World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama tops Bush in troop buildup

துருப்புக்களைக் குவிப்பதில் ஒபாமா புஷ்-ஐ விட உயர்ந்தார்

Bill Van Auken
14 October 2009

Back to screen version

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ள மொத்த அமெரிக்க துருப்புக்கள், இப்பொழுது ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஜனாதிபதி காலத்தில் கூட இல்லாத உயர்ந்த அளவை அடைந்துள்ளது. ஒபாமாவிற்கு முந்தையவர் ஏற்படுத்திய உயர் எண்ணிக்கையையும் கடந்து நிற்கும் இந்த விரிவாக்கம் அமெரிக்க இராணுவவாதத்தின் விரிவாக்கத்தை ஒபாமா நிர்வாகம் செய்துள்ளதில் கடுமையான அடுத்த மைல்கல்லை குறிக்கிறது.

கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 21,000 அமெரிக்க துருப்புக்கள், கடற்படைனர்கள் என்று ஒபாமா உத்தரவிட்டு அனுப்பப்பட்டதை தவிர, மற்றொரு 13,000 "துணை" துருப்புக்கள் ஆரவாரமின்றி அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் இன்றி அனுப்பப்படுகின்றனர் என்று செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஈராக் போர் விரிவாக்கத்தின்போது புஷ் நிர்வாகம் பயன்படுத்திய வழிவகைகளின் மறு பதிப்பு போல்தான் இத்தகைய விரிவாக்கமும் உள்ளது; அப்பொழுது கூடுதல் 20,000 துருப்புக்கள் அனுப்பப்பட்டது அறிவிக்கப்பட்டதே ஒழிய, அவர்களுடன் அனுப்பப்பட்ட துணை வீரர்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

இரண்டிலுமே முழு எண்ணிக்கையும் அறிவிக்காதது ஒன்றும் தெரியாமல் விடுபட்டுப் போன நிகழ்வுகள் அல்ல. தனக்கு முன் இருந்த புஷ்ஷைப் போலவே, ஒபாமாவும் அவர் மேற்பார்வையின்கீழ் நடக்கும் இராணுவக் குறுக்கீடுகள் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியைக் கொடுக்கின்றன என்பதை நன்கு உணர்வார்.

போஸ்ட் கொடுத்துள்ள துருப்பு எண்ணிக்கைப்படி, இப்பொழுது ஆப்கானிஸ்தானில் 65,000 அமெரிக்க சிப்பாய்கள், ஈராக்கில் மற்றும் ஒரு 124,000 என்று மொத்தத்தில் 189,000 அமெரிக்க இராணுவத்தினர் இரு காலனித்துவ பாணியிலான போர்கள், ஆக்கிரமிப்புக்களை நடத்தி வருகின்றனர். புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிய "விரிவாக்கத்தின்" உச்சக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் 26,000 அமெரிக்கத் துருப்புக்களும் ஈராக்கில் 160,000 சிப்பாய்களும் என மொத்தத்தில் 186,000 சிப்பாய்கள் இருந்தனர்.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை தொடரும் கொள்கைகளை ஒட்டி இந்த எண்ணிக்கைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகும் என்றுதான் அடையாளம் தெரிகிறது.

வார இறுதியில், செய்தி ஊடகத்திற்கு இராணுவ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் கூடுதல் துருப்புக்கள் கோரி அனுப்பிய திட்டத்தில் அதிகபட்சமாக 80,000 சிப்பாய்கள் கேட்கப்பட்டிருந்தனர்--இது இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைநிறுத்தப்பப்படும் 68,000 சிப்பாய்களை தவிர கேட்கப்படும் எண்ணிக்கையாகும்.

உத்தியோகபூர்வ ஆதாரங்களை எதிரொலித்து நியூ யோர்க் டைம்ஸ் இந்த அதிக சிப்பாய்கள் தேவை என்ற வேண்டுகோள் "வெள்ளை மாளிகையால் தீவிரப் பரிசீலனை செய்யப்படுவது அநேகமாக இயலாது" என்ற கருத்தைக் கூறியுள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடும் என்றாலும்--தற்போதைக்கு--எண்ணிக்கையை கசியவிட்டது ஒரு உறுதியான அரசியல் நோக்கத்திற்கு உதவுகிறது; அது ஒபாமாவின் இறுதி ஒப்புதல் ஒரு சிறிய விரிவாக்கத்திற்கு இருக்கும் என்பது; அப்படியும் அது பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று உள்ளது; இது வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் இடையே நியாயமான சமரசமாகத் தோன்றுகிறது.

பிரிட்டனுக்கு இந்த வாரம் சென்றிருந்தபோது, வெளிவிவகார அமைச்சர், ஹில்லாரி கிளின்டன் ஆப்கானிஸ்தானிய போரைத் தொடரும் அமெரிக்க கடப்பாட்டை வலியுறுத்தினார்: "நாங்கள் எங்களுடைய மூலோபாயத்தை மாற்றிக் கொள்ளவில்லை; அல் கொய்தா மற்றும் அதன் தீவிரவாத நட்பு அமைப்புக்களை தடைக்கு உட்படுத்துதல், தகர்த்தல், அவற்றைத் தோற்கடித்தல் என்பதுதான் அது; அதே போல் அவர்களுக்கு இங்கு லண்டனிலோ, நியூ யோர்க்கிலோ அல்லது எங்கும் பாதுகாப்பான புகலிடத்தை மறுப்பதும் எங்கள் நோக்கம்தான்" என்று ஒரு வானொலிப் பேட்டியில் அவர் கூறியிருந்தார். "எங்களுடைய உறுதி பற்றியோ, தலைமை பற்றியோ எவரும் சந்தேகப்படத் தேவையில்லை. அல் கொய்தாவை தோற்கடிக்கும் வரை நாங்கள் வாளாவிருக்க மாட்டோம்."

புஷ்ஷின் வெள்ளை மாளிகை புதிதாகக் கொண்டுவந்த "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற சொற்றொடரை ஒபாமா நிர்வாகம் மாற்றினாலும், அது தொடர்ந்து இந்த சொற்றொடரின் அடித்தளத்தில் இருக்கும் வழிவகைகளைத் தழுவித்தான் நடக்கிறது என்பதை கிளின்டனின் கருத்துக்கள் தெளிவாக்குகின்றன.--அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பு, படையெடுப்புப் போர்களை ஏற்பதற்கு அமெரிக்க மக்களை அச்சுறுத்துவது என்பதை.

60,000 அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பிவைத்து--இன்னும் பல ஆயிரக்கணக்கான சிப்பாய்களை அனுப்ப இருப்பது-- அல் கொய்தாவுடன் ஆப்கானிஸ்தானில் போராட, மற்றொரு 9/11 ஐத் தடுக்க என்று பேசுவது வெளிப்படையான போலிக்காரணம் ஆகும். உயர்மட்ட அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் அல் கொய்தாவுடன் இணைந்துள்ள தனிநபர்கள் மொத்தமே கிட்டத்தட்ட 100 பேர்தான் என்று ஒப்புக் கொள்ளுகின்றனர்; அவர்களுக்கு மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும் வழிவகை இல்லை என்று கூறுகின்றனர். மக்கிரிஸ்டலின் கூடுதல் துருப்புக்கள் வேண்டுகோள் ஒருவேளை ஏற்கப்பட்டால், ஒவ்வொரு அல் குவைதா உறுப்பினருக்கும் ஆப்கானிஸ்தானில் 1,000 அல்லது அதற்கும் கூடுதலான அமெரிக்க சிப்பாய்களும், கடற்படையினர்களும் இருப்பர்.

இராணுவ விரிவாக்கத்தின் இலக்கு அல் குவைதா அல்ல; மாறாக ஆப்கானிஸ்தான் மக்கள்தான். ஆக்கிரமிப்பிற்கு பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை வாஷிங்டன் அடக்குவதற்கு முற்பட்டு, கணக்கிலடங்கா ஆப்கானியர்கள் உயிரையும், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்களின் உயிர்களையும் அந்த இலக்கை அடைவதற்கு தியாகம் செய்ய அது தயாராக உள்ளது.

"பயங்கரவாதத்தை" தோற்கடித்தல் என்பது வாஷிங்டனால் ஆப்கானிஸ்தானிலோ, ஈராக்கிலோ தொடரப்படும் மூலோபாய நோக்கம் அல்ல. இரு நாடுகளிலும் அமெரிக்க இராணுவத்தின் வலிமை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதின் காரணம் மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா என்னும் உலகின் சக்தி அளிப்பு இடங்களின் மிகப் பெரிய இரு ஆதாரங்கள்மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதுதான்.

இந்த துணிகரச்செயலின் செலவினங்கள் திறன் மகத்தானவை ஆகும். கடந்த ஜனவரி மாதம் பென்டகன் தயாரித்த ஒரு அறிக்கை "குறைந்தது பல தசாப்தங்களுக்கு" ஆப்கானிஸ்தானை ஒரு உறுதியான, வாடிக்கை நாடாக மாற்றுவதுதான் அமெரிக்க இலக்கு ஆகும் என்று விவரித்துள்ளது. NBC யின் "Meet the Press" ல் ஞாயிறன்று தோன்றிய தளபதி பாரி மக்காப்ரி (ஓய்வு பெற்றவர்), சற்றே நம்பிக்கையுடன் பெரும் போரைத் தவிர, இலக்கை அடைய "மாதம் ஒன்றிற்கு 5 பில்லியன் டாலர் வீதம்" 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றார்.

இதற்கிடையில் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறும் காலக்கெடு 2012 என்று கூறப்பட்டுள்ளதை நம்புவதற்கு காரணம் ஏதும் இல்லை. மாறாக, அமெரிக்க ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்திரமற்றதன்மை மற்றும் தொடர்ந்த எதிர்ப்பு மற்றும் ஈராக்கிய சமூக அழிவு ஆகியன, ஆக்கிரமிப்பைத் தொடரவும் நாட்டின் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்க கட்டுபாட்டை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

அமெரிக்க தலையீடுகள் என்ற அச்சுறுத்தல் இன்னும் புதிய, கூடுதல் குருதி கொட்டும் பூசல்களுக்கு தூண்டுதலாக இருக்கும்; அவை பெருகும் என்பதற்கு பாக்கிஸ்தானில் பெருகிவரும் நெருக்கடி, மற்றும் ஆப்கானிஸ்தான் போரினால் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பெருகியுள்ள பதட்டங்களே சான்று ஆகும்.

இப்பொழுது வெள்ளை மாளிகையில் நடக்கும் விவாதம் முடிவில்லா போர்கள், ஆக்கிரமிப்புக்களுக்கு தலைமுறை தலைமுறையாக இளம் அமெரிக்கர்களை அனுப்புவதற்கு உறுதி செய்யப்படும் தன்மையைத்தான் கொண்டுள்ளது.

மிக அவசரமாக தேவைப்படும் வேலைகளை தோற்றுவித்தல், அடிப்படை சமூகப் பணிகள், ஆகியவற்றிற்கு நிதி மறுக்கப்படும் நிலையில், இன்னும் அதிக சமூக செல்வம் அமெரிக்க இராணுவத்தை கட்டமைப்பதற்கு திசைதிருப்பிவிடப்படும்.

ஆப்கானிய போர் குறிப்பிடத்தகுந்தவகையில் போர்த் தீவிரமாவது நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் இராணுவ படைவீரர்களின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்புக்களாலும் இராணுவம் ஏற்கனவே முறிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் 40,000 கூடுதல் துருப்புக்களுக்கு ஒபாமா ஒப்புதல் கொடுத்தாலும், அந்த எண்ணிக்கையில் சிப்பாய்கள் உடனடியாகத் திரட்டப்பட முடியாது.

இரட்டை இலக்க வேலையின்மையானது இளைஞர்களை ஐயத்திற்கு இடமின்றி இராணுவத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க அரசியல் நடைமுறை உள்ளது; இதையொட்டி கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவரவேண்டும், இளைஞர்கள் காலனித்துவ போர்களில் போராட இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான புறநிலை அழுத்தம் பெருகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மில்லியன் கணக்கான மக்கள் ஒபாமாவின் தேர்தல் வெற்றி புஷ்ஷினால் தொடக்கப்பட்ட இராணுவவாத பெருக்கத்தை அகற்றிவிடும் என்ற வெற்று நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்தனர். ஆப்கானிஸ்தான் போர் பற்றி பெருகிய மக்கள் உணர்வைப் போலவே, அவர்களுடைய வாக்குகள் ஒபாமா நிர்வாகத்தால் பொருட்படுத்தப்படாமல், அது பணிபுரியும் நிதியத் தன்னலக்குழுவின் நலன்களுக்காக இந்த போர்த்தீவிரம் தொடர்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved