உலக நாணய மதிப்பு ஒழுங்குமுறையில் முக்கிய மாற்றத்திற்கான அடையாளங்கள்
பெருகியுள்ளன. மார்ச் மாதம் முதல் அமெரிக்க டாலரின் மதிப்பு சீராகக் குறைந்து வருகிறது, வணிக-குறியீட்டு
முறையில் 13.3 சதவிகிதம் குறைந்துவிட்டது. கடந்த வாரம் இந்தச் சரிவு கூடுதலாகி தங்கத்தின் விலையை மிக
அதிக மட்டங்களுக்கு உந்தித் தள்ளியது. பல ஆசிய மத்திய வங்கிகள் குறுக்கிட்டு நாணயச் சந்தைகள் டாலரின் சரிவைக்
குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட அது தூண்டியது.
உலகின் பெரும் வணிக மற்றும் இருப்பு நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள அரிப்பின்
உட்குறிப்புக்கள் பற்றி எச்சரிப்பதற்கு பதிலாக முக்கிய நிதிய வெளியீடுகளும் பொருளாதார வர்ணனையாளர்களும்
இந்தப் போக்கு வரவேற்கத்தக்கது என்றும் டாலரின் நீண்ட கால மதிப்பு இன்னும் சரிய அனுமதிக்கப்பட வேண்டும்
என்றும் வாதிடுகின்றனர்.
சனிக்கிழமையன்று லண்டனில் பைனான்ஸியல் டைம்ஸ்
"ஒரு வலுவான அமெரிக்காவிற்கு ஒரு வலுவற்ற டாலர் தேவை" என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
செய்தித்தாள் எழுதியது: "இந்த மதிப்புச் சரிவு, பெரிதாக இருந்தாலும் இதுபற்றி அஞ்சவும் கூடாது, இதைத்
தடுக்கவும் கூடாது. ... டாலர் மதிப்பு இன்னும் குறைந்தால் கூடுதலான நலன்களுக்கு உதவும்.... மதிப்புக்
குறைந்த டாலரின் விளைவு அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதுடன் அமெரிக்காவில் இறக்குமதிகளை விலை
அதிகரிக்கச் செய்யும்.
"இதுதான் அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் தேவையாகும். இதற்கிடையில் திரு.
சம்மர்ஸ் [ஒபாமாவின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் லோரன்ஸ் சம்மர்ஸ்], இந்த ஆண்டு முன்னதாக
'மறுகட்டமைக்கப்பட வேண்டிய அமெரிக்கப் பொருளாதாரம் கூடுதலான ஏற்றுமதிச்சார்பு உடையதாவும், குறைந்த
நுகர்வு சார்புடையதாகவும் இருக்க வேண்டும்' என்று கூறினார். சுருக்கமாக கூறினால், அமெரிக்க தன்னுடைய
வருமானத்திற்குள் வாழத் தொடங்க வேண்டும், உலகின் பிற நாடுகள் இதன் ஊதாரித்தனத்தை நம்புவதை நிறுத்த
வேண்டும்."
திங்களன்று பொருளாதாரக் கட்டுரையாளர்
Wolfgang Munchau
எழுதிய 'ஒரு வலுவிழந்த டாலர் தேவை என்பதற்கான வாதம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
"அதில் உலகப் பொருளாதாரம் மறு சமசீர் பெற வேண்டும் என்பதற்கு, அமெரிக்காவின் மகத்தான தற்போதைய
வர்த்தக பற்றாக்குறை தீவிரமாகக் குறைக்கப்பட வேண்டும், ஆசிய மேலதிக இருப்பு குறைக்கப்பட வேண்டும், 16
நாடுகள் உள்ள யூரோப் பகுதியின் பற்றாக்குறையும் "சற்று அதிகமாக வேண்டும்" என்று வாதிட்டுள்ளார்.
"ஒரு நீண்ட காலப் பார்வையில் அத்தகைய உலக நிலைப்பாட்டிற்கு சர்வதேச நிதிய
முறையில் கணிசமான சீர்திருத்தம் வேண்டும். ஒரு குறுகிய காலப் பார்வையில் டாலரின் மாற்றுவிகிதத்தின் ஒரு சரிவு
என்பது அந்த நிலையை அடைய இன்னும் உதவும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளின் "வலுவான டாலர் பற்றிய உறுதிமொழிகள் பாசாங்குத்தனம்
நிறைந்தவை என்றும் அமெரிக்கா தன்னுடைய ஏற்றுமதித் தலைமையிலான மீட்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக
டாலரின் மதிப்பு இன்னும் குறைவதற்கு ஊக்கம் கொடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் நீண்ட கால சர்வதேச நிதியமுறை சீர்திருத்தத்திற்கு டாலருக்கு
எப்பொழுதும் உலகளவில் நிரந்தரமான மதிப்புக்குறைவு என்பது தேவை என்று முன்சாவ் கூறுகிறார். உலகம் "ஒரு
இரட்டை முறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது, இதில் டாலரும் யூரோவும் உலகில் நடைமுறை இருப்பு
நாணயங்களாக செயல்படும்" என்றும் அவர் கணித்துள்ளார்.
இவையும் இவைபோன்ற கருத்துக்களும் டாலர் நிரந்தரமாக மதிப்புக் குறைவு
பெறுதல், மற்றும் அதன் இருப்பு நாணயமுறை என்ற அந்தஸ்து பலமற்றுபோதலில் இருக்கும் தவிர்க்க முடியாத
மகத்தான ஆபத்துக்களை ஒதுக்கிப் பேசுபவை ஆகும். அத்தகைய திட்டத்தில் உலகச் சந்தை உடைவதற்கான
நிலைமைக்கான வேர்கள் உள்ளன. இந்த மாற்றம் பற்றிய கருதுகோள், ஒரு சாதாரண விதத்தில்
செய்யப்படலாம், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் போட்டி மதிப்புக் குறைவுகளை தூண்டாமலும், நாணய, வணிக
முகாம்களின் உருவாக்கம், வணிகப் போரின் வெடிப்பும், இறுதியில் முக்கிய சக்திகளிடையே இராணுவ மோதல்
இல்லாமல் செய்வது என்பது பெரிதும் சந்தேகத்திற்கு உரியதாகும்.
ஒரு வலுக்குறைந்த டாலருக்கு ஆதரவாக வெற்றுத்தன கருத்துக்களில் மிகவும்
மோசமானது அமெரிக்கப் பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸ்
கட்டுரையாளருமான போல் க்ருக்மனால் கொடுக்கப்பட்டுள்ளது. திங்களன்று வெளிவந்த தலையங்கத்திற்கு எதிர்ப்புற
கட்டுரை ஒன்றில், அவர் டாலரின் மதிப்புக் குறைவின் நீண்ட கால தாக்கங்களைப் பற்றிக் கவலைப்படுபவர்கள்
சற்றே மனச் சிதைவுடையவர்கள் என்று உதறித் தள்ளுகிறார்.
டாலரின் தொடர்ந்த சரிவின் சர்வதேச தாக்கங்கள் பற்றி ஆராயாமல், அல்லது
அமெரிக்காவிற்குள் சமூக உறவுகளில் அதன் விளைவுகள் பற்றியும் ஆராயாமல் சரியும் டாலர் பற்றி "தற்போதைய
பரபரப்பு" உள்ளது என்கிறார். "உண்மை என்னவென்றால், டாலரின் சரிவு என்பது நல்ல செய்தியாகும்."
ஒரு மதிப்புக் குறைந்த டாலர் "அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு நல்லது". பெரும்
வணிகப் பற்றாக்குறைகளில் இருந்து இன்னும் நீடித்திருக்கக் கூடிய சர்வதேச நிலைப்பாட்டிற்கான மாற்றுதலை அது
அகற்றிவிடும்" என்று க்ரூக்மன் கூறியுள்ளார். இப்பொழுது நடைமுறையில் பூஜ்யமாக உறுதியான தன்மையில் இருக்கும்
வட்டி விகிதம் அகற்றப்பட வேண்டும், அல்லது "அடுத்த இரண்டு அல்லது சற்று கூடுதலான காலத்தோடு முடிய
வேண்டும்" என்றும் அவர் வாதிட்டுள்ளார். உலக இருப்பு நாணயத்தில் அமெரிக்க நாணயத்தின் அந்தஸ்து, மதிப்புக்
குறைவின் டாலரால் ஏற்படுவதின் விளைவுகளைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை.
ஆனால் டாலரின் மதிப்பு, சவாலுக்கு இடமில்லாத வகையில் உலக இருப்பு நாணயம்
என்னும் அந்தஸ்தின் இழப்பு அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவு தரக்கூடிய தாக்கங்களை கொண்டுள்ளது
என்பது உறுதியாகும்.
இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர் பிரெட்டன் வூட்ஸில் நிறுவப்பட்ட
சர்வதேச முதலாளித்துவ நிதிய முறையின் அடித்தளமாக ஒரு வலுவான உறுதியான டாலர் இருந்தது. உலகின்
தலையாய வணிக, இருப்பு நாணயமாக டாலர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக உள்ளது. டாலரின் பிரத்தியேக,
சலுகை பெற்ற நிலைமை (அமெரிக்க மூதலனத்திற்கு இது மகத்தான நலன்களைக் கொண்டுவந்தது) உலகப் போரின்
இறுதியில் அமெரிக்கா கொண்டிருந்த சவாலுக்கு இடமில்லாத பொருளாதார மேம்பாட்டை தளமாகக் கொண்டது.
அது அமெரிக்கத் தொழிற்துறையின் உலக ஆதிக்கத்தில் நிறுவப்பட்டிருந்தது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகாலத் தன்மையிலான சரிவு, அதன் தொழிற்துறை
அடித்தளத்தின் சரிவை மிக முக்கியமாக பிரதிபலித்தது; இதையொட்டி கடன் வாங்கிய நாடுகளுக்கும் (முதலும்
முக்கியமானதும் அமெரிக்கா) கடன் கொடுத்த நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி போற்றவற்றிற்கும்
மகத்தான, உலகந்தழுவிய சமசீரற்ற தன்மைகள் விளைந்தன. இதையொட்டி ஒரு ஆண்டிற்கு முன் உலகப்
பொருளாதாரத்தில் ஒரு பெரும் உள்வெடிப்பு ஏற்பட்டது. இறுதிப்பகுப்பாய்வில் அமெரிக்காவை ஒரு தொழிற்துறை
சக்திவாய்ந்த நாடு என்பதில் இருந்து உலகின் நிதிய ஊகம் மற்றும் ஒட்டுண்ணித்தன நாடு என்று மாற்றியதுதான்
டாலரின் சர்வதேச நிலைப்பாட்டின் அரிப்பிற்கு அடியில் உள்ளது.
தொடர்ந்து டாலரை சரிய அனுமதிப்பது என்பது அமெரிக்கச் சரிவில் உள்ள
உண்மையை ஒப்புக் கொள்ளுதல் போல் ஆகும் என்பதுடன், உலக முதலாளித்துவ முறையின் வளர்ச்சிக்கு ஒரு புதிய
அடிப்படையை கண்டுபிடிக்க வேண்டிய தேவையையும் கொடுக்கிறது. அத்தகைய பொருளாதார "மறு
சமநிலைப்படுத்தலின்" இதயத்தானத்தில் அமெரிக்காவிற்குள் வர்க்க உறவுகளின் மறு கட்டமைப்பு என்ற அடிப்படையும்
உள்ளது.
பிரெட்டன் வூட்ஸ் வடிவமைப்பு அமெரிக்க முதலாளிதுவத்திற்கு அமெரிக்காவிற்குள் சமூக
உறவுகளை நிர்வகிக்க பெரும் நலன்களைக் கொடுத்திருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின்
கோரிக்கைகளுக்கு இணங்குவதற்கு பற்றாக்குறை செலவு மற்றும் பணவீக்கக் கொள்கைகளை பயன்படுத்த முடிந்தது;
ஏனெனில் உலகம் டாலரை எப்படியும் ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த நலன் இல்லாவிடின், அமெரிக்க கடுமையான
நிதிய, நாணய முறை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்; இந்தச் சுமைதான் இப்பொழுது தொழிலாள
வர்க்கத்தின் தோள்களில் ஏற்றப்படுகிறது.
இந்த நிகழ்வுபோக்கு ஏற்கனவே நடக்கத் தொடங்கியுள்ளது. உலகப் பொருளாதார
மறு சமசீரமைப்பு, உள்நாட்டில் சீர்திருத்தம் என்ற பெயரில் ஏற்கனவே ஒபாமா நிர்வாகம் தொழிலாள
வர்க்கத்தின் நுகர்வை, உற்பத்திச் செலவினங்கள் குறைப்பு ஆகியவற்றை செய்துள்ளதுடன் அமெரிக்க ஏற்றுமதிகளை
அதிகரிக்கவும் முயன்றுள்ளது.
இது அமெரிக்க தொழிலாளர்களை அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் சர்வதேச நிதிய
அமைப்பு ஏராளமான கடனில் நிறைந்துள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு கடந்த கால் நூற்றாண்டில் கட்டளையிட்ட
நிலையை அமெரிக்கத் தொழிலாளர்களும் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. நாணய மதிப்பு குறைவு, சமூகப்
பணிகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப்படுதல் மற்றும் பாரிய வேலையின்மை ஊதியங்களை குறைத்து
சுரண்டுதலை அதிகப்படுத்துதல் ஆகிய இந்த நிகழ்வுபோக்கு இப்பொழுது அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு
எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா தன்னுடைய உற்பத்தி வழிவகைகளை மூடி உற்பத்தியை உலகம் முழுவதும்
இருக்கும் குறைவூதிய தொழிலாளர் தளங்களுக்கு மாற்றியது --அதையொட்டி அமெரிக்கப் பொருளாதாரத்தின்
நம்பகத்தன்மை என்பது சீனா, ஜப்பான் போன்ற மேலதிக இருப்புள்ள நாடுகளில் இருந்து கிடைத்தால்தான்
நீடிக்கும் என்று ஏற்பட்டது-- என்பது மாற்றப்பட வேண்டும். அமெரிக்காவில் தொழில்துறை புதுப்பிக்கப்பட
வேண்டும்; ஆனால் அது ஊதியங்களை அழிப்பதின் அடிப்படையில் இல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமைகள்,
வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை உயர்த்துதல் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
உலகச் சந்தைக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா
வரவுள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு நூற்றாண்டு காலமாக அது எதிர்கொண்டிராத சுரண்டல்
அளவுகளை அனுபவிக்க இருக்கிறது. இதன் ஊதியங்களும், வாழ்க்கைத் தரங்களும் ஆசியாவின் மிகப் பெரிய
சுரண்டப்படும் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலைக்கு வெகு அருகில் கொண்டுவரப்படும்.
இந்த வர்க்கப் போர் கொள்கை ஒபாமாவின் கார்த்தொழிலாளர்களின் வேலைகள்
மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. திவாலாகும் மாநிலங்கள் மற்றும் நகராட்சி
மன்றங்களுக்கு உதவ மறுக்கும் தன்மை, தொழிலாளர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் தகர்ப்பு,
உரிமையுடன் உதவிபெறும் திட்டங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள், மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தில்
இருந்து தொடங்குகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் இதேபோன்ற தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது
நடத்தப்படுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் விதத்தில் அமெரிக்கா மீண்டும் உலக முதலாளித்துவத்திற்கு உதராணமாக
இருக்கும்.
ஆனால் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு தன்னுடைய வறிய நிலைக்கு பணிந்து
போகும் விருப்பம் இல்லை. எனவே வர்க்கப் போராட்டம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும்
புதுப்பிக்கப்படுவதற்கான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.