World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama's job creation fraud

ஒபாமாவின் வேலைகள் தோற்றுவித்தல் என்ற மோசடி

Jerry White
20 October 2009

Use this version to print | Send feedback

15 மில்லியன் மக்கள் வேலையை இழந்த நிலையில், வேலையின்மை ஒரு தலைமுறையில் மிக உயர்ந்த அளவு என்னும் விதத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் ஒபாமா நிர்வாகத்தின் ஊக்கத் திட்டம் அற்ப எண்ணிக்கை வேலைகளைத்தான் தோற்றுவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.

வெள்ளை மாளிகையின் recover.gov, வலைத் தளத்தின்படி, கூட்டாட்சி நிறுவனங்கள் அளித்த ஊக்க ஒப்பந்தங்களின்படி கடந்த எட்டு மாதங்களில் 30,383 பேருக்குத்தான் வேலைகள் கிடைத்துள்ளன.

கடந்த பெப்ருவரி மாதம் 787 பில்லியன் டாலர் அமெரிக்க மீட்சி மற்றும் மறு முதலீட்டுத் திட்டம் (American Recovery and Reinvestment Act), இரண்டு ஆண்டுகளுள் வெள்ளை மாளிகை 3.5 மில்லியன் வேலைகள் "தோற்றுவிக்கும் அல்லது காப்பாற்றும்" என்ற கூற்றுக்களுக்கு இடையே இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்டதில் இருந்து 3.4 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; நிர்வாகத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஊக்கப் பொதி இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்கக்கூடும் என்று வாதிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் துணை ஜனாதிபதி ஜோசப் பிடெனின் அலுவலகம் திங்களன்று மீட்புச் சட்டம் உண்மையில் 250,000 கல்வித்துறை வேலைகளை காப்பாற்றும் விதத்தில் திவாலான மாவட்ட பள்ளிகளுக்கு உதவும் வகையில் நடந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. உண்மையில் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட அற்ப தொகைகள் --அதுவும் அவை திறமைக்கேற்ற ஊதியம், சிறப்பு பட்டயப் பள்ளிகளுக்கு, பொதுக்கல்வி மீது மற்ற தாக்குதல்கள் என்ற விதத்தில் கொடுக்கப்பட்டவை-- பொதுப் பள்ளி வேலைகளை வெட்டுவதில் எந்த தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்தக் கருத்து இம்மாதம் முன்னதாக, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறி, 229 ஆசிரியர்கள் உட்பட 400 பள்ளி ஊழியர்கள் நீக்கப்பட்டது பற்றி வெள்ளை மாளிகை வாயிலுக்கே வந்து ஊர்வலம் நடத்தியதில் தெளிவாயிற்று.

சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் அரசியல் வாதிகள் ஊக்கப் பொதிகள் பள்ளிகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்க நிதி கொடுக்கும், அதேபோல் பிற உள்கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்தும் என்று கூறினார். பல செய்தி ஊடகங்கள் இதை பெருமந்த நிலைக்காலத்தில் புதிய உடன்பாடு தொடக்கிய பொதுப்பணித் திட்டங்களுடன் ஒப்பிட்டன. உண்மையில் வேலையின்மை வளர்ச்சியை தடுக்க ஏதும் செய்யப்படவில்லை.

மிக அதிகமாக உதவி தேவைப்பட்ட மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளைத்தான் பெற்றன. வேலையின்மை விகிதத்தில் 15.3 சதவிகிதத்தை கொண்டு நாட்டின் முன்னணியில் இருக்கும் மிச்சிகன் மாநிலத்தில் 397 வேலைகள்தான் "தோற்றுவிக்கப்பட்டன அல்லது காப்பாற்றப்பட்டன." ஒபாமா கட்டாயப்படுத்தி GM, Chrysler ஆகிய நிறுவனங்களை மறு கட்டமைக்க வைத்ததில் வேலையிழந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் எண்ணிக்கையில் இது மிகச் சிறிய விகிதம்தான்.

இதற்கு அடுத்த மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தைக் கொண்ட நெவாடாவில் வணிகங்கள் 159 புதிய வேலைகள் தோற்றுவிக்கப்பட்டன என்று தகவல் கொடுத்துள்ளன. 12.8 சதவிகிதம் மூன்றாம் அதிகபட்ச வேலையின்மையை கொண்டுள்ள Rhode Island 6 புதிய வேலைகள்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 1940க்குப் பின்னர் மிக அதிகமாக, உத்தியோகபூர்வமாக 2.2 மில்லியனுக்கும் மேலானவர்கள் வேலையின்மையில் உள்ள கலிபோர்னியாவில் கூட்டாட்சி ஊக்கப் பொதியால் தோற்றுவிக்கப்பட்ட வேலைகள் 2,260 மட்டும்தான் என்று கூறப்படுகிறது.

நிர்வாக அதிகாரிகள் இந்த மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு விடையிறுக்கும் வகையில், கூட்டாட்சி அமைப்புக்களுக்கு வேலைகளைத் தோற்றுவிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 16 பில்லியன் டாலர், மொத்த ஊக்கப் பொதியில் ஒரு சிறிய பகுதிதான் என்று கூறியுள்ளனர். வேலையின்மை நலன்களை விரிவாக்க, மாநிலங்களுக்கு உதவ மற்றும் "மத்தியதர வர்க்க வரி நிவாரணங்களை" அதிகப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள பணங்கள் பணத்தை மக்களின் பைகளில் போடும் என்றும் செலவு, பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றில் ஒரு புதுப்பித்தலை கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது. 90,000 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களுக்கு வரிச் சலுகைகள் 115 பில்லியன் டாலர் என்று இருப்பது ஒரு சராசரித் தொழிலாளியின் வாரந்திர ஊதியத்தில் வெறும் 7.70 டாலர் பணத்தைத்தான் சேர்க்கும்.

மீட்புச் சட்டத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் Jared Bernstein நிர்வாகத்தின் பொருட்படுத்தாத தன்மையை சுருக்கிக் கூறினார். உண்மையில் சேமிக்கப்பட்ட, தோற்றுவிக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை "எங்கள் கணிப்புக்களை விட அதிமாயிற்று", "மிகவும் நேரியமாக உள்ளது" என்ற அவர், ஊக்கப் பொதி "நம் பொருளாதாரத்தின் மிகக் கடின காலத்தில் தேவையான உயர்வைக் கொடுத்துள்ளது" என்றார்.

ஊக்கப் பொதிப் பணத்தின் பெரும்பகுதி சந்தேகத்திற்கு இடமின்றி அரசியல் தொடர்புடைய வணிகர்களின் வங்கிக் கணக்குகளில் போய்ச் சேர்ந்துள்ளது. அரசாங்கத்தின் கண்காணிப்பு நிறுவனமான பொது கணக்குத்துறை அலுவலகம் (General Accounting Office), ஊக்கப் பொதிகளை பெற்று திரும்ப வழங்கும் 9,000 கூட்டாட்சி ஒப்பந்தக்காரர்கள் கூடுதலான பொறுப்பைக் காட்ட அதன் பரிந்துரைகளை நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்று புகார் கூறியுள்ளனர். திட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் சுயாதீனக் கணக்காயர்கள் குறைந்தது 50 பில்லியன் டாலர் பணம் சுருட்டுபவர்களிடம் போய்ச்சேர்ந்துவிடும் என்று கணித்திருந்தனர்.

மில்லியன் கணக்கான வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் இழிந்த முறையில் அதை எதிர்கொள்ளும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள பிளவு தற்செயல் நிகழ்வு அல்ல. நேஷன் போல் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுக்கும் தாராளவாத வெளியீடுகள் கூறுவது போல் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிக்கு இன்னும் ஆர்வத்துடன் விடையிறுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது அல்ல. அவருடைய நிர்வாகம் அது பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சக்திகளின் நலன்களுக்கு நாட்டை ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைக் கட்டுப்படுத்தும் நிதியபிரபுக்களின் வேண்டுகோளுக்கு உடனடியாக செயலாற்றுகிறது.

அமெரிக்காவின் ஊதியக் குறைப்புக்கள், கடந்த கால நலன்களில் எஞ்சியிருப்பதை தகர்த்தல், உற்பத்தித்திறனை உயர்த்துதல் என்பதற்கு அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கீழறுப்பதற்கு நிர்வாகம் வேண்டுமென்றே வெகுஜன வேலையின்மை என்ற சுத்தியலைப் பயன்படுத்துகிறது .

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று குறிப்பிட்டது போல், "சரிவு தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான முதலாளிகள் ஊதியங்களைக் குறைத்துள்ளனர், தொழிலாளிகளின் சுகாதாரக் காப்பு செலவினங்களின் பங்கை அதிகரித்துள்ளனர், அல்லது ஓய்வூதியத்திட்டங்களில் முதலாளிகளின் அளிப்பை குறைத்துள்ளனர்." ஆலோசனை நிறுவனமான Watson Wyatt நடத்திய பெருநிறுவனங்கள் பற்றிய கணிப்பின்படி 16 சதவீதத்தினர் ஊதியங்களைக் குறைத்துள்ளன, 61 சதவிகிதம் ஊதியங்களை முடக்கி வைத்துள்ளன. சுகாதார பாதுகாப்பு நலன்களைக் குறைத்த, பெரு நிறுவனங்களில் மூன்றில் இரு பங்கு நிறுவனங்கள் அவற்றை மந்த நிலைக்கு முந்தைய தரத்திற்கு மீட்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.

இத்தகைய தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புத்தான் ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்படும் பொருளாதார மீட்பு என்று அழைக்கப்படுவதின் இதயத்தானத்தில் உள்ளது. வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் இலாபங்களில் மிதக்கின்றன, இதுவரை இல்லாத அளவிற்கு போனஸ்களை கொடுக்கத் தயாரித்து வருகின்றன; இவை டிரில்லியன் கணக்கான "ஊக்கப் பொதிகளை", வரிப்பணத்தில் இருந்து பெற்ற பின் நடைபெறுகின்றன. GM, Chrysler தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்து அரங்கம் அமைத்த பின், நிர்வாகம் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில் பெரும் மாறுதலுக்கு தயாரித்து வருகிறது; இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை குறைத்துவிடும், மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகிய மிகவும் முக்கியமாக தேவைப்படும் திட்டங்களையும் குறைத்துவிடும்.

வெகுஜன வேலையின்மைக்கு ஒரு விடையிறுப்பு--அரசாங்க நிதியில் பொதுப்பணி வேலைத்திட்டம் மேற்கொண்டு வேலையின்மையில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பது-- நிர்வாகத்தால் நேரடியாகக் கைவிடப்பட்டுவிட்டது. ஒபாமாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் லோரன்ஸ் சம்மர்ஸ் கடந்த வாரம் St.Louis ல் வணிகப் பொருளாதார வல்லுனர்களுக்கு ஒரு உரையில் இதை வலியுறுத்தினார்.

"அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளும் எமது தேசிய உறுதிப்பாடான அரசாங்க கடனை குறைத்தல் என்பதை வினாவிற்கு உட்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது." இச்சொற்கள் பொதுக் கருவூலத்தை டிரில்லியன் கணக்கில் கடனாக அளித்த ஒரு நிர்வாகத்தில் இருந்து, அதுவும் பொருளாதார பேரழிவை துரிதப்படுத்திய ஊகவணிகர்கள், வங்கி நிர்வாகிகள் ஆகியோருக்கு அளித்த நிர்வாகத்திடம் இருந்து வருகின்றன.

"அதே போல் சந்தைத் தன்மைக்கு எதிராக என்பதற்கு பதிலாக இத்துடன் இயைந்த விதத்தில்தான் எமது வளர்ச்சிக்கு ஊக்கும் கொடுக்கும் கொள்கையை ஒட்டிய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்" என்று அவர் சேர்த்துக் கொண்டார். "அமெரிக்க நிறுவனங்களுக்கும் அமெரிக்க முயல்வோர்களுக்கும் கணிசமான வெற்றியோடு தொடர்பு கொண்டவிதத்தில்தான் அமெரிக்க பொருளாதாரத்தின் வெற்றி உள்ளது."

வேறுவிதமாகக் கூறினால், அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் --மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு என்று இல்லாமல்-- முதலாளித்துவச் சந்தையின் தேவைகள், மற்றும் சொந்தச் செல்வங்களை பெருக்கிக் கொள்ள விரும்பும் நிதிய உயரடுக்கின் உந்துதலுக்கு உதவும் வகையில்தான் இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் கேட்க வேண்டும்; ஏன்? அமெரிக்காவில் பல மில்லியன் கணக்கான மக்களின் மிக அடிப்படைத் தேவைகள் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் தேவைகள் எதற்காக முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் நலன்களை பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்தின் செயற்பாடுகளுக்கு தியாகம் செய்யப்பட வேண்டும்?

தற்போதைய பொருளாதாரப் பேரழிவு முதலாளித்துவத்தின் தோல்வியின் ஒரு வெளிப்பாடு ஆகும். இதற்கு ஒரே மாற்றீடு சோசலிசம் ஆகும்.

நெருக்கடிக்கு ஒரே விடை "சந்தை" என்பதை நிராகரித்தல் மற்றும் மக்களில் மிகப் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாளர்களின் சுயாதீன நலன்கள் வலியுறுத்தப்படுதல் ஆகியவற்றுடன் ஆரம்பமாகிறது.

கெளரவமான பள்ளிகள், வீடுகள், சுகாதார பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டுமானங்கள், வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு நிலையங்கள் ஆகியவற்றிற்கான பொதுப் பணித் திட்டத்திற்கு பல டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதற்காக மில்லியன் கணக்கான மக்களுக்கு, தயாராகவும், திறமை உடையவராயும் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்கப்பட வேண்டும். கெளரவமான ஊதியங்கள், முழு மருத்துவ, ஓய்வூதிய நலன்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு உடனடி உதவி அளிக்க அவசர திட்டம் வேண்டும். வீடுகளை விட்டு வெளியேற்றுதல், வீடுகள் முன் கூட்டி விற்பனைக்கு வருதல், பயன்பாடுகள் நிறுத்தப்படுதல் ஆகியவை தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு பணம் கொடுப்பதற்கு உண்மையான முற்போக்கான வருமான வரி இயற்றப்பட வேண்டும்; அதுதான் செல்வந்தர்கள் மீது வரிகளை அதிகரித்து தொழிலாள வர்க்கத்தின் மீதும் மத்தியதரக் குடும்பங்கள் மீதும் வரிகளைக் குறைக்கும். நிதிய ஊகக்காரர்கள் மற்றும் வங்கித் தலைமை நிர்வாகிகள் பைக்குள் போட்டுக் கொண்ட நிதியம் பறிமுதல் செய்யப்பட்டு அவசர சமூகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

நிதிய ஒட்டுண்ணிகளின் பிடியை முறிப்பதற்கு தொழிலாள வர்ககம் வங்கிகள் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய நெம்புகோல்களை தன்னுடைய கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விதத்தில்தான் பொருளாதார வாழ்வானது சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு ஜனநாயகத் திட்டத்தால் வழிகாட்டப்படும்.

இந்த நடவடிக்கைகள் ஒபாமா நிர்வாகத்திற்கு சற்றும் பிடிக்காதவை ஆகும்; இதன் முந்தைய குடியரசுக்கட்சி நிர்வாகம் போல் இதுவும் நிதியப் பிரபுத்துவத்தின் அரசியல் கருவியாக உள்ளது. இத்தகைய கொள்கைகளுக்கான போராட்டத்திற்கு இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுடன் அரசியல் முறிவும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டியமைப்பதும் அவசியமாகிறது.