World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Eight years after invasion

Washington faces deepening debacle in Afghanistan

படையெடுப்பிற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்

ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் ஆழ்ந்த சங்கடத்தை எதிர்கொள்கிறது

Bill Van Auken
7 October 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானிற்கு எதிராக அமெரிக்கா போரை தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆவதை இன்றைய தினம் குறிக்கிறது. காபூல், காந்தகார் மற்றும் ஜலாலாபாத் ஆகியவற்றின் மீது வான்வழி குண்டுவீச்சு நடந்ததைத் தொடர்ந்து CIA மற்றும் இராணுவச் சிறப்பு பிரிவினர் களத்தில் இறங்கியதும் தாலிபன் போராளிகளை அழிப்பதற்கு அமெரிக்க போர் விமானங்கள் இயக்கப்பட்டதும் நிகழ்ந்தன. அபின் வணிகத்தில் தொடர்புடைய போர்ப்பிரபுக்கள் மற்றும் முந்தைய தசாப்தத்தில் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்களுடைய தொகுப்பான வடக்கு கூட்டணி--வாஷிங்டனின் மாற்று இராணுவமாக செயல்பட்டது.

இரு மாதங்களுக்குள் அமெரிக்கத் தலையீட்டிற்கு ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் அடிபணிந்தன, ஏராளமான தாலிபன் எதிர்ப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டு, படுகொலையுண்டனர்; மற்றவர்கள் டோரா பொரா மலைப்பகுதிகளுக்கு அல்லது எல்லை கடந்து பாக்கிஸ்தானுக்கு விரட்டப்பட்டனர். அந்த இரு மாதங்களில் மொத்தம் 12 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர்.

இப்பொழுது, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஒபாமாவின் வெள்ளை மாளிகையும் பென்டகனும் படையெடுப்பை ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில்--ஏற்கனவே அங்கு உள்ள 68,000 அமெரிக்க துருப்புகள் மற்றும் 38,000 நேட்டோ துருப்புக்களை தவிர, மற்றும் ஒரு 40,000 சிப்பாய்களை அனுப்புதல் பற்றி ஒரு சூடான விவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றன, அப் படையெடுப்போ அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு இதுவரை ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் 400 ஆக உயர்ந்துவிட்டன; கிட்டத்தட்ட அமெரிக்கக் குறுக்கீட்டின் முதல் ஆண்டில் இறந்தவர்கள் எண்ணிக்கையைப் போல் 6 மடங்கு ஆகும். இப்போர் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருந்த காலத்தை விட இரு மடங்கு அதிகமாக நீடித்துள்ளது.

அல் குவைதாவை உடைத்துவிடுவது அல்லது ஒசாமா பில் லேடனை கைப்பற்றுவது அல்லது கொலை செய்வது என்ற பெயரில் புஷ் நிர்வாகம் போரைத் தொடக்கியது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பதிலடி என்று அது நியாயப்படுத்தப்பட்டது; ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல்களின் உண்மையான தோற்றம் பற்றி இன்றுவரை தீவிர விசாரணை நடத்தப்படவே இல்லை.

ஒபாமா நிர்வாகம் அடிப்படையில் இதே போலிக்காரணத்தைத்தான் பயன்படுத்துகிறது; இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக்கின் மீதான போரை "விருப்பத்தேர்வான போர்" என்று அழைப்பதற்கு மாறான வகையில் ஆப்கானிஸ்தான் மீதான போரை "ஒரு தேவையான போர்" என்று, விவரிக்கிறது. தனக்கு முன்பு பதவியில் இருந்தவரைப் போலவே, ஒபாமா மற்றொரு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கும் நோக்கத்தை இப்போர் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்துகிறார்; இது கடந்த வாரம் இவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஓய்வு பெற்ற தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், அமெரிக்காவைத் தாக்கும் வழிவகை இல்லாத 100 உறுப்பினர்களுக்கு மேல் ஆப்கான் முழுவதும் இல்லை என்று ஒப்புக் கொண்ட பின்னரும் தொடரும் நிலைப்பாடு ஆகும்.

உலக சோசலிச வலைத் தளம் இந்த நியாயப்படுத்துதலை ஒரு பொய் என்று மிக ஆரம்பத்தில் இருந்தே நிராகரித்துள்ளது. 2001 அக்டோபர் 9ம் தேதி, போர் தொடங்கி இரு நாட்களில் WSWS விளக்கியது:

"... ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை நடத்த ஒரு கிரியா ஊக்கி போல் செப்டம்பர் 11 நிகழ்வுகள் உதவினாலும், போருக்கான காரணம் ஆழ்ந்த தன்மை உடையது. இந்தப் போர் அல்லது எந்தப் போராயினும், அதன் முற்போக்குத்தன அல்லது பிற்போக்குத்தன தன்மையில், அதன் உடனடி முன் நிகழ்வுகளால் நிர்ணயிக்கப்படவில்லை; மாறாக வர்க்க கட்டமைப்புக்கள், பொருளாதார அஸ்திவாரங்கள் மற்றும் தொடர்புடைய நாடுகளின் சர்வதேசப் பங்கினால் நிர்ணயமாகின்றது. இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தற்போதைய அமெரிக்க நடவடிக்கை ஒரு ஏகாதிபத்தியப் போர் ஆகும்.

"அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பாரதூர விளைவு தரும் சர்வதேச நலன்களைத் தொடர்வதற்காக அமெரிக்க அரசாங்கம் இப்போரை தொடக்கியுள்ளது. போரின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன் சோவியத் ஒன்றியம் சரிந்தது மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது; இதுதான் உலகிலேயே பெட்ரோலியம், இயற்கை எரிவாயு இருப்புக்களின் இரண்டாம் மிகப் பெரியசேர்மம் ஆகும்."

"ஆப்கானிஸ்தானின்மீது தாக்குதல், ஒரு வாடிக்கையாளர் ஆட்சியை அங்கு நிறுவுதல் மற்றும் அப்பகுதிக்குள் பரந்த இராணுவ சக்திகளை இயக்குதல் என்ற விதத்தில் அமெரிக்கா ஒரு புதிய அரசியல் வடிவமைப்பை நிறுவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; இதையொட்டி அது மேலாளுமைக் கட்டுப்பாட்டை செலுத்தும்."

இப்பகுப்பாவில் இருந்து ஒரு சொல்லைக் கூட திருத்த வேண்டிய அவசியம் இல்லை. அக்டோபர் 2001ல் இருந்து, ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பிற்கு முடிவு --ஈராக்கை வென்று கைப்பற்றுவதற்கு கொள்ளப்பட்டது போலவே-- 9/11 தாக்குதல்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது. இவை ஒரு உண்மையான காரணம் என்று இல்லாமல் போலிக்காரணமாகத்தான் இரண்டு இராணுவ ஆக்கிரமிப்பு போர்களுக்கும் உதவின.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டுள்ள சங்கடம் அதுவே தேடிக் கொண்டதுதான். ஆப்கானிஸ்தானில் முந்தைய அமெரிக்க தலையீடுகளின் விளைவுகள்தாம் அல் குவைடா மற்றும் தாலிபன் தோற்றங்கள்.ஆகும். 1979ல் இருந்து வாஷிங்டன் பில்லியன் கணக்கான டாலர்களை ஆயுதங்கள் மூலமாகவும் உதவி மூலமாகவும் அந்நாட்டின் சோவியத் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை கவிழ்க்க இஸ்லாமிய கெரில்லாக்களுக்கு கொடுத்தது. வேண்டுமென்றே அது ஒரு சோவியத் படையெடுப்பு நடக்கத் தூண்டுதல் கொடுத்தது; அப்போர் ஒரு மில்லியன் உயிர்களை பறிந்தது, மற்றும் ஐந்து மில்லியன் மக்கள் அகதிகள் ஆனார்கள், சமூகம் முழுவதும் நாசமாகிவிட்டது என்றும் கூறியது.

அந்தக் கட்டத்தில் பில் லேடன் CIA- செளதி அரேபிய-பாக்கிஸ்தான் கூட்டின் ஒரு பகுதியாவார். அமெரிக்காவின் உதவியில் பெரும்பகுதி முஜாஹிதீன் தலைவர் Gulbuddin Hekmayar இடம் சென்றது; அவர்தான் இப்பொழுது கடந்த வார இறுதியில் நூரிஸ்தான் என்ற தொலைவில் உள்ள மாகாணத்தில் அமெரிக்க துருப்புக்கள் எட்டு பேரைக் கொன்ற தாக்குதலுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ஆப்கானிய மக்களுக்கு மற்றொரு சிறிதும் குறைவற்ற பேரழிவு என்று நிரூபணமாகி உள்ளது. வான்வழித் தாக்குதல்களிலும் நாடெங்கிலும் நடத்தப்படும் அடக்குமுறை வகை சோதனைகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; சாதாரண குடிமக்கள் இறப்பும் பெரிதும் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பெரும் திகைப்பு நிறைந்த வாழ்வின் நிலைமைகள் இன்னும் மோசமாகிவிட்டன. சமீபத்தில் ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீடுகளில் 182 நாடுகளில் 181 வது இடததில் ஆப்கானிஸ்தான் உள்ளது என்று மதிப்பிட்டுள்ளது. நைஜர் ஒன்றுதான் இதையும் விட மோசமான இடத்தில் உள்ளது.

அக்டோபர் 2001 முதல் கிட்டத்தட்ட $36 பில்லியன் வெளிநாட்டு உதவியாக நாட்டிற்கு வந்தபின்னும் நிலைமை சீராக மோசமடைந்துள்ளது; அப்பணத்தின் பெரும்பகுதி அமெரிக்கா இருத்திய கைப்பாவை அரசாங்கத்தின் ஜனாதிபதி ஹமிட் கர்சாயி உடைய தலைமையில் இருக்கும் திருட்டுக் கூட்டத்தின் பைகளுக்கு சென்றுவிட்டது.

பெரும்பாலன மக்களால் வெறுக்கப்பட்டு, ஆகஸ்ட் 20 நடந்த ஜனாதிபதித் தேர்தலை அப்பட்டமாக திருடிவிட்ட கர்சாய் இன்னும் அதிகாரத்தில் இருப்பதற்கு காரணம் வாஷிங்டன் கொடுக்கும் ஆதரவுதான்; இவருக்கு மாற்றீடாக ஒருவரும் இல்லை என்ற முடிவிலும் அது உள்ளது.

இத்தகையை வன்முறை, வறிய நிலை மற்றும் ஊழல் நிலைமைகள் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கு பரந்த மக்கள் ஆதரவைத் தோற்றுவித்துள்ளது. வாஷிங்டனில் நடக்கும் விவாதம் இந்த எதிர்ப்பை எப்படி அடக்குவது என்பதுதான்.

இரு முக்கிய விருப்பத்தேர்வுகள் விவாதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது: இருமடங்காக ஆக்கப்படும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் மற்றும் பென்டகன் கோரியபடி மற்றும் ஒரு 40,000 துருப்புக்களை அனுப்பிவைத்தல், அல்லது துணை ஜனாதிபதி ஜோசப் பிடெனும் நிர்வாகத்தில் உள்ள மற்றவர்களும் கோரும் ட்ரோன் தாக்குதல்கள், வான்வழிக் குண்டு வீச்சுக்கள் மற்றும் பாக்கிஸ்தானுக்குள் சிறப்புப் படைகளை ஊடுருவச் செய்தல் ஆகியவற்றைத் தீவிரப்படுத்துதல் என்பவையே அவை. இரண்டுமே இன்னும் பரந்த போர், கூடுதலான குருதி கொட்டுதல் இவற்றைத்தான் கொடுக்கும்.

போர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து கட்சிகளும் போர் தொடங்கியதற்கான காரணங்களில் நோக்கத்தை அடைவது பற்றி ஒன்றுபட்டுள்ளன: மத்திய ஆசியாவில் உள்ள ஆற்றல் இருப்புக்களின்மீது இரும்புப்பிடியைக் கொள்ளுதல், அதையொட்டி ஆசிய ஐரோப்பிய பொருளாதார போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உறுதியான நலன்கள் கிடைக்கும் என்பதே அது.

உலக நிதிய நெருக்கடி தோன்றியது அமெரிக்க இராணுவத்தின் உந்துதல் சக்திகளின் அடித்தளத்தில் இருக்கும் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது; எல்லாவற்றிற்கும் மேலாக இது உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும், போட்டி மிக்க முதலாளித்துவ தேசிய அரசுகள் அமைப்பினால் பிளவுபட்டிருக்கும் உலகமுறைக்கும் இடையே உள்ள மோதல் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மேலாதிக்கத்தின் சரிவில் இதன் பெரும் வெடிப்புத்தன்மையின் வெளிப்பாடு உள்ளது.

அமெரிக்க மக்களில் பெரும்பாலனவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய போர்களை எதிர்க்கின்றனர்; இந்த எதிர்ப்பின் அடிப்படையில்தான் அவர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தனர். ஆயினும் இரு போர்களும் தொடர்கின்றன; ஒபாமா ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அழிவை விரிவாக்கத் தயாரிப்பு செய்கிறார்; அதே நேரத்தில் ஈரான் மீது இராணுவப் படையெடுப்பு இருக்கும் என்றும் அச்சுறுத்துகிறார்.

புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினரை விட சிறிதும் குறையாத விதத்தில், ஒபாமா நிர்வாகம் --வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில்-- பெருநிறுவன, நிதிய தன்னலக்குழு என்று அமெரிக்காவை ஆட்சி செய்பவற்றின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. வெளிநாட்டில் நடக்கும் போர்களுடன் இணைந்து பெருகும் சமூக சமத்துவமின்மை காணப்படுவதுடன், அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடைபெறுகின்றன.

இப்பொழுது வெள்ளை மாளிகையில் நடக்கும் விவாதமான --அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்புறமாக-- எப்படி மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் நலன்களை சிறந்த முறையில் முன்னேற்றுவிப்பது என்பது மிகப் பெரிய ஆபத்துக்களை முன்வைக்கின்றது. போரின் விரிவாக்கம், கூடுதலான தரைத் துருப்புக்கள் அல்லது தீவிர வான்வழித் தாக்குதல்கள் என்று எப்படி இருந்தாலும் அணுவாயுதம் கொண்ட பாக்கிஸ்தான் மற்றும் தெற்கு மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளின் உறுதிப்பாடு அனைத்தையும் சீர்குலைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. எழுச்சி பெற்று வரும் சக்தியான சீனா, மற்றும் இப்பகுதியில் நீண்டகால அக்கறைகளைக் கொண்ட ரஷ்யா ஆகியவை தன்னுடைய மேலாதிக்கத்தை இராணுவத்தின் மூலம் செலுத்த முற்படும் வாஷிங்டனின் முயற்சிகளை கால வரையற்று அருகில் நின்று பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க மாட்டா.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இப்போர், இன்னும் கூடுதலான குருதி சிந்தும் வகையில் மாறாதிருப்பதற்கு அமெரிக்க மற்றும் சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டினால்தான் முடிவுகட்ட முடியும்; அது இராணுவவாதத்தின் ஆதாரமான முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிராக போராட வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளும் உடனடியாக, நிபந்தனையின்றி வெளியேற வேண்டும், பாக்கிஸ்தான் மீது அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், அமெரிக்க இராணுவம், உளவுத்துறைக் கருவிகள் கலைக்கப்பட்டு அதில் கிடைக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்புத் தொகையாக அளிக்கப்பட வேண்டும், அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும், வேலைகள் பாதுகாக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டாக வேண்டும்.