World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Trotskyists mark seventieth anniversary of World War II

ஐரோப்பிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் இரண்டாம் உலகப் போரின் எழுபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூர்கின்றனர்

By our reporter
14 October 2009

Back to screen version

அக்டோபர் 11ம் தேதி நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகள் இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகள் பற்றி லண்டனில் ஒருங்கிணைந்த கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டம் பிரிட்டன் மற்றும் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சிகளால் கூட்டாகக் கூட்டப்பட்டது. இதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரெஞ்சு ஆதரவாளர்களும் பங்கு பெற்றனர். கடந்த நூற்றாண்டில் இரு முறை போரினால் சிதையுண்ட கண்டத்தில் ஐரோப்பிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளின் கூட்டம் நடைபெறுவதில் அசாதாரண முக்கியத்துவத்தை பற்றி கூட்டத்தின் தலைவரான சோசலிச சமத்துவக் கட்சி தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் குறிப்பிட்டார்.

மார்ஸ்டன் கூறினார்: "ஒரு பொது ஆர்வம் என்று இல்லாமல் அரசியல் அக்கறையின் காரணமாக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது வெறும் வரலாற்று ஆர்வத்திற்கும் அப்பாற்பட்ட பிரச்சினைகளை பற்றி நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அங்கீகாரம். நவீன சகாப்தத்திற்கு தேவையான ஒரு அடிப்படை புரட்சிகர முன்னோக்குப் பிரச்சினையான போருக்கு எதிரான ஒரு புரட்சிகர முன்னோக்கினை அபிவிருத்திசெய்வது பற்றி விவாதிப்பதற்கு இங்கு கூடியுள்ளோம்.

"எமது போக்கு தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேற்றமடைந்துள்ள பிரதிநிதிகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்க முற்படுவது ஆகும். ஒரு கட்சி என்ற முறையில் அந்த முன்னணியை அமைத்துப் பயிற்றுவிக்க வேண்டியது நம்முடைய பணி ஆகும். அது முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மூலோபாய கட்டுப்பாட்டை பெறுவதற்காக வர்க்கத்தின் வரலாற்று நினைவாக்கப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த பார்பரா சுலோட்டர் கூட்டத்தில் முதலில் பேசினார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சுலோட்டர் நீண்டகால அங்கத்தவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் தொடங்குகையில் 12 வயதை அடைந்திருந்த சுலோட்டர், இளைஞர்களிடம் போரின் பாதிப்பைப் பற்றி விளக்குகையில் அவர் எப்படி சோசலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்றும், ஒரு புரட்சிகர முன்னோக்கை அடைவதில் இருந்து அவருடையதும் அவருடைய பெற்றோர்களுடைய தலைமுறையின் மீதான ஸ்ராலினிசத்தின் செல்வாக்கினால் தடுக்கப்பட்டார் என்பதையும் விளக்கினார்.

"நான் போரின்போது ரஷ்ய தொழிலாளர்கள் காட்டிய வீரத்துடன் அக்கட்சியை அடையாளம் கண்டதாலும் மற்றும் நான் ஒரு தவறான கருத்தில் அது ஒரு புரட்சிகரக் கட்சி என்று நினைத்ததாலும் 1945ல் 18வயதில் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். மில்லியன் கணக்கான மற்றவர்களைப் போலவே இனி தொழிலாள வர்க்கத்திற்கு நான் பார்த்திருந்த போருக்கு முந்தைய கஷ்டங்கள் திரும்பிவரக்கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தேன்....

"ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புரட்சிகரக் கட்சி என்பதற்கு மிகவும் அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஆனால் நான் வேறு மாற்றீடு எதையும் காணவில்லை. 1958ல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேரும் வரை, 1956 ஹங்கேரிய புரட்சிக்கு பின்னர்தான், நானும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னாலும், போரின்போதும், போருக்குப் பின்னரும் பெற்ற அனுபவங்களின் அர்த்தங்களை அறிந்து கொண்டேன்."

சுலோட்டரின் தாயார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். எனவே சுலோட்டர் ஸ்பெயின் நாட்டுப் புரட்சியை ஸ்ராலின் காட்டிக் கொடுத்ததின் முக்கியத்துவத்தை விவாதித்துடன், அதே போல் சோவியத் அதிகாரத்துவம் இரண்டாம் உலகப் போரை ஜேர்மனிக்கு எதிரான "பெரும் நாட்டுப் பற்றுப் போர்" என்று சித்தரித்து குழப்பத்தை ஏற்படுத்தியதையும் கூறினார். போரின்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஜேர்மனிய தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் கோடிட்டுக் காட்டினார். அவை இன்று புறக்கணிக்கப்படுகின்றன அல்லது பிரிட்டனின் ஆளும் உயரடுக்கினால் கொண்டாடப்படுவதில்லை.

பிரான்சுவாஸ் துல் நாஜி ஆக்கிரமிப்பின்போதும், மார்ஷல் பிலிப் பெத்தனின் ஒத்துழைப்புக் கொடுத்த காலத்திலும் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் கொண்ட அனுபவத்தைப் பற்றிப் பேசினார். இவரும் வர்க்க ஒத்துழைப்பின் மூலம் தொழிலாள வர்க்கத்தை ஆயுதமிழக்கச் செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு பற்றி குவிப்புக் காட்டினார். மக்கள் முன்னணியின் கொள்கைகள் 1936 பொது வேலைநிறுத்தத்தின்போது தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்துடன் கொண்ட புரட்சிகர மோதலை திசை திருப்பின.

துல்லின் குடும்பம் Saree யில் இருந்து வந்தது. அது பிரெஞ்சு, ஜேர்மனிய ஏகாதிபத்தியங்களால் மாறி மாறி ஆளப்பட்ட பகுதி ஆகும். 1935ல் Sarre ல் வாக்கெடுப்பிற்கு பின்னர் அப்பகுதி ஹிட்லரால் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, அவருடைய சோசலிச சிந்தனையுடைய பாட்டனார், பாட்டி மற்றும் அவர்களுடைய மூத்த மகனும் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டனர். இவருடைய தந்தையார் பிரெஞ்சு இராணுவத்தில் பணிபுரிந்து நாஜி இராணுவத்திற்கு (Wehrmacht) எதிராக, Pétain ஆட்சி நிறுவப்படும் வரை போராடினார். இவருடைய மாமனார் ஜேர்மனிய இராணுவத்திற்காக ரஷ்ய போர்முனையில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டார். அவர் திரும்பி வரவே இல்லை.

பிரெஞ்சு முதலாளித்துவம் யூதர்கள், இடதுசாரிகள், நாடோடிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் இன்னும் பலரையும் நாடுகடத்துதல், அழித்தல் ஆகியவற்றிற்கு ஒத்துழைத்தனர் என்று துல் விளக்கினார். போருக்குப் பின்னர், "பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பெரும்பான்மையானவர்கள் முற்றிலும் இழிவுபடுத்தப்பட்ட நிலையில், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீன இயக்கத்தையும் தடை செய்தனர். இதன் பொருள் பிரான்சில் தீவிர ட்ரொட்ஸ்கிச சக்திகளை மிருகத்தனமாக அடக்குவது என்பதாகும். கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை மீட்பதற்கு பாடுபட்டது. அதாவது இலாபவகை பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமைகளை ஏற்றி பாதுகாத்துக்கொள்ளுதலாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரும், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான பீட்டர் சுவார்ட்ஸ் கூட்டத்திற்கு ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை விளக்கினார்.

ஜேர்மனிய முதலாளித்துவத்தின் முன்விழைவான ஐரோப்பிய, உலக சக்தியாக வரவேண்டும் என்பதில் இருந்துதான் பாசிசம் வளர்ச்சியுற்றது. ஆனால் இதற்கு சக்தி வாய்ந்த சோசலிச தொழிலாளர் இயக்கம் அழிக்கப்படவேண்டியது தேவையாகிற்று. "ஹிட்லரின் யூதஎதிர்ப்பு அவருடைய சோசலிச இயக்கத்தின்பால் கொண்டிருந்த வெறுப்புடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தது" என்று சுவார்ட்ஸ் விளக்கினார்.

"பெரிய தொழிலாளர் கட்சிகளான" சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுத் தோல்வியினால்தான் ஹிட்லர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடிந்தது.

பாசிசத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டம் நடத்துவதை சமூக ஜனநாயகக் கட்சி எதிர்த்தது. மாறாக அது ஜேர்மனிய அரசாங்கத்தை பாதுகாக்கும் கட்சி என்று தன்னை முன்வைத்தது. அதுதான் ஹிட்லருக்கு எதிரான ஒரே பாதுகாப்பு எனக்கூறியது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு படி மேலே சென்று தன்னை சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து, ஹிட்லர் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளுவதற்கு மூன்றரை மாதங்கள் முன்னால் ஒதுங்கிக் கொண்டது. தன்னுடைய விசுவாசத்தை நாஜி ஆட்சிக்கு உறுதியளித்து, "தான் பெற்ற அனுபவம், அறிவு அனைத்தையும் அரசாங்கம், பாராளுமன்றம் ஆகியவற்றிற்கு உதவும் வகையில் நடப்பதாக" அறிவித்தது.

ஸ்ராலின் மற்றும் மூன்றாம் அகிலத்தின் செல்வாக்கின்கீழ் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சியை "சமூக பாசிஸ்ட்டுக்கள்" என்று கண்டித்து, பாசிச ஆபத்திற்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் நடத்துவதை நிராகரித்தது. "ஒரு ஐக்கிய முன்னணிக் கொள்கைக்காக அயராமல் ட்ரொட்ஸ்கி போராடினார்." என்றார் சுவார்ட்ஸ். "இது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமூக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்தவும், சமூக ஜனநாயக தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் சமூக ஜனநாயகத் தலைவர்களை அம்பலப்படுத்தவும் அனுமதித்திருக்கும்."

"ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய கொள்கையை ஏற்க மறுத்தது ஜேர்மனிய பேரழிவிற்கு வழிவகுத்தது." என்றார் அவர். கம்யூனிச அகிலத்தில் இருந்த கட்சிகள் இந்த பெரும் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்ததுதான் ட்ரொட்ஸ்கியை ஒரு புதிய, நான்காம் அகிலத்தை நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கச் செய்தது.

உலக சோசலித வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவ கட்சியின் முன்னணி உறுப்பினருமான ஜூலி ஹைலன்ட் கூட்டத்தில் முடிவுரையாக எப்படி இரண்டாம் உலகப் போர் உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் போராட்டத்தில் வெளிப்பட்டது, குறிப்பாக யூரேசிய நிலப்பகுதி மீதான ஆதிக்கத்திற்கு, என்று விவரித்தார்

உலக ஆதிக்கத்திற்கான முதல் தற்கால "யுரேசிய மூலோபாயம்" (Eurasian strategy) பிரிட்டனில் ஏகாதிபத்திய மூலோபாயவாதியான Halford Mackinder ஆல் அவருடைய 1904ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரையான ''வரலாற்றின் பூகோளரீதியான முக்கியத்துவம்'' (The Geographical Pivot of History) என்பதில் விளக்கப்பட்டது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை ஒரு "உலகத் தீவு" என்று விவரித்த Mackinder "கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவர்கள் மத்திய ஐரோப்பிய நிலங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுவர்; மத்திய ஐரோப்பாவை ஆளுபவர்கள் உலகத் தீவை கட்டுப்படுத்துவர்; உலகத் தீவு உலகத்தை கட்டுப்படுத்துகிறது." என்று வலியுறுத்தினார்.

Mackinderன் பகுப்பாய்வின் மீதான அக்கறை என்பது ஒரு புத்துயிர்ப்பை அடைந்துள்ளது. ஏனெனில் இதேபோன்று "உலகத் தீவு" மற்றும் அதன் இருப்புக்களுக்கான" கட்டுப்பாட்டைப் பெற போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று ஹெலன்ட் விளக்கினார். இது ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களிலும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தலிலும் வெளிப்பட்டுள்ளது. "நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு வலியுறுத்துவது போல், உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகள் கடந்த பின்னரும், இது ஒரு தொடர்ச்சிபோல்தான் உள்ளது; 20ம் நூற்றாண்டின் முதல் பாதியின் சிறப்புக் கூறுபாடாக இருந்ததைப் போல், ஆனால் இன்னும் தீவிரமான அளவில் வெளிப்பட்டுள்ளது.

"அனைத்து மூலப்பொருட்கள், இருப்புக்களுக்கான கட்டுப்பாட்டிற்கு" புதுப்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் ஒரு புறநிலைத் தர்க்கம் உள்ளது" என்றார் ஹைலன்ட். "இந்நேரம் வரை, அமெரிக்க ஒருதலைப்பட்சம் பற்றிய கவலை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பதிலளிப்பை பெரிதும் தீர்மானித்தது" ஆனால் இது அனைத்து முக்கிய சக்திகளிடையே விரோதப் போக்கு பெருகியிருக்கையில் மாறிவருகிறது.

உலக மேலாதிக்கத்திற்கான போராட்டத்தின் மையத்தானத்தில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தின் மேலான மகத்தான தாக்குதல் உள்ளது" என்று அவர் கூறினார்; இந்தத் தாக்குதல் உலகப் பொருளாதார நெருக்கடி மோசமாகையில் இன்னும் ஆழ்ந்து போகும் என்று சேர்த்துக் கொண்டார்.

"இன்று, வரலாற்றில் முதல் தடவையாக, ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலாக, அல்லது கிட்டத்தட்ட உலகில் வசிப்பவர்களில் ஆறுபேருக்கு ஒருவர் பசியில் வாடுகிறார்.... முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் பிணை எடுப்புக்களைத் தவிர, வேலைகளைக் காப்பாற்றுதல் இல்லை, வேலையின்மை எல்லா இடத்திலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அது ஊதியங்களைக் குறைக்கவும் தொழிலாளர்கள் பணிநிலையை குறைக்கவும் பயன்படுகின்றன. அக்டோபர் 8ம் தேதி மார்ட்டின் வொல்ப் பைனான்ஸியல் டைம்ஸில் "இந்த நெருக்கடி கட்டுப்பாட்டைச் சுமத்தவும், சீர்திருத்தங்களை செய்யவும் ஒரு பொற்காலமாக உள்ளது." என கூறியுள்ளார் என்றார் ஹைலன்ட்.

"வணிக, இராணுவப் போர் என்பது ஒரு பெரிய சமூக மறுசீரமைப்பிற்கும் உள்நாட்டு வாழ்வில் பெருகிய இராணுவ முறைக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இடமளிக்கும்" என்று ஹைலன்ட் விளக்கினார். எனவேதான் போர் ஆபத்திற்கு எதிர்ப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின் பேரழிவுக்கு எதிரான எதிர்ப்பு என்பவை முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும், அது அடித்தளமாக கொண்டிருக்கும் தேசிய அரசுமுறைக்கு எதிரான போராட்டமாக இருக்க வேண்டும் என்று அவர் முடித்தார்.

கூட்டம் பற்றி பார்வையாளர்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டி, பலரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 2,700 பவுண்டிற்கும் மேல் நன்கொடை கிடைத்தது. இக்கூட்டத்தில் நடைபெற்ற பல உரைகளை உலக சோசலிச வலைத் தளம் விரையில் வெளியிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved