுதிகள் எவரும் நுழைய முடியாது அல்லது மூடப்பட்டுவிடும், பெரிய பிட்ஸ்பர்க் பகுதியில் வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் பல பொது இடங்களுக்கு செல்வது தடைக்கு செய்யப்படுவது என்பது உலக முதலாளித்துவத்தின் அரசியல் தலைவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே உள்ள பிளவிற்கு நிரூபணம் ஆகிறது. பெரிய சக்திகளின் தலைவர்களுடைய கூட்டங்கள் இப்பொழுது வாடிக்கையாக மிகப் பெரிய இராணுவ-போலீஸ் செற்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. பிட்ஸ்பர்க்கும் சமீப ஆண்டுகளில் சிட்னி, சியாட்டில், ஜேனோவா, ரொஸ்டொக் ஆகிய நகரங்களில் நடந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தான் பின்பற்றுகிறது. இன்னும் சமீபத்திய காலத்தில், உலகம் கடந்த ஏப்ரலில் லண்டனின் G20 உச்சிமாநாட்டின் போது இயன் டோம்லின்சன் மிருகத்தனமான கொலையுண்டதையும் கண்டது. (See: "Britain: Third autopsy into G20 victim Ian Tomlinson's death")

மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க திட்டமிட்டிருந்த பல அமைதிவாத மற்றும் பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. Code-Pink, Women's International League for Peace and Freedom ஆகிய போரெதிர்ப்புக் குழுக்களும் பல பிற மகளிர் உரிமைகள் குழுக்களும் "மகளிர் முகாம் நகரம்" ஒன்றை பாதுகாப்பு வேலியில் இருந்து தொலைதூரத்தில் மாநாட்டு வாரத்தில் நிறுவ விண்ணப்பித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

பென்சில்வானியாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மாநில செனட்டர் ஜிம் பெர்லோ தலைமையில் Point State Park என்று மாநாட்டு இடத்தில் இருந்து அரைமைல் தொலைவிற்கும் அப்பால் ஒரு அணிவகுப்பை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க பொருட்களை வாங்கிடுக என்னும் வலதுசாரி செயற்பட்டியலை ஆதரிக்கும் தொழிற்சங்கங்கள் குழுக்கள் சிலவற்றின் சார்பில் பெர்லோ விண்ணப்பித்திருந்தார்.

நகர அதிகாரிகள் போலீசாரும் இரகசிய பணியாளர்களும் பார்க்கையும், அங்குள்ள Fort Pitt அருங்காட்சியகத்தையும் தங்கள் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்த இருப்பதாகக்கூறி பெர்லோவிற்கு அனுமதி மறுத்தனர். இச்செயற்பாடுகளில் ஹெலிகாப்டர் இறக்கங்கள் மற்றும் நகரத்திற்குள்ளிருந்தும் வெளியிருந்தும் வரவிருக்கும் 3,100 போலீஸ் அதிகாரிகளுக்கு கூடார நகரம் அமைக்கப்பட உள்ளது. வரவு-செலவுத்திட்ட குறைப்புக்களால் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் Fort Pitt அருங்காட்சியகம் போலீசாரின் உபயோகத்திற்காக மீண்டும் திறக்கப்படும்.

தன்னை பில்லியன் குழு என்று அழைத்துக் கொள்ளுவதும், மாநாட்டிற்கு முன் மாநாட்டு மையத்திற்கு அணிவகுத்துச் செல்லுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதுவரை சமாதானம் நாடும் தோமஸ் மெர்ட்டன் சென்டர் ஒன்றுதான் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து நகர-தொகுதி அலுவலகக் கட்டிடம் வரை அணிவகுத்துச் செல்ல, கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் மாநாட்டிடத்தில் இருந்து தள்ளியிருக்கும் இடத்திற்கு செல்ல, அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இரகசியப் போலீசார் இவர்களுடைய விண்ணப்பத்தை வெள்ளை மாளிகை இறுதி முடிவெடுக்கும் வரை பரிசீலனையில் வைத்திருந்தனர்.

இப்பொழுது பிட்ஸ்பர்க்கில் எதிர்ப்புக்களை திட்டமிட்டிருந்த பல குழுக்கள் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை ஒபாமா மாற்றிவிடுவார், போருக்கு முடிவேற்படுத்திவிடுவார் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து நிற்பார் என்று தவறாக கருத்து தெரிவித்தன. இப்பொழுது அவர்களே அரசியல் எதிர்ப்பை குற்றத்தன்மையாக்கும் வெள்ளை மாளிகையின் முயற்சிகளால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.

பிட்ஸ்பர்க் நகரக் குழு ஆகஸ்ட் 28 வரை கூட்டப்படாது. ஆனால் G20 கூட்டம் பற்றி சிறப்பு சட்ட பரிசீலனை செய்வதற்கு இவ்வாரம் கூட முடியவில்லை. ஜனநாயகக் கட்சியின் மேயர் லுக் ரவென்ஸ்டால் உறுப்பிர்களை விரைவில் வந்து உச்சிமாநாட்டிற்கான போலீஸ் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கு ஒப்புதல் தருமாறு கோரியுள்ளார். எதிர்ப்பாளர்கள் கூட்டத்தை கலைக்க, கட்டுப்பாட்டிற்குள் வைக்க அல்லது சிலரைக் கைதுசெய்யும் முயற்சிகளில் போலீசாரை திகைக்க வைக்கும் விதத்தில் முகமூடி அணிதல் அல்லது வேறுவிதத்தில் கருவிகள் அணிவது தடைக்குள் அடங்கும்.

முந்தைய அனுபத்தை ஒட்டி, போலீஸ் ஏற்கனவே பல எதிர்ப்பு இயக்கங்களிலும் தகவல் திரட்டும் மற்றும் ஆத்திரமூட்டும் தமது முகவர்களை ஊடுருவச் செய்திருப்பர். அதுதான் எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைக் குற்றத்தை சாட்ட அஸ்திவாரம் அமைக்கும். இதையொட்டி எதிர்ப்புத் தலைமையங்களில் முன்கூட்டி போலீஸ் சோதனைகள் மற்றும் கைதுகள் நடத்தப்பட முடியும்.

ஓராண்டிற்கு முன்புதான் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு (RNC) மின்னியாபோலிசில் நடைபெற்றபோது, எட்டு இளவயது எதிர்ப்பாளர்கள் மாநாட்டிற்கு முன் கைது செய்யப்பட்டு RNC க்கு வரவிருக்கும் பிரதிநிதிகளை கடத்த முற்பட்டனர், போலீஸ் அதிகாரிகளை தாக்கினர், விமான நிலையங்களை தாக்கினர் என்ற குற்றச்சாட்டுகளை சுமந்தனர். பட்டியலில் இருந்து குற்றங்கள் அனைத்தும் போலீஸ் ஊடுருவல் நபர்களின் சாட்சியத்தை தளமாகக் கொண்டவை. இதில் ஒருவர் அதிகாரி, மற்றொருவர் பணம் பெற்றுத் தகவல் சேகரிப்பவர். RNCWC குடியரசு தேசிய மாநாட்டு வரவேற்புக் குழு என்ற பெயரை கொண்டிருந்த அராஜகவாத (anarchist) குழுவின் உறுப்பினர்களான எட்டு இளைஞர்களும் ''பயங்கரவாதத்தை பெருக்கும் கலகத்திற்கான சதி செய்பவர்கள்'' ("Conspiracy to Riot in Furtherance of Terrorism") என்று நாட்டுப்பற்று சட்டத்தின் மின்னிசோட்டா மாநிலப் பதிப்பின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

பிடி ஆணைகள் பிறப்பித்து கைதுகளுக்கு உத்தரவிட்ட ராம்சே தொகுதியின் மாவட்ட நீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாண வாக்குமூலத்தின்படி போலீசார் RNCWC ஒரு "குற்றம் சார்ந்த அமைப்பு" என்றும் நீதிபதி ஆணைகளை அனுமதித்தால் கணக்கிலடங்கா ஆயுதங்கள் கைப்பற்றப்பட முடியும் என்றும் கூறியிருந்தது. ஆனால் போலீசார் தங்கள் சோதனைகளை நடத்த எந்த சான்றையும் அளிக்கவில்லை.

RNC8 என்று பின்னர் அழைப்பட்டவர்கள் தங்கள் வழக்கு விசாரிக்கப்படுவதில் இரு ஒத்திவைப்புக்கள் இருந்தன என அறிந்தனர். சமீபத்திய ஒத்தி வைப்பு ஆகஸ்ட் 19 புதன் ஆகும். ஆனால் இதுவும் இரு நாட்களுக்கு முன் நீதிபதியால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மார்ச் 3, 2009 ல் வழக்கு விசாரிக்கப்பட் வேண்டும் என்று வந்த அழைப்பிற்கு பின்னரான முதல் நீதிமன்றத் தேதியாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு பேரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்பார்க்கக்கூடும்; பயங்கவாத தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுக்கு தண்டனை 50 சதவிகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற விதியை ஒட்டி இப்படி நேரலாம். (See also "Amid mass arrests and suppression of media: RNC in Twin Cities: Eight protesters charged with terrorism under Patriot Act")


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved