World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :

Join the International Students for Social Equality
Build an ISSE club at your college or high school

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

உங்கள் கல்லூரி அல்லது உயர் பாடசாலையில் ஒரு ஐ.எஸ்.எஸ்.ஈ. கிளையை உருவாக்குவீர்!

Statement of the ISSE
14 September 2009

Use this version to print | Send feedback

1930களுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய மந்தநிலைக்கு பின்னர், முதலாளித்துவம் தற்போது மிகப் பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது. பரந்த வேலையின்மை, வறுமை, இராணுவவாதம் மற்றும் உலக யுத்த அச்சுறுத்தல் போன்ற 20 ம் நூற்றாண்டின் அனைத்து பேரிடர்களும் மீண்டுமொரு முறை மீண்டெழுந்து வருகின்றன.

இந்த ஆண்டில், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் முதல்முறையாக, பூகோள பொருளாதாரம் சுருங்கவிருக்கிறது. நிறுவனங்கள் அவற்றின் ஆலைகளை மூடுவதாலும், தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாலும், உலகம் முழுவதும் 50 மில்லியனுக்கும் மேலான மக்கள் அவர்களின் வேலைகளை இழக்க இருக்கிறார்கள். உலகெங்கும் உணவின்றி வாடும் மக்களின் எண்ணிக்கை, 2009ல் 100 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மொத்த எண்ணிக்கையை 1 பில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தி கொண்டு செல்லும்.

ஐரோப்பாவில், பல தசாப்தங்களாக போராடிப் பெற்ற சமூக நலன்கள், சம்பள குறைப்பு மற்றும் சமூக திட்டங்களில் வெட்டு ஆகியவற்றால் துடைத்தெறியப்படுகின்றன.

உலக முதலாளித்துவத்தின் இதயமாக விளங்கும் அமெரிக்காவில் சேரிகளும், உணவுக்கான வரிசைகளும் உருவாக ஆரம்பித்துவிட்டன. மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர் அல்லது ஒரு நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பெருந்திரளான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் சகிக்க முடியாத அளவிற்கு மாறி வருகிறது.

இது ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? பொருளாதார வாழ்வில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உலகளவிலான ஒருங்கிணைப்புடன் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள உயர்ந்த முன்னேற்றங்கள், மனிதகுல அபிவிருத்தியின் புதிய யுகத்திற்கான சாத்தியத்தை உருவாக்கி விட்டுள்ளது. இருந்த போதிலும், யுத்தம் மற்றும் தேவை, வறுமை மற்றும் நோய், மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் நிறைந்த ஒரு உலகைத் தான் இளைஞர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

மனித இன அபிவிருத்தி முதலாளித்துவ அமைப்புமுறையால் தடுக்கப்பட்டுள்ளது, அது பெருநிறுவன இலாபங்களுக்கும், பெரும் செல்வந்தர்களால் தனிப்பட்ட முறையில் செல்வங்களைத் திரட்டுவதற்கான ஊக்கசக்திக்கும் ஏனைய அனைத்துக் கருத்துக்களையும் அடிபணிய செய்கிறது.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பு என்பது உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கான ஓர் இயக்கமாகும், இது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டி எழுப்பி வருகிறது. இது நவீன சகாப்தத்தின் ஆற்றலை இறுதியில் மெய்யாய் அடையச்செய்து, வறுமைக்கும் யுத்தத்திற்கும் முடிவு கட்டி, உண்மையான மனிதயின சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் அடித்தளமிடும் ஓர் இயக்கமாகும்.

சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைவீர்!

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு எதிரான அடக்குமுறை

ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில், உலக அரசாங்கங்கள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கு கொட்டியதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு பதில் தந்துள்ளன. இதன் மூலம் அவை, தங்களின் கைகளில் இருந்து இந்த நெருக்கடிக்கு காரணமான கோடீஸ்வர நிதியாளர்களின் கைகளுக்கு பணத்தை மாற்றி உள்ளன.

அமெரிக்க அரசாங்கம் வங்கிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது, இது ஏறத்தாழ மொத்தம் 23 ட்ரில்லியன் டாலர்களாகும். ஐரோப்பாவில், அரசாங்கங்கள் ஆண்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான தொகையை வங்கிகளுக்கு அளித்துள்ளன. இந்தப் பணம் ஏதோவொரு வழியில் கொண்டு வரப்பட வேண்டும், சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கம் தான் இறுதியில் இந்த செலவுகளை ஏற்க வேண்டியதாகவிருக்கும். இதற்காகதான், முக்கிய சமூக பணிகளில் முன்னொருபோதும் இல்லாத அளவிலான வெட்டுக்களுடனும், சம்பள வீழ்ச்சிகளுடனும் சேர்ந்து வங்கி பிணையெடுப்புகள் வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை எதிர்க்க உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், மாணவர்களும் பராக் ஒபாமாவை ஒரு மாற்றாக பார்த்ததினால், அவர்கள் தங்களின் ஆதரவை பராக் ஒபாமாவிற்கு அளித்தார்கள். ஆனால், அவரின் ஆதரவாளர்கள், எந்த கொள்கைகளால் புஷ்ஷை வெறுத்தார்களோ, அதே கொள்கைகளை ஒபாமா தொடர்வதையும், அது மட்டுமில்லாமல் அவற்றை அவர் தீவிரப்படுத்தி உள்ளதையும் தற்போது பார்த்து வருகிறார்கள்.

பதவி ஏற்றதற்கு பின்னர் ஒபாமா செய்திருப்பது இதைத் தான்:

வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அளித்தது.

மாநிலங்கள் சந்தித்து வரும் பட்ஜெட் நெருக்கடிக்கு உதவ மறுத்தார், மாறாக பணிமுடக்கங்கள், தொழிலாளர்களின் சம்பளங்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டண உயர்வுகள் மற்றும் அடிப்படை சமூக பணிகளின் குறைப்புகளின் மூலம் செலவினங்களைக் குறைக்க கோருகிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, பாகிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை விரிவாக்கினார். ஈராக் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கிறது. 2009ல், இராணுவ செலவுகள் மட்டும் 640 பில்லியன் டாலர்களை எட்டியது.

சித்திரவதை மற்றும் உள்நாட்டில் வேவு பார்த்தல் போன்ற கொள்கைகளைத் தொடங்கியவர்களை மக்கள் முன்னால் நிறுத்த மறுப்பதுடன், அக்கொள்கைகளை அவரும் தொடர்ந்து வருகிறார்.

தொழிலாளர்களின் வேலைகள், சம்பளங்கள் மற்றும் சலுகைகளை வெட்ட, அமெரிக்க வாகனத்துறை நிறுவனங்களைத் திவாலாகும் நிலைக்கு தள்ளினார்.

இந்த நடவடிக்கைகள், உலகின் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ கட்சிகளில் கட்டுண்டு கிடக்கும் வரை எதையும் மாற்ற முடியாது என்பதைத் தான் எடுத்துகாட்டுகிறது. தொழிலாளர்களுக்கு, அவர்களின் நலன்களுக்காக போராடும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச கட்சி தேவைப்படுகிறது. இதை கட்டியமைக்கத் தான் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பு போராடி வருகின்றது.

மாணவர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடி

மாணவர்களின் நலன்கள், முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்று திரட்டுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பாதுகாக்கப்பட முடியும். உயர்ந்து வரும் கல்விக் கட்டணம் மற்றும் குடியிருப்பு செலவுகள் மற்றும் குறைந்து வரும் நிதி உதவிகள் உட்பட மாணவர்கள் முகங்கொடுக்கும் அடிப்படை சமூகப் பிரச்சினைகள், பிரிக்க முடியாத படிக்கு வேலையின்மை, சமூக கட்டமைப்பின் சிதைவு, சம்பளங்கள் மற்றும் நலன்கள் மீதான தாக்குதல் போன்ற அனைத்து தொழிலாளர்களும் முகங்கொடுத்து வரும் பரந்த பிரச்சினைகளுடன் இணைந்துள்ளன.

பெரும்பாலான மாணவர்கள் வேலை செய்து வருகிறார்கள், பலர் நேரடியாகவே அவர்களின் பல்கலைக்கழகங்களுக்காக வேலை செய்கிறார்கள். தொழிலாளர்களாகவும், மாணவர்களாகவும் இருக்கும் அவர்களின் நலன்கள் நேரடியாக ஒருபுள்ளியில் சந்திக்கின்றன. சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கமானது அதன் அரசியல் பணிகளை கல்வி வளாகங்களில் மட்டுமில்லாமல், தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் மத்தியிலும் செய்து வருகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் என்பது பக்கத்திற்கு திரும்புவது என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான ஒரு கூட்டணி அல்ல. பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் இளைய பங்காளிகளாகவும் இருந்துகொண்டு, தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பது, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவது, மற்றும் வெட்டுக்களின் திணிப்புக்கு உதவும் தொழிற்சங்க கருவிகளுக்கு எதிராக போராடுவதன் மூலமாகத் தான் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் அபிவிருத்தி அடைய முடியும். அரசியல்ரீதியாக, இந்த அமைப்புகள் அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கும், பிரான்சில் சோசலிஸ்ட் கட்சிக்கும், ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சிக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையைக் காப்பாற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளுக்கும் தான் ஆதரவளிக்கின்றன.

உத்தியோகபூர்வ சங்கங்களுடனான உறவை முறித்துக் கொண்டு, கீழ்மட்ட அணிகளின் வேலைத்தள குழுக்களையும், அக்கம்பக்கத்திலுள்ள தொழிலாளர்களையும், இளைஞர்களையும் ஒன்றாக கொண்டு வருவதற்கான போராட்டக் குழுக்களையும் கட்டியமைக்குமாறும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

ஒரு சோசலிச முன்னோக்கு

வர்க்க போராட்டம் மீண்டும் தொடங்கி இருப்பதானது, பொருளாதார நெருக்கடியின் தவிர்க்க முடியாத மற்றும் புறநிலையான விளைவாக உள்ளது. ஆனால், அது வெற்றி அடைய வேண்டுமானால், அது ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். வேலையின்மை, வறுமை மற்றும் யுத்தத்திற்கு மூல காரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் போராட்டம் நனவுபூர்வமாக திருப்பி விடப்பட வேண்டும்.

உலகப் பொருளாதாரத்தை அடிப்படை ரீதியாக ஒழுங்கமைப்பதில் ஒரு தீவிர மாற்றம் தேவை. மனிதகுலத்தின் பரந்த உற்பத்தி சக்திகள் பில்லியனர்களின் ஒரு மிச்சிறிய தட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இனியும் தொடர்ந்து இருக்க முடியாது. தனியார் இலாபத்தை அடைவதற்கு அல்லாமல், சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொருளாதார வாழ்வை சோசலிச ரீதியில் மறுஒழுங்கமைப்பதன் மூலம் மட்டுமே, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்.

பாரிய மந்தநிலை ஏற்பட்டதிலிருந்து, ஒருபோதும் இல்லாத அளவிற்கு உலகம் தற்போது சமத்துவமின்மையில் இருக்கிறது. உலக மக்கள்தொகையில் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதத்தினர், அடிமட்டத்தில் இருக்கும் 57 சதவீதத்தினருக்கு சமமான வருமானத்தை வைத்திருக்கிறார்கள். உலக மக்களின் 10 சதவீத ஏழைகளை விட, மிகப்பெரிய செல்வந்தர்களில் மூன்று பேர் மட்டுமே பாரிய சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கான ஒரு சமூக அழிவை உருவாக்கி வருகிறது. கதவடைப்புகளும், கடனை திருப்பி அளிக்க முடியாத நிலையும் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகின்றன.

தட்பவெப்ப நிலை மாறுதல்கள் உட்பட, எந்த சமூக பிரச்சினையும் தனிசொத்துரிமை மற்றும் செல்வங்களைப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றிற்கு தீர்வு காணாமல் தீர்க்க முடியாது. முக்கிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சொந்த தனியுரிமையானது, மனிதயின தேவைகளைச் சாத்தியப்படுத்தாத ஓர் ஒருங்கிணைந்த, தர்க்க ரீதியான பொருளாதார திட்டத்தை உருவாக்குகிறது.

உலகம் முழுவதற்குமான பொதுப்பணி திட்டங்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கும்படி சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பு அழைப்புவிடுக்கிறது, இது பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டும் வேலைகளிலும், சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைகளிலும் மக்களை ஈடுபடுத்தும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கலாச்சார பயிலகங்களைப் பயன்படுத்தவும் உதவும். பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை நெம்புகோல்களாக இருக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கிகள், போக்குவரத்து, சுகாதாரத்துறை, தொலைத்தொடர்பு, விவசாயம் ஆகியவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பணக்காரர்களின் கைகளில் இருந்து சமூகத்தின் வளங்களைக் கைப்பற்றி உலக மக்கள் தொகையில் அடிமட்டத்திலிருக்கும் மக்களுக்கு செலவிட செல்வங்களை மறுபங்கீடு செய்யவும் நாங்கள் போராடுகிறோம்.

சர்வதேசியத்திற்காக

பூகோளமயமாக்கல் சமூகத்தில் செல்வ வளத்தை அதிகரித்துள்ளது. உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த, எப்போதும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அளிக்க கூடிய அளவிற்கு புறநிலையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் நிலவுகின்றன. உற்பத்திச் சாதனங்களின் தனியார் சொத்துரிமை மற்றும் தேசிய வழிகளில் உலகப் பொருளாதாரம் பிளவுபடுத்தப்படல் ஆகிய முதலாளித்துவத்தின் இரண்டு அடிப்படை அம்சங்களும், மனிதர்களின் உற்பத்தி சக்தியின் முற்போக்கான பயன்பாட்டையும், அபிவிருத்தியையும் தடுத்துக் கொண்டிருக்கின்றன. தனியார் சொத்துரிமை மற்றும் இலாபத்திற்கான உற்பத்தி, மற்றும் தேசிய அரசு முறை ஆகியவை முன்னேற்றத்திற்கு வரலாற்றுரீதியான தடைகளாக உள்ளன. அவை மேலும் மேலும் பெரியளவில் சமூக சமத்துவமின்மையையும், யுத்தம் மற்றும் சர்வாதிகாரத்தின் கோரத்தையும் தான் உருவாக்கும்.

நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் தேசிய மட்டத்தில் தீர்க்க முடியாது. மனிதர்களின் உற்பத்தி சக்திகள், தேசிய அரசின் குறுகிய எல்லைகளைக் கடந்து சென்றுவிட்டன. அதே சமயத்தில், ஒவ்வொரு நாட்டின் உழைக்கும் மக்களும், இளைஞர்களும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைத் தான் முகங்கொடுக்கிறார்கள். உண்மையான ஒரேயொரு சர்வதேச வர்க்கமான, தொழிலாளர் வர்க்கத்தால் மட்டும் தான், இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வை முன்வைக்க முடியும்.

எந்த நாடாக இருந்தாலும், தேசியவாதம், இனவாதம், நிறவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை ஐ.எஸ்.எஸ்.ஈ. எதிர்க்கிறது. இவையெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தை பிளக்கவும், பலவீனப்படுத்தவும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும், ஒரு நிதிய மேலாதிக்கத்தினரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்று திரள வேண்டும்.

இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கு எதிராக

ஈராக் யுத்தம் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த ஆக்கிரப்பின் கிரிமினல் நடவடிக்கையால், ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளனர், இந்த நடவடிக்கை ஓர் ஒட்டுமொத்த சமூகத்தையே பூண்டோடு அழித்துள்ளது. நூறு பில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான சமூக வளங்களுடன் 4,000 த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினரின் வாழ்க்கையும் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் யுத்தங்களை (தற்போது ஓபாமா நிர்வாகத்தின் மேற்பார்வையில்) நடத்துவதன் மூலம், எண்ணெய் வளமும், பிற இயற்கை வளங்களும் கொண்ட அந்த பிராந்தியங்களின் மீது அமெரிக்க நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்குகள் இராணுவ கட்டுப்பாட்டைக் கொண்டு வர விரும்புகின்றன.

அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புகளையும் மற்றும் தனியார் கூலிப்படைகளையும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக, எவ்வித நிபந்தனையின்றி வெளியேற்றவும், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரவும் ஐ.எஸ்.எஸ்.ஈ. வலியுறுத்துகிறது. அமெரிக்க யுத்த இயந்திரம் நிர்மூலமாக்கப்பட வேண்டும், அதற்காக பெருமளவில் செலவிடப்பட்ட தொகையை, அமெரிக்க குண்டுகளால் நாசமாக்கப்பட்ட சமூகங்களைப் புனரமைக்கவும், உள்ளூரில் தீவிரமடைந்திருக்கும் சமூக தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஏனைய ஏகாதிபத்திய நாட்டிற்கும் கூட இதே கொள்கை தான் பொருந்தும்.

இராணுவ வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றிற்கு மாறாக, அனைத்து உழைக்கும் மக்களின் ஐக்கியம் மற்றும் பரஸ்பர உதவியோடு ஒரு சோசலிச வெளிநாட்டு கொள்கையை ஐ.எஸ்.எஸ்.ஈ. முன்வைக்கிறது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக

"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போலிக் காரணத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அரசாங்கம் சித்திரவதை, நடிப்பு, காலவரையற்று தடுப்புக்காவலில் வைத்தல் மற்றும் உள்நாட்டில் வேவு பார்த்தல் உட்பட பல ஜனநாயகத்திற்கு எதிரான முறைகளைத் தொடங்கி இருக்கிறது. இவற்றை வெளிநாடுகளில் உள்ள எதிராளிகளுக்கு எதிராக பெரும்பாலும் பயன்படுத்தினாலும், இந்த கொள்கைகளின் இறுதியான இலக்கு அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் தான். வெளிநாடுகள் மீதான யுத்த கொள்கைகள், பெருமளவிலான வேலையின்மை மற்றும் உள்நாட்டில் வறுமை ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக பெரியளவிலான ஒடுக்குமுறையையும், வன்முறையையும் கட்டவிழ்த்துவிட போலீஸ் அரசிற்கான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

இந்த அனைத்து திட்டங்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீளக் கொண்டு வர வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பு வலியுறுத்துகிறது. சித்திரவதைகளுக்கு ஆணையிட்ட முன்னணி அரசாங்க அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை செய்யுமாறு நாம் வலியுறுத்துகின்றோம். இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருந்தும், இரகசியமாக வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.

மார்க்சிசம் மற்றும் சடவாதத்திற்காக

பின்நவீனத்துவத்தின் (post-modernism) திவாலாகி போன சித்தாந்தமும், அதனோடு சேர்ந்த மனப்போக்குகளும் பல்கலைக்கழக வளாகங்களைப் பல தசாப்தங்களாக ஆக்கிரமித்துள்ளன. இந்த மெய்யியல்களின் ஆணிவேர்களில், விஞ்ஞானம், அபிவிருத்தி மற்றும் புறநிலை உண்மைகள் மீதான நிராகரிப்புகள் தான் இருக்கின்றன. இந்த நவீன காலத்தில் மார்க்சிசத்திற்குள் உள்ளடங்கி இருக்கும் சடவாத மெய்யியலையும், அறிவொளியின் அறிவார்ந்த பாரம்பரியத்தையும் மீட்டெடுப்பதற்காகI ஐ.எஸ்.எஸ்.ஈ. போராடுகிறது.

நீண்ட காலமாக எவ்வித முற்போக்கான பாத்திரத்தையும் வகிக்காத ஒரு சமூக அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளில் இருந்து, ஒரு வரலாற்றுரீதியான அவசியமாக சோசலிசம் மேலெழுகிறது. மனித இனத்தில் பெரும்பான்மையினரானக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களை சோசலிசம் வெளிப்படுத்துகிறது என்பதால், ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் ஐ.எஸ்.எஸ்.ஈ. அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்திற்காக

புஷ் மற்றும் குடியரசு கட்சினரைப் போன்றே, ஓபாமாவும் ஜனநாயக கட்சியினரும் தொழிலாள வர்க்கத்திற்கு அல்லாமல், மாறாக முதலாளித்துவ உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களின் உயரடுக்கு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் தொழிற் கட்சிகளுக்கும், ஜேர்மனியிலுள்ள சமூக ஜனநாயக கட்சிக்கும், பிரான்சிலுள்ள சோசலிச கட்சிக்கும் மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கும் கூட இதுவே பொருந்தும்.

"நடவடிக்கைகள் எடுப்பதற்காக" இந்த கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கம் நிராகரிக்கிறது. இது திவாலாகிப் போன முன்னோக்காகும். ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பகுத்தறிவு அடித்தளத்தில் சமூகத்தை மறுகட்டமைக்க ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அரசியல் அதிகாரத்திற்காக போராட, ஒரு தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த தத்துவார்த்த முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெருந்திரளான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். தொழிலாள வர்க்கத்திற்கு அதற்கான சொந்த கட்சி, அதற்கான சொந்த முன்னோக்கு, அதற்கான சொந்த குரல் தேவையாய் இருக்கிறது. இதற்காக தான், உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவ கட்சிகளையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவையும் கட்டியெழுப்ப சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கமானது போராடுகிறது.

பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), ஜேர்மனியில் இடது கட்சி, (Die Linke) அமெரிக்காவில் சர்வதேச சோசலிச இயக்கம் (ISO) போன்ற பல மத்திய-வர்க்க இயக்கங்கள் அனைத்தும் எதிர் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த குழுக்கள், தற்போதிருக்கும் முதலாளித்துவ கட்சிகளின் எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் கூட, இவை உண்மையில் தொழிலாளர்களை அவர்களிடம் மண்டியிட வைக்கவே விரும்புகின்றன.

மத்திய வர்க்க "இடது" மற்றும் தாராளவாத குழுக்களின் ஒரு முத்திரையான அடையாள அரசியலை ஐ.எஸ்.எஸ்.ஈ. முற்றிலுமாக நிராகரிக்கிறது. இது தான் சமூகத்தில் அடிப்படை வர்க்க பிரிவுகளின் மீது இன, மத, தேசிய மூலம், பாலின நோக்குநிலையை கட்டியெழுப்புகின்றன. வர்க்க போராட்டம் தான் அரசியலின் உந்து சக்தியாக இருக்கிறது. இந்த உண்மையை அங்கீகரிப்பதன் மூலமாக மட்டும் தான், இந்த நெருக்கடிக்கான ஒரு நிலைத்து நீடிக்கவல்ல விடையிறுப்பை முன்வைக்க முடியும்.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் கிடைத்த மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளின் அடிப்படையில், ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் மறுபிறப்பிற்காக நாங்கள் போராடுகிறோம். 20 ஆம் நூற்றாண்டு சோசலிசத்திற்கான மாபெரும் புரட்சிகர போராட்டங்களைப் பார்த்திருக்கிறது, இருந்தாலும் அவை ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பழைய தொழிலாளர் இயக்கங்களின் அதிகாரத்துவங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன. இதன் விளைவுகள் தான் முந்தைய இரண்டு உலக யுத்தங்களும், பாசிசமும் ஆகும். மீண்டும் இது நடப்பதற்கு அனுமதிக்கப்பட கூடாது.

தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்ப தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த சர்வதேச சோசலிசத்தின் மாபெரும் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், லுக்சம்பேர்க் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரின் அடிச்சுவட்டில் ஐ.எஸ்.எஸ்.ஈ. பின்தொடர்கிறது. 1920கள் மற்றும் 1930களில் சோவியத் ஒன்றியத்தில் தோன்றிய எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ல் உருவாக்கப்பட்ட சோசலிச புரட்சிக்கான சர்வதேச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் போராடுகிறோம்.

சோசலிசம் என்பது சமூகத்தின் உற்பத்தி சக்திகளை ஜனநாயக கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், முதலாளித்துவத்தின் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வருவதையும் தான் குறிக்கிறது. சந்தை மனித வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிப்பதற்கு மாறாக, சமூகத்தின் முன்னுரிமைகள் சமூக தேவைகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். இதை நடைமுறைக்கு கொண்டு வருவதென்பது, தொழிலாளர் வர்க்கத்தையும், அதன் புரட்சிகர சோசலிச கட்சியையும் சார்ந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிசத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு நனவுபூர்வமான போராட்டம் அல்லாமல், சோசலிசத்தை எட்ட முடியாது. ஒரு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு, ஒரு போராட்டம் நடத்தப்பட வேண்டும். ஆகவே, இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தை கட்டியெழுப்பவும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைவீர்! ஐ.எஸ்.எஸ்.ஈ. இயக்கத்தில் இணைவீர்!

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI), சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ஒரு மாணவர் அமைப்பாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகளவில் மிகவும் பரந்தளவில் வாசிக்கப்படும் சோசலிச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தையும் (www.wsws.org) பிரசுரித்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும் வேலைத்திட்டங்கள், வரலாறு மற்றும் பகுப்பாய்வுகளை ஆழமாக படித்து, இந்த அறிக்கையுடன் உடன்படும் எல்லா மாணவர்களுக்கும் நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பில் இணைந்து, அதை கட்டியெழுப்ப தீர்மானிப்பதன் மூலம், வரவிருக்கும் காலத்திற்கான உங்களின் அரசியல் தயாரிப்பைத் தொடங்குங்கள். உங்கள் உயர்பாட சாலைகளிலும் அல்லது பல்கலைக்கழகத்திலும் ஐ.எஸ்.எஸ்.ஈ. அமைப்பைக் கட்டியெழுப்ப உதவுங்கள், இதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

ஐ.எஸ்.எஸ்.ஈ. அமைப்பில் சேர இங்கு சொடுக்கவும்!