இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத்
தளமும், கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியடைந்ததில் இருந்து பிரமாண்டமான
தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பொது மக்களை உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோருவதற்காக சர்வதேச பிரச்சாரமொன்றை முன்னெடுக்கின்றன.
அரசாங்கம் இந்த இழிநிலையிலான சிறை முகாங்களை "நலன்புரி கிராமங்கள்" என
போலியாக விவரிக்கின்றது. ஆயினும், முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ள கனமாக ஆயுதம் தரித்த படையினரின்
காவலின் கீழுள்ள இந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளேயோ அல்லது வெளியிலோ நடமாடுவதற்கு
அனுமதிக்கப்படுவதில்லை. உயர் பாதுகாப்பு சிறைச்சாலைகளில் காணப்படுவது போல், கண்டிப்பான விசாரணைகள்
சோதனைகளின் பின்னரே உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
முகாங்களில் உள்ளவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுமாக
பொது மக்களேயாவர். முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த இவர்கள் இப்போது இந்த முகாங்களுக்குள்
அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பட்டினி, நீர்வற்றி உலர்தல்,
காயங்கள் மற்றும் சுகயீனத்துடன் சேர்த்து மாதக்கணக்கான இராணுவத் தடைகளை எதிர்கொண்டவர்கள். இராணுவத்தின்
கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களின் விளைவாக பலர் குடும்பங்களையும் நண்பர்களையும் இழந்துள்ளனர்.
முகாங்களுக்கு உள்ளே இருக்கின்ற நிலைமை பயங்கரமானது. அங்கு உணவு, சுகாதார
வசதி, மருத்துவ பராமாரிப்பு, போதுமான தண்ணீர் அல்லது தூங்குவதற்கான இடம் கூட பற்றாக்குறையாக உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, முகாங்களை நடத்தும் இராணுவம், உள்ளே ஒரு பயங்கர மற்றும் அச்சுறுத்தல் ஆட்சியை
நடத்துகிறது. கடுமையான ஊடக தணிக்கைகளுக்கு மத்தியிலும், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் செய்யும் கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் "காணாமல் போகும்" சம்பவங்கள் பற்றிய
தகவல்கள் கசிந்துள்ளன. இராணுவ புலணாய்வு பிரிவினர் திட்டமிட்டு இளைஞர்களையும் யுவதிகளையும் விசாரணை செய்கின்றனர்.
பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் "புலி சந்தேகநபர்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு, துஷ்பிரயோகம்
மற்றும் சித்திரவதைகளுக்கு பேர் போன "புணர்வாழ்வு முகாங்களுக்கு" இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
"பயங்கரவாதிகளை" களையெடுக்க பலாத்காரமான தடுத்து வைப்பு அவசியம் என
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வலியுறுத்திய போதிலும், தண்டனை கொடுப்பது ஒரு புறமிருக்க இந்த முகாங்களில்
அல்லது புணர்வாழ்வு மையங்களில் உள்ள எவர் மீதும் எந்தவொரு குற்றம் தொடர்பாகவும்
குற்றஞ்சாட்டப்படவில்லை. அவர்கள் தமிழர்களாக இருப்பதால் மட்டுமே இரண்டரை இலட்சம் மக்களுக்கு கூட்டுத்
தண்டனை வழங்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும். உண்மையில், அவர்கள் நாட்டின்
சொந்த அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பகிரங்கமாக மீறி, யுத்தக் கைதிகளாக நடத்தப்படுகிறார்கள்.
இந்த தடுப்பு முகாங்கள், 1983ல் இருந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள்
முன்னெடுத்த யுத்தத்தின் இனவாதப் பண்பையே தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன. இது "பயங்கரவாதத்தின்
மீதான யுத்தம்" அல்ல. மாறாக, தமது தமிழ் சமதரப்பினரினரதும் மற்றும் சகல உழைக்கும் மக்களதும் செலவில்
தீவின் சிங்கள முதலாளித்துவத் தட்டு செல்வந்த நிலையை அடைவதை இலக்காகக் கொண்ட மோதலாகும்.
தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதன் மூலம் தமது ஆட்சியை தூக்கிநிறுத்த, 1948ல் சுதந்திரம் அடைந்ததில்
இருந்தே தசாப்த காலங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனம் பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ
தமிழர்-விரோத பாரபட்சங்களில் இந்த முரண்பாடுகள் வேரூன்றியுள்ளன.
இலங்கை சிறை முகாங்களுக்கு ஒரு சில வரலாற்று முன் உதராணங்களே உள்ளன.
அவற்றை தெரிந்துகொள்ள ஒருவர் 1899-1902 வரை திரும்பிப் பார்க்கத் தள்ளப்படுவார். அப்போது நடந்த
போர் யுத்தத்தின் போது, பிரிட்டிஷ் கடூழியச்சிறை
முகாம்களை உருவாக்கி அங்கு போர் (Boer)
மக்களை அடைத்து வைத்தது. அல்லது அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானிய-அமெரிக்கர்களை
சிறைவைத்திருந்ததும் ஒரு உதாரணமாகும். எவ்வாறெனினும், முழு மக்களுக்கும் திட்டமிட்டு தண்டனை நிறைவேற்றியமை
பற்றிய ஒரே ஒரு உண்மையான முன் உதாரணம், இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிக்கள் நடத்திய
கடூழியச்சிறை முகாங்களாகும். அங்கு
மில்லியன் கணக்கான யூதர்கள், அதே போல் தொழிற்சங்க வாதிகள், சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளும்
அடைத்து வைக்கப்பட்டிருந்ததோடு அவர்களில் பலர் கொல்லப்பட்டனர்.
மேலும் மேலும் ஒரு அரசியல்-இராணுவ கும்பலாக செயற்பட்டு வரும் இராஜபக்ஷ
அரசாங்கம், அரசியலமைப்பையும் சட்ட முறைமையையும் மற்றும் நீதி மன்றத்தையும் பகிரங்கமாக அலட்சியம்
செய்கின்றது. பாராளுமன்றமானது, ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் நெருங்கிய ஆலோசகர்களும் மற்றும்
உயர் மட்ட ஜெனரல்களும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒரு அதிகாரமற்ற இறப்பர் முத்திரையாகி வருகின்றது. கால்
நூற்றாண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்டு இராஜபக்ஷவின் கீழ் பலப்படுத்தப்பட்ட பொலிஸ் அரச
இயந்திரம், சேதமில்லாமல் அப்படியே இருக்கிறது. யுத்தத்தின் பின்னர் சிப்பாய்களை கலைப்பதற்கு மாறாக,
அரசாங்கம் இராணுவத்தை பெருகச் செய்வதோடு வடக்கு மற்றும் கிழக்கை பரந்த இராணுவ முகாங்களாக
மாற்றிவருகிறது.
யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை
முற்றிலும் ஈடுவைத்துள்ள இராஜபக்ஷ, பூகோள பொருளாதார பின்னடைவால்
மேலும் குவிக்கப்பட்ட ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறார். கடுமையான பொருளாதார
சுமைகளை தாங்குமாறு தொழிலாள வர்க்கத்தையும் வறியவர்களையும் நெருக்குவதன் பேரில், அவர் ஏற்கனவே ஒரு
புதிய "பொருளாதார யுத்தத்தை" அறவித்துள்ளார். தீவின் தமிழ் சிறுபான்மையினரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட
எதேச்சதிகாரமான தடுத்து வைப்பு, "காணாமல் ஆக்குதல்" மற்றும் அரசாங்க சார்பு கொலைப் படைகளின்
படுகொலைகள் போன்ற வழிமுறைகள், சகல உழைக்கும் மக்களதும் எதிர்ப்பை நசுக்க பயன்படுத்தப்படும் என
சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதற்கான பிரச்சாரமானது ஒட்டு
மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநயாக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான
பரந்த பிரச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாகும். இந்த சிறை முகாங்களை மூடுவதானது, வடக்கு மற்றும்
கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டி, சகல துருப்புக்களையும் திருப்பியழைப்பது வரை அபிவிருத்தி
செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில், பலவித எதிர்க் கட்சிகள் அல்லது "சர்வதேச சமூகத்தின்" மீது
நம்பிக்கை வைக்க முடியாது.
தமிழ் வெகுஜனங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்தவொரு எதிர்க் கட்சியும்
எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
அரசாங்கத்தின் ஜனநயாக விரோத நடவடிக்கைகளை "சட்டமாக்குவதற்கு" வெகுஜன பாதுகாப்பு விதிகளின் கீழ்
கொடூரமான புதிய விதிமுறைகைள அறிமுகப்படுத்துவதை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு
முகாங்களை நடத்துவதை தன்பங்குக்கு பகிரங்கமாக ஆதரிக்கும் சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி,
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க அனைத்துக் கட்சி குழுவொன்றை
ஸ்தாபிக்குமாறு மட்டுமே ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.
புலிகளின் ஊது குழலாக செயற்பட்ட தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் கூட்டணியான
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உடனடி விடுதலையைக் கோரவில்லை. தமிழ்
கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கடந்த மாதம் இராஜபக்ஷவை சந்தித்த பின்னர், தனது கட்சி
"உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் நிலைமைகளை தணிக்கவும் அவர்களை விரைவில் மீளக் குடியமர்த்தவும்
அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும்" என தெரிவித்தார்.
புலிகளே கூட தமிழ் பொது மக்களை விடுதலை செய்யுமாறு பிரச்சாரமொன்றை
முன்னெடுக்கவில்லை. புலிகளின் நாடுகடந்த அரசாங்கம் என சொல்லப்படுவது கடந்த ஆகஸ்ட்டில் தமது தலைவர்
தடுத்து வைக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக விடுத்த அறிக்கையொன்றில், "300,000 பொது மக்களின் தலைவிதிக்கு
விரைவான தீர்வொன்றை ஏற்படுத்துமாறும், அதே போல் திரு. பத்மநாதனுக்கு சர்வதேச விதிமுறைகளின் கீழான
பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச சமூகத்திடம்" கோரியது.
மத்தியதர வர்க்க முன்நாள் இடது குழுக்களான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய
சோசலிசக் கட்சியும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்ளை காப்பாற்ற "சர்வதேச சமூகம்" வரும் என்ற மாயையை
பரப்பும் நடவடிக்கையை எடுத்துள்ளன. அவர்களை விடுதலை செய்வதற்காக இராஜபக்ஷவை பலப்படுத்தும்
வழிமுறையாக, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனை தடுத்து நிறுத்துமாறும் ஐக்கிய சோசலிசக் கட்சி
பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசாங்கத்தின் மனித உரிமை சாதனைகள் பற்றிய அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய சக்திகளின் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை கூட நவ சமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய
சோசலிச கட்சியும் பாராட்டின.
உண்மையில், பெரும் வல்லரசுகள் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத
யுத்தத்தை மெளனமாக ஆதரித்ததைப் போலவே, அரசாங்கத்தின் சிறை முகாங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஐ.நா., "நுழைவு அனுமதி" மற்றும் "முன்கூட்டிய மீள் குடியேற்றத்துக்கு" அழைப்பு விடுக்கும் அதே வேளை,
முகாங்ளை பராமரிக்க பணம் கொடுப்பதன் மூலம், அது தமிழ் பொது மக்கள் அடைத்து வைக்கப்படுவத்கு நேரடி
பொறுப்பாளியாகும். இன்றுவரை இந்த முகாங்களை கொண்டு நடத்த 180 மில்லியன் டொலர்கள் வரை அது கையளித்துள்ளது.
இதேபோல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் வெளியிட்டுள்ள
மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களுக்கும் ஜனநாயக உரிமைகள் பற்றிய உண்மையான அக்கறைக்கும் எந்தவொரு
தொடர்பும் கிடையாது. சர்வதேச நாணய நிதிய கடனை அமெரிக்கா தடுத்து வைத்திருந்தாலும், இறுதியில் அதை
அனுமதித்தது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பாசாங்குகள், வெறுமனே கொழும்பு
அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்கும் மற்றும் நாட்டுக்குள் குறிப்பாக சீனாவின் எதிர் செல்வாக்கு
வளர்வதை எதிர்ப்பதற்குமான ஒரு வசதியான வழிமுறை மட்டுமே.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவைப் பொறுத்தளவில், தமிழ் வெகுஜனங்கள் மீதான
அவற்றின் அலட்சியம் கடந்த மே மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் தெளிவாக காட்சிக்கு
வந்தது. அவை அங்கு இலங்கை அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தின் வெற்றியை பராட்டும் ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றின.
ஏனைய ஒவ்வொரு விவகாரங்களிலும் போலவே இதிலும், நவ சமசமாஜக் கட்சி
மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி "சர்வதேச சமூகத்துக்கு" விடுக்கும் அழைப்பு, தொழிலாள வர்க்கத்தின்
எந்தவொரு சுயாதீன அணிதிரள்வு சம்பந்தமான அவர்களின் குரோதத்தில்
இருந்தே வெளிவருகின்றது. தமிழர்களது மட்டுமன்றி முழு தொழிலாள
வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்தை தொடுப்பதற்கு இலாயக்கான ஒரே
சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்கவும்
அவர்களது சிதறுண்டுபோன வாழ்க்கையை மீளக்
கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவுவதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை
விடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி சகல தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக, சிங்கள
தொழிலாளர்கள் தமது தமிழ் வர்க்க சகோதர சகோதரிகளுக்கு நேரடியாக உதவ முன்வர வேண்டும். இந்தப்
பிரச்சாரமானது, ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் ஐ.நா. என்றழைக்கப்படும் சர்வதேச கொள்ளையர்களின்
குகைக்கும் பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பததை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக தெற்காசியா
மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் பொறுப்பு
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் உண்டு. இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சர்வதேச
முன்னெடுப்புகளின் ஒரு குறிப்பான தெளிவான வெளிப்பாடு மட்டுமே. "பயங்கரவாதத்தின்
மீதான யுத்தம்" என்ற பதாகையின் கீழ், அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு உலகம் பூராவும் உள்ள நாடுகள்,
வெளிநாடுகளில் புதிய யுத்தத்துக்கும் மற்றும் உள்நாட்டில் ஆழமான வர்க்க மோதல்களுக்கும் தங்களை தயார்செய்கின்ற
வகையில், நீண்டகால சட்ட விதிமுறைகளை கிழித்தெறிந்து வருகின்றன. ஜனநாயக
உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது, காலங்கடந்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் சமுதாயத்தை சோசலிச
முறையில் முழுமையாக மறு ஒழுங்கு செய்யவும் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்துடன் நெருக்கமாக
கட்டுண்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் மற்றும்
ஜனநாயக உரிமைகளை காப்பதில் அக்கறை காட்டும் அனைவரையும், இலங்கை அராசங்ததை கண்டனம் செய்து,
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி
கடிதங்கள் அனுப்புவதன் மூலமும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமும் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதன்
மூலமும் எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.