World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: The denouement looms for Labour

தொழிற்கட்சிக்கு பெரும் முடிவு காத்திருக்கிறது

By Chris Marsden
3 October 2009

Use this version to print | Send feedback

இந்த வாரம் தொழிற்கட்சி வெறும் அவமானத்தினாலேயே மடிந்தது.

தொழிற்கட்சியின் பிரைட்டன் மாநாட்டு அரங்கு அபூர்வமாகத்தான் பாதிக்கும் மேலான கூட்டத்தை கண்டது; கட்சித் தலைவரும், பிரதம மந்திரியுமான கோர்டன் பிரெளன் அவருடைய "மீள் வருகைக்கான போராட்டமாக" தயாரிக்கப்பட்ட உரை என்று கூறப்பட்ட தலைமை உரைக்கும் இதே கதிதான். பெரும்பாலான நேரங்களில் அவையில் நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தன. ஒன்று பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கே பெறவில்லை அல்லது தங்கள் துயரங்களை மூழ்கடிக்க அருகே இருந்த மதுக்கடைகளில் இருந்துவிட்டனர். அரங்கில் இருக்கைகளில் இருந்து பங்கேற்றவர்கள்கூட George A. Romeo ஒரு திரைப்படத்தில் நடைபிணமாக வருவது போன்ற தோற்றத்தை கொடுத்தனர்--எந்த சிந்தனையும் இன்றி அரங்கைச் சுற்றிவருதல் அல்லது ஏதோ நனவுடன் வாழ்வது போல் காட்டிக் கொண்ட தோற்றத்தில்.

இந்த வார நிகழ்ச்சிகள் Observer க்கு நிதிமந்திரி அலிஸ்டர் டார்லிக், கட்சி "வாழும் விருப்பத்தை இழந்துவிட்டது" என்று கூறிய அறிக்கையுடன் தொடங்கின. மாநாடு தொடங்கிய மாலையில், ஜேர்மனியில் நடந்த முடிவுகள் தெரியவந்தன; இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அதன் மிக மோசமான வாக்குப் பதிவான 23 சதவிகித வாக்குகளை மட்டுமே சமூக ஜனநாயகக் கட்சி பெற்றது.

இந்த தேர்தல் சங்கடத்தின் முக்கியத்துவம் பிரைட்டனில் விவாதிக்கப்படவில்லை என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்; ஆனால் வலதுசாரி தொழிற்கட்சித் தலைவரான டெனிஸ் மக்ஷேனால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

"ஜேர்மனியில் இடதுகளின் மடிதல் ஐரோப்பா முழுவததற்கும் உள்ள நிலைப்பாட்டின் நெருக்கடியாகும்; இந்த வாரம் தொழிற்கட்சி அதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் கார்டியனுக்கு எழுதினார்.

இதற்கு முக்கிய காரணம் "தொழில்துறை நிறுவனங்களின் மூலதனத்தளத்தை வலுப்படுத்த தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களை நிறுத்திவைப்பதற்கு முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் ஒத்துழைத்ததுதான்," "தங்கள் வாங்கும் திறனைக் குறைத்துவிட்ட சமூக ஜனநாயக கட்சியின் மந்திரிகளுக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து தொழிலாளர்கள் அகன்று விட்டனர்" என்று மக்ஷேன் ஒப்புக் கொண்டார்.

ஐரோப்பா முழுவதும் இதே நிலைதான் உள்ளது என்பதையும் அவர் தெளிவாக்கினார். ஜேர்மனிய சமூக ஜனநாயகத்தின் நெருக்கடி "பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளுன் சேர்கிறது; இங்கு மரபார்ந்த 20ம் நூற்றாண்டு ஜனநாயக இடது கட்சிகளின் அரசியல் வடிவமைப்பு இனி தேர்தல்களில் பெரும்பான்மை காண முடியாது" என்று கூறிய அவர், "இது இப்பொழுது ஒரு நூற்றாண்டிற்கு முன் சமூக ஜனநாயக, சோசலிச, தொழிற் கட்சிகள் என்று நிறுவப்பட்ட காலத்தில் இருந்து மிகச் சோதனை மிகுந்த காலத்தை எதிர்பார்த்துள்ளது" என்றும் தொடர்ந்து கூறினார்.

உண்மையில் சர்வேதேச அளவில் சமூக ஜனநாயகவாதிகளும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கட்சியும் ஏற்கனவே இந்தச் சோதனையில் தோற்றுவிட்டனர். "இடது" என்பதே இல்லாமல் தொலைவில் இருப்பதுடன், அவர்கள் "புதிய தாராளவாத" கொள்கைகளுக்கு ஆர்வத்துடன் வாதிடுவதோடு, சரிவின் விளிம்பில் உலகப் பொருளாதாரத்தைக் கொண்டுவந்த ஒட்டுண்ணித்தன, ஊக வழக்கங்களுடனும் நேரடியான தொடர்பு கொண்டிருந்தனர்.

வலதிற்கு எந்த அளவிற்கு தொழிற்கட்சி நகர்ந்துள்ளது என்றால், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தல்களில் கட்சியை ஊக்குவிப்பதற்கு வணிக மந்திரி பீட்டர் மண்டல்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மிக நெருக்கமாக "புதிய தொழிற்கட்சியுடனும்", கட்சி சீர்திருத்தத் திட்டத்தை கைவிட்டதுடனும் தொடர்பு கொண்டுள்ளதுடன், பல ரஷ்ய தன்னக்குழுக்களின் நண்பரும் ஆவார். இவர்தான் "சிலர் இழிந்த அளவிற்கு செல்வம் சேர்ப்பது பற்றி ஆழ்ந்த திருப்தி அடைந்துள்ளதாகவும்" அறிவித்தவர் ஆவார். 1996ம் ஆண்டு பிளேயரின் புகழ் பெற்ற கருத்தான, "புதிய தொழிற்கட்சி செயற்திட்டம்", கட்சி "பீட்டர் மண்டல்சனை நேசிக்க கற்றுக் கொண்டால்தான்" முழுமையை அடையும் என்ற பொருளுரையின் நாயகரும் ஆவார்.

இவருக்கு கிடைத்த பெரும் உற்சாக கரவொலிகள், எந்த அளவிற்கு கட்சி என்று மிச்சம் இருப்பது ஊழல் மிகுந்தது, அவரை நேசிக்க மட்டும் தயாராக இல்லாமல், இவர் ஒரு தேர்தலுக்கு பொறுப்பாகவும் இருக்க முடியும் என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளுகிறது என்பதற்கு நிரூபணம் ஆகும். "நான் மீண்டு வர முடியும் என்றால், நாமும் (கட்சியும்) மீண்டுவர முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.

பிரெளனே உரையற்றத் துவங்கியபோது, தொழிற்கட்சியை "இடது" எனச் சித்தரிக்கும், கன்சர்வேடிவ்களின் தடையற்ற சந்தை சிந்தனைக்கு ஒரு மாற்றீடு எனக் காட்டும் இயலாத பணியில் ஈடுபட்டார்.

தன்னுடைய பிரிட்டனின் வங்கியாளர்களுக்கு அளித்த பல பில்லியன் ஊக்கப் பொதியை மில்லியன் கணக்கான மக்களுடைய வேலைகள், வீடுகள், சேமிப்புக்கள் ஆகியவற்றை ஆபத்திற்குக் கொண்டுவரக்கூடிய பெரு மந்தநிலையை" தவிர்த்தலுக்கு செய்த நலம் பயந்த செயல் என்று சித்தரித்துக் காட்டினார். "கடந்த இலையுதிர்காலத்தில் உலகத்தை சரிய வைத்தது வெறும் திவாலான நிறுவனங்கள் மட்டும் அல்ல, ஒரு திவால் சிந்தனைப் போக்கும்தான்" என்று டேவிட் காமரோனையும் டோரிக்களையும் கடிந்தார். சந்தைகள் எப்பொழுதும் தம்மை திருத்திக் கொள்ளும் ஆனால் தம்மை அழித்துக் கொள்ளாது என்று கன்சர்வேடிவ்களின் கருத்துத்தான் தோற்றது என்றார். அனைத்தையம் சந்தைக்கு விட்டு விடுக, தடையற்ற சந்தைகள் சுதந்திரமாக மட்டும் இல்லாமல், மதிப்புக்களிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற வலதுசாரி அடிப்படைவாதம்தான் தோற்றது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து மரபார்ந்த "மத்தியதர வகுப்பு" மற்றும் "தொழிலாள வர்க்கத்தின்" மரபார்ந்த மதிப்புக்கள் நிலைநிறுத்தப்படும் என்பவையும் கூறப்பட்டன. இவற்றில் தடையற்ற கல்விக்கும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் என்பதும் அடங்கியிருந்தது; இந்த உறுதிமொழியை தொழிற்கட்சி "தங்கள் செயலில் விளையாத ஒரு புயலில் மத்திய, நிதான வருமானங்களை உடையவர்களை தவிக்க விடாது" என்ற உறுதி மொழியும் வந்தது. அதே போல், "உயர்மட்டத்தில் வரிகளை உயர்த்துக", "விதிகளை மீறுபவர்கள் மீது சட்டங்களை கடுமையாக்கு"--எல்லாவற்றிற்கும் மேலாக வங்கி இயக்குனர்களை--"வங்கிகள் பிரிட்டிஷ் மக்களுக்கு திரும்ப பணம் கொடுப்பதை உத்தரவாதப்படுத்து" என்ற கருத்துக்களும் வெளிவந்தன.

இதையும்விட அவருடைய "இன்று நான் உங்களுக்குக் கூறுகிறேன், சந்தைகளுக்கு அறநெறிகள் தேவை" என்ற அறிவிப்பு இன்னும் எள்ளி நகையாடும் விதத்தில் இருந்தது.

இப்படி வெகுஜனத் திருப்திக்கான முயற்சி பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் வலதுசாரிக் குரலை எடுத்துக் கொண்டது; "சட்டம்-ஒழங்கு உறுதிமொழிகள்" சமூக விரோத நடவடிக்கைகளை அடக்குவதற்கும், அனைத்து 16, 17 வயது ஒற்றைத் தாய்கள் "கண்காணிப்பு இல்லங்களில் இருத்தப்பட வேண்டும்", "50,000 குழப்பங்கள் நிறைந்த வீடுகளை" "குடும்பத் தலையீட்டுத் திட்டத்தின் மூலம்" தெளிவான விதிகள், அவற்றை நிறைவேற்றாவிட்டால் தெளிவான தண்டனைகள் மூலம்" ஒழுங்கு படுத்ததுல், "இளவயதினர் மனம் போனபடி நடக்காமல் இருத்தல், இரவு நேரத்தில் நம்முடைய நகர மையங்களை எவரும் செல்ல முடியாத நிலைக்கு மாற்றுதல்" போன்றவையும் கூறப்பட்டன.

இவருடைய கடைசி உறுதிமொழி குடியேற்றத்தை குறைப்பதற்கு நடவடிக்கை, "நம்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கிவிடலாம் என்ற நினைப்பவர்கள்மீது கடுமையான அணுகுமுறை", அதே நேரத்தில் "எமது புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குடியேற்ற முறை, திறமை உடையவர்கள் பிரிட்டனுக்கு உதவக்கூடியவர்கள் வரவேற்கப்படுவர் என்றும் இல்லாதவர்கள் வருவதற்கு மறுப்பு" என்பவையும் தொடர்ந்தன.

அனைவருக்கும் முறையீடு என்ற பிரெளனின் முயற்சி எவருக்கும் நம்பிக்கை தரவில்லை. தொழிலாளர் அதிகாரத்தில் இருந்து மூன்று பதவிக்காலத்தையும் கழித்த எந்தத் தொழிலாளரும் கட்சியை தடையற்ற சந்தையின் விரோதி என்று சித்தரிக்கும் பரிதாபமான முயற்சியை ஏற்க மாட்டார்கள். தொழிற்கட்சி ஏற்கனவே பொதுத் துறையில் மகத்தான, நீடித்த வெட்டுக்களுக்கு திட்டமிட்டுள்ளது, அதையொட்டி ஊதியங்கள் குறைக்கப்படும், பணிகள் குப்பையில் போடப்படும் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வேலையை இழப்பர், வாழ்க்கைத் தரங்களை இழக்க வைக்கும் திட்டங்களையும் கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். "அடுத்த நான்கு ஆண்டுகளில் பற்றாக்குறையை குறைப்பதற்கு பற்றாக்குறைக் குறைப்புத் திட்டத்தை" லேபர் கொண்டுள்ளது பற்றியும் அவர் சித்திரித்தார்; இது "புதிய நிதியப் பொறுப்புச் சட்டத்தின் மூலம் ஒரு சட்டமாக்கப்படும்" என்றும் கூறினார். இதன் பொருள், தொழிற்கட்சி, "செலவினங்களைக் குறைக்கும், உண்மையான பொதுத் துறை ஊதிய நிலைகள் இவற்றைச் செய்வதுடன் நம்மால் முடியக்கூடிய சேமிப்புக்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்" என்பதாகும்.

பிரெளனின் "காப்பாற்றுதல்" என்னும் அலங்கார சொல்லும் கட்சியின் பெருவணிக ஆதரவாளர்களுக்கு முன் மங்கி விடுகிறது; அவர்கள் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்கும் கட்டாயத்திற்கான தொடர்ந்த தாக்குதலில் எந்த குழப்பத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ரூபர்ட் மர்டோக்கின் Sun பிரெளன் பேசிய தினத்தன்று "தொழிற்கட்சி இழந்துவிட்டது" என்ற தலைப்பில் தன் ஆதரவை லேபரிடம் இருந்து நீக்கி தலையங்கத்தை வெளியிட்டது; இது மிக அதிக சேதத்தைக் கொடுப்பதற்குச் செய்யப்பட்டது.

1997ல் அது பிளேயரைத் தழுவியது தாட்சர் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், தனியார்மயமாக்குதல் என்ற கொள்கையுடைய நிதிய உயரடுக்கின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றதின் அடையாளம்தான். இப்பொழுது மர்டோக் செய்தி ஊடகப் பேரரசு தான் காமரோனுக்கு முழு ஆதரவு கொடுத்து, அவருடைய கட்சிக்கு வரலாற்றிலேயே முன்னோடி இல்லாத அளவிற்கு அது கடும் சிக்கன நடவடிக்கையை சுமத்த பெரும்பான்மையையும் அளிக்க வேண்டும் என்று முடிவாய் உரைத்தது.

Sun 1997ல் புது தொழிற்கட்சிக்கு ஆதரவு கொடுத்ததற்குக் காரணம் அது "அதன் அழிவுதரும் கடின இடது கோட்பாடுகளை கைவிட்டதால்தான்" என்று தலையங்கத்தில் கூறியுள்ளது. ஆனால் தொழிற்கட்சி இன்னும் "பொதுத் துறை இடைநிலை மேலாளர்கள் என்ற உபயோகமற்ற தட்டிற்கு வேலைகொடுப்பதின்மூலம்" பில்லியன்களை "வீணடித்துள்ளது"; "ஊதிய காசோலையைவிட அதிக நலன்களைத் தரும் நன்மைகளையும் கொடுத்துள்ளது", இதையொட்டி "மிகப் பெரிய, வேலை என்பது கறைபடிந்த சொல் என்று நினைக்கும் சோம்பேறித்தன உட்வகுப்பையும் தோற்றுவித்துள்ளது" என்றும் எழுதியுள்ளது.

"எமது இயல்பான முயற்சிகளை மீட்பதற்கும் தன் முயற்சி மூலம் ஒவ்வொரு குடும்பமும் தன்னை உயர்த்திக் கொள்ளத் தேவையான உறுதியை, பொது உதவியை நாடாமல் பெறுவதை மீட்க", "வணிகத்தை இறுக்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நாடாவைக் கத்தரிக்க", "நியாயமான வரிக் குறைப்புக்களை செய்வதற்கு", "வீணான பொதுப் பணிகளை சீர்திருத்த", அவற்றுடன் "ஆப்கானிஸ்தானில் போரை வெல்வதற்கு உண்மையான உறுதியைக் கொடுப்பதற்கும்" பிரிட்டனுக்கு ஒரு டோரி அரசாங்கம் வேண்டும் என்று கூறியுள்ளது..

மர்டோக்கின் தாக்குதலுக்கு விடையிறுக்க தொழிற்கட்சி ஒரு தைரியாமான முகத்தைக் காட்டும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால் திரைக்குப் பின்னால் அவரையும் எந்த அடுக்கிற்காக அவர் பேசுகிறாரோ அதை நம்ப வைக்கவும் தான்தான் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் சுமத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு சிறந்த கருவி என்பதை நிரூபிக்க அனைத்தையும் செய்யும்--தேவைப்பட்டால் அந்த நிலையை நிரூபிக்க பிரெளனின் தலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.

தொழிற்கட்சி உடைய அரசியல் தோலைக் காப்பதற்கு தாராண்மை ஜனநாயக் கட்சியினருடன் உடன்பாட்டை காணும் வகையில் பிரெளன் முயல்கிறார்; இதற்காக தேர்தல் சீர்திருத்தம், அதாவது எவர் முதலில் வருகிறாரோ அவருக்கு என்பதற்குப் பதிலாக, விகிதாசார பிரதிநிதித்துவம் என்று பிரிட்டனில் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்தவும் முயல்கிறார். ஆனால் பழமைவாதிகளின் கீழ் "கருத்தியல் ரீதியாக உந்தப்பட்டதற்கு" ஒரே மாற்றீடாக கட்சியை காட்டிக்கொடுப்பதற்கு அதிக அளவில் தொழிற்கட்சியினர் நம்புவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தைத்தான்.

Unite ன் கூட்டுப் பொதுச் செயலாளர் டோனி வுட்லி காட்டிக் கொடுக்கப்பட்ட காதலர் போல் Sun பிரதியை பரிதாபமாகக் கிழித்து, அதே நேரத்தில் "தொழிற்கட்சிக்கு உண்மையான மதிப்புக்களை பற்றி" பேசியதற்கு பிரெளனை பாராட்டினார். GMB இன் போல் கென்னி, பிரெளனுடைய உரை "டோரிக்கள்மீது போராடும் விருப்பத்தையுடடைய ஒரு பிரதம மந்திரியின் பேச்சு" என்றார்; UNISON உடைய பொதுச் செயலாளர் Dave Prentis, "தொழிற்கட்சிக்கும் டோரிக்களுக்கும் இடையே தான் தெளிவான இடது நீரை அமைத்துள்ளதாகவும்" கூறினார்.

தங்கள் பங்கிற்கு பிரிட்டனின் மிகப் பெரிய குட்டி முதலாளித்துவ இடது குழுவான Socialist Workers Party, "தொழிற்கட்சி, டோரிக்கள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் அனைவரும் செலவுக் குறைப்புக்கள் வேண்டும் எனக் கோருவதில் ஒன்றுபட்டுள்ளதாகவும், இதற்கு அடிப்படையில் இருப்பது பொது முன்கருத்தான அனைத்து முக்கிய கட்சிகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதாகும் என்று கூறினார். ஆனால் அனைத்துக் குற்றங்களுடனும், தொழிற்கட்சி ஒன்றும் டோரிக்களாகி விடமாட்டார்கள்" என்று வலியுறுத்தியது.

"ஒரு டோரி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தொழிற்கட்சி மடிந்துவிட்டது என்று பேசுவது கனிந்த பேச்சு அல்ல" என்று அது வலியுறுத்தியது. "எதிர்க்கட்சி என்ற அடையாளத்தை கட்சி புதுப்பிக்கும் என்றும் அதன் அலங்காரச் சொற்களை இடதிற்கும் மாற்றக்கூடும். டோரி அளித்த குறைப்புக்களின் அளவில் அதிர்ச்சியுற்றவர்களுக்கு, தொழிற்கட்சி ஒரு நம்பிக்கை ஒளியாக, அதன் வலதுசாரிக் கொள்கைகளைத் தக்க வைத்தாலும், வரும்."

இவ்விதத்தில் தொழிற்கட்சியை "குறைந்த தீமை" என்று நம்புவது தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதாகும். தொழிற்கட்சி ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி ஆகும், பெருவணிக பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிராக இறுதி வரை அரசியல் பொருளாதாரப் போராட்டத்தை முன்னெடுக்கும் உண்மையான ஒரு சோசலிசக் கட்சி கட்டாயம் அதற்குப்பதிலாக கொண்டுவரப்படவேண்டும்.