World Socialist Web Site www.wsws.org |
: செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Roman Polanski denied bail in Switzerland சுவிட்சர்லாந்தில் ரோமன் போலன்ஸ்கிக்கு ஜாமீன் மறுப்பு By Hiram Lee சுவிஸ் நீதி அமைச்சு, சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் மேல்முறையீட்டை செவ்வாயன்று தள்ளுபடி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் சுரிச்சில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த போது, செப்டம்பர் 26ல் கைது செய்யப்பட்ட போலன்ஸ்கி, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற சாத்தியக்கூறுடன் ஒருபோதும் இல்லாதவகையில் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். ஓர் அறிக்கையில், நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் போல்கோ கல்லி அறிவித்ததாவது, "எங்களைப் பொறுத்த வரையில், அவர் தப்பிவிடுவதற்கான அதிகபட்ச அபாயம் இன்னும் இருப்பதாக உணர்கிறோம். அவரை ஜாமீனில் விடுவதோ அல்லது வேறு எந்தவித முறைமையாக இருந்தாலும், அவர் வெளியில் அனுப்பப்பட்டால், ஒப்படைப்பதற்கான வழிமுறையில் போலன்ஸ்கி இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார். போலன்ஸ்கியை ஒப்படைப்பதற்கான வழிமுறைகள் நடந்து கொண்டிருந்தாலும் கூட, அவரது வழக்கறிஞர்கள், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், Gstaad ல் உள்ள அவரின் வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்கள். போலன்ஸ்கியின் சார்பாக பேசிக் கொண்டிருந்த நீதியரசர் ஹெர்வ் டெமைம், தமது பிரதிவாதி நாட்டை விட்டு சென்றுவிடுவார் என்ற அமைச்சகத்தின் குற்றச்சாட்டை நிராகரித்தார். "ஒப்படைப்பு வழிமுறை முடியும் வரை போலன்ஸ்கி சுவிஸை விட்டு வெளியேற மாட்டார்" என்றும் அவர் தெரிவித்தார். ஒப்படைப்புக்காக காத்து கொண்டு, நிச்சயமாக போலன்ஸ்கி மாதக் கணக்கில் சிறையில் இருக்க வேண்டியிருக்கலாம் என்பது சுவிஸ் சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் 60 நாட்களுக்குள் ஓர் உத்தியோகபூர்வ ஒப்புடைப்பு கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும். சுவிஸ் நீதி அமைச்சின் கருத்துப்படி, இன்னும் அதுபோன்ற முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. 1977ல், கலிபோர்னியாவின் லோஸ் ஏஞ்சல்ஸில் செய்த ஒரு குற்றத்திற்கு பதிலளிக்க அந்த இயக்குனரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிய, அமெரிக்காவின் கட்டாயத்தின் பேரில் போலன்ஸ்கி சுரிச்சில் கைது செய்யப்பட்டார். போலன்ஸ்கி, அந்த ஆண்டு சமன்தா கெய்மர் (அப்போது சமன்தா கெய்லே) என்ற 13 வயது நிரம்பிய மாடலுடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் அந்த பெண்ணை Vogue பத்திரிகைக்காக புகைப்படமும் எடுத்திருந்தார். 1978 வரை தொடர்ந்து நடந்து வந்த நீதிமன்ற வழக்குகள், நீதிபதி லாரன்ஸ் ஜே. ரிட்டென்பேண்டின் தலைமையிலும், ஊடகங்களாலும் முறையற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. இச்சூழலை நீதிபதியே உருவாக்கி, ஊக்குவித்திருந்தார். இரண்டு தனித்தனி உளவியல் மதிப்பீடுகளைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நீதிபதி நிராகரித்ததற்கு பின்னர், வழக்கு முடிவதற்கு முன்னதாகவே, 1978 பெப்ரவரியில் அமெரிக்காவை விட்டு தப்பி விடுவதற்கு போலன்ஸ்கி முடிவெடுத்தார். போலன்ஸ்கி, "உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பாலியல் உணர்வாளர்" கிடையாது என்று கண்டறியப்பட்டது. போலன்ஸ்கியின் வழக்கு நடந்து கொண்டிருந்த போது, அவரின் மேல்முறையீட்டிற்கான சட்டரீதியான உரிமையை நீதிபதி ரிட்டென்பேண்ட் தந்திரமாக பறிக்க விரும்பியதோடு, மேலும், அவருக்கு சட்டரீதியான தொல்லைகள் ஏற்படும் போது, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அவரின் உரிமைக்காக எவ்வித கோரிக்கையையும் அவர் வைக்க கூடாது என்பதற்காக அந்த திரைப்பட இயக்குனரைக் அவர் கட்டாயப்படுத்தினார். உண்மையாகவே ஒரு நம்பமுடியாத சூழ்நிலையில், ரிட்டென்பேண்ட் வாதி மற்றும் பிரதிவாதியின் வழக்கறிஞர்களை வாதம் செய்ய உத்தரவிட்டார். ஏற்கனவே நீதிபதியின் வளாகங்களில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுக்காக, நீதிமன்றத்திற்குள் அவர்கள் வாதாட வேண்டும். இதன்மூலம் ரிட்டென்பேண்ட் பத்திரிகைகளிடம் இருந்து தப்பித்து கொள்ள முடியும். 1978ல் போலன்ஸ்கியின் வழக்கை தீவிரமாக சுற்றி வளைத்த ஊடகங்கள், மீண்டும் ஒருமுறை போலன்ஸ்கியின் சுவிட்சர்லாந்து கைது நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. மீண்டும் ஒருமுறை, முதலாளித்துவ ஊடகங்களின் இயந்திரங்கள், ஒரு பரந்த மக்களை திசைதிருப்பவும், அவர்களைக் குழப்பவும் அதன் ஆதார வளங்களை அணிதிரட்டி இருக்கின்றன. போலன்ஸ்கியின் கைது நடவடிக்கை குறித்த ஆழ்ந்த பிற்போக்குதனமான கருத்துக்கள், முக்கிய பத்திரிகைகளின் அச்சு பதிப்புகளிலும், இணைய பதிப்புகளிலும், அத்துடன் கேபிள் செய்தி சேனல்களிலும் காணக் கிடைக்கின்றன. போலன்ஸ்கி மீதான பல மோசமான சூழ்ச்சித் தாக்குதல்களில், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகருமான கூக்கி ரோபர்ட்ஸின் கருத்தும் வந்திருந்தது. "This Week" எனும் ஞாயிற்றுக்கிழமை காலை வட்டமேசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் அவர் போலன்ஸ்கியைப் பற்றி கூறி இருந்தார். இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக இணையத்திலும் காட்டப்பட்டது. அவர் தெரிவித்ததாவது: "என்னை பொறுத்த வரையில், அவரை வெளியில் எடுத்து கொண்டு போய், சுட்டுத் தள்ள வேண்டும்" என்றார். இந்த திரைப்பட இயக்குனர் ஒரு செல்வச் செழிப்பானவர், அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும் மேற்தட்டுக்களின் உறுப்பினர், அவரின் சுதந்திரத்தை பகட்டாக வெளிக்காட்டக் கூடியவர், அவரின் கடந்த கால குற்றங்களுக்கான தீர்ப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக ஆடம்பரமாக வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் பொதுவாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. போலன்ஸ்கியிடம் செல்வாக்கும், செல்வச் செழிப்பும் இருந்தன. ஆனால் படுகொலை, சித்திரவதை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிற குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் மீதான கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீதான வழக்கு என்பதோடு ஒப்பிடும் போது போலன்ஸ்கியிடம் இருந்த செல்வாக்கும், செல்வசெழிப்பும் முற்றிலும் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. மேல்தட்டுக்களின் மீது அவமானத்தின் அதிகபட்ச வெளிப்பாடுகள் கொதிநிலைக்கு வரப்பட்டிருந்தாலும், மிக முக்கியமான மற்றும் அழுத்தி கொண்டிருக்கும் பல சமூக கேள்விகள் ஊடகங்களால் மறைக்கப்படுகின்றன அல்லது அலட்சியம் செய்யப்படுகின்றன. போலன்ஸ்கியின் சிறைவாசம் உலக மக்களுக்கு எந்தவித ஆதாயத்தையும் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை. போலன்ஸ்கியின் வழக்கு நீடித்து வரும் நிலையில், இயக்குனர் குறித்து திசைதிருப்பும் தாக்குதல்களை ஊடகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விமர்சன பார்வையை வைத்திருப்பதும், இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் அடித்தளத்திலும், உந்துதலிலும் இருக்கும் வர்க்க பிரச்சனைகள் குறித்து விழிப்பாக இருப்பதும், மிகவும் அவசியமாகும். |