World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political significance of the Balmoral Estate Action Committee

பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவின் அரசியல் முக்கியத்துவம்

Wije Dias
29 September 2009

Back to screen version

இலங்கையில் பெல்மோரல் தோட்டத்தில், தேயிலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க எடுத்துள்ள உத்வேகமான நடவடிக்கையானது, இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அவர்களது முடிவு, அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் சேர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர்கள் மீது திணித்த புதிய வறிய மட்டத்திலான சம்பள ஒப்பந்தம் தொடர்பான ஆழமான சீற்றத்தால் எடுக்கப்பட்டதாகும். இந்த ஒப்பந்தம் சகல தொழிற்சங்கங்கள் உடனான தசாப்தகால கசப்பான அனுபவங்களின் உச்சகட்டமாகும். பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு சகல தொழிலாளர்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில், உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சங்கங்கள் உட்பட எந்தவொரு தொழிற்சங்கத்தின் மீதும் தமக்கு நம்பிக்கை கிடையாது என பிரகடனம் செய்துள்ளது. 2006ல் கடைசியாக நடந்த சம்பள போராட்டத்தின் போது தொழிற்சங்க நடவடிக்கையை அடக்குவதற்கு அவர்கள் செயற்பட்டதை அது மேற்கோள் காட்டியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஒத்துழைப்புடன், பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள், ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும் தமது சொந்த நடவடிக்கை குழுவை அமைக்கவும் மற்றும் கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றை தயாரித்து அவற்றுக்காகப் போராடும் நடவடிக்கையை திட்டமிடவும் மாநாடு ஒன்றை நடத்துவதன் பேரில் பிரதிநிதிகளை தெரிவு செய்யவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இந்த நடவடிக்கை குழுவானது, முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன போராட்டத்தையும் அடிபணியச் செய்ய எதையும் செய்யத் தயாராக இருக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் அரசியல் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதையிட்டு விழிப்புடன் இருக்கிறது.

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதை எதிர்கொள்கிறார்களோ, அதையே உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. 1930களுக்குப் பின்னர் முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட மாபெரும் நெருக்கடியின் மத்தியில், உழைக்கும் மக்கள் சம்பளம், வேலை நேரம் மற்றும் நிலைமைகளில் வெட்டுக்கள் மற்றும் தொழில் அழிப்புக்கள் ஊடாக சுமைகளைத் தாங்க வேண்டும் என அரசாங்கங்களும் முதலாளிகளும் வலியுறுத்துகின்றனர். தேயிலை கொழுந்து பறிப்பவர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் 405 ரூபா அல்லது 3.5 டொலருக்கு மேல் தங்களால் கொடுக்க முடியாது என இலங்கையில் உள்ள பெருந்தோட்ட கம்பனிகள் சொல்வதைப் போலவே, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள இராட்சத வாகன விற்பனையாளர்கள் முதல் சீனா மற்றும் ஆசியாவில் உள்ள கடுமையாக உழைப்பைச் சுரண்டும் கம்பனிகள் வரை, சகலரும் ஒரே இராகத்தையே வாசிக்கின்றனர்.

எவ்வாறெனினும், பெல்மோரல் தோட்ட நடவடிக்கைக் குழு அதனது வேண்டுகோளில் பிரகடனம் செய்துள்ளவாறு: "பொருளாதார வீழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல. எதேச்சதிகார இலாப முறையால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடிக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியதில்லை. ஒரு சில செல்வந்தர்களுக்காக அன்றி, எங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சோசலிச கொள்கையின்படி மீளமைக்கப்பட்ட சமுதாயமொன்றை கட்டியெழுப்புதவற்கான போராட்டத்தில் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுடன் நாமும் இணைந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சமுதாயத்தில் உள்ள சகல செல்வங்களதும் உண்மையான உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களே."

அதே சமயம், தமது தொழிற்சங்கங்களுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெற்ற அனுபவங்களையே சர்வதேச தொழிலாளர்களும் பெற்றுள்ளனர். தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கடந்த காலத்தில் தொழிலாளர் வர்க்கம் கட்டியெழுப்பிய அமைப்புக்கள், இப்போது சம்பளத்தை கட்டுப்படுத்தவும், தொழில்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தடுக்கவும் மற்றும் வர்த்தக இலாபங்களை பெருகச் செய்யவும் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் வெளிப்படையாக சேர்ந்து செயற்படுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள், அரச இயந்திரத்துடனும் நிறுவன தட்டுக்களுடனும் மேலும் மேலும் ஒருங்கிணைந்து வருகின்றன. இலங்கையில், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாகவும் இயங்குவதோடு அவற்றின் தலைவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அமைச்சரவையிலும் அமர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவில், ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் கிரஸ்லரின் மறுசீரமைப்பை திணிக்க உதவிய வாகனத்துறை தொழிற்சங்கங்கள் இப்போது அந்த கம்பனிகளின் பெரிய பங்குதாரிகளாக உள்ளன.

தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்தின் சார்பில் செயற்படும் தொழிற்துறை பொலிஸ்காரனாக மாறியுள்ளமை, கடந்த மூன்று தசாப்தங்களாக சமுதாயத்தின் பொருளாதார அடிநிலையில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தின் விளைவேயாகும். உற்பத்தி தேசிய அரசு அமைப்பில் வேரூன்றியிருந்தவரை மட்டுமே, முதலாளிகளிடம் இருந்தும் அர்சாங்கத்திடமிருந்தும் தொழிற்சங்கங்களின் ஊடாக அடிப்படை சலுகைகளையேனும் தொழிலாளர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 1970களின் கடைப்பகுதியில் இருந்து உற்பத்தி முன்னெடுப்புகள் பூகோள ரீதியில் ஒருங்கிணைந்தமை, தேசிய பொருளாதார விதிகளை அடிப்படையாகக் கொண்ட சகல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் அவர்களது வேலைத்திட்டங்களை கீழறுத்துள்ளன. தொழிலாளர்களின் நிலைமைகளை ஏதாவதொரு வழியில் மேம்படுத்துவதற்கு மாறாக, நிறுவனங்களின் சார்பில் தமது தொழிலாளர் படையிடமிருந்து தொடர்ச்சியாக சலுகைகளை முடிவின்றி பிழிந்தெடுக்கவே இப்போது தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன.

கென்யா அல்லது இந்தியாவில் உள்ள கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுடன் இலங்கை தொழிலாளர்கள் "போட்டியிடவில்லை" (மலிவாக இல்லை) என்ற பெருந்தோட்டக் கம்பனிகளின் புலம்பல், உலகம் பூராவும் உள்ள ஏனைய தொழிலாளர்களுக்கும் பரீட்சியமான விடயமாகும். இலங்கையில் உள்ள மிக வறிய தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 3.50 டொலரை சம்பளமாகக் கொடுப்பது பற்றி முதலாளிகள் முறைப்பாடு செய்வது நகைப்புக்கிடமானதாக இருக்கலாம், ஆனால் இதில் ஒரு இரக்கமற்ற பொருளாதார தர்க்கம் சம்பந்தப்பட்டுள்ளது. "சர்வதேச ரீதியில் போட்டியாளராக" இருப்பது என்பது, செலவுகளை குறைத்து உற்பத்தியை பெருக்குவதற்கு தொடர்ந்தும் முயற்சிப்பதையே அர்த்தப்படுத்துகிறது. அதனாலேயே, உலகம் பூராவும் உள்ள பலவற்றைப் போலவே இலங்கை பெருந்தோட்டத் துறையிலும் கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கையானது உற்பத்தி, விலை மற்றும் இலாபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்று அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் நிலைமை, தொழிற்சங்கங்கள் தசாப்தகாலங்களாக செய்த காட்டிக்கொடுப்புகளின் வழிவந்தவையாகும். 1960களின் கடைப்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் புரட்சிகர எழுச்சிகளை கட்டுப்படுத்தி, நசுக்கிய முதலாளித்துவ வர்க்கம் எதிர்த் தாக்குதலுக்கு சென்றது. 1981ல் அமெரிக்க ஜனாதிபதி றீகன் பட்கோ விமான கட்டுப்பாட்டாளர்களை வேலை நீக்கம் செய்ததற்கு சமாந்தரமாக, இலங்கையை மலிவு உழைப்புக் களமாக மாற்றும் திட்டத்தை எதிர்த்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்களை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வேலை நீக்கம் செய்தார். அமெரிக்காவில் ஏ.எஃப்.எல்-சீ.ஐ.ஓ. தொழிற்சங்கத்தைப் போலவே, இலங்கை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை நசுக்குவதற்கும் ஜயவர்தன தனது சந்தை சார்பு நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதை இலகுவாக்கவும் உபகரணமாக செயற்பட்டன.

அமெரிக்காவில் போலவே, இலங்கையில் செய்த காட்டிக்கொடுப்பும் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தன. பெருந்தோட்டங்கள் உட்பட அரசாங்க சேவைகள் மற்றும் வர்த்தகங்களை தனியார்மயப்படுத்தி தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக தனது தாக்குதலை ஜயவர்தன முன்னெடுத்தார். ஆழமான சீற்றத்தையும் எதிர்ப்பையும் எதிர்கொண்ட ஜயவர்தன, உழைக்கும் மக்களை பிளவுபடுத்த இலங்கை அரசியல்வாதிகள் கையிருப்பில் வைத்திருக்கும் இனவாத அரசியலை நாடினார். இந்த இனவாத அரசியல் 1983ல் தமிழர் விரோத படுகொலைகளுக்கும் கால் நூற்றாண்டுகால அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்துக்கும் வழிவகுத்தது. பெருந்தோட்டங்களில், இ.தொ.கா. வின் காட்டிக்கொடுப்புகள் தொடர்பான வெறுப்பு, அதிலிருந்து பிரிந்து ஒரு தொகை தொழிற்சங்கங்கள் உருவாக வழிவகுத்தது. அவை மிகவும் போராளிக்குணம் கொண்டவையாக காட்டிக்கொண்ட போதிலும், இ.தொ.கா. வைப் போலவே அதே அரசியல் நோக்கு மற்றும் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு, தொழிலாளர்களை விற்றுத் தள்ளுவதில் மிகவும் துரோகத்தனமாக பாத்திரத்தை மட்டுமே ஆற்றின.

இத்தகைய நிகழ்வுகள் அடிப்படையில் உலக அளவிலானவை. தேசிய தனித்துவத்தை அனுமதிப்பதன் மூலம், எந்தவொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களால், பெரும் குழப்பங்கள் மற்றும் நெறிபிறழ்வுகளை ஏற்படுத்திய தமது சொந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் காட்டிக்கொடுப்புகள் பற்றி இது போன்ற கதைகளையே சொல்ல முடியும். பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் ஒரு முன்செல்லும் பாதையை காட்டத் தொடங்கியுள்ளதே அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டின் முக்கியத்துவமாகும். அவர்கள், தாமும் தமது குடும்பமும் வாழ்வதற்குத் தேவையான மிகவும் அடிப்படை தேவைகளைப் பெறக் கூட தமது முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக மட்டுமன்றி, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிற்சங்கங்களுக்கும் எதிராக போராட வேண்டும் என்பதையும், தமது போராட்டம் சமுதாயத்தை சோசலிச முறையில் மீளமைப்பதற்காக ஒரு எதிர் அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டுள்ளார்கள்.

தீர்க்கமான முறையில், பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு விடுத்துள்ள வேண்டுகோள், ஒரு தெளிவான அனைத்துலகவாத முன்நோக்கை அடிப்படையாகக் கொண்டது. அனைத்துலகவாதத்தின் மூலம், நாம் சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய வெற்றுரையாற்றவில்லை, மாறாக, தேசிய பிளவுகளுக்கு முடிவுகட்டி, கூட்டுத்தாபன பொது எதிரிகளுக்கு எதிரான போராட்டம் மேலும் மேலும் அனைத்துலக ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற புரிந்துணர்வையே அர்த்தப்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, அது தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருத்தும் சகல விதமான தேசியவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிரான அரசியல் போராட்டத்தையே அர்த்தப்படுத்துகிறது.

இலங்கையில், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தமது தமிழர் விரோத யுத்தத்தை முன்னெடுத்துள்ளதோடு சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை என்ற மோசமான வழித்தடத்தை இட்டுள்ளன. யுத்தத்தையும் அரசாங்கத்தின் இனவாத பிரச்சாரத்தையும் எதிர்ப்பதற்கு மாறாக, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் யுத்தத்தை கீழறுப்பதாக குற்றஞ்சாட்டும் போதெல்லாம் தொழிற்சங்கங்கள் அவற்றை நிறுத்திக்கொண்டன. இத்தகைய நிலைமைகளின் கீழ், பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவின் பிரகடனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்: "நாம் எமது சிங்கள தொழிலாளர் வர்க்க சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நாம் விசேட வேண்டுகோள் விடுக்கிறோம். மிக நீண்டகாலமாக, அரசாங்கங்களும் சகல பிரதான கட்சிகளும் தமது இனவாத அரசியலின் மூலம் எங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளன."

பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் தாம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் தடைகள் பற்றி மிகவும் நனவுடன் உள்ளார்கள். போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளின் பழிவாங்கல்கள் மற்றும் தண்டனை பட்டியலில் சேர்த்தல், பொலிஸ் ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மற்றும் தொழிற்சங்க குண்டர்களை பயன்படுத்துதல் போன்ற நீண்ட கால சாதனைகள் இலங்கையில் அரங்கேறியுள்ளன. அவர்களாகவே கூறிக்கொள்வது போல், "எங்களால் தனித்துப் போராட முடியாது". இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்குமாறும், அவர்களது உதாரணத்தை பின்பற்றுமாறும் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெறுமாறும் மற்றும் சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்துக்காக போராட்டத்தை முன்னெடுக்குமாறும் இலங்கையிலும் உலகம்பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved