World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குEU appointments reflect growth of national conflicts in Europe ஐரோப்பிய ஒன்றிய நியமனங்கள் ஐரோப்பாவில் உள்ள தேசிய மோதல்களின் அதிகரிப்பை பிரதிபலிக்கின்றன Peter Schwarz ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு புதிய உயர்மட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து ஒரே ஒரு முடிவுக்குத்தான் வரமுடிம். எதிர்காலத்தில் தேசிய நலன்களின் குரல்கள்தான் ஐரோப்பாவில் முழங்கும். ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்களால் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள் தேசிய அதிகார நலன்களின் கைப்பாவைகள் என்பதைவிட வேறொன்றுமில்லை. இந்த நியமனங்கள் பொதுவாக பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவற்றின் உடன்பாட்டில் வந்தவையாகும். ஐரோப்பியக் குழுவின் புதிய தலைவர் ஹெர்மன் வான் ரோம்பை தனது பதவிக்காக ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்கும் கடமைப்பட்டுள்ளார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இருவரும் முன்கூட்டியே பெல்ஜியன் பிரதம மந்திரி பற்றி உடன்பட்டிருந்தனர். பழைமைவாத முகாமில் அவருடைய அங்கத்துவத்தன்மை மற்றும் ஒரு சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் இருந்து அவர் வருகிறார் என்பது, மற்ற ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களிடையே போதுமான பெரும்பான்மையைப் பெற காரணமாயின. இதற்கு ஈடாக பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிபதவி கொடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் காதரின் ஆஷ்டன் தொழிற்கட்சியில் இருப்பது அவருக்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளுடைய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இரு வேட்பாளர்களுமே கிட்டத்தட்ட அதிகமாக அறியப்படாதவர்கள்தான். தங்களுக்குச் சொந்தமாக அதிகார அடித் தளத்தை அவர்கள் கொண்டிருக்காததுடன், எந்தக் குறிப்பிட்ட வெளியுறவுக் கொள்கையிலும் தேர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. எனவே இவர்கள் பேர்லின், பாரிஸ், லண்டன் ஆகியவற்றின் தேசியநலன்களுக்கு எந்தத் தீவிர அச்சுறுத்தலையும் கொடுப்பதற்கு இல்லை. உண்மையில் புதிய ஐரோப்பிய வெளியுறவு மந்திரி ஒரு பொதுவான ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையை மிகத் தீவிரமாக எதிர்த்த நாட்டில் இருந்துதான் வந்துள்ளார். இந்த உயர்மட்டப் பதவிகளைத் தோற்றுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளன. முடிவிலா தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், பின்கதவு உடன்பாடுகள், ஒருவரை ஒருவர் மிரட்டுதல் ஆகியவற்றிகுப் பின் இறுதியாக வெளிவந்துள்ள லிஸ்பன் உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பிற்கு ஒரு புதிய தலைமையை இருத்தியுள்ளது. மூன்று முறை, பிரான்ஸ், நெதர்லாந்த் மற்றும் அயர்லாந்தில், இம்முயற்சிகள் மக்கள் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்பதால் பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய வணிக நலன்களின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்கு ஊக்கம் தரும் முயற்சிதான் இது என்று வாக்களார்கள் சரியாகக் காண்கின்றனர். ஐரோப்பா ஒருமித்த குரல் எழுப்பினால்தான் உலகப் பெரும் சக்திகளுடன் சமமாக இருக்க முடியும் என்ற வாதத்தை காட்டி வலுவான ஐரோப்பியத் தலைமை தேவை என்பது நியாயப்படுத்தப்பட்டது. முன்னாள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹென்ரி கிஸ்ஸிஞ்சர் "ஐரோப்பாவை அழைத்துப் பேச வேண்டும் என்றால் நான் யாரைக் கூப்பிடுவது" என்று கூறியது புகழ்பெற்ற சொற்றொடராகி, பல முறையும் திரும்பக் கூறப்பட்டது. ஆனால் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் செக் குடியரசு கடைசியாகச் சேர்ந்து லிஸ்பன் உடன்பாட்டில் கையெழுத்திட்டபின், ஒரு பொதுக்குரலுக்கான தேவை காற்றில் கரைந்துவிட்டது போலும். முழு ஐரோப்பியச் செய்தி ஊடகமும் எதிர்பாராமல் இக்கருத்து பற்றி உடன்பாட்டைக் கொண்டுள்ளன. இத்தாலியின் Corriere della Sera "முன்னொருபோதும் அறியப்படாத திரு. மற்றும் திருமதியின்" இந்த நியமனங்கள் இரு உயர்ந்த ஐரோப்பிய ஒன்றியப் பதவிகள் "ஐரோப்பா சரணடைந்ததைக் குறிக்கிறது", "முக்கியத்துவமற்ற நிலையை நோக்கி ஒன்று அல்ல, துல்லியமாக இரண்டு அடி வைத்துள்ளதைக் காட்டுகிறது" என்று எழுதியுள்ளது. ஜேர்மனியின் Die Zeit பத்திரிகை, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு "முக்கிய வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது" என்றும், அங்கேலா மேர்க்கேல், நிக்கோலா சார்க்கோசி மற்றும் கோர்டன் பிரெளன்தான் "ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான முடிவு எடுப்பவர்கள் என்றும் அவ்வாறே தொடர்ந்து இருக்க விரும்புகின்றனர்" என்றும் கூறியுள்ளது. போலந்தின் Dziennik Gazeta Prawna எழுதுவதாவது: "சமூகத்திற்கு ஒரு வலுவான தலைவர் தேவையில்லை என்பதும், தனி நாடுகளில் நலன்கள் செயல்படுத்தப்படுவது பற்றி குறிக்கிடாத ஒருவர்தான் தேவை என்பதும் நிரூபணமாகியுள்ளது." லிஸ்பன் உடன்பாடு என்பது ஒரு பிற்போக்குத்தனத் திட்டம் ஆகும். ஐரோப்பிய மக்களுடைய நலன்களை அது உள்ளடக்கவில்லை. மாறாக சக்தி வாய்ந்த ஐரோப்பிய வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றில் நலன்களைத்தான் கருத்திற் கொண்டுள்ளது. ஐரோப்பா ரீதியான ஒரு பெரும் சக்தியை நிறுவும் முயற்சி ஜனநாயக உரிமைகள் அகற்றப்படுதல், தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரஙக்கள் மீது ஆழ்ந்த தாக்குதல்கள், பெருகிய இராணுவவாதம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கோள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தொழிலாளர்களின் முதுகிற்க்கு பின்புறமாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகியவை தங்கள் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன என்றால், அது ஒன்றும் விஷயங்களை சிறந்ததாக ஆக்கிவிடாது. மாறாக அம்முயற்சியின் பிற்போக்கு சாராம்சத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலதுசாரி எதிரிகள் கருதுவது போல் தேசிய இறைமை என்பது ஜனநாயகத்துடன் சமன்படுத்தப்பட முடியாதது. தங்கள் மக்களுடைய பெரும்பான்மை விருப்பத்திற்கு எதிராக, அதை மீறித்தான் நீண்டகாலமாகவே ஐரோப்பிய தேசிய அரசாங்கங்கள் வெளியுறவு கொள்கைகளைத் தொடர்ந்திருக்கின்றன. கருத்துக் கணிப்புக்கள் பலமுறையும் பெரும்பாலான மக்கள் ஆப்கானிஸ்தான் போரை எதிர்க்கின்றனர் என்று காட்டுகின்றன. ஆயினும்கூட, பேர்லின், பாரிஸ், லண்டன் ஆகியவைப் போரைத் தொடர்வது மட்டும் இல்லாமல் தங்கள் துருப்புக்கள் நிலைநிறுத்துதலையும் அதிகரித்துள்ளன. இப்பொழுது இராணுவவாதத்தில் வளர்ச்சி ஐரோப்பாவிற்குள் இருக்கும் தேசிய விரோதப் போக்குகளைத் தீவிரப்படுத்துவதுடன் இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிகளில் இரண்டாந்தர நபர்களை இருத்தியிருப்பது இதை நிரூபிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அழுத்தங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடிக்காலத்தில் இருந்து அவை அதிகமாகிவிட்டன என்பது தெளிவு. அரசாங்கக் கடனுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு என்ன என்பது பற்றி கடுமையான முரண்பாடுகள் இருப்பது இதைக் காட்டுகிறது. ஜேர்மனிய அரசாங்கத்தின் ஓப்பல் கார்த்தொழிற்சாலையில் ஆக்கிரோஷ, ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள், ஜேர்மனிக்கும் போலந்திற்கும் இரண்டாம் உலகப் போரின்போது வெளியேற்றப்பட்ட மக்கள் பற்றிய கருத்து வேறுபாடுகள், மற்றும் மத்திய கிழக்கில் ஜனாதிபதி சார்க்கோசியின் ஒருதலைப்பட்ச வெளியறவுக் கொள்கை முயற்சிகளும் அத்துடன் பிரெஞ்சு ஆயுதங்கள் விற்றல், அணுசக்தி ஆலைகள் அமைத்தல், அதிவேக இரயில்கள் கட்டமைப்பு ஆகிவற்றிலும் வெளிப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் தேசியப் மோதல்கள் ஐரோப்பாவை இரு உலகப் போர்களில் ஆழ்த்தியதும் அதையொட்டி மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டதும் மீண்டும் வெடிக்காது என்று எவரும் நம்ப முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த முரண்பாடுகள் தற்காலிகமாக, கணிசமான அமெரிக்க பொருளாதார உதவி, உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்கள், பனிப்போரில் மேற்கு ஐரோப்பாவின் முன்னணி நிலை ஆகியவற்றால், வெளிப்படவில்லை. அந்த அடிப்படையில்தான் ஒரு ஐரோப்பிய ஒன்றியம் உருவாக முடிந்தது. ஆனால் இந்தக் காரணிகள் இப்பொழுது இல்லை. சர்வதேசப் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் உலகப் பொருளாதாரச் சரிவை மையமாகக் கொண்டிருக்கையில், தேசிய மோதல்கள் மீண்டும் வெடித்து எழுகின்றன. தங்கள் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆர்வமான வரவேற்பை தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளிடம் இருந்து பெறுகின்றன அவைதான் தேசியப் பொருளாதார நலன்களின் பாதுகாப்பு என்று வரும்போது, தேசியவாத முரசை மிக அதிகமாக முழக்குகின்றன ஐரோப்பா முதலாளித்துவ அடிப்படையில் ஒரு சமாதான, இணக்கமான முறையில் ஒன்றுபடுத்தப்படுவது என்பது இயலாது என்று மார்க்ஸிஸ்ட்டுக்கள் எப்பொழுதும் கூறிவந்துள்ளனர். முதலாளித்துவத்தின் நலன்கள் மேலாதிக்கம் பெற்றிருக்கும் வரையில், ஒவ்வொரு பெரும் ஐரோப்பிய சக்தியும் தன்னுடைய விருப்பத்தைப் போட்டி நாடுகள் மற்றும் சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முற்பட்டு கண்டத்தை தம் விருப்பப்படி அமைக்க முயலுகின்றன. இதுதான் முதல், இரண்டாம் உலகப் போர்கள் இரண்டின் பின்னணியாகும். ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் கண்டத்தின் பொருளாதாரத்தின் காரணமாக ஐரோப்பாவின் ஐக்கியம் என்பது கொள்கைரீதியாக அவசியமானதும் முக்கியமானதுமாகும். ஆனால் ஒரு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச குடியரசுகள் என்ற வடிவத்தில்தான் ஐரோப்பிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பதுடன் இந்த ஐக்கியம் முற்போக்கானதாகவும் இருக்கும். இதற்கு கீழிருந்து ஒரு இயக்கம் வெளிப்பட வேண்டும்; அது ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக எல்லா இடங்களிலும் இணைக்க வேண்டும், இராணுவவாதம் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்புடன் பிணைக்க வேண்டியதுடன், சமூகத்தை சோசலிச முறையில் மாற்றுவதற்காக போராடவேண்டும். |