World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US college tuition skyrockets

அமெரிக்க கல்லூரி கல்வி கட்டணம் விண்ணைத் தொடுகிறது

By Tom Eley
22 October 2009

Back to screen version

ஒபாமா நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார மீட்பு, வோல் ஸ்ட்ரீட்டில் முன்னணி வங்கியாளர்களுக்கு ஊதிய உயர்வை கொடுத்து கொண்டாடிய அளவிற்கு, தேசிய கல்லூரி மாணவர்களுடனும், அவர்களின் குடும்பங்களுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை.

கல்லூரி பொதுக்குழுவின் ஒரு புதிய அறிக்கை, அமெரிக்க அரசு கல்லூரிகளில் 2009-2010 ம் கல்வியாண்டின் கல்விக்கட்டணம் உயர்ந்திருப்பதைக் குறிப்பிட்டு காட்டியுள்ளது. இது ஏறத்தாழ 7,020 டொலர்களாக 6.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டும் வெளிப்படையாக 6.4 சதவீதம் உயர்த்தப்பட்டது. தங்குமிடம், உணவு ஆகியவற்றையும் சேர்த்தால் ஏறத்தாழ செலவு 15,193 டாலரை எட்டிவிடக் கூடும்.

தனியார் கல்லூரி கல்விக்கட்டணங்கள் 4.4 சதவீதம், அதாவது 26,273 டொலர்கள் ஆகும். தங்குமிடம், உணவு ஆகியவற்றையும் சேர்த்து 35,636 டொலருக்கு உயர்ந்துள்ளது. சமூக கல்லூரிகளிலும் 1.6 சதவீதம், எல்லா செலவுகளையும் சேர்த்து 14,285 டொலர், உயர்ந்தது.

நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2008ஐ தொடர்ந்து பன்னிரெண்டு மாதங்களுக்கு 2.1 சதவீதம் பணவீக்கம் குறைந்திருந்த காலத்திலும் கூட, கல்விச்செலவுகள் பணவீக்கத்தை விட அதிகமாக மளமளவென்று உயர்ந்தது. உண்மையில், அரசு பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கான செலவுகளும் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தைத் தாண்டி சென்றது. "வளர்ச்சி ஆண்டுகளான" 1990களின் போது அரசு பல்கலைக்கழகங்களின் சராசரி ஆண்டு கல்விக்கட்டண உயர்வு 4 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது. அதுவே 2000த்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 5 சதவீதமாக இருந்தது.

இதற்கிடையில், பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்படாமல், ஊதியங்கள் பல தசாப்தங்களாக மந்தகதியில் இருந்தன. அவை உண்மையில் இந்த ஆண்டு வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருக்கின்றன.

''விலை உயர்வுகளுக்கு மத்தியில் கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவதென்பது குடும்பங்களில் பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் வருமானங்களும் சாதாரணமாக மந்தநிலையில் இருக்கிறது'' என்று கல்லூரி பொதுக்குழுவில் இருக்கும் ஒரு கொள்கை ஆய்வாளரான சேண்டி பாவ்ம் தெரிவித்தார். "குடும்பங்கள் கொஞ்சமும் உயராத வருமானங்களுடன், இந்த கட்டணங்களையும் முகங்கொடுத்து வருகின்றன" என்றார்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் வெடித்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்களுக்கான அரசாங்கங்களின் நிதியுதவிகளும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கின்றன. வேலை செய்பவர்களைக் குறைத்தும், வகுப்பு அளவுகளைக் கூட்டியும், பெரும்பாலானவர்களின் கல்விக்கட்டணத்தை அதிகரித்தும் நிர்வாகிகள் மற்றும் டிரஸ்ட் உரிமையாளர்கள் இதற்கு பிரதிபலிப்பைக் காட்டியிருக்கிறார்கள். வாஷிங்டன், புளோரிடா மற்றும் நியூயோர்க் மாகாணங்களில் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் 15 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியா மாகாணத்தின் நிதி பொறிவின் ஒரு நேரடி விளைவாக, அரசு பல்கலைக்கழக அமைப்புமுறை அதன் கல்விக்கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதியை உயர்த்தி இருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் சுமார் 8 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. அது அடுத்த வீழ்ச்சியில் இன்னும் அதிகமான கல்விக்கட்டணத்தை விதிக்க கூடும்.

விடுப்புகள், ஊதிய வெட்டுக்கள், கல்விக்கட்டண உயர்வுகள் ஆகியவற்றை எதிர்த்து பெர்க்லேவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 24ல், சுமார் 5,000 மாணவர்களும், பேராசிரியர்களும், பிற பல்கலைக்கழக தொழிலாளர்களும் பேரணி நடத்தினார்கள். பெரும்பாலான பேராசிரியர்கள் அன்று பாடம் நடத்த செல்லவில்லை, போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. (பார்க்கவும்: "California students and faculty denounce education cuts")

அரிசோனாவில், கல்விக்கட்டணம் 24 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அரிசோனா அரசு பல்கலைக்கழக இளங்கலைத்துறையில் இருக்கும் சாராஹ் அட்வில் அரிசோனா குடியரசு பத்திரிகைக்கு தெரிவிக்கையில், வாரத்திற்கு 15 மணி நேரம் வேலை செய்வதற்கு மாறாக, தாம் 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். "இது என்னுடைய வாழ்க்கையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது" என்று 19 வயது நிரம்பிய வரலாற்று பாட மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

கன்சாஸில், மாகாண சட்டவல்லுனர்கள் பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் நிதியில் 63 மில்லியன் டாலரை குறைத்த பிறகு, அரசு கல்விக்கட்டணங்கள் 8.3 சதவீதம் உயர்ந்தது. பென்சில்வேனியாவில், இது 4.6 சதவீதம், அண்ணளவாக 11,000 டாலர் உயர்ந்தது, இதனால் நாட்டின் செலவுமிக்க கல்லூரிகளில் அரசு கல்லூரிகள் நான்காவதாக இடம் பெற்றன. வெர்ஜீனியாவில், உயர்வு 5 சதவீதத்திற்கு அருகில் இருந்தது, மிச்சிகனில் கிட்டதட்ட 9 சதவீதமாக இருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் இப்படிப்பட்ட நிலை தான் இருந்து வருகிறது.

தனியார் கல்லூரிகளும் இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்துவிடவில்லை. பொதுவாக பங்குச்சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்யப்படும் கல்லூரி மானியங்கள், அதிகளவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஹேவர்டு, யால், பிரின்ஸ்டன் ஆகியவையும் உள்ளடங்கும். ஸ்டான்போர்டு பல்கலைக்கழக முதலீட்டு குழுமம், ஸ்டான்போர்டு நிர்வாகம், தனியார் ஈக்விட்டி மற்றும் ரியல் எஸ்டேட்டில் செய்திருந்த மோசமான சூதாட்டத்தில் பள்ளி மானியம் சுமார் 4.6 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

"திட்டக் குறைப்புகள், வேலைநீக்கம் மற்றும் விடுப்புகள் போன்ற கடந்தகால நிதி வெட்டுகளுக்கு பிறகுஒவ்வொரு பயிலகத்திலும்கல்விக்கட்டணம் மட்டும் தானே உங்களுக்கு மீதமிருக்கிறது" என்று கல்வித்துறைக்கான அமெரிக்க கவுன்சிலைச் சேர்ந்த டெர்ரி ஹார்டல் தெரிவித்தார். "பிற ஆதாரங்களில் இருந்து இழந்த வருவாய் மற்றும் அவற்றுக்கு கிடைத்து வந்த நிதியுதவிகள் ஆகியவற்றிற்கு இடையில் தான் பல பயிலகங்கள் அவற்றின் நிதி சக்கரங்களைச் சமப்படுத்தி சுழல விட்டு கொண்டிருந்தன" என்றார்.

2007 மற்றும் 2008ல் பட்டம் பெற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 20,000 டாலர் கடன் சுமையோடு தான் இளங்கலை பட்டப்படிப்பை படித்து கொண்டிருந்தார்கள் என்பதையும் கல்லூரி பொதுக்குழுவின் ஆய்வறிக்கை வெளிப்படுத்தி காட்டி இருக்கிறது. இந்த கடன்கள் கல்லூரி பட்டதாரிகளுக்கான மோசமான வேலைவாய்ப்பு சந்தையில் மாணவர்கள் நுழையும் போது கட்டி முடித்தாகப்பட வேண்டும்.

ஆனால் இதற்கிடையில், பாடசாலைகளுக்கு செலுத்துவதற்கான தேசிய கடன்கள் 5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பெரும்பாலும் அனைத்து உயர்வும் அரசு கடன்களில்குறிப்பாக மானியமில்லாத மாணவர்களின் கடன்களில் ஏற்பட்டிருக்கிறது. கடன் கொடுத்து வந்த தனியார் நிறுவனங்கள் சந்தையைக் காலி செய்து போய்விட்டார்கள் அல்லது மாணவர்களுக்கு கடன்கொடுக்கும் வழிமுறைகளை இறுக்கிவிட்டார்கள். இதன்விளைவாக 2007-2008ல் 24 பில்லியன் டாலராக இருந்த மொத்த தனியார் கடன்கள் கடந்த ஆண்டு 12 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

"உயர்கல்விக்கான தனியார் கடன் மூலதனம் வரண்டு வருகிறது," கல்வித்துறைக்கான அமெரிக்க கவுன்சிலின் ஹார்டில் கூறினார். "இதுவொரு சதியாகும், ஏனென்றால் இது ஓர் அடிப்படை மாற்றமாக தெரிகிறது" என்றார்.

தொழிலாள வர்க்கமும், மத்திய வர்க்க குடும்பங்களும் சாத்தியப்படாத அளவிற்கு உயர்ந்த கல்விச்செலவுகளை முகங்கொடுக்கின்றன என்ற செய்திகளுக்கு ஒபாமா நிர்வாகம் எப்போதும் போல வித்தியாசமில்லாமல் விடையிறுப்பை அளித்தது. கல்லூரி பொதுக்குழுவின் அறிக்கைக்கு வெள்ளை மாளிகை எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை. ஒவ்வொரு மாணவருக்குமான federal Pell Grants திட்டத்தின் ஒதுக்கீட்டிற்கான நிர்வாகத்தின் உதவியும் குறைக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி நிதியுதவி வெட்டுக்கள், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருதரப்பினராலும் ஒரேமாதிரியாகத் தான் கையாளப்பட்டிருக்கிறது. அரசியல்ரீதியாக நியமிக்கப்பட்டிருக்கும் டிரஸ்ட் உரிமையாளர்களின் குழுக்களாலும், கல்லூரி தலைவர்களாலும் (இவர்கள் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்று வருகிறார்கள்) இந்த நிதியுதவி வெட்டுக்கள், கல்விக்கட்டண உயர்வாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதிகார பிரிவுகளிடம் இருந்தும், இருக்கும் அரசியலிலும் தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவை உட்பட கல்லூரி கல்வி மீதான இந்த தாக்குதலுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

கல்வி மற்றும் சமூக திட்டங்களின் செலவுகள் மீதும், வேலைநீக்க தொழிலாளர்கள் மீதும் அவர்கள் கோடாரியைத் தூக்கும் போது, அரசியல்வாதிகள் "போதிய பணம் இல்லை" என்பதைத் தான் எல்லா இடத்திலும் வலியுறுத்துகிறார்கள்.

இதுவொரு மோசமான பொய். அரசுகளிடம் பணம் இல்லை என்றால் அது, ஸ்திரமான கொள்கைகளும், சமூக முன்னுரிமைகளும் உயர்கல்வி உட்பட அனைத்து சமூக தேவைகளுக்கும் அப்பாற்பட்டு பெரிய வர்த்தகர்களின் இலாபங்களுக்கும், பணக்காரர்களின் தனிப்பட்ட செல்வகொழிப்பிற்கும் உதவி வருவதன் விளைவாக இருக்கிறது என்பதாகும். பெரிய நிதி நிறுவனங்களுக்கு கடன்களாகவும், கடன் உத்தரவாதங்களாகவும், ஊக்கப்பொதிகளாகவும் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒப்படைத்திருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பெடரல் அரசாங்க விஷயத்தில் இது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. பொறுப்பற்ற ஊக வியாபாரத்தால் பொருளாதார பொறிவை ஏற்படுத்தி இருக்கும் இந்த வங்கிகள் இப்போது, குருட்டு அதிர்ஷ்ட இலாபங்களுக்காக அலறிக் கொண்டிருக்கின்றன.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்களின் பகுதிகளை உங்கள் கல்லூரிகளிலும், உயர்பள்ளிகளிலும் கட்டியெழுப்பவும், எங்களைத் தொடர்பு கொள்ளவும் இதன் மூலம் உலக சோசலிச வலைத் தளத்தின் மாணவ வாசகர்களுக்கு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved