World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan army fires on Tamil detainees

இலங்கை இராணுவம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது

By Sarath Kumara and Subash Somachandran
30 September 2009

Use this version to print | Send feedback

இலங்கை படையினர் கடந்த சனியன்று வடக்கில் வவுனியா நகருக்கு அருகில் உள்ள மெனிக் பார்ம் தடுப்பு முகமாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிராயுதபாணிகாளன தமிழ் பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரோயகம் செய்துள்ளனர். ஆறு வயது சிறுமியான நிதர்ஷிகா கடும் காயமடைந்தார். 10 வயது சிறுவனும் ஒரு நடுத்தர வயது நபரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளனர்.

இத்தகயை முகாங்கள் அரசாங்கம் போலியாகக் கூறிக்கொள்வது போல் "நலன்புரி கிராமங்கள்" அல்ல, மாறாக இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களே என்பதை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின் கடைசி வாரங்களில் நடந்த மோதல்களின் போது இடம்பெயர்ந்த சுமார் 280,000 தமிழ் பொது மக்கள் இந்த நிலையங்களில் காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் சனிக்கிழமை ஆனந்த குமாரஸ்வாமி முகாமிலேயே நடந்துள்ளது -இந்த முகாம் 160,000 மக்கள் இழிந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெனிக்பார்மில் உள்ள நான்கு முகாங்களில் ஒன்றாகும். இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரும் "பயங்கரவாத சந்தேக நபர்களாகவே" நடத்தப்படுகின்றனர்.

ஒரு குழுவினர் வலயம் 1ல் (குமாரஸ்வாமி முகாம்) இருந்து வலயம் 2க்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது என பாதுகாப்பு அமைச்சு கூறிக்கொண்டது. இராணுவத்தின் படி, கூடியிருந்தவர்கள் சிப்பாய்களை கற்களால் தாக்கத் தொடங்கினர். ஒரு நபர் கைக்குண்டு ஒன்றை வீச முயன்ற போது சிப்பாய்கள் "தற்பாதுகாப்புக்காக" துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் கூற்று என்னவாக இருந்தாலும் அதில் நம்பகத் தன்மை கிடையாது. மே மாதம் முடிவடைந்த யுத்தத்தின் போது, இராணுவம் அதனது குற்றங்கள் பற்றி வழமைபோல் பொய் கூறியதோடு அவற்றை மூடி மறைந்தது. ஐ.நா. மதிப்பீடுகளின் படி, கடைசி வராத்தில் நடந்த மோதல்களின் போது, இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சு ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை என மறுத்தது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தார் என்ற கூற்று, நிராயுதபாணிகளான சிவிலியன்களுக்கு எதிராக தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தியதை நியாயப்படுத்த கூறப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதற்கான சகல தரக்குறியீடுகளையும் கொண்டுள்ளது. இந்த முகாங்கள் முட்கம்பிகளால் சூழப்பட்டுள்ளதோடு உள்ளேயும் வெளியேயும் சிப்பாய்கள் ரோந்து செல்கின்றனர். சகல ஊடகங்களும் அங்கு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளதோடு உதவி முகவரமைப்புக்களும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழேயே இயங்குகின்றன.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்கு "சட்ட விரோதமாக" நகர முயற்சித்தார்கள், அல்லது தப்ப முயற்சித்தார்கள் என்று அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை என ஒரு நேரடி சாட்சி உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வலியுறுத்தலின் பேரில், மெனிக் ஃபார்ம் முகாம்கள் இரண்டுக்கு இடையே ஒரு சிறி பாதையை முகாம் நிர்வாகம் திறந்து விட்டுள்ளதோடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்களுக்கு மட்டும் அதை பயன்படுத்த அனுமதித்துள்ளது. பெண்கள் சமைப்பதற்கு விறகு தேடித் திரிவதால் குறிப்பாக அவர்களே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினர். முதல் வாரம், சமைத்த உணவுக்குப் பதிலாக சமைப்பதற்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விறகு இன்றி சாப்பாட்டுக்கு பஞ்சம் ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை, பெண்கள் விறகு சேகரித்து வந்த பின்னர், அவர்களை படையினர் விசாரித்து தாக்கியுள்ளனர். பார்த்துக்கொண்டிருந்தவர்க்ள ஆத்திரமடைந்து படையினர் மீது கற்களை வீசியுள்ளனர். இதற்கு கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் இராணுவம் பதிலளித்தது. முதலில், இராணுவம் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுத்ததோடு எதிர்ப்பு தொடர்ந்ததால் மட்டுமே இறங்கி வந்தது.

மூன்று பேரும் செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதோடு பின்னர் அந்த சிறுமி வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாது. அவள் பலவீனமாகி இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

சனிக்கிழமை மாலை, குமாரசுவாமி தடுப்பு முகாமுக்குள் இராணுவம் பாயத் தொடங்கியது. முகாங்களுக்குள் பாய்ந்த இராணுவம் சிப்பாய்கள் மீதான "தாக்குதலின்" சந்தேக நபர்கள் எனக் கூறி 19 இளைஞர்களை கைது செய்து அவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தது.

அடுத்த நாள் முகாமுக்கு வெளியில் பெருந்தொகையான துருப்புக்களை நிறுத்திய இராணுவம் உள்ளே விரிவான தேடுதலைத் தொடங்கியது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசாரித்த இராணுவம் அவர்களது பதிவுப் பத்திரங்களை பரிசோதித்தது. எவரும் கைது செய்யப்படாவிட்டாலும் இந்த நடவடிக்கை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டது என்பது தெளிவு.

சனிக்கிழமை பெண்களை தாக்கியமைக்கு எழுந்த எதிர்ப்பு சீற்றமும் அமைதியின்மையும் வளர்ச்சி கண்டுவருவதையே காட்டுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் WSWS இடம் தெரிவித்ததாவது: "நாங்கள் ஆபத்தான குகைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் (போல் தெரிகிறது). எப்போது மிருகம் எங்களை தின்னும் என்று தெரியாது. எங்களது உரிமைகள் பற்றி எங்களுக்கு பேச முடியவில்லை. எங்களை விடுதலை செய்ய வேண்டும்."

அரசாங்கமானது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை மீறியே தமிழ் பொது மக்களை தடுத்து வைத்துள்ளது. அவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அல்லது அவர்கள் விசாரணையின்றி காலவரையறை இன்றி தடுத்து வைக்க அனுமதிக்கும் கொடூராமான அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவில்லை.

180 நாட்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டு மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என முதலில் அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி இன்னுமொரு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. "குறிப்பிட்ட சில பகுதியினரை மகிழ்வூட்டும் நோக்கத்துக்காக" அகதிகளை மீள் குடியேற்றம் செய்யப் போவதில்லை என திங்கட் கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தெரிவித்தார்.

"பயங்கரவாத சந்தேக நபர்களை" கண்டு பிடிக்க அகதிகளை விசாரிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. 10,000 முதல் 12,000 வரையான இளைஞர்களும் பெண்களும் விசாரிக்கப்பட்டு விதிமுறைக்கு புறம்பான தடுப்பு நிலையங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு "குடும்ப உறுப்பினர்களை அல்லது சட்டத்தரணிகளை சந்திக்க வழியில்லாததோடு நீதிமன்றத்திற்கும் அழைத்து வரப்படுவதில்லை."

செப்டெம்பர் 22, சந்திரமோகன் என்ற இளைஞன் கடுமையாக காயமடைந்ததை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இன்னுமொரு மோதல் இடம்பெற்றது. அவர் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார் எனக் கூறி இராணுவம் அவரைச் சுட்டது.

தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பதற்கு அரசாங்கம் கூறும் இரண்டாவது சாக்குப் போக்கு, மீள் குடியேற்றத்துக்கு முன்னதாக கண்ணி வெடிகளை முன்நாள் யுத்த வலயத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதாகும். ஆனால் அது, அரசாங்கத்தின் திட்டங்கள் நிறைவேறும் வரை காலவரையறை இன்றி இந்த முன்னெடுப்புகளை இழுத்தடிப்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. இராணுவம் ஒரு நீண்டகால ஆக்கிரமிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது. துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியத்தில் புதிய இராணுவத் தளங்களையும் அமைத்து வருகிறது.

சகல பெரும் வல்லரசுகளும் இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்களை மெளனமாக ஆதரித்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள், முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுப்பது பற்றி மட்டுப்டுத்தப்பட்ட விமர்சனங்களை செய்வது, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக, கொழும்பில் தமது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்வதற்கான அரசியல் தேவையினாலேயே ஆகும். ஐ.நா. தன் பங்குக்கு மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு அழைப்பு விடுத்த போதிலும், இத்தகைய சிறை முகாங்களை பராமரிக்க மில்லியன் கணக்கான டொலர்களை தொடர்ந்தும் வழங்குகின்றது.

மறு பக்கம் இந்தியா, இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் தமிழ் சிவிலியன்களை நடத்தும் முறை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் எந்தவொரு விமர்சனத்தையும் தடுப்பதில் கடந்த மே மாதம் சீனா, ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகளுடன் சேர்ந்துகொண்டது. சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக, இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வவுனியா முகாமுக்கு சென்று அதற்கு பொறுப்பான இராணுவத் தளபதியை சந்தித்தார். அரசாங்கம் "மீள் குடியேற்ற" திட்டம் ஒன்று பற்றி அறிவிக்கவில்லை என்ற உண்மை ஒரு பக்கம் இருக்க, ஆலோக் பிரசாத் இலங்கையின் "மீள் குடியேற்ற" திட்டத்துக்கு இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக உறுதியிளித்தார்.

இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகமானது, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யவும், தடுப்பு முகாங்களை கலைக்கவும் மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் அவசரமாக கோரிக்கை விடுக்க வேண்டியிருப்பதை கோடிட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே யுத்தத்தின் புண்களை அனுபவித்து வரும் இந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஒழுக்கமான வீடுகள், தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டும்.