World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

As US jobless toll tops 15 million

Unemployment crisis shows the failure of capitalism

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 15 மில்லியனைத் தாண்டுகையில்

வேலையின்மை நெருக்கடி முதலாளித்துவத்தின் தோல்வியை காட்டுகிறது

Patrick Martin
5 October 2009

Back to screen version

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கத் தொழிலாளர் சந்தை பற்றி வெளிவந்துள்ள அதிர வைக்கும் புள்ளி விவரங்கள் ஓராண்டிற்கு முன் ஏற்பட்ட வோல் ஸ்ட்ரீட் சரிவில் இருந்து வந்துள்ள நிலைமை தற்காலிக கீழ்நோக்கிய திருப்பமோ அல்லது மந்த நிலையோ அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின்மீது ஒரு வரலாற்று ரீதியான தாக்குதல் என்பதை நிரூபிக்கிறது.

செப்டம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 9.7 சதவிகிதத்தில் இருந்து 9.8 ஆக உயர்ந்தது; இதற்கிடையே வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத் தரத்திற்கு உயரும், குறைந்தது அடுத்த ஆண்டேனும் இரட்டை இலக்கத்தில்தான் இருக்கும் என்ற கணிப்புக்கள் வந்துள்ளன.

அமெரிக்க தொழிலாளர் திணைக்களம் செப்டம்பர் மாதம் 263,000 நிகர வேலை இழப்புக்கள் ஏற்பட்டன என்றும், இது அரசாங்கம் மற்றும் வணிகப் பொருளாதார வல்லுனர்கள் கணித்ததைவிட மிக அதிகம் என்றும் அறிவித்துள்ளது. மற்றும் ஒரு 571,000 தொழிலாளர்கள் தொழிலாளர் சந்தையில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டனர்; வேலைகிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் கண்டதால், இந்த மாதத்தில் வேலை தேடவில்லை.

பொருளாதார மீட்பு பற்றிய கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், மொத்தத்தில் 834,000 தொழிலாளர்கள் வேலைகள் இழந்துள்ளனர் அல்லது வேலை தேடுவதை விட்டுவிட்டனர் என்பது ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் ஏற்பட்ட 700,000 க்கும் அதிகமான வேலை இழப்புக்களுடன் ஒப்பிடத்தக்கது ஆகும்.

வேலை இழப்புக்கள் தொடர்ந்து 21 மாதங்களாக நடைபெற்று வருகின்றன என்பதை செப்டம்பர் குறிக்கிறது; 1939ல் இருந்து இத்தகைய புள்ளிவிவரங்களை தொழிலாளர் திணைக்களம் சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து இது மிக நீண்ட தொடர்ந்த சரிவு ஆகும்.

கிட்டத்தட்ட 15 மில்லியன் தொழிலாளர்கள், வேலையின்மையில் உள்ளனர்; 2007 முடிவில் மந்த நிலை தொடங்கியதில் இருந்து இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. சராசரி வேலையின்மைக் காலம் 26.2 வாரங்கள், அரை ஆண்டை விட சற்று அதிகம், இது இத்தகைய புள்ளி விவரங்களை தொழிலாளர் திணைக்களம் 1948ல் சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். வேலை இல்லாதவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள், 27 வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமாக வேலையில் இல்லை. இதுவும் தொழிலாளர் துறையில் இருந்து மிக அதிக சான்றிற்கு ஒரு புள்ளிவிவரம் ஆகும்.

மொத்தத்தில் வேலையே இல்லாதவர்களை தவிர, ஏனைய 9.1 மில்லியன் தொழிலாளர்கள் சுயவிருப்பின்றி பகுதிநேரம் வேலை பார்ப்பவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர்; தங்கள் வாழ்க்கைத் தரத்தை தக்க வைத்துக்கொள்ள தேவையான மணி நேரங்களைவிட அதிக குறைவான நேரமே வேலை பார்க்கின்றனர். மொத்தத்தில் வேலையில்லாதவர் எண்ணிக்கை, ஊக்கமற்றவர்கள் மற்றும் சுயவிருப்பமற்ற பகுதி நேரத் தொழிலாளர்கள் இரண்டையும் சேர்த்து 25 மில்லியனை கடந்துவிட்டது--இறுதிக் கணக்கில் இந்த எண்ணிக்கை 1930களில் மாபெரும் பொருளாதார மந்தத்தின் பொழுதிருந்த வேலையின்மையின் மொத்தத்தைவிட பெரிதும் அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுமே செப்டம்பரில் வேலை இழப்புக்களைக் காட்டியுள்ளன. இதில் 53,000 அரசாங்க வேலைகளும் அடங்கும்; இதற்குக் காரணம் மாநிலங்களும், நகரவை மன்றங்களும் நடத்திய பணிநீக்கங்கள் ஆகும். ஒரே ஒரு துறை, சுகாதாரப் பாதுகாப்புப் பிரிவு அதிகத்தைக் காட்டியது--இந்த துறைதான் ஒபாமா நிர்வாகத்தாலும் காங்கிரசாலும் மிக அதிக செலவுக் குறைப்புக்கு இலக்காக ஆக்கப்பட்டுள்ளது; இது தவிர்க்க முடியாமல் வேலை குறைப்புக்கள் என்ற வடிவத்தை அடையும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் இப்பொழுது ஆறு வேலையில்லாத தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். பெருநிறுவன CEO க்கள் சங்கமான Business Roundtable அமைப்பு அதன் உறுப்பு நிறுவனங்களில் 40 சதவிகிதத்தினர் அடுத்த ஆறு மாதங்களில் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாகக் கூறியுள்ளனர்; 13 சதவிகிதத்தினர்தான் விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் 2009 முதல் ஒன்பது மாதங்களில் திவால் நிலமைக்கு பதிவு செய்துள்ளனர் என்று American Bankruptcy Institute கூறுகிறது. செப்டம்பர் மாதத்தில் 2008ல் இதே மாத எண்ணிக்கையைவிட, 124,790 புதுப் பதிவுகள் ஏற்பட்ட விதத்தில் 41 சதவிகிதம் கூடுதல் ஏற்பட்டது. இந்த ஆய்வுக்கூடம் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 1.4 மில்லியன் மக்கள் திவால் தன்மைக்கு பதிவு செய்வர் என்று கணித்துள்ளது.

இந்த வேலைகள் பேரிழப்பு நிலைக்கு ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் நகைப்பிற்கு இடமான விடையிறுப்பு வேலையின்மை நலன்களைக் குறைந்த அளவிற்கு அதிகப்படுத்தியுள்ளது ஆகும். ஒரு மதிப்பீட்டின்படி 400,000 தொழிலாளர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் வேலையின்மை நலன்களை (unemployment benefits) தீர்த்துவிட்டனர், ஆண்டு இறுதிக்குள் 1மில்லியன் தொழிலாளர்கள் அவ்வாறு செய்துவிடுவர்.

தன்னுடைய வாரந்தர இணைய உரையில் சனிக்கிழமை அன்று ஒபாமா தான் "வேலைகளை தோற்றுவிப்பதற்கு கூடுதலான விருப்புரிமைகளை" பரிசீலித்து வருவதாகக் கூறினார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கோடிட்டுக் காட்டிய நடவடிக்கைகள் விரிவாக்கபட்ட வேலையின்மை நலன்கள், மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு COBRA திட்டத்தின்படி சுகாதாரப் பாதுகாப்பிற்கு வரிச் சலுகைகள் ஆகியவைதான் உள்ளன. தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்பு மறு கட்டமைப்பை வணிகத்திற்கு ஒரு வரம் என்று பிரச்சாரம் செய்து "சிறு வணிகர்கள் தங்கள் நிறுவனங்களை விரிவாக்க, அதிக ஊழியர்களை நியமிக்க விரும்புகின்றனர்; அவர்களால் முடியவில்லை, ஏனெனில் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு செய்வதற்கு அவர்களால் முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.

ஒரு இரண்டாம் ஊக்கப் பொதிக்கான முறையீடுகளை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது; இதே நிலைப்பாடுதான் முன்னாள் பெடரல் ரிசேர்வ் குழுத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பானாலும் ABC செய்தி நிகழ்வான "This Week" க்கிற்கு கொடுத்த பேட்டியில் கூறப்பட்டுள்ளது. வேலைகளை தோற்றுவிக்க எந்தப் புதிய பொதிக்குமான கிரீன்ஸ்பானின் எதிர்ப்பிற்கு, இரண்டு முக்கிய செனட்டர்களான ஜனநாயகக் கட்சியின் நியூ யோர்க்கின் Charnles Schumer மற்றும் குடியரசுக் கட்சியின் டெக்ஸாஸின் ஜோன் கோர்னின் இருவரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

வேலையின்மை நிலையை பெரு மந்த நிலைக்காலத்திற்குப் பின்னர் மிக அதிகமாக வைத்திருப்பது இரு பெருவணிகக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தத்தின் கொள்கையாகும்.

ஜனநாயக அரசியல் வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் எப்பொழுதும் பொருளாதாரச் சரிவை, குறிப்பாக உற்பத்திப் பிரிவில், வெளிநாட்டுப் போட்டி, இறக்குமதிகள், பூகோளப் பரிமாணத்தின் வேலைகள் நெருக்கடி ஆகியவற்றின் பேரில் மாறாது குறை கூறுகின்றனர். உலகின் 30 மிகப் பெரிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளை ஒரு குழுவாக ஆராயும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) கருத்தின்படி 30 நாடுகளிலும் வேலையின்மை விகிதம் 2010ல் 10 சதவிகிதத்தை எட்டும்--இதுதான் அமெரிக்காவிற்கு கணிக்கப்பட்டுள்ள சராசரியும் ஆகும். கிட்டத்தட்ட 57 மில்லியன் மக்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வேலையின்றி இருப்பர்--இந்த எண்ணிக்கை பிரான்ஸ், இத்தாலி அல்லது தென் கொரியாவிலுள்ள மொத்த மக்கள் தொகைக்கு சமமாகும்.

வேலைகள் நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் தோல்வியை நிரூபிக்கிறது--அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும். OECD நாடுகளில் எந்த ஒரு முதலாளித்துவ அரசாங்கமும் வேலையில்லாதவர்கள் வேலைக்கு திரும்புவதற்கோ, வேலைகளைத் தோற்றுவிப்பதற்கோ ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கு ஊதியங்கள், நலன்கள், பணி நிலைகள் ஆகியவற்றைத் தகர்ப்பதற்கான கோரிக்கைகளை செயல்படுத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய தடியாக வெகுஜன வேலையின்மையை பயன்படுத்துகின்றன.

தொழிலாள வர்க்கம் இக்கோரிக்கைகளுக்கு எதிராகப் போராடும் வகையில் தன்னுடைய சொந்த வேலைப்பாதுகாப்பு திட்டத்தை முன்வைக்க வேண்டும்; பெருவணிகத்தின் இலாபத் தேவைகளுக்காக அல்லாமல் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன்தான் அது ஆரம்பிக்கப்பட வேண்டும். பணிநீக்கங்கள், குறைந்த பணிநேரம், ஆலைகள், அலுவலகங்கள் மூடல் இவற்றிற்கு எதிராக, பணியிடங்களை ஆக்கிரமித்தல், அவை மூடப்படுவதைத் தடுத்தல் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களிடமிருந்தும் பரந்த ஆதரவிற்கு வேண்டுகோள் விடுத்தல் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இது, வங்கிகளுக்கு வரம்பில்லாமல் வாரி வழங்குவதற்குப் பதிலாக, அது நல்ல ஊதியம் அளிக்கும் வேலைகளை அளிக்கவும், வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை உள்ளடங்கலாக சமூக உள்கட்டுமானத்தை மறு கட்டமைக்கவும் பல டிரில்லியன் டாலர் பொதுப் பணிகளின் வேலைத்திட்டத்திற்கான கோரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கை, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு ஊதியம், அவர்கள் முன்பு பெற்றிருந்ததுபோல், வீடுகள் முன்கூட்டி விற்பனைக்கு வருவது தடைசெய்யப்படுதல், வெளியேற்றங்கள், பயன்பாட்டு மூடல்கள் மற்றும் பலவிதங்களில் தொழிலாள வர்க்கத்தின்மீது முதலாளித்துவ நெருக்கடி ஏற்றியுள்ள சுமையை அகற்றும் விதத்தில், கட்டாயம் உடனடி நிவராண நடவடிக்கைகளுக்காக எழுப்பப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் சமூகம் சோசலிச முறையில் மறுகட்டமைப்பதற்கான அரசியல் போராட்டத்தின் வடிவமைப்பிற்குள் இருத்தப்பட வேண்டும். நெருக்கடிக்கு விலையை தொழிலாளர்கள் கொடுக்காமல் முதலாளித்துவத்தினர் கொடுக்குமாறு செய்யப்பட வேண்டும். வோல் ஸ்ட்ரீட்டிற்கு கொடுக்கப்பட்ட பிணை எடுப்புக்கள் அனைத்தையும் இரத்து செய்க! பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் பொது உடைமையாக்கி ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்; அங்கு ஊதியம் ஒன்றும் ஒரு திறமையான தொழிலாளியுடையதைவிட அதிகமாக இருக்கக்கூடாது! பொருளாதார வாழ்வை பெருநிறுவன இலாபங்களுக்கு என்று இல்லாமல் உழைக்கும் மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மறு சீரமைக்க வேண்டும். 40 மணிநேரத்திற்கு கொடுக்கும் ஊதியத்தை 30 மணி நேர வாரத்திற்கு கொடுக்கும் முறையை நிறுவுக; அது வேலை வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் கெளரவமான ஊதியம் கொடுக்கும் நிலையை உத்தரவாதம் செய்யும்.

இப்போராட்டத்தின் அச்சு இரு பெரு வணிகக் கட்சிகளுடன் முறித்துக் கொண்டு, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வெகுஜனக் கட்சியைக் கட்டியமைப்பது ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved