World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைPhoney Indian concern about Tamil detainees in Sri Lanka இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பற்றிய இந்தியாவின் போலித்தனமான அக்கறை By Sarath Kumara அக்டோபர் 10 அன்று தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டின் தடுப்பு முகாங்களை பார்வையிட இலங்கை வந்தது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்த முகாங்களில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பயணம் இரு தரப்பிலும் ஒரு வஞ்சகமான வெகுஜன உறவுகள் சம்பந்தமான பயிற்சியாகும். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தளவில், தனது மோசமான ஜனநயாக உரிமை மீறல்களை மூடி மறைக்க இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவை பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக இந்த விஜயம் இருந்தது. கொழும்பு அரசாங்கம் இந்த முகாங்களை "நலன்புரி கிராமங்கள" என விவரித்த போதிலும், இராணுவத்தால் நடத்தப்படும், சிப்பாய்கள் காவல்காக்கும் மற்றும் முட்கம்பிகளால் சூழப்பட்ட இந்த முகாங்களில் இருந்து தமிழ் பொது மக்கள் வெளியில் செல்ல இராணுவத்தால் அனுமதிக்கப்படுவதில்லை. ஊடகங்களும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் இந்த முகாங்களுக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதோடு உதவி அமைப்புக்களும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்திய பிரதிநிதிகள் தம் பங்கிற்கு தமிழ் நாட்டில் வெகுஜன எதிர்ப்புக்களை அமைதிப்படுத்துவதற்காக உத்தரவாதங்களை எதிர்பார்க்கின்றனர். அந்த உத்தரவாதங்கள் எந்தளவுக்கு பயனற்றவை என்பதில் அவர்களுக்கு கவலையில்லை. அதேபோல், இலங்கையின் இராணுவக் கட்டுப்பாட்டிலான வடக்கு மற்றும் கிழக்கில் விரிவடைந்துவரும் பொருளாதார வாய்ப்புகளையும் இந்திய பிரதிநிதிகள் ஆராய்கின்றனர். தமிழ் நாட்டுக்கும் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் நீண்டகால பிணைப்பு இருக்கின்றது. இலங்கை இராணுவம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தின் மீது கண்மூடித்தனமாக குண்டுத் தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கன பொது மக்களை கொன்ற, புலிகளுக்கு எதிரான இறுதித் தாக்குதல்கள், தமிழ் நாட்டில் பரந்தளவிலான எதிர்ப்பை தூண்டிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.), காங்கிரஸ் (ஐ) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தமிழ் நாட்டு ஆளும் கட்சிகளின் 10 பிரதிநிகள் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர். தமிழ் நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோரும் குழுவில் இருந்தனர். எதிர்க் கட்சிகள் எவையும் பிரதிநித்துவம் செய்யவில்லை. இந்த பிரதிநிதிகள் குழு, கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு நடத்தவில்லை. ஆயினும், குழு இந்தியா திரும்பிய போது, அறிக்கையொன்றை பெற்றுக்கொண்ட தமிழக முதலைமைச்சர் கருணாநிதி, இலங்கை அரசாங்கத்தின் வேலைகளில் தான் "திருப்தியடைந்துள்ளதாக" தெரிவித்தார். "58,000 க்கும் அதிகமான தமிழர்கள் 15 நாட்களுக்குள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள் என்றும் ஏனையவர்கள் சிறிது சிறிதாக கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள்" என்றும் பிரதிநிதிகள் குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறிக்கொண்டார். எவ்வாறெனினும், நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தது போல், தடுத்து வைக்கப்பட்டுள்ள 58,000 பேரை மீளக் குடியேற்றும் திட்டமானது சற்று நேரத்துக்கு ஒரு பிரேரணையாகவே இருந்தது. சர்வதேச விமர்சனத்தை எதிர்கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஆறு மாதங்களுக்குள் சகல "அகதிகளையும்" மீளக் குடியமர்த்த முதலில் திட்டமிட்டிருந்தார். அரசாங்கம் அதனது புதிய வாக்குறுதியினை பூர்த்தி செய்தாலும், மேலும் இரண்டு இலட்சம் பொது மக்கள் முகாங்களுக்குள் எஞ்சியிருப்பார்கள். எந்தவொரு மீள் குடியேற்றத்துக்கும் முன்னதாக பிரதேசத்தில் இராணுவம் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் என்பதே கொழும்பு அராசங்கம் தாமதத்துக்கான சாக்குப் போக்காக காட்டுவதற்கு களஞ்சியத்தில் வைத்துள்ளது. ஹிந்து பத்திரிகை தெரிவித்தவாறு, இலங்கை பாதுகாப்புச் செயாலாளர் கோடாபய இராஜபக்ஷ, புலிகள் இன்னமும் அச்சுறுத்தலாக இருப்பதோடு இன்னமும் முகாங்களில் அடையாளங்காணப்படாத பல புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், என இந்திய பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கால் மில்லியன் பொது மக்கள் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கைதிகளாக நடத்தப்படுவதோடு அவர்களது அடிப்படை சட்ட மற்றும் அரசியலமைப்பு உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வட இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் போக்குவரத்தை புதுப்பிப்பது பற்றி கலந்துரையாடல் நடத்தியதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய பெரும் வர்த்தகர்கள், குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்கள், 26 ஆண்டுகால யுத்தத்தின் முடிவின் பின்னர் தீவில் திறக்கப்பட்டுள்ள பொருளாதார வாய்ப்புக்களை சுரண்டிக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். முகாங்களுக்குள் காணப்படும் பயங்கரமான நிலைமைகளை முழுமையாக நிராகரித்துவிட முடியாது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் "தண்ணீர் கடுமையான தட்டுப்பாடாக இருப்பதாகவும்" "குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கடும் துன்பம் அனுபவிப்பதாகவும்" அந்தக் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் பிரதிநிதி ஆரோன் ரஷீட் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ரிஷாட் தங்குமிடம் மற்றும் உணவு பற்றாக்குறை பற்றியும் மற்றும் அடுத்துவரும் பருவமழையின் போது வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆபத்து பற்றியும் பேசினார். எவ்வாறெனினும், தமிழ் நாடு மாநில அரசாங்கமோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கமோ, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நடத்தப்படும் விதம் பற்றி கொழும்பு அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சிக்கவில்லை. ராய்ட்டர் செய்திகளின் படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீளக் குடியமர்த்தவும் யுத்தத்தால் அழிந்த வடக்கை திரும்ப கட்டியெழுப்பவும் கொழும்பின் நடவடிக்கை திட்டங்களை நிறைவேறவும் உதவுவதற்காக மேலும் 100 மில்லியன் டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட உதவி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தலைவிதியில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாததோடு இந்த சிறை முகாங்களை இந்தியா இரகசியமாக ஆதரிப்பதை மட்டுமே கோடிட்டுக் காட்டியது. அக்டோபர் 10 அன்று, தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரையும் விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முகாங்களில் தங்கியிருப்பவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய கண்காணிப்பகத்தின் ஆசிய இணைப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்ததாவது: "இந்த மக்கள் அனைவரையும் தேவையின்றி சிரமமான நிலைமைகளின் கீழ் அடைத்துவைத்துள்ள நிலையில், முகாங்களிலான நிலைமை முறுகலானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் மாறுகிறது. அவர்களை பருவமழை தாக்கத்துக்கு முன்னதாக வெளியேற்றாவிட்டால், அவர்களது உயிரும் சுகாதாரமும் கடும் ஆபத்துக்குள் தள்ளப்படும்." ஐ.நா. வின்படி, செப்டெம்பர் முடிவில், 255,551 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அரசாங்கம் 40,000 பேர் அவரவரது பிரதேசங்களுக்கு திரும்பிவிட்டார்கள் என்று தெரிவித்தமை வெறும் பொய் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் விளக்குகிறது. உண்மையில், பலர் "மெனிக் பார்ம் முகாமில் இருந்து ஏனைய தடுப்பு முகாங்களுக்கு மாற்றப்பட்டுள்ள அதே வேளை, ஏனையவர்கள் இன்னமும் வவுனியாவில் ஒரு 'இடை நிலையத்தில்' -ஒரு தற்காலிக இடைத்தங்கல் வசதி- வைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் பொய் சொல்வதாக அடம்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். "பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்களை விசாரிக்கும் உரிமை அராசங்கத்துக்கு இருக்கும் அதே வேளை, இந்த முன்னெடுப்பு பெருந்தொகையான தமிழர்களை சாத்தியமானளவு நீண்ட காலத்துக்கு தடுத்து வைப்பதற்கான ஒரு சூழ்ச்சித் திட்டமாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் உண்மையற்ற அறிக்கைகளாலும் வாக்குறுதிகளாலும் இனிமேல் யாரும் ஏமாற்றப்படக் கூடாது," என அவர் தெரிவித்துள்ளார். கண்காணிப்பகத்தின் அறிக்கை, முகாங்களுக்குள் நிலைமை சீரழிந்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை பற்றி குறிப்பிடுகிறது. அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதால் அக்டோபர் 5ம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவே தண்ணீர் இறைக்கப்படுகிறது என பிரமாண்டமான மெனிக் பார்ம் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 15 லீட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும், குடும்பத்தின் அளவைக் கருதாமல் ஒரு குடும்பத்துக்கு 30 லீட்டர் தண்ணீர் மட்டுமே ஒரு நாளைக்கு கொடுக்கப்படுகிறது. தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜீவிதா கண்காணிப்பகத்துக்கு தெரிவித்ததாவது: "ஐந்து பேர் உள்ள எங்கள் குடும்பத்துக்கு இன்று ஒருவாறு 20 லீட்டர் எடுத்துக்கொண்டேன். இனிமேல் நாளை வரை எனக்கு தண்ணீர் எடுக்க முடியாது. அதுவரை குடிக்க, சமைக்க, துவைக்க மற்றும் குளிக்கவும் இந்த தண்ணீர் மட்டுமே. கடந்த மூன்று நாட்களாக எங்களால் சரியாக குளிக்கவோ அல்லது சுத்தம் செய்துகொள்ளவோ முடியாமல் உள்ளது. இது ஒரு அவலம். இங்குள்ள முகாம் நிர்வாகம் எங்களை கவனிப்பதாக இல்லை." செப்டெம்பர் கடைசியிலும் அக்டோபர் முற்பகுதியிலும் வீசிய கடும் காற்று கூடாரங்களை சேதமாக்கியதோடு ஏற்கனவே சிரமத்தில் இருந்த வாழ்க்கை நிலைமையை மோசமாக்கியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள குமாரவேல் என்பவர் தெரிவித்ததாவது: "காற்று மரக் கிளைகளை உடைத்துவிடுவதோடு கூடாரங்களின் தகரங்களையும் தூக்கி வீசிவிடுகிறது. அவை கூடாரங்களின் மேல் விழுகின்றன. நாங்கள் வெளியிலேயே சமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. காற்றின் வேகத்தால் தூசியும் மண்ணும் சாப்பாட்டுக்குள் விழுந்து சாப்பிட முடியாமல் போய்விடும். இங்கு வாழ்வது சிரமமானது." முகாங்களில் கூட்டம் அளவு மீறியுள்ளது. ஐ.நா. நிர்ணயித்துள்ள தரத்தின்படி, 29,000 பேருக்கு மேல் இருக்க முடியாத மெனிக்பார்ம் வலயம் 2ல் 52,000 அகதிகள் உள்ளனர். இந்த முகாமில் வாழும் குமாரவேலின் குடும்பம் நான்கு பேர் உள்ள இன்னுமொரு குடும்பத்துடன் ஒரு கூடாரத்தை பங்கிட்டுக்கொண்டுள்ளது. பெண்கள் உள்ளே தூங்கும்போது ஆண்கள் வெளியில் படுத்துக்கொள்கின்றனர் அல்லது தற்காலிக வகுப்பறைகளில் தூங்குகின்றனர். இந்த அவசர கூடராங்களும் தங்குமிடங்களும் ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் அமைக்கப்பட்டவை. கடந்த மூன்று அல்லது ஆறு மாதங்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அவையும் சேதமாகி வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி, தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், முகாங்களை மூடவும், அகதிகள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப தேவையான உதவிகளை வழங்கவும் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகளை திருப்பியழைக்கவும் கோரிக்கை விடுக்க பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதில் அக்கறை காட்டும் அனைவருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு கண்டனக் கடிதங்களை அனுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. கட்டுரையாளர் இந்தக் கட்டுரையையும் வாசிக்குமாறு பரிந்துரைக்கின்றார்: இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் விடுதலையைக் கோருக கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரிகள்: Gotabhaya Rajapakse Lalith Weeratunga Please send copies to: |