World Socialist Web Site www.wsws.org


The Australian Labor Party and the war in Afghanistan

ஆஸ்திரேலிய தொழிற் கட்சியும் ஆப்கானிஸ்தானில் போரும்

Statement of the Socialist Equality Party (Australia)
7 October 2009

Back to screen version

இன்று ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கிய எட்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்தப் புதிய காலனித்துவ வகைப் போர், முன்னாள் ஜோன் ஹோவர்டின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றிருந்தது மட்டும் இல்லாமல், ALP எனப்படும் ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் ஆதரவையும் கொண்டிருந்தது. நவம்பர் 2007ல் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ருட் தொழிற்கட்சி அரசாங்கம் ஆஸ்திரேலியாவின் இராணுவ ஈடுபாட்டை அங்கு விரிவாக்கம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் இப்பொழுது ஒபாமாவின் போர் என்று குறிப்பிடப்படுவது போல், அது ருட்டின் போராகவும் மாறிவிட்டது.

ஆஸ்திரேலிய இராணுவத்தை பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் போர் வியட்நாம் போர்க் காலத்தில் இருந்து ஏற்கனவே நீடித்துவிட்டதுடன் மிக அதிக செலவையும் கொடுத்துள்ளது; பிரதம மந்திரி கெவின் ருட் தான் அங்கு குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு படைகளை நிறுத்த இருப்பதாக தெளிவாக்கியுள்ளார். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போலிக்காரணத்தை ஒட்டி, வாஷிங்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து அங்கு ஒரு அமெரிக்க வாடிக்கை நாட்டை நிறுவவும், அமெரிக்க இராணுவத் தளங்களை மத்திய ஆசியாவின் இதயத்தானத்தில் அமைக்கவும் முயல்கிறது. ஈராக் போருக்கு சற்றும் குறையாமல், ஆப்கானிஸ்தான் போரும் முக்கிய எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் நிறைந்த ஒரு பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்தும் கொள்ளை நோக்கத்தைத்தான் கொண்டிருக்கிறது. தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் நீடித்த, வரலாற்றுச் சரிவை அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளான, ஜப்பான் மற்றும் புதிய சவால்விடும் நாடுகளான சீனா, ரஷ்யா போன்றவற்றிற்கு எதிராக ஈடுகட்ட முயல்கிறது.

இந்த குற்றம் சார்ந்த செயல்பட்டியலுக்கு தொழிற்கட்சி ஆதரவு கொடுப்பது அரசியல், செய்தி ஊடக நடைமுறையின் முழு ஆதரவும் பெறுகிறது; ஈராக் போரில் ஹோவர்ட் அரசாங்கம் பங்கு பெற்றது பற்றி "தயக்கம்" காட்டிய சில கூறுபாடுகள் உட்பட இந்நிலையில்தான் உள்ளன.

ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் ஆப்கானியப் போர் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஒரு போராட்டம், "ஜனநாயகத்தை" நிறுவும் ஒரு வழிவகை என்ற பொய்யை எப்பொழுதும் கூறிவருகிறது. "இடது" என்று அழைக்கப்படும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த ஆண்டு ALP மாநாட்டில் "ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு தொழிற்கட்சி இராணுவ உதவி அளிக்கும்" என்று கூறிய தீர்மானத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் கொடுத்தது. GetUp! என்னும் ஹோவர்ட்-விரோத அமைப்பு, புஷ்-எதிர்ப்பு MoveOn.org மாதிரியில் தன்னை அமைத்துக் கொண்டது, அதன் நடைபெற்று வரும் "பிரச்சாரங்களில்" இப்பூசலைப் பற்றிக் குறிப்படுவதில்லை.

செனட்டிற்குள் பசுமை வாதிகளின் தலைவர் Bob Brown ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது பற்றி ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஐ.நா. ஒப்புதல் கொடுத்துள்ள அமெரிக்க, நேட்டோ சக்திகள் ஆக்கிரப்பிற்கு கொள்கையளவில் எந்த வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக ஆகஸ்ட் மாதம் பிரெளன் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் "சுதந்திரம், ஜனநாயகம், கெளரவம்" ஆகியவற்றிற்காக போராடுகிறது என்று தான் நம்புவதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய துருப்புக்கள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று அவர் வாதிடுவதற்கு முக்கிய காரணம் அவை இன்னும் நேரடியாக "தேசிய நலனுக்காக", அதாவது கான்பெர்ராவின் புதிய காலனித்துவ வகை தென் பசிபிக் செயல்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். பசுமைவாதிகளின் விக்டோரிய மாநிலக்கிளை, அமைப்பின் அடிப்படையான போர் சார்பு நிலைப்பாட்டின் ஆண்டுவிழாவைக் குறிக்கும் இந்த வார இறுதியில் எதிர்ப்புக்களுக்கு இசைவு கொடுக்க மறுத்ததின் மூலம் நிரூபித்தது.

"இடதுகள்", தொழிற்சங்கங்கள் மற்றும் பசுமை வாதிகளின் 2007 தேர்தல் நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளும்போது, ஆப்கான் போர் பற்றி அவற்றின் ஆதரவு அல்லது மெளனம் என்பது இன்னும் வியக்கத்தக்கது. அந்த நேரத்தில் அவை ஈராக்கில் இருக்கும் சிறிய அளவு ஆஸ்திரேலியப் போர்த் துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்ற ருட்டின் உறுதிமொழி தொழிற்கட்சி ஹோவர்டுக்கு மாற்றீடாக ஒரு "போர் எதிர்ப்பிற்கு" சான்று என்பதைப் பிரதிபலித்ததாகக் கூறின.

இன்னும் அதிக தீமை பயப்பது சோசலிஸ்ட் அலையன்ஸ் போன்ற மத்தியதர வர்க்க எதிர்ப்பு இயக்கங்களின் பங்கு ஆகும். இப்போக்குகள் ஹோவர்டை விட தொழிற்கட்சி ஒன்றும் குறைந்த போர் சார்புடையது இல்லை என்று அறிவித்தாலும், ஈராக் பற்றிய அதன் பெயரளவு வேறுபாடுகள் இது ஒரு "குறைந்த தீமை", மற்றும் மக்களுடைய அழுத்தத்திற்கு "கூடுதலான விடையிறுப்பு கொடுக்கும்" என்பதை நிரூபிக்கிறது எனக் கூறின.

எதிர்ப்பிலும் அரசாங்கத்திலும் தொழிற்கட்சியின் வரலாறு இப்பிரச்சாரத்தின் முழு நேர்மையற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ALP அமெரிக்க-ஆஸ்திரேலிய உடன்பாட்டிற்கு உறுதியாக ஆதரவளிக்கும் அமைப்பு ஆகும் என்பதுடன் 9/11 ல் இருந்து தன்னுடைய வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிய போருக்கு ஆதரவு என்பதை முக்கியமாக இருத்தியுள்ளது. 2001ல் படையெடுப்புத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய இராணுவம் ஈடுபட வேண்டும் என்று தீவிரமாக வாதிட்டது; 2002 கடைசியில் துருப்புக்களை திரும்பப் பெற்றதற்காக ஹோவர்ட் அரசாங்கத்தை கண்டித்து, 2005ல் போர்த் துருப்புக்கள் மீண்டும் ஈடுபட வேண்டும் என்று போராடியது.

ஹோவர்ட் அரசாங்கத்துடன் ஈராக் பற்றி தொழிற் கட்சியின் வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய வகைப்பட்டதுதான். ஈராக் போர் அமெரிக்க நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து கவனத்தைத் திருப்புகிறது என்று அஞ்சும் அமெரிக்க அரசியல் நடைமுறையின் கணிசமான பிரிவின் கருத்தை இது பகிர்ந்து கொண்டது. 2008ல் ஜனநாயகக் கட்சி ஒபாமாவை --முன்னாள் இடதுகள் மற்றும் தாராளவாதிகளால் அமெரிக்காவில் ஆதரவு பெற்று உலகம் முழுவதும் "ஒரு முற்போக்கானவர்" என்று கருதப்பட்டவர்--தங்கள் நிலைப்பாட்டிற்கு பொதுவில் வாதிடுபவராக இருத்த விரும்பியது.

ருட்டைப் போலவே ஒபாமாவும் ஒரு "போர் எதிர்ப்பாளர்" என்று சித்தரிக்கப்பட்டார். ஆனால் அவருடைய நிர்வாகம் புஷ்ஷின் அதே செயற்பட்டியலைத்தான் அடிப்படையில் தொடர்ந்துள்ளது. ஈராக்கில் ஆயுதமேந்திய எழுச்சியை இராணுவ வகையில் அடக்குதல், ஈராக்கிய உயிர்களை மில்லியனுக்கும் மேலாக காவுகொள்ளல் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தன் சக்திகளை ஆப்கானிஸ்தானின் புறம் இயக்க உதவியுள்ளது. ஏற்கனவே 21,000 கூடுதலான துருப்புக்களை ஒபாமா அங்கு அனுப்பியுள்ளதுடன், ஏற்கனவே நாட்டில் இருக்கும் 100,000 அமெரிக்க, நேட்டோ துருப்புக்களுடன் சேர்ந்துகொள்ளும் வகையில் இன்னும் 40,000 துருப்புக்களை அனுப்பக் கூடும்.

ஒபாமா அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து தொழிற்கட்சி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தந்திரோபாய மாற்றத்துடன் இணைந்த வகையில் தொழிற்கட்சி நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய இராணுவ உதவியை 1,100ல் இருந்து 1,550 என்று ஆக்கியுள்ளது; இன்னும் கூடுதல் படைகள் வேண்டும் என்று ருட்டை ஒபாமா கேட்டால், அதுவும் 2010 நடுப்பகுதியில் டச்சுத் துருப்புக்கள் முன்னணிப் போர் நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும்போது, இவர் உதவுவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

சிறப்பு விமானப் பிரிவு (SAS) துருப்புக்களும் இராணுவ கமாண்டோக்களும் ஏற்கனவே ஆப்கானிய கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் எழுச்சியாளர்கள் எனக் கருதப்படுபவர்களை தேடிப் படுகொலை செய்யும் வேலையில் மரணத்தை இயக்கும் குழுக்களாக செயல்பட்டு வருகின்றன. கணக்கிலடங்கா நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானின் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். மற்ற ஆஸ்திரேலியத் துருப்புக்கள் Uruzgan மாநிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்; அங்கு மக்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் எதிர்ப்பு காட்டுகின்றனர்.

இறப்பு எண்ணிக்கைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. தொழிற்கட்சி அதிகாரத்திற்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் எட்டு ஆஸ்திரேலிய துருப்புகள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர்; இதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் மூன்று இறப்புக்கள் மற்றும் ஈராக்கில் போரில் ஈடுபடாதவர்கள் இருவர் என்ற இறப்பு எண்ணிக்கை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

2007ல் தொழிற்கட்சியை "குறைந்த தீமை" என்று வளர்த்த முன்னாள் இடது அமைப்புக்கள்தான் இப்படி ஆப்கானிஸ்தானுள் போர்த் தொடர்பு விரிவாக்கத்திற்கு அரசியல் முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒரு ருட் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவர்கள் பிரச்சாரம் இரு பெருவணிகக் கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வளர்வதைத் தடுக்கும் நனவுடன் கூடிய முயற்சி ஆகும்.

வாஷிங்டன் நடத்தும் ஆக்கிரோஷமான குற்றம் சார்ந்த போர்களுக்கு தொழிற்கட்சியின் ஆதரவு ஆஸ்திரேலிய பெருநிறுவன, நிதி உயரடுக்கு ஆகியவற்றின் வர்க்க நலன்களுக்கு இவை பணிபுரியும் தன்மை பற்றிய ஆழ்ந்த வெளிப்பாடு ஆகும். ஹோவர்டைப் போலவே ஆஸ்திரேலியாவின் போருக்குப் பிந்தைய ANZUS கூட்டை அமெரிக்காவுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் தொழிற்கட்சியின் முக்கிய அக்கறையாகும்; இதுதான் முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை, இராணுவ தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெறுவதற்கு முக்கியம் என்று இது கருதுகிறது.

மேலும் இந்தக் கூட்டு தெற்கு பசிபிக்கில், சீனா மற்றும் பிற நாடுகளின் பெருகும் செல்வாக்கை எதிர்கொள்ளுவதற்கு, ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய திறனுக்கு தன்னுடைய மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு மையமாகும். 1999ல் கிழக்கு திமோரில் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன, 2003ல் சாலோமன் தீவுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டன; இவை, இறுதிப்பகுப்பாய்வில், அமெரிக்க ஆதரவின் மூலம்தான் நடைபெற்றது. இதற்கு பிரதியாக வாஷிங்டன் தன்னுடைய சொந்த ஆக்கிரமிப்புப் போர்களில் ஆஸ்திரேலியா பங்கு பெறுவதையும் விரும்புகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தொழிற்கட்சியின் ஆதரவு அதன் உள்நாட்டுச் செயற்பட்டியலுடன் இணைந்துதான் உள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி மோசமாகுகையில், புதிய காலனித்துவ வகை நடவடிக்கை வெளிநாட்டிலும், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த தாக்குதல்கள் உள்நாட்டிலும் இணைந்து செல்லுகின்றன. ஊதியங்கள், பணிநேரங்கள் மற்றும் பொதுச் சூழ்நிலைகள் மீது மொத்தத் தாக்குதல்கள் மற்றும் பொதுச் சுகாதார நலன்கள், கல்வி, இன்னும் பிற அடிப்படைச் சமூக பணிகள் தகர்ப்பு ஆகியவற்றையும் ருட் முன்னின்று நடத்துகிறார். அதே நேரத்தில் அவருடைய அரசாங்கம் வருங்காலத்தில் இன்னும் குருதி கொட்டும் போருக்கும் தயாரிப்புக்களுக்கு இராணுவத்தை விரிவாக்கித் தயாரிப்பதற்கு பல பில்லியன் டாலர்களை ஒதுக்கவும் உள்ளது

தொழிற் கட்சி தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட அதே அமைப்புக்கள்தான் இப்பொழுது ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு முன்னோடியில்லாத அளவை அடைந்து விட்டது என்பதை உணர்ந்துள்ளன. பெரும்பாலான மக்கள் எத்தைகைய ஈடுபாட்டையும் எதிர்க்கின்றனர் என்றும், மூன்றில் இரு பகுதியினர் இனியும் துருப்புக்களை அனுப்புவதை நிராகரிப்பதையும் கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.

சோசலிஸ்ட் அலையன்ஸின் ஆதிக்கத்திலுள்ள Stop theWar Coalition (போரை நிறுத்துக என்னும் கூட்டணி) இந்த எதிர்ப்பு ஒரு நனவுடன் தொழிற்கட்சியை அரசியலில் நிராகரித்தல் என்று வந்துவிடாமல் இருப்பதற்கு மற்றொரு இழிந்த பிரச்சாரத்தை விடையிறுப்பாகக் கொண்டுள்ளது. "எதிர்ப்புக்கள் ருட் அரசாங்கத்தை துருப்புக்களை தாயகத்திற்கு கொண்டு வர அழுத்தம் கொடுக்கும்" என்ற போலித் தோற்றத்திற்கான விதைகளைத் தூவும் நோக்கத்தை இதன் ஆர்ப்பாட்டங்கள் கொண்டுள்ளன. அவை ஒரு சில தொழிற்சங்க அதிகாரிகள் போரைப் பற்றி வெகுஜனத் திருப்திக்காக குறைகூறலைச் செய்ய அரங்கை வழங்கும், அதேவேளை தொழிற்சங்க இயக்கமே முற்றிலும் தொழிற்கட்சியின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுச் செயற்பட்டியலுக்கு தொடர்ந்து ஆதரவைக் கொடுக்கும்.

இராணுவவாதத்தின் எதிரிகள் ஆப்கானியப் போர் எதிர்ப்பு ஆண்டு நிறைவு ஆர்ப்பாட்டங்களுக்கு பின் இருக்கும் பயனற்ற எதிர்ப்பு அரசியலை கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும்; கடந்த கால அனுபவங்களில் இருந்து தேவையான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பெப்ருவரி, மார்ச் 2003ல் உலகம் முழுவதும், ஆஸ்திரேலியா உட்பட, ஈராக்மீது அமெரிக்கப் படையெடுப்பு தவிர்க்க முடியாமல் நடத்தப்பட இருந்ததற்கு மிகப் பெரிய எதிர்ப்புக்கள் நடந்தன. ஆனால் இந்த எதிர்ப்புக்கள் அனைத்தும் அத்தகைய பயனற்ற, அதாவது ஐ.நா. அல்லது பிரான்ஸும் ஜேர்மனியும் (இவை அனைத்தும் ஆப்கானிஸ்தானில் போரை ஆதரிக்கின்றன), புஷ் நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த ஆக்கிரமிப்பு போர்களை நிறுத்தும் என்ற ஆபத்தான போலித்தோற்றங்களின் ஆதிக்கத்திற்குத்தான் உட்பட்டிருந்தன.

போருக்கு எதிரான எந்த உண்மைப் போராட்டத்திலும் அதன் மூல காரணத்தை முதலாளித்துவ இலாப அமைப்பை அகற்றுவதற்கான அரசியல் போராட்டம் உண்டு. காலனித்துவ மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போர் என்பவை தனியார் இலாபம் மற்றும் உலகம் போட்டியிடும் தேசிய அரசுகளாகப் பிளவுண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ஒழுங்கின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். ஆஸ்திரேலியாவில் போருக்கு எதிரான வெகுஜன அரசியல் இயக்கத்திற்கு முன்னிபந்தனை, தொழிற்கட்சி மற்றும் அதன் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டம் ஆகியவற்றுடன் முறித்துக் கொண்டு, சோசலிச சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்க கட்சியைக் கட்டியமைப்பதற்கான போராட்டம் ஆகும்--உலகப் பொருளாதாரத்தை மிகச்சிறுபான்மையினரின் சலுகைகள் மற்றும் இலாபங்களுக்காக அல்லாமல், வெகுஜன சாதாரண மக்களின் நலன்களுக்காக அறிவார்ந்த இணக்கமான வகையில் மறுஒழுங்கமைப்பதாகும். இந்த முன்னோக்கிற்குத்தான் உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள சக அமைப்புக்களுடன் இணைந்து சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved