World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialist interests drive US focus on Iran, Afghanistan

ஏகாதிபத்திய நலன்கள் அமெரிக்காவை ஈரான், ஆப்கானிஸ்தான் மீது குவிப்புக் காட்ட உந்துதல் கொடுக்கின்றன

Patrick Martin
2 October 2009

Back to screen version

ஒபாமா நிர்வாகம் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட முறையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கை உட்பரிசீலனைக்கு உட்படும் என்று புதனன்று கூறியது; இது இறுதியில் இன்னும் கூடுதலாக 40,000 துருப்புக்களை அங்கு அனுப்புவதில்தான் உச்சக்கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் ஆறு சக்திகள் நடத்திய கூட்டம் ஒருபுறம் இருக்க, அதற்கு மறுநாள் ஜெனீவாவில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக அமெரிக்க அரசாங்கம் ஈரானுடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்டது. அதன் நோக்கம் அதனிடம் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதத் திட்டத்தை அமெரிக்க ஊக்கம் பெற்று வந்துள்ள கோரிக்கைகளுக்கு பணிந்து ஈரான் கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடைகள், நேரடி இராணுவ நடவடிக்கை என்று தெஹ்ரானை அச்சுறுத்துவது ஆகும்.

செய்தி ஊடகத்தின் கவனம் இப்பகுதியில் அன்றாட நிகழ்வுகளில்தான் பெரிதும் குவிப்பாக இருக்கும் --பூசலுக்குட்பட்ட ஈரானிய, ஆப்கானிஸ்தான் ஜனதிபதி தேர்தல்கள், தலிபானுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை சீராக உயர்தல், மற்றும் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கொரில்லா சக்திகளை எதிர்க்கும் போர்கள், கடந்த வாரம் அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் பெரும் பரபரப்புடன் வந்த ஒரு இரகசிய ஈரானிய அணுசக்தி நிலையம் என்று கூறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது போன்ற செய்திகள் மீதாகும்.

ஆனால் தென்மேற்கு ஆசியாவில் குறுக்கிடுவதின் உண்மை உந்துதல் சக்திகள் பற்றி அதிக பகுப்பாய்வுகள் இல்லை; இவை வரலாற்றளவில்தான் அறியப்பட முடியும். மூன்று தசாப்தங்களாக ஜனநாயக மற்றும் குடியரசு நிர்வாகங்களின்கீழ் --கார்ட்டர், றேகன், புஷ், கிளின்டன், இரண்டாம் புஷ், இப்பொழுது ஒபாமா என-- அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் மிக அதிகமாக மத்திய கிழக்கு, காஸ்பியன் கடலின் மேற்கு, தெற்கு, கிழக்குப் பகுதிகளில் ஆழ்ந்து மூழ்கியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில், பாரசீக வளைகுடாவின் எண்ணெய் வளங்களின் மீதான அமெரிக்க மேலாதிக்கம் மூன்று மூலோபாய தூண்களை நம்பியிருந்தது: மிகப் பெரிய ஒற்றை எண்ணெய் உற்பத்தி நாடான செளதி அரேபியா, இஸ்ரேல் அரசு, அமெரிக்க நிதி உதவி பெற்ற, அமெரிக்க நட்பு நாடான முன்னாள் அரேபிய பாலஸ்தீனம்; மற்றும் ஈரானின் ஷா; இவருடைய சர்வாதிகார ஆட்சி CIA ஆதரவு கொடுத்த 1953 ஆட்சிமாற்றத்தால் உறுதிபடுத்தப்பட்டு, அமெரிக்க ஆயுதங்கள், ஆலோசகர்கள் எனப் பெரும் உதவிகளைப் பெற்றது.

பெப்ருவரி 1979ல் ஈரானியப் புரட்சியால் ஷா அகற்றப்பட்டது இந்தக் கோட்டைகளில் ஒன்றை தகர்த்தது, அமெரிக்க மூலோபாயத்திற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது; இன்றளவும் அது தொடர்கிறது. வளைகுடாவின் பாதுகாவலரான ஷா பணியாற்றி, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு முக்கிய நட்பாகவும் இருந்தார். செளதி அரேபியா இராணுவ அளவில் மிகவும் வலிமையற்றதாகவும், இஸ்ரேல் மிகச் சிறிய, தனிமைப்படுத்துப்பட்ட நாடாக இப்பங்குகளைச் செய்ய முடியாத நிலையிலும் இருந்தது.

அமெரிக்காவின் ஆரம்ப விடையிறுப்பு "கார்ட்டர் கோட்பாடு" என்பதை வெளியிட்டது ஆகும்; இது பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் அளிப்புக்களுக்கு எந்த அச்சறுத்தல் வந்தாலும் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு இசைவு கொடுத்தது. இத்துடன் புதிய இஸ்லாமிய ஈரான் குடியரசு மற்றும் அதன் இருபுறங்களிலும் இருந்த ஆப்கானிஸ்தான், ஈராக் என்ற அரண்கள் துணை நின்றன.

ஆப்கானிஸ்தானில் அரசியல் ஆத்திரமூட்டல் மற்றும் காபூலில் இருக்கும் சோவியத் சார்புடைய அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகள் மாஸ்கோவினால் நவம்பர் 1979ல் ஒரு பிற்போக்குத்தன படையெடுப்பைத் தூண்டின; கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski நிர்ணயித்திருந்த இலக்கு அடையப்பட்டது; அதாவது சோவியத் இராணுவத்தை ஒரு நீடித்த, குருதி கொட்டிய, தேக்க நிலையில் இருத்தியது; அவர் அதை ஆர்வத்துடன் "ரஷ்யாவின் வியட்நாம்" என்று விவரித்தார்.

ஈராக்கில் கார்ட்டர் நிர்வாகம், சமீபத்தில்தான் அதிகாரத்திற்கு வந்திருந்த சதாம் ஹுசைனின் ஆட்சியை ஈரான்மீது படையெடுக்குமாறு தூண்டிவிட்டது; அதன் நோக்கம் அதிக அரபு மக்கட்தொகையைக் கொண்ட தெற்கு மாநிலமான குஜிஸ்தானின் எண்ணை வயல்களைக் கைப்பற்றுவது ஆகும். பெரும் குருதி வெள்ளம் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. ஈரான்-ஈராக் போர் ஒரு மில்லியன் உயிர்களைக் குடித்தது; வாஷிங்டன் முடிந்த அளவிற்கு போர் நடக்கட்டும் என்பதற்காக இரு பக்கங்களுக்கும் உதவியது.

பின்னர் அமெரிக்கத் தலைமையிலான பிரச்சாரங்கள் ஈராக், ஈரான் இரண்டும் "பேரழிவு ஆயுதங்கள்" வைத்திருக்கின்றன என்ற நிலையில், அமெரிக்காவும் அதன் நேட்டோ ஐரோப்பி நாடுகளும்தான் ஈராக்கிற்கு இரசாயன ஆயுதங்களை அளிக்க, அதை சதாம் ஹுசைன் ஈரானியத் துருப்புக்கள் மற்றும் அவருடைய சொந்த குர்டிஷ் பேசும் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார் என்பது நினைவு கொள்ளத் தக்கது. ஈராக் சர்வாதிகாரியுடன் அதன் செயல்கள் பற்றி பேசுவதற்கு ரேகன் நிர்வாகத்தால் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தூதர்தான் பின்னர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆவார்.

1990 ம் ஆண்டு ஹுசைன் குவைத்தின் மீது படையெடுத்தபோது, முதல் புஷ் நிர்வாகம் அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு மிகப் பெரிய அமெரிக்க இராணுவப் படையை செளதி அரேபியாவிற்கு அனுப்பி பின்னர் ஈராக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியை அழித்தது. ஆனால் வாஷிங்டன் முழுவழியும் சென்று பாக்தாத்தை கைப்பற்ற முயலவில்லை; ஏனெனில் அது ஈராக் ஆட்சி ஈரானுக்கு எதிர்நிலையில் சரியீடுசெய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், முழு அளவு படையெடுப்பு மிக ஆபத்து உடையது, ஏனெனில் அது அமெரிக்க இராணுவ சக்தியை கிட்டத்தட்ட சோவியத் ஒன்றிய எல்லை வரை கொண்டு செல்லும் என்ற அச்சம் இருந்ததாலும் மேற்கொள்ளப்படவில்லை.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு புதிய, ஆபத்தான ஊக்கத்தைக் கொடுத்தது. இப்பொழுது மூலோபாய நிலைப்பாடுகள் மற்றும் அப்பகுதியில் கணிசமான வளங்களை அடையப்பெறுதல் ஆகியவற்றிற்கான வாய்ப்பை வாஷிங்டன் கண்டது; இவை ரஷ்ய புரட்சிக் காலத்தில் இருந்து ஏகாதிபத்தியத்தின் சுற்றுப்பாதைக்கு வெளியே திறமையுடன் இருந்தன.

இதன் விளைவு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தெற்குச் சுற்றுப் பகுதி முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான முன்முயற்சிகளாக இருந்தன:

1991-92 --- யூகோஸ்லோவியா சிதைக்கப்படல்

1995 -- பொஸ்னியாவில் நேட்டோ தலையீடு

1998 -- ஈராக்கின் மீது அமெரிக்க குண்டுவீச்சு

1999 -- சேர்பியா மீது நேட்டோ குண்டுவீச்சு, கோசோவோ ஆக்கிரமிக்கப்படல்

2001 -- ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு, தலிபான் அகற்றப்படல்

2003 -- ஈராக் மீது படையெடுப்பு, சதாம் ஹுசைன் அகற்றப்படல்

2003-04 -- ஜோர்ஜியா, உக்ரைனில் "வண்ண" புரட்சிகளைத் தூண்டிவிடுதல்

2007-08 -- ஈராக்கில் புஷ்ஷின் இராணுவ "விரிவாக்கம்"

2009 -- ஒபாமா ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்குதல், ஈரான் மீது அழுத்தத்தை புதுப்பித்தல்

இந்தத் தலையீடுகளில் ஒரு அரசியல் மற்றும் மூலோபாய தர்க்கம் இருந்தது; இது அமெரிக்க அரசியல் நடைமுறைக்குள் அவ்வப்பொழுது ஏற்பட்ட உட்பூசல்கள் இருந்தாலும், நிர்வாகத்திற்கு நிர்வாகம் ஜனநாயகக் கட்சியில் இருந்து குடியரசுக் கட்சி, குடியரசுக்கட்சியில் இருந்து ஜனநாயகக்கட்சியின் நிர்வாகம் என்று மாறினாலும், தொடர்ந்தன, பெருகின. வெள்ளைமாளிகை, பென்டகன், வெளிவிவகர அமைச்சகம் ஆகியவற்றில் உயர்மட்ட பதவிகளை வகிக்கும் பல தனிநபர்களின் முடிவுகள் மட்டும் தொடர்பு கொண்டிருக்கவில்லை; முழு ஆளும் வர்க்கத்திற்கும் பொதுவான அடிப்படை அக்கறைகள் தொடர்பு கொண்டிருந்தன.

உறுதியான பொருள்சார்ந்த பொருளாதார நலன்கள் பணயத்தில் உள்ளன: முதலிலும் முக்கியமானதும் ஆக, பாரசீக வளைகுடா மற்றும் காஸ்பியன் பகுதியில் இருக்கும் எண்ணெய், எரிவாயு இருப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு: இவை இதுவரை உலகிலேய மிக அதிக இருப்புக்கள் ஆகும். அமெரிக்க தூதரக முயற்சியின் பெரும்பகுதி இப்பகுதி முழுவதும் இந்த சக்தி வளங்களை முன்னாள் வட்டார மேலாதிக்க சக்தியான ரஷ்யாவைச் சுற்றியும் மற்றும் குரோதமான ஈரானைக் கடந்தும் குழாய்வழித்தொடர்புகளை ஏற்படுத்துவதில் வழிப்படுத்தப்பட்டது.

ஒரு பரந்த வரலாற்றுத் தன்மையில், அமெரிக்க இராணுவ சக்தி தென் மேற்கு ஆசியாவில் வெளிப்பட்டுவருவது இன்னும் தீய, பிற்போக்கு முக்கியத்துவத்தைக் கொண்டது ஆகும். அமெரிக்க முதலாளித்துவம் ஒரு சரிந்து கொண்டிருக்கும் உலக சக்தி ஆகும்; இந்த உண்மை செப்டம்பர்-அக்டோபர் 2008ல் நிதியச் சரிவில் வோல் ஸ்ட்ரீட் ஆற்றிய பங்கினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பொருளாதார சக்தியில் ஏற்பட்டுள்ள அரிப்பை ஈடுகட்டுவதற்கு பெருகிய முறையில் பொறுப்பற்ற தூண்டுதல் தன்மை உடைய விதத்தில் அதன் இன்னமும் மேலாதிக்க நிலையில் இருக்கும் இராணுவ சக்தியைப் பயன்படுத்துகிறது.

இவ்விதத்தில், குறைந்த அளவு என்று கொண்டாலும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு கொடுக்கப்பட்ட முறையீட்டினால் உதவி பெற்று, பாரக் ஒபாமா 11 மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் எந்தவித முறையான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஈராக் போரைப் பற்றி முன்பு குறைகூறியவர் அந்த நாட்டில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை, இன்னும் 140,000 துருப்புக்கள் என்ற எண்ணிக்கையில் வைத்துள்ளார். ஈரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வாதிடுபவர் எனக் கூறப்படுபவர், ஒரு முற்றுகைக்குச் சமமானதாக இருக்கும் (ஒரு போர்ச்செயல்) பொருளாதாரத் தடைகளைச் சுமத்துவதற்காக டிசம்பர் மாதத்தில் ஒரு கால கெடுவை வைக்கிறார், அல்லது நேரடியான இராணுவத் தாக்குதலுக்கு வழிவகுக்கிறார். அவருடைய நிர்வாகம் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கம் செய்துள்ளது; அதற்காக இன்னும் ஒரு 21,000 துருப்புக்களை அனுப்பியுள்ளது; அதே நேரத்தில் ஒபாமா போரை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி இன்னமும் 40,000 துருப்புக்கள் வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய வெடிப்பின் தர்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். போரையும் இராணுவவாதத்தையும் அவற்றின் அடிப்படைக் காரணங்களில் இருந்து பிரிப்பது கடினம் ஆகும். முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கு மற்றும் அது பொதிந்துள்ள தேசிய அரசு முறையுமே அவை. போருக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் என்பது முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகள், காப்பாளர்கள் ஆகியோருக்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான் முடியும். இதன் பொருள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்பதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved