World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: Vote SEP in the Southern Provincial Council election இலங்கை: தென்மாகாண சபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள் Statement of the Socialist Equality Party (Sri Lanka) சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சனிக்கிழமை நடக்கவுள்ள தென்மாகாண சபை தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிடும் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சகல கட்சிகளதும் பிரிவினை இனவாதத்துக்கு எதிராக அனைத்துலக சோசலிசத்துக்காக போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். நாம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் பொது வர்க்க நலன்களையும் மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நசுக்கப்பட்டுவரும் அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க அவர்களை ஐக்கியப்படுத்தப் பிரச்சாரம் செய்கிறோம். எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரதான விவகாரங்களிலும் அதற்கு மறைமுகமாக ஆதரவளித்த போதிலும், அவற்றுக்கு எதிராக முன்னெப்போதுமில்லாதவாறு குண்டர் நடவடிக்கை மற்றும் அச்சுறுத்தல்களில் ஆளும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு அரச பாதுகாப்பு படைகளையும் குண்டர்களையும் பயன்படுத்துவது, எதிர்க் கட்சி அலுவலகங்களை எரிப்பது முதல் அரசாங்க வளங்கள் மற்றும் நிதிகளை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவது வரை, சட்டத்தில் உள்ள சகல ஜனநாயக விரோத தந்திரங்களும் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. செவ்வாய் கிழமை வரை, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃவரல், 180 தேர்தல் துஷ்பிரயோக சம்பவங்களை பதிவு செய்துள்ளது. அத்தகைய வழிமுறைகளை நாடுவதானது அரசாங்கத்தின் பலவீனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கத்துக்கு அதனது தேர்தல் பிரச்சார மேடையில் ஒரே ஒரு கொள்கை மட்டுமே உள்ளது. அது மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை பற்றிய பெருமை மட்டுமே. பல தொழிலாளர்களும் இளைஞர்களும் இராஜபக்ஷவின் பொய்களைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். யுத்தத்தின் முடிவு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக, மேலும் பொருளாதார சிரமங்களையும் கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மட்டுமே கொண்டுவந்துள்ளது. தீவின் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்தற்கான "பொருளாதார யுத்தமாக" இராஜபக்ஷவால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. 1983ல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பலாத்காரமாக நசுக்கும் முயற்சி, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்கு எதிராக தவிர்க்க முடியாமல் திருப்பப்படும் என சோ.ச.க. எச்சரித்தது. அந்த எச்சரிக்கை இப்போது முழுமையாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷவின் போலித்தனமான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு" அர்ப்பணிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இப்போது அவர்கள் 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் தாக்கத்தையும் அதே போல் பிரமாண்டமான வரவு செலவுத் திட்டத்துக்கும் விலைகொடுக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். உலகம் பூராவும் இடம்பெறுவது போல், இலங்கையில் உள்ள தொழிலாளர்களும் தமது வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அரசாங்கம் பொதுத்துறை சம்பளத்தையும் தொழில்களையும் கட்டுப்படுத்தியுள்ளதோடு சமூக செலவுகளை குறைத்து, விலை மானியங்களையும் வெட்டிக் குறைத்துள்ளது. தனியார் கம்பனிகளும் இதையே பின்பற்றுகின்றன. இதனை விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான புதிய வரிகளின் பாகமாக தொடர்ந்தும் விலைவாசி ராக்கட் வேகத்தில் உயர்கின்ற நிலையில், உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சமுதாயத்தில் மிகவும் வறிய தட்டினரைப் பொறுத்தளவில், அவர்களது பிரச்சினை மேசையில் பங்கிடும் உணவுவரை குறைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் இளைஞர்களுக்கு எதிர்காலம் கிடையாது. தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜபக்ஷ பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரை வெறும் 6,000 பொதுத் தொழில்களையே, அதாவது ஆண்டுக்கு 1,500 தொழில்களையே அரசாங்கம் உருவாக்கியிருப்பதை அண்மையில் அம்பலப்படுத்தினார். அரசாங்க அல்லது தனியார்துறைகளில் தொழில் கிடையாது. அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் முன்நாள் யுத்த வலயங்களை பரந்த இராணுவ முகாங்களாக மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில் இராணுவத்தில் மட்டுமே தொழில் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலையற்று இருக்கின்றனர். உயர்தர பரீட்சைக்கு சமூகமளித்த குறைந்த பட்சம் 100,000 இளைஞர்கள் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்காமல் உள்ளனர். வளர்ச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மைக்கு இராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஒரே ஒரு பதில் மட்டுமே உண்டு: அது அரச அடக்குமுறை. யுத்தம் முடிவடைந்தாலும் கூட, தசாப்த கால யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ் அரச இயந்திரம் கலைக்கப்படாமல் உள்ளதோடு, அது பெரும்பிக்கப்பட்டும் வருகிறது. பிரதான எதிர்க் கட்சிகளின் ஆரவுடன் கொடூரமான அவசரகால விதிகள் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் வழமை போல் புதுப்பிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைப்பதும் தொடர்கிறது. வீதித் தடைகள், அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கனமாக ஆயுதம் தரித்த சிப்பாய்களின் வீதி ரோந்துகளும் யுத்த காலத்தில் இருந்தது போல் கொழும்பிலும் தீவு பூராவும் விரிவாக்கப் பட்டுள்ளது. புலி உறுப்பினர்களை களையெடுப்பதன் பேரில், குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு படைகளின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் மே மாதத்தில் இருந்து இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பொது மக்களை "நலன்புரி கிராமங்களில்" பலாத்காரமாக அடைத்து வைத்துள்ளது. இந்த மோசமான ஜனநாயக உரிமை மீறல், இராஜபக்ஷவும் அவரது அரசியல்-இராணுவ சதிக்கூட்டமும் தம்மை நாட்டின் அரசியலமைப்பு, சட்ட முறைகள் மற்றும் பாராளுமன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டவர்களாக தொடர்ந்தும் கருதவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சோ.ச.க. யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெகுஜனங்களை காலவரையறை இன்றி தடுத்து வைக்கும் வழிமுறை, தொழிலாள வர்க்கம் அதனது ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காக்க போராட முன்வரும் போது அதற்கு எதிராக திருப்பப்படும் என சோ.ச.க. எச்சரித்தது. தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரையும் விடுவிக்கவும், முகாம்களை மூடவும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்கவும் மற்றும் அவர்களது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் ரூபாய்களை செலவிடவும் கோரிக்கை விடுக்க சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளது. பிரதான எதிர்க் கட்சிகள், அரசாங்கத்துக்கு அடிபணிவதன் மூலமே தம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன. சிங்கள பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்ததோடு, புலிகளின் தோல்வியின் பின்னர், "புகழில்" பங்குபோட்டுக்கொள்ள போட்டியிடுகின்றன. 2000ம் ஆண்டில் இராணுவம் படு தோல்வி கண்ட பின்னர், அதை திருப்பி கட்டியெழுப்ப 2002ல் தாம் புலிகளுடன் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு சாதுர்யமான சூழ்ச்சியாக இருந்தது என யூ.என்.பி. கூறிக்கொள்கிறது. தாம் 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவியதோடு யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிய அரசாங்கத்தை நெருக்கியதாக ஜே.வி.பி. பெருமை பாராட்டிக்கொள்கிறது. வேலையின்மை மற்றும் வறுமை மோசமடைந்து வருவதற்கு வழிவகுக்கும் பொருளாதார நெருக்கடிக்கு எந்தவொரு கட்சியிடமும் பதில் கிடையாது. ஜே.வி.பி. யும், யூ.என்.பி. யும் "வீண் செலவு மற்றும் இலஞ்சமே" நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறிக்கொள்கின்றன. வீண் செலவும் மற்றும் இலஞ்சமும் ஆளும் வர்க்கத்தில் ஏராளமாக இருந்தாலும், பிரமாண்டமான யுத்த கடன்கள், அந்நிய செலாவனி நெருக்கடி, வளர்ச்சி வீத வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதி வருமான வீழ்ச்சியுமே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும். வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை மேலும் குவிக்கும் ஒரு தொகை வயிற்றிலடிக்கும் நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய கடனை எந்தவொரு கட்சியும் எதிர்க்கவில்லை. தமிழர்கள் மத்தியில் உள்ள எதிர்க் கட்சிகளும் வேறுபட்டவை அல்ல. புலிகளின் தோல்வியின் பின்னர், புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, இப்போது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒத்துப் போகின்றது. தமிழ் கூட்டமைப்போ அல்லது புலிகளோ தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் உடனடி விடுதலையைக் கோரவில்லை. மாறாக, அவை அவர்களது "விரைவான மீள் குடியேற்றத்துக்கு" அழுத்தம் கொடுக்குமாறு "சர்வதேச சமூகத்துக்கு" வேண்டுகோள் விடுக்கின்றன. முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் இதே மாயையை பரப்புகின்றன. அவை, யுத்தத்தை ஆதரித்த பெரும் வல்லரசுகள் மற்றும் சிறைமுகாங்களை நடத்த நிதி கொடுக்கும் ஐ.நா. சபையும் தமிழர்களின் உரிமைகளை காக்கும் என கூறுகின்றன. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளாகவும் தொழிற்சங்கங்களாகவும் செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) இராஜபக்ஷவின் கூட்டரசாங்கத்தின் பங்காளிகள். இ.தொ.கா. மற்றும் அதோடு சேர்ந்த தொழிற்சங்கங்களும் அண்மையில் அடுத்த இரண்டு வருடத்துக்கு தீவின் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வறிய மட்ட ஊதியமான 405 ரூபாவாக (3.50 டொலர்) நிர்ணயித்தன. இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ம.ம.மு., தொழிலாளர்கள் மத்தியிலான பரந்த சீற்றத்தை தணித்து அடக்க முயற்சிக்கின்றது. பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்மையில் சோ.ச.க. யின் அரசியல் உதவியுடன் ஒரு சுயாதீன நடவடிக்கை குழுவை ஸ்தாபித்ததோடு தொழில், சம்பளம் மற்றும் நிலைமைகளை காப்பதற்கான ஒரு எதிர்த் தாக்குதலுக்கான முதல் அடியெடுப்பாக ஏனைய தோட்டங்கள் மற்றும் வேலைத் தளங்கள் பூராவும் இதே போன்ற குழுக்களை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது இந்த முடிவு, தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகள் சம்பந்தமான ஆழமான வெறுப்பு, முழு அரசியல் ஸ்தாபனம் சம்பந்தமான பகைமையாலும் மற்றும் தமது வாழ்க்கைத் தரத்தின் மீதான தற்போதைய தாக்குதலை எதிர்க்க ஒரு சோசலிச மாற்றீடு தேவை என்பதை உணர்ந்ததாலும் எடுக்கப்பட்டதாகும். இந்த நடவடிக்கை குழுவின் ஸ்தாபிதமானது, முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் சுயாதீனமடைவதற்கான முக்கியமான முதல் நடவடிக்கையாகும். சோசலிச கொள்கைகளை அடிப்டையாகக் கொண்ட ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கான போராட்டத்தில், ஒரு சுயாதீன சக்தியாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் ஒடுக்கப்பட்ட மக்களை தம்பக்கம் வெற்றிகொள்ள முடியும். இந்தப் போராட்டத்தை இலங்கையில் மட்டும் முன்னெடுக்க முடியாது. மாறாக, தமக்குப் பொறுப்பில்லாவிட்டாலும் பூகோள முதலாளித்துவ நெருக்கடிக்கு விலை கொடுக்கத் தள்ளப்பட்டுள்ள தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களின் பக்கம் திரும்புவது அவசியமாகும். இலங்கையில் இந்த முன்நோக்குக்காக போராடுவது சோ.ச.க. மட்டுமே ஆகும். இந்த மாகாண சபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், ஒரு சோசலிச மாற்றீட்டுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துமாறு தொழிலாளர்கள், கிராமத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். எமது வேலைத் திட்டத்தையும் வரலாற்றையும் கவனமாக படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். |