World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Signs of the US dollar's demise டாலர் மடிவின் அடையாளங்கள் By John Chan மத்திய கிழக்கு மூத்த செய்தியாளர் ரோபர்ட் பிஸ்க்கால் பிரிட்டீஷ் Independent ல் அக்டோபர் 6ம் தேதி "The demise of the dollar" என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை அமெரிக்க டாலரின் சமீபத்திய நலிந்த நிலை மற்றும் தங்க விலை ஏற்றத்துடன் சேர்த்துப் பார்க்கையில் நம்பக்கூடியதாய் உள்ளது. இந்த சிறப்பு அறிக்கை, வளைகுடா நாடுகள், சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிலிருந்து நிதி அமைச்சர்கள், மற்றும் மத்திய வங்கியாளர்கள் தொடர்ச்சியான இரகசிய கூட்டங்களை நடத்தி 2018ல் இருந்து எண்ணெய் வணிகத்திற்கு அமெரிக்க டாலரின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி விவாதித்துள்ளனர் என்பதை பகிரங்கப்படுத்துகின்றன. அதை பதிலீடு செய்வது யூரோ, ஜப்பானிய யென், சீன யுவான், தங்கம் மற்றும் வளைகுடா ஒத்துழைப்புக் குழுவால் ஒருவேளை கொண்டுவரக்கூடிய புதிய நாணயம் ஆகிய உள்பட ஒரு கூடை நாணயங்களாக இருக்கலாம். இது உண்மையானால், அத்தகைய தடவடிக்கை ஒரு பொருளாதார மற்றும் அரசியல் வெடிகுண்டு போல் ஆகும். எண்ணெய் போன்ற முக்கிய பண்டத்தின் வணிகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துதல் நிறுத்தப்படுவது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகின் இருப்பு நாணயமாக செயல்படும் டாலரின் முக்கிய பாத்திரத்திற்கு மற்றொரு அடியாக இருக்கும். உறுதியான வேறு மாற்றீடு இல்லாத நிலையில், டாலரின் மடிதல் எதிர்ப்பான நாணயங்கள் மற்றும் வணிக முகாம்களின் எழுச்சிக்கு நல்ல குறிப்புக்கள் போல் ஆகும். அமெரிக்காவை பொறுத்த வரையில், அதன் மகத்தான கடன்களுக்கு உடனடியாக உதவும் வகையில் உலகின் இருப்பு நாணயத்தில் பத்திரங்களை வெளியிடும் திறன் நின்று போகும். ஒரு பெயரிடப்படாத சீன வங்கியாளர் Independent இடம் மத்திய கிழக்கு எண்ணெய் வணிகத்தில் இருந்து டாலரை அகற்றுதல் என்பது சர்வதேச நிதியச் செயற்பாடுகளின் முழு அமைப்பையும் அடிப்படையிலேயே மாற்றும் என்றார். அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளான ஜப்பான், செளதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருந்ததால் கூட்டங்கள் மிகப் பெரிய உணர்வுகரமாக இருந்தன மற்றும் அனைத்து தரப்பினரும் வாஷிங்டன் இதை எதிர்கொள்ளும் முறை பற்றி கவலைப்படுவர். அதே நேரத்தில் சீன வங்கியாளர் விளக்கினார்: "அமெரிக்காவும் பிரிட்டனும் மிகவும் கவலையில் இருக்கும். இந்த செய்தி ஏற்படுத்தும் இடி போன்ற மறுப்புக்கள் எத்தகயை கவலையைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்." உண்மையில் செளதி அரேபியாவும் மற்ற வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகளும், மற்றும் ஜப்பான், ரஷ்யா ஆகியவை அத்தகைய கூட்டங்கள் நடந்ததை மறுத்துள்ளன. ஆனால் தன்னுடைய அறிக்கையில் இருந்து பிஸ்க் பின் வாங்கவில்லை; அக்டோபர் 7ம் தேதி அவர் செளதியின் மறுப்புக்கள் "வளைகுடா அரசியலின் வாடிக்கையான பகுதி" என்றுதான் கருதப்படுகின்றன, என்று எழுதினார். சந்தைகள் இதை எதிர்கொண்டவிதம் இவ்விதம் நடப்பது இயலாததில்லை என்பதை சுட்டிக்காட்டியது. உண்மையில் நிதிய வட்டங்களில் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு ஒன்றைக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பெருகிய விவாதம் உள்ளது. நிதியக் கொந்தளிப்பு மற்றும் சரியும் வரிமூலமான வருமானங்கள், ஆகாயமளவு நிறைந்த வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்புக்களால் விளைந்த அமெரிக்க அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 12 டிரில்லியன் டாலர்கள் என்று உயர்ந்து நிற்கும் மிகப் பெரிய கடன் வளர்ச்சி ஆகியவை, குறிப்பாக மாபெரும் டாலர் இருப்புக்களைக் கொண்டுள்ள அரசாங்கங்களில் டாலரை பற்றி நரம்புத் தளர்ச்சி கணிசமாக ஏற்படும் விதத்தில் உள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கட்டார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் ஆகிய வளைகுடா ஒத்துழைப்புக் குழு 2 டிரில்லியன் டாலர் இருப்புக்களை கொண்டுள்ளது. சீனா 2.27 டிரில்லியன் டாலர் நாணய இருப்புக்களை, பெரும்பாலும் அமெரிக்க டாலராக கொண்டுள்ளது. டாலர் மதிப்பில் ஒரு நீண்ட காலச் சரிவு என்பது இந்த நாடுகளுக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தும். அதே நேரத்தில் டாலரை விரைவாக திரும்பப் பெறுதல் என்பது ஒரு பீதியைக் கிளப்பும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; அது டாலரின் மதிப்பை இன்னும் குறைக்கும் அபாயத்தை அதிகப்படுத்தும். Independent சுட்டிக் காட்டியுள்ளபடி, எண்ணெய் வணிகத்திற்கு டாலருக்கு பதிலாக ஒரு மாற்றீட்டிற்கு "பெரும் ஆர்வம் காட்டியுள்ள சக்தியாக" சீனா உள்ளது. மத்திய கிழக்கில் இருந்து அது மிக அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்வதுடன், உற்பத்திப் பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது; மேலும் அப்பகுதியில் அதிக முதலீடுகளையும் பெருகிய முறையில் கொண்டுள்ளது.டாலரின் சரிவு நீடித்த தன்மையாக இருப்பதில் உள்ள ஆபத்தை சீனா நன்கு அறியும். அது டாலர் மதிப்புக் கொண்ட அதன் சொத்துக்களின் சரிவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று இருப்பது மட்டும் இல்லாமல் அமெரிக்காவிற்கு சீன ஏற்றுமதிகளையும் பாதிக்கும். அமெரிக்கப் பத்திரங்களை சீனா வாங்குவது என்பது டாலருக்கும் யுவானுக்கும் இடையே இப்பொழுதுள்ள நாணய மாற்றுவிகிதத்தை தக்க வைக்கும் நோக்கத்தைக் கொண்டது; இதுதான் அமெரிக்காவிற்கு சீனாவின் மிகப் பெரிய அளவிலான ஏற்றுமதி வணிகத்தின் தளமாக உள்ளது. அதே நேரத்தில் சீனா மாற்றீடுகளைப் பரிசீலிக்கவும் தொடங்கியுள்ளது. ரஷ்யா இன்னும் பல ஆசிய, இலத்தின் அமெரிக்க நாடுகளுடன் நாணய மாற்றுவிகித உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது; இதையொட்டி வணிகம் டாலருக்கு பதிலாக அவற்றுடைய நாணயங்களிலேயே நடத்தப்படும். இதேபோன்ற ஒப்பந்தத்தை பிரேசிலும் சீனாவுடன் கொண்டுள்ளது. தன்னுடைய நாணய இருப்புக்களை பெருகிய முறையில் பெய்ஜிங் பயன்படுத்தி வெளிநாட்டு தாதுப் பொருட்கள், தொழில்துறை சொத்துக்களை வாங்குகிறது; இது அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்குவதற்கு பதிலாக நடக்கிறது. மார்ச் மாதத்தில் சீன மத்திய வங்கியின் தலைவரான Zhou Xiaochuan அமெரிக்க டாலருக்கு பதிலாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிறப்பு பணம் எடுக்கும் உரிமைகள் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்--இது நிறைய நாணயங்கள் ஏற்கப்படும் விளைவைக் கொடுக்கும், ஜூன் மாதம் சீனாவிற்குப் பயணித்திருந்தபோது, அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் ஒபாமா நிர்வாகம் சமூகச் செலவினங்களிலும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களிலும் மிருகத்தனமான வெட்டுக்களை கொண்டுவந்து அமெரிக்க கடனைக் கட்டுப்படுத்தவும் டாலரின் உறுதியை காக்கவும் உறுதியளித்தார். முன்னாள் சீன மத்திய வங்கி ஆலோசகர் Yu Yongding, கீத்நரைச் சந்திக்குமுன் Bloomberg News இடம் கூறினார்: "அமெரிக்க அரசாங்கத்திடம் கூறவிரும்புகிறேன்: 'மெத்தனமாக இருந்து சீனாவிற்கு உங்கள் பத்திரங்களை வாங்குவதிற்கு மாற்றீடு இல்லை என்று நினைத்துவிடாதீர்கள்'. யூரோ ஒரு மாற்றீடு. இன்னும் பல மூலப் பொருட்களை அதிகமாக நாங்கள் வாங்க முடியும்." அக்டோபர் 13ம் தேதி பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் "டாலர் மடிவு" பற்றிய பேச்சு மிகையானது என்று மட்டம்தட்டிப் பேசினார். "சீனா மாற்றுவிகிதக் கட்டுப்பாடுகளை அகற்றி, ஆழ்ந்த நீர்மையுடைய நிதியச் சந்தைகளை வளர்த்தால் ஒழிய --ஒரு தலைமுறைக்குப் பின்னர்தான் இது நடக்கும்-- யூரோதான் டாலருக்கு தீவிர போட்டி நாணயம் ஆகும். தற்பொழுது உலகின் இருப்புக்களில் 65 சதவிகிதம் டாலரில் உள்ளது; 25 சதவிகிதம் யூரோவில் உள்ளது. ஆம், இதில் சற்று மாற்றம் இருக்கலாம். ஆனால் அது மெதுவாகத்தான் வரும். யூரோப் பகுதியும் மிக அதிக நிதியப் பற்றாக்குறைகள் மற்றும் கடன்களில் உள்ளது. இப்பொழுதில் இருந்து இன்னும் 30 ஆண்டுகளுக்கு டாலர் இருக்கும்; யூரோவின் விதி அதையும் விட உறுதியற்றது" என்று அவர் விளக்கினார். உண்மையில் டாலருக்கு மாற்றீடாக உலக இருப்பு நாணயம் இல்லாதது அதன் "மடிவை" ஒதுக்கிவிடாது. இதன் பொருள் விளைவுகள் போட்டி நாணய முகாம்கள் அமைக்கப்படுதல், மற்றும் நாணிய, வணிகப் பூசல்கள் ஏற்படுதல் ஆகியவை ஆகும். உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் ஜோல்லிக் போன்றவர்கள் ஆபத்துக்களை நன்கு அறிந்துள்ளனர். செப்டம்பர் மாதக் கடைசியில் நிகழ்த்திய உரை ஒன்றில் ஜோல்லிக் எச்சரித்தார். "உலகின் மேலாதிக்க இருப்பு நாணயமாக டாலர் எப்பொழுதும் நீடிக்கும் என்று அமெரிக்கா நினைப்பது தவறாகும். சற்று முன்னோக்கிப் பார்த்தால் டாலருக்கு பதிலாக மற்ற விருப்புரிமைகள் பெருகிய முறையில் வருவது தெரியும். இந்த நெருக்கடியின் ஒரு விளைவு பொருளாதார சக்தி உறவுகளில் மாற்றம் என்பது உணரப்படும்." டாலரின் மேலாதிக்க நிலை இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப் பெரும் தொழில்துறை மேலாதிக்கத்தைப் பெற்றிருந்ததுடன் பிணைந்திருந்தது. போருக்குப் பிந்தைய உலகின் பொருளாதார ஒழுங்கை வாஷிங்டன் பிரெட்டன் வூட்ஸ் உடன்பாட்டின் மூலம் திறமையாக ஆணையிட்டது; அதன்படி அமெரிக்க டாலர், குறிப்பிட்ட நிலையான தங்கத்துடன் மாற்றுவிகிதத்தையும் கொண்டது, உலகின் இருப்பு நாணயமாக செயல்பட்டது. ஆனால் ஜப்பானும் ஐரோப்பாவும் மீட்சி பெற்றன; ஒப்புமையில் அமெரிக்க சரிவு அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் 1971ல் டாலருக்கு தங்க ஆதரவு இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை வெளிப்படுத்தினார். 1980, 1990 களில் உலகந்தழுவிய உற்பத்தி முறை, குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை சுரண்டியதின் மூலம் வெளிப்பட்டது அமெரிக்க தொழில்துறையை வெற்றுக்கூடமாக ஆக்கியது; அமெரிக்க பொருளாதாரத்தின் பரந்த நிதிய நிலைமையையும் வெற்றாக்கியது. இந்த வழிவகைகள் சோவியத் ஒன்றியம் சரிந்தது, பின்னர் சீனாவும் இந்தியாவும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு நாடுகளாக வெளிப்பட்டது ஆகியவற்றில் வெளியாயின; இறுதியில் கடந்த ஆண்டு வோல் ஸ்ட்ரீட்டின் நிதியக் கரைப்பிற்கு வழிவகுத்தது. Independent உடைய கருத்தின்படி, எண்ணெய் வணிகத்தில் டாலர் பற்றிய கூட்டங்கள் மற்றும் "இந்த சர்வதேச குழுவுடன் உறுதியாகப் போராடுவது" பற்றியும் அமெரிக்கா நன்கு அறிந்துள்ளது. கட்டுரை பெய்ஜிங்கின் முன்னாள் மத்திய கிழக்கு சிறப்புத் தூதராக இருந்த Sun Bigan ஒரு உத்தியோகபூர்வ இதழில், "மத்திய கிழக்கில் இசை நலன்கள் பற்றி இருதரப்பு பூசல்கள் [அமெரிக்காவுடன்] தவிர்க்க முடியாதவை" என்று எழுதியுள்ளதை மேற்கோளிட்டுள்ளது. "இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மத்திய கிழக்கு எண்ணெய் பற்றிய வருங்கால பொருளாதார போரைப் பற்றிய ஆபத்தான கணிப்பு ஆகும் --ஆயினும்கூட வட்டாரப் பூசல்கள் பெரும் சக்திகளின் மேலாதிக்க மேன்மைக்கான போராக மாறும் தன்மையைக் கொண்டுள்ளது" என்று Independent கருத்துத் தெரிவித்துள்ளது.ஈரானுடன் தற்போதைய அமெரிக்கத் தலைமையிலான மோதலின் பின்னணியில் சக்தி அளிப்புக்கள் பற்றிய போட்டி உள்ளது. வாஷிங்டன் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானுக்கு எதிராக வேண்டும் என்று முயல்கிறது; அது அந்நாட்டின் எண்ணெய், எரிவாயு வணிகத்தைப் பாதிக்கும். ஈரானின் பெரும் வணிகப் பங்காளிகளில் ஒன்றான சீனா, ஈரானிய சக்தியின் இறக்குமதியாளரும் ஆகும், அது புதிய சுற்று பொருளாதாரத் தடைகளை எதிர்த்து வருகிறது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) பெய்ஜிங்கில் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில், அதில் ஒரு பார்வையாளர் நாடான ஈரான் ஒரு புதிய ஒன்றுபட்ட வட்டார நாணயம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா முன்வைத்த கருத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் பல மத்திய ஆசிய நாடுகள் 2001ல் இப்பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கு பரவுவதற்கு எதிர்ப்பாக இதை நிறுவினர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் வணிக நாணயங்களாக யூரோ, யென்னை டாலருக்கு பதிலாக ஈரான் மாற்றியது. அதற்குக் காரணம் அமெரிக்க தலைமையிலான அழுத்தம் தீவிரமானதுதான். மூலப் பொருட்கள் பற்றிய போட்டியும் ஆபிரிக்காவில் நடைபெறுகிறது. கானாவில் சீன அரசாங்க எண்ணெய் நிறுவனமான CNOOC அமெரிக்காவின் Exxon Mobil ஆபிரிக்காவில் இருக்கும் மிகப் பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றான Jubilee க்கு 4 பில்லியன் டாலர் ஏலத்துடன் போட்டியிடுகிறது. சீனாவின் சர்வதேச நிதியமும் எண்ணெய் பெருநிறுவனமுமான Sinopec க்கும் Guinea Development Corporation என்னும் 7 பில்லியன் டாலர் திட்டத்தை உள்கட்டுமானம், சுரஙக்கம், விசைத் திட்டங்கள் என்று கினியா ஆட்சிக்காக நிறுவுகின்றன; அந்நாடோ மேலை பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிதிகள் கினியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் விட இரு மடங்கு ஆகும். உலகின் மிகப் பெரிய பாக்சைட் இருப்பையும் கினியா கொண்டுள்ளது; அதைத்தவிர மிக அதிக தங்கம், வைரம், யுரேனியம், இரும்புத் தாதுப் பொருட்களையும், எண்ணெய் இருப்புத் திறனையும் கொண்டுள்ளது. சமீபத்தில் பைனான்ஸியல் டைம்ஸில் வந்த Lex கட்டுரை ஆபிரிக்க எண்ணெய்க்கு சீன-அமெரிக்க போட்டியை வலுவற்ற டாலருடன் பிணைத்துள்ளது. சீன ஏலங்களின் அளவைக் குறிப்பிட்டு கட்டுரையில் கூறப்படுவது: "சீனாவின் தலைவர்கள் நிறைய டாலர்களை சேமிப்பது வீணாகும் சொத்துக்கள் என்று அறிந்துள்ள நிலையில், அவற்றை உறுதி கொடுக்க அல்லது இன்றே செலவழித்தல் என்பது உரியதுதான். டாலரை பற்றி கவலைகள் சரியென்று போனால், கூடுதல் பணம் சீனா கொடுக்கிறது என்பது பார்வையாளரின் கருத்துத்தான். "வேறுவிதமாகக் கூறினால், அதன் டாலர் இருப்புக்களில் சிலவற்றையேனும் சீனா சக்தி, தாதுப் பொருட்கள் இருப்பாக மாற்றி, அமெரிக்க டாலர் இன்னும் வலுவிழக்க உதவுகிறது. இந்தப் பின்னணியில் மத்திய கிழக்கு எண்ணெய் வணிகத்தில் டாலருக்கு மாற்றீடு நீண்ட காலத்திற்குள் என்பது பற்றிய உயர்மட்ட பேச்சுக்கள் பின்னர் மறுக்கப்பட்டு இருந்தாலும்கூட, நடந்திருக்கக்கூடும்; இது முக்கிய சக்திகளுக்கு இடையே, குறிப்பாக முக்கியமான சக்தி அளிப்புக்கள் பற்றி ஆழமாகிவரும் பதட்டங்கள் மற்றும் போட்டியை சுட்டிக்காட்டுகிறது. |