World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: Plantation employers drive up productivity under union agreement இலங்கை: பெருந்தோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்க உடன்படிக்கையின் கீழ் உற்பத்தியை பெருக்குகின்றனர் By our correspondents இலங்கையின் பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தை பெருக்கவும் பெயரளவிலான சம்பளத்தை கீழறுக்கவும் ஒப்பந்தத்தில் உள்ள, உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட பிரிவுகைள பயன்படுத்துகின்ற நிலையில், பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அண்மைய கூட்டு ஒப்பந்தத்தின் பண்பு அம்பலத்துக்கு வந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (இ.தே.தோ.தொ.ச.) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செப்டெம்பர் 16 அன்று ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டங்களை சேர்ந்த அரை மில்லியன் தொழிலாளர்களின் சம்பளம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு நாளொன்றுக்கு 405 ரூபா என்ற வறிய மட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. 285 ரூபா அடிப்படை சம்பளத்துடன், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட 30 ரூபா கொடுப்பனவும் மற்றும் வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவும் அடங்குகின்றன. முன்னைய சம்பள கொடுப்பனவுகள் அடங்கலாக 290 ரூபாவாக இருந்தது. எவ்வாறெனினும், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதிக வேலை நாட்கள் என்ற நிபந்தனைகள், பல தொழிலாளர்களால் 285 ரூபாவுக்கு மேல் சம்பளம் பெற முடியாது என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்பதை தொழிலாளர்கள் விரைவில் கண்டுகொண்டுள்ளனர். இந்த உடன்டிக்கைக்கான பேச்சுவார்த்தையில் பிரதான பாத்திரம் வகித்த இ.தொ.கா. ஒரு அரசியல் கட்சியாகவும் இயங்குவதோடு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது. இந்த உடன்படிக்கை சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்மையானது என தொழிற்சங்க அலுவலர்கள் பொய்யாக கூறிக்கொண்டாலும், அதன் மூலம் முதலாளிமாருக்கு இருக்கும் இலாபத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். அண்மையில் வெளியான ஊடக அறிக்கையில் இந்த "முக்கிய" உடன்படிக்கையை பாராட்டிய முதாலளிமார் சம்மேளனம், சம்பளத்தை உற்பத்தியுடன் பிணைத்திருப்பது "எமது பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு இன்றியமையாதது" மற்றும் "ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் இதை தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள்", என தெரிவித்திருந்தது. இந்த விடயத்தை வலியுறுத்துவதற்காக அது மேலும் தெரிவித்ததாவது: "உற்பத்தித் திறன் அவசியமாகியுள்ள நேரத்தில், இந்த கைத்தொழிலை தாங்கிப்பிடிக்க உற்பத்தித் திறனின் முக்கியத்துவத்தை தொழிற்சங்கங்களும் புரிந்துகொண்டிருப்பதை பற்றி நாம் மகிழ்ச்சியடைகிறோம்." முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கை, தொழிற்சங்கங்கள் முதலாளிமாரதும் அரசாங்கத்தினதும் கருவிகளாக செயற்படுகின்றன என்ற வெளிப்படையான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏறத்தாழ செய்து முடிக்க முடியாதளவு உற்பத்தி இலக்குகளை கம்பனிகள் அன்றாடம் திணிக்க தொடங்கிய நிலையில் ஒப்பந்தத்தின் தாக்கத்தை சகல தோட்டத் தொழிலாளர்களும் உடனடியாக உணர்ந்துகொண்டனர். கொடுக்கப்படும் பங்குகளை செய்து முடிக்காவிட்டால், முதலாளிமார் போனஸ் தொகையை தருவதில்லை. நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை "தேசத்தை கட்டியெழுப்புதல்" என்ற பெயரால் உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் அரசாங்கத்தின் "பொருளாதார யுத்தம்" என சொல்லப்படுவதன் ஒரு பாகமே தோட்டத் தொழிலாளர்கள்மீது திணிக்கப்படுடள்ள இந்த உடன்படிக்கையாகும். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட (ஜ.தொ.கா.) உட்பட பல பெருந்தோட்ட சங்கங்கள், இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாக கூறிக்கொள்வதோடு அக்டோபர் 17 வரவுள்ள தீபாவளி பண்டிக்கையின் பின்னர் "கடுமையான" தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக வாக்குறுதியளித்துள்ளன. ஆனாலும், எந்தவொரு பிரச்சாரமும் அறிவிக்கப்படவில்லை. உலக சோசலிச வலைத் தள நிருபர் தொடர்புகொண்டபோது, சங்கத்தின் திட்டங்கள் பற்றி கேட்ட கேள்வியை ஓரங்கட்டிய ஜ.தொ.கா. தலைவர் மனோ கனேசன், "நாங்கள் தீபாவளியின் பின்னர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்போம், ஆனால் நாங்கள் இன்னமும் அதைப்பற்றி கலந்துரையாடவோ அல்லது எந்தவொரு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவுசெய்யவோ இல்லை," எனத் தெரிவித்தார். இத்தகைய "எதிர்ப்பு" தொழிற்சங்கங்கள், இந்த உடன்படிக்கை தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் சீற்றத்தை தணிப்பதற்காக, அரசாங்கத்துக்கும் முதலாளிமாருக்கும் ஒரு பாதுகாப்பு வாயிலாக செயற்படுகின்றன. இ.தொ.கா. போலவே, மலையக மக்கள் முன்னணியும் அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் பெ. சந்திரசேகரன் அமைச்சர் பதவியும் வகிக்கின்றார். 2006ம் ஆண்டு, முன்னைய சம்பள உடன்படிக்கை சம்பந்தமாக நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதிலும் ம.ம.மு. தீர்க்கமான பாத்திரம் வகித்தது. இலங்கை தொழிலாள வர்க்கத்தில் தோட்டத் தொழிலாளர்களே மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆவர். 22 வீத பணவீக்க நிலைமையின் கீழ், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தற்போதைய முயற்சி, அவர்கள் மீது மேலும் மோசமான அளவு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை சுமத்துகிறது. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மத்திய மலையக பகுதிகளில் ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதி தேயிலை தோட்டங்களுக்கும் மற்றும் தென் மாகாணத்தில் திவுதுர தோட்டத்துக்கும் அண்மையில் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பினாலும் புதிய உற்பத்தித்திறன் அழுத்தத்தினாலும் கசப்புற்றிருந்த தொழிலாளர்களுடன் உரையாடினர். "பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவின் அரசியல் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அறிக்கையின் ஆயிரம் பிரதிகளை அந்த குழு பொகவந்தலாவை நகரிலும் கொட்டியாகலை தோட்டத்திலும் விநியோகித்திருந்தது. கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: "மோசடியான இந்த தொழிற்சங்க உடன்படிக்கையின் காரணமாக, நிர்வாகம் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து எங்களது அன்றாட வேலைப் பளுவை 13 கிலோவில் இருந்து 16 கிலோவாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நாங்கள் இந்த தொகையை எடுத்துக் கொடுத்தால் மட்டுமே எங்களுக்கு 30 ரூபா கிடைக்கும். நாங்கள் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாததாலேயே சம்பள உயர்வுக்காகப் போராடினோம், ஆனால் நிர்வாகம் எங்களது சம்பளத்தை வெட்ட புதிய வழிகளை அறிமுகப்படுத்துகிறது. சில தொழிற்சங்கங்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ள அதே வேளை ஏனைய சங்கங்கள் எதுவும் செய்யவில்லை." அதே தோட்டத்தை சேர்ந்த 23 வயது தொழிலாளி மேலும் கூறுகையில், "கடந்த மாதம் நாங்கள் ஆறு நாட்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டதால் நிர்வாகம் இந்த மாதம் வருகைக்கான கொடுப்பனவை வெட்டிவிட்டது. நாங்கள் இந்த மாதம் தீபாவளி முற்பணத்தைப் பெற இருந்தோம். ஆனால் நிர்வாகம் அந்த முற்பணத்தில் எங்களது பழைய முற்பணம் மற்றும் கடன்களை வெட்டிவிட்டது. எனவே தீபாவளியை கொண்டாட மக்களிடம் காசு இல்லை. இதைத்தான் தொழிற்சங்கங்கள் எங்களுக்கு செய்துள்ளன. "முன்னர் அவர்கள் கொழுந்து நெறுப்பதிலும், சாக்கு தூக்குவதிலும் மற்றும் ஏனைய சில அடிப்படை வேலைகளிலும் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்தும் ஒரு கிலோ தேயிலையை வெட்டிக்கொண்டனர். ஆனால் இப்போது அவர்கள் மூன்று முதல் நான்கு கிலோ வரை வெட்டிக்கொண்டு கொமிசனுக்கு வெட்டுவதாக சொல்கிறார்கள். இது எங்களுக்கு புதிதாக இருக்கிறது. எங்களுக்கு கொமிசன் என்றால் என்னவென்று தெரியவில்லை. நாங்கள் முகங்கொடுக்கும் சிரமங்களுக்கு வரையறை கிடையாது. இந்த நிலைமையை பற்றி சிந்திக்கும் போது எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது," என்றார். மஸ்கெலியா சூரியகந்த தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தெரிவித்ததாவது: "எவரும் 405 ரூபா நாள் சம்பளத்தை பெற மாட்டார்கள். எங்களது தோட்டத்தில் 14 கிலோ கொழுந்து பறித்துக் கொடுக்க வேண்டும். எங்களால் முடியாவிட்டால் அன்றாட உற்பத்தி கொடுப்பனவான 30 ரூபாயை நாமும் இழந்துவிடுவோம். 90 ரூபா வருகைக்கான கொடுப்பனவை பெற நாம் மாதம் 22 நாள் வேலை செய்ய வேண்டும். அதற்கும் ஒரு நாள் குறைவாக வேலை செய்திருந்தால் முழு மாதத்துக்கும் 1,980 ரூபாவை இழக்க வேண்டியிருக்கும். நான் பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை செய்தேன். ஒரு நாளைக்கு ஒரு ஹெக்டயரை முடிப்பதற்கு மூன்று தொழிலாளர்கள் தேவை. இந்த புதிய உடன்படிக்கையின் கீழ் தொழிற்சங்கங்கள் கம்பனிகளுக்கே உதவி செய்கின்றன. எங்களுக்கு அல்ல." பண்டாரவளை ஐஸ்லபி தோட்டத்தின் குருக்குதே பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் எமது நிருபருக்கு தெரிவித்ததாவது: "[சம்பள கோரிக்கைக்காக] நாங்கள் எந்தவொரு போராட்டத்திலும் பங்குபற்றவில்லை. ஏனெனில் தொழிற்சங்கங்கள் அதை சரியாக ஏற்பாடு செய்யவில்லை. இப்போது சங்கங்களுடன் கைசாத்திட்டுக்கொண்ட உடன்படிக்கையால் பலமடைந்துள்ளதாக நிர்வாகம் உணர்கிறது. உடன்படிக்கைக்கு முன்னர், வரட்சியின் காரணமாக கொழுந்து குறைவாக இருப்பதால் நாங்கள் எட்டு கிலோ எடுத்து கொடுத்தாலும் அவர்கள் எங்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள். "செப்டெம்பர் மாதம் நாங்கள் செய்த வேலைக்கு ஏன் சம்பளம் கொடுக்கப்படவில்லை என நாங்கள் தொழிற்சங்க தலைமைத்துவத்திடம் கேட்டால், இப்போது ஒரு நாளுக்கு 16 கிலோ பறித்தால் மட்டுமே சம்பளம் கிடைக்கும் என அவர்கள் சொல்கிறார்கள். இலக்கை அடைவதற்கு தேயிலைச் செடிகளில் போதுமான கொழுந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களது வேலை சுமையை அதிகரிக்க நிர்வாகத்தால் முடிகிறது. எங்களுக்கு முன்னைய சம்பளமே கிடைப்பதில்லை எவ்வாறு நாங்கள் ராக்கட் வேகத்தில் உயரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பது?" பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள், தமது உரிமைகளுக்காக போராடுவதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சோ.ச.க. யின் அரசியல் ஆதரவுடன் சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கை குழுவை ஸ்தாபித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்த ஐஸ்லபி தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர் குழுவினர், "எங்கள் அனைவருக்காகவும் போராட நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் பயனற்றவை. அதனால் நாங்களும் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்து அந்த நடவடிக்கைக் குழுவுக்குள் இந்த தோட்டத்தில் உள்ள சகல தொழிலாளர்களையும் அணிதிரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என தெரிவித்தனர். தெற்கில் காலி மாவட்டத்தின் எல்பிடியவில் உள்ள திவிதுர தோட்டத்தைச் சேர்ந்த இறப்பர் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்ததாவது: "தேயிலை மற்றும் இறப்பரின் அன்றாட உற்பத்தி இலக்கை நிர்வாகம் அதிகரித்துள்ளது. முன்னர் இறப்பர் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 10 முதல் 15 லீட்டர் வரை இறப்பார் பால் சேர்க்க வேண்டும். தொழிற்சங்க உடன்படிக்கையின் பின்னர், இது 20 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகையால், இதே லீட்டர் அளவுக்கு ஒன்றரை நாள் சம்பளம் கிடைக்கும். இப்போது அந்த சம்பளத்தை வாங்க 25 லீட்டர் கொடுக்க வேண்டும். அது சாத்தியமற்றது. 15 லீட்டர் பால் சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 150 மரங்களை கீற வேண்டும். ஆனால் 20 லீட்டர் எடுக்க குறைந்தபட்சம் 250 மரங்களையாவது கீற வேண்டும். எங்களால் புதிய இலக்கை அடைய முடியாது. இது தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ள நாள் சம்பளத்தை நாங்கள் இழந்துவிடுவோம் என்பதையே அர்த்தப்படுத்துகிறது." இன்னுமொரு தொழிலாளி விளக்குகையில், "முன்னர் நான் தனியாக மரங்களைக் கீறினேன். ஆனால், நேற்று முதல் இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நான் எனது மனைவியையும் அழைத்துக்கொண்டேன். நாங்கள் காலை 5.30 முதல் மரங்களை கீறுகிறோம். ஆனால் இன்னமும் 20 லீட்டர் பால் சேகரிக்கப்படவில்லை. உண்மையில் என்ன நடந்துள்ளது என்றால், முதலாளிமாருடனும் அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் எங்களுக்கு கிடைத்ததில் பெருமளவு குறைகப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் எங்களுக்கு கிடைத்த 285 ரூபாவுக்கு மேல் வெறெதுவும் எங்களுக்கு கிடைக்கப்போவதில்லை," என்றார். |