World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama's Olympic failure ஒபாமாவின் ஒலிம்பிக் தோல்வி By Tom Eley 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களை, தம்மைத் தத்தெடுத்த நகரமான சிகாகோவில் நடத்த முயற்சித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியானது, அவரின் நிர்வாகத்தின் பாத்திரத்தையும், முன்னுரிமையையும் பெருமளவிற்கு எடுத்து காட்டியது. சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் (IOC) ஒரு பிரத்தியேக கோரிக்கையை கையளிக்க அக்டோபர் 2ல் ஒபாமா கொபென்ஹாகன் சென்றிருந்தார். சிகாகோ, மட்ரிட், ரியோ டி ஜெனிரோ மற்றும் டோக்கியோ ஆகிய நான்கு நகரங்கள் இறுதி தேர்வில் இடம் பெற்றிருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், ஒரு பில்லியனயருமான ஓபரா வின்ஃப்ரே செய்ததைப் போல, சிகாகோ சார்பிலான முயற்சிகளில் மிசெல் ஒபாமா ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். ஓபரா வின்ஃப்ரியின் நிகழ்ச்சியும் அதே நகரத்தில் இருந்து தான் ஒளிபரப்பாகி வருகிறது. 2016 விளையாட்டுக்களை நடாத்தும் இறுதி பட்டியலில் உள்ளவற்றில் சிகாகோவிற்கு சாதகமாக இருப்பதாகவும், இதில் அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்யேக தலையீடு நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் ரசிகர்களுக்கு உறுதியளித்தன. நிகழ்ச்சியின் போது, முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே சிகாகோ நிராகரிக்கப்பட்டு, இறுதியாக ரியோ டி ஜெனீரோவில் நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரேசில், ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தும் முதல் தென் அமெரிக்க நாடாகும். "முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, இதை லேசாக எடுத்து கொள்ள முடியாது," என்று ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜனாதிபதி பதவி வரலாற்றாளர் ஸ்டீபன் ஹெஸ் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தலையிட்ட அரசு தலைவர் ஒபாமா மட்டும் கிடையாது. மட்ரிட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஸ்பெயின் அரசரும், அரசியுமான ஜூவான் கார்லோஸ் மற்றும் சோஃபியா ஆகியோரும் பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ரொட்ரிகஸ் ஸபடேரோவுடன் கொபென்ஹாகனில் கலந்து கொண்டார்கள். ரியோடி ஜெனீரோ மற்றும் டோக்கியா ஆகியவற்றிற்கு ஆதரவாக அழைப்புவிட முறையே பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவும், புதிய ஜப்பானிய பிரதம மந்திரி யூகியோ ஹெரோயாமாவும் கலந்து கொண்டார்கள். மாபெரும் மந்தநிலைமைக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உலகம் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பரந்த வர்த்தக செலவுகளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அரசு தலைவர்கள் தவித்து கொண்டிருப்பதானது, இப்புவியில் வாழும் மக்களின் வேதனைகளுக்கும், யார் பெயரில் இந்த விளையாட்டுக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தான் தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஸ்பெயினில் ஐந்தில் ஒரு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இரண்டு தசாப்தங்களில் காணாத பின்னடைவின் ஒரு பாகத்தை ஜப்பான் அனுபவித்து வருகிறது. ஒலிம்பிக் நகரம் என்று மெழுகுபூச்சு கொண்ட பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, மேற்கத்திய பிராந்தியத்தில் மிக அதிகமான ஏழ்மையைக் கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் சிகாகோவிற்கு சார்பான ஒபாமாவின் முறையீட்டில், ஏதோவொன்று குறிப்பாக குறைப்படுகிறது. அமெரிக்க அரசியிலில் எப்போதும் இருப்பது போல, ஒபாமாவின் தலையீடு கடுமையாக இருந்தது, மேலும் மறைமுகமாகவும், வர்த்தக நலன்களை சார்ந்தும் இருந்தன. சிகாகோவிற்கு சார்பாக ஒலிம்பிக் குழுவிடம் ஒபாமாவின் கோரிக்கையானது, பல ஆண்டுகளுக்கு முன்னர், வெளியில் தெரியாத Illinois மாகாண செனட்டராக இருந்தவரை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய வர்த்தக மற்றும் நில வியாபாரிகளின் நலன்களுக்கு செய்யும் கைமாறாகும். Hyatt Hotel empireன் பெண் உரிமையாளரான பென்னி பிரிட்ஜ்கெர், சிகாகோ ஒலிம்பிக் விளையாட்டு முயற்சியிலும், ஒபாமாவின் தேர்தல் நிதிக்குழுவிலும் பின்னணியில் இருந்த ஒரு முக்கியமானவர் ஆவார். அவரின் மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் 1பில்லியன் டொலருக்கும் அதிகமானது என போர்பஸ் தெரிவித்துள்ளது. ஒபாமாவின் தொடக்கவிழா குழுவின் இணை-தலைவராக இருந்த பாட்ரிக் ரியானும் சிகாகோ ஒலிம்பிக் குழுவின் தலைவராக இருந்தார். சிகாகோவின் முக்கிய இடத்தில் இடத்தில் அமைந்திருக்கும், பல மில்லியன் டாலர் மதிப்பிலான Aon corporation இலும் ரியான் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இந்நிறுவனம் சிறப்பு காப்பீட்டு திட்டங்களைக் கவனிக்கிறது. ஒபாமாவின் முக்கிய அரசியல் ஆலோசகரான டேவிட் ஆசெல்ராட் ஏற்கனவே சிகாகோ முயற்சியில் நிதி ஆதாயம் பெறுபவராக இருக்கிறார். AKDP Media எனும் அவரின் மக்கள் தொடர்பு நிறுவனம், நகர மேம்பாட்டு முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. இதற்கடுத்தபடியாக, ஒபாமாவின் மிக நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரும், சிகாகோ நில வியாபார மில்லியனருமான வலரி ஜெரற் எனும் பெண்மணி இருக்கிறார். ஊடக செய்திகளின்படி, ஒபாமா சென்றால் சிகாகோவின் முயற்சியை பாதுகாக்க முடியும் என்று அவருக்கு அறிவுறுத்தி, கொபென்ஹாகனுக்கான கடைசி நிமிட ஒபாமாவின் பயணத்திற்கு அவரை சமாதானப்படுத்தி அனுப்பியது ஜெரற் தான். சிகாகோ மற்றும் Illinois மாகாண ஜனநாயகக் கட்சி இயந்திரங்களும் இந்த முயற்சிக்கு பின்னால் இருக்கின்றன. சிகாகோ நகரசபை தலைவர் ரிச்சார்ட் டேலி மற்றும் Illinois ஆளுநர் பேட்ரிக் குவின் ஆகியோரும் ஒபாமாவுடன் டென்மார்க்கிற்கு பயணித்திருந்தார்கள்.செல்வசெழிப்பும், அரசியல் தொடர்பும் கொண்ட இதுபோன்ற நலன்களுக்கு ஒலிம்பிக் விளையாட்டுக்களையும், பிற முக்கிய விளையாட்டுக்களையும் நடத்துவதென்பது ஒரு வரமாக அமையும். விளையாட்டு அரங்குகளை மேம்படுத்தவும், உருவாக்கவும் பெருமளவிலான ஆதாரவளங்கள் தேவைப்படும், சிறப்பார்ந்த குடியிருப்புகள், அழகுபடுத்தல்கள் மற்றும் போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றலாம், இதன் மூலம் தவிர்க்கமுடியாமல் உண்மையான சமூக தேவைகளில் இருந்து நிதிகளைத் திருப்பி விடலாம். நகர தொழிலாளர்களை வெளியேற்றியதன் மூலமாகவும், பள்ளிகளை மூடியும், முக்கிய சமூக சேவைகளில் வெட்டுக்களை ஏற்படுத்தியும் சிகாகோ அதன் ஒலிம்பிக் ஒப்பந்தப் புள்ளிகளுக்கு மட்டுமே 50 மில்லியன் டாலரை செலவிட்டிருக்கிறது. சமீபத்திய மாதங்களில் வேலையிழப்பு, வீடு இழப்பு, பசி மற்றும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது. நகரத்தின் ஒலிம்பிக் முயற்சியின் மறுபக்கத்தில், ஒரு பதினாறு வயது நிரம்பிய சிகாகோ உயர்நிலை பள்ளி மாணவர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டிருப்பதையும் சிகாகோவில் உள்ள சர்வதேச செய்தி ஊடகங்கள் கடந்த வாரம் எடுத்துக்காட்டின. முன்னர் சிகாகோ பொதுக்கல்வி துறையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவரும் தற்போது ஒபாமாவின் கல்வித்துறை செயலாளராக இருக்கும் அர்னே டன்கன், பதவியில் இருந்தபோது போது டஜன் கணக்கான பள்ளிகள் மூடி, இதனால் பள்ளிகளுக்கு செல்லும் பாதையில் விரோத கும்பல்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டதிலிருந்து சிகாகோவில் இளைஞர்களின் மனிதப் படுகொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. சிகாகோவின் ஒலிம்பிக் முயற்சி மக்களின் குறைந்த ஆதரவை பெற்றது, சிலரால் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. Chicago Tribuneன் சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்களின்படி, கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 47 சதவீதத்தினர் மட்டும் அந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிந்திருந்ததாகவும், அந்நகரத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குறிப்பிட்டளவில் போராட்டங்கள் தொடர ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மாபெரும் பின்னடைவுக்கு பின்னர் இதுவரை, சிகாகோவின் பேரழிவான நிலைமைகள் ஓர் இணையற்ற சமூக சீரழிவின் ஒருமித்த வெளிப்பாடாக இருக்கிறது. சிகாகோ மேற்தட்டின் சார்பில் ஒபாமா கொபென்ஹாகனில் இருந்தபோது, அமெரிக்காவின் வேலையிழந்தோர் விகிதம் 9.8 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. சிகாகோவின் முயற்சி ஒலிம்பிக் குழுவால் உறுதியாக நிராகரிக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. ஜனாதிபதியின் தனிப்பட்ட தலையீடு இருந்த போதினும், முதல் சுற்றிலேயே சிகாகோ நிராகரிக்கப்பட்ட நிகழ்வு, ஒபாமாவிற்கு அவமானகரமான நிகழ்ச்சியாகவும், உலக அரங்கில் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு மற்றொரு அறிகுறியாகவும் இருந்தது. தலைமை கோட்டையில் இந்த முடிவு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஒபாமா வாஷிங்டனுக்கு திரும்பிய பின்னர், "ஓர் அதிர்ச்சிகரமான குழப்ப உணர்வை Air Force One இலும், வெள்ளை மாளிகையிலும் ஏற்படுத்தியது," என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. பல சமயங்களில் கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக்களை அமெரிக்கா நடத்தி இருந்த போதிலும் கூட, குறிப்பிட்ட நகரத்தில் நடத்தப்படுவதற்காக வாய்ப்பு கேட்டு ஒரு ஜனாதிபதி ஒருபோதும் இதற்கு முன்னால் இவ்வாறு தலையிட்டதில்லை. அது எப்போதுமே இறுதியில் வார்த்தையில் சொல்வதானால், பூகோள-அரசியல் நேர்மையற்ற வர்த்தகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தி இருந்த சீனாவின் அண்டை நாடாக இருப்பதால், டோக்கியோவின் முயற்சி பரிசீலனையின் வெகு தூரத்தில் இருந்தது. பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தேசத்தின் தலைநகராக மட்ரிட் இருந்தது, மேலும் 1992 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பார்சிலோனாவில் நடந்தன, அத்துடன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றொரு ஐரோப்பிய நகரான இலண்டனில் நடக்க இருக்கிறது. பிரேசிலின் ஒப்பந்த புள்ளியைப் பொறுத்த வரையில், ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் வறுமை மற்றும் குழு வன்முறை பெரும் குறைபாடாக இருந்தது. இருந்தபோதிலும், முதல் சுற்றிலேயே சிகாகோ நிராகரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தான், 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கான நியூயோர்க்கின் முயற்சி சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. 9/11 பயங்கரவாத தாக்குதல்கள் முடிவெடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க தொடங்கியதில் இருந்து, புதிதாக நாட்டிற்கு உள்ளே வருவதில் ஏற்படுத்தப்பட்ட சிரமங்களும், கட்டுப்பாடுகளும் கொண்ட அமெரிக்க அரசாங்கத்தின் விதிமுறைகள் சந்தேகத்திற்கு இடமின்றி, வெளிநாட்டுகாரர்கள் மீது விரோதத்தை திணித்திருந்தன பல நாட்டவர்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க மிகவும் செலவு கூடியதும் மற்றும் பெறுவதற்கு சிரமமுமான அனுமதியை பெறவேண்டும். அப்படியென்றால், விளையாட்டு வீரர்களும், மற்றவர்களும் எப்படி நடத்தப்படுவார்கள்? குறிப்பாக "போக்கிரி" நாடுகள் என்றழைக்கப்படும் ஈரான், வட கொரியா, கியூபா, மற்றும் ஏனைய இதுபோன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்? அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் இவர்கள் உள்ளேயாவது அனுமதிக்கப்படுவார்களா? வெளிநாடுகளில் பல நல்ல காரணங்களுக்காக அமெரிக்கா துர்நாற்றத்தைத் தான் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. |