World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
AfPak War and geo-political tensions cast long shadow over Indo-US summit ஆப்பாக் போரும் புவி-அரசியல் பதட்டங்களும் இந்திய-அமெரிக்க உச்சிமாநாட்டின் மீது நீண்ட நிழலைப் படர விடுகின்றன By Keith Jones ஆப்பாக் போரை விரிவுபடுத்தி உலக புவி-அரசியல் பதட்டங்களை அதிகரிக்க வைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் திட்டங்கள் --இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், கடைசியாய் ஆனால் குறைமதிப்பற்ற வகையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள்-- இவ்வாரம் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் நான்கு நாட்கள் அமெரிக்கப் பயணத்தில் நீண்ட நிழல்களைப் படரவிட்டுள்ளன. இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் தலைவரான சிங்தான் பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானதற்கு பின்னர் உத்தியோகபூர்வ வருகை புரிந்துள்ள முதல் வெளிநாட்டு அரச தலைவர் ஆவார்: இதற்கான அனைத்து பகட்டுக்களும் நிறைந்திருந்தன. செவ்வாய் மாலை ஒபாமா வெள்ளை மாளிகையின் சூடுபடுத்தப்பட்ட புல் தரைகளில் உருவாக்கப்பட்ட முகாம்களில் அரிய விருந்து ஒன்றை அளித்தார். ஒபாமா நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், முக்கிய ஜனநாயக, குடியரசுக் கட்சித் தலைவர்கள், வணிகத் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் முக்கிய இந்திய அமெரிக்கர்கள் என்று 300 விருந்தாளிகள் அதில் அடங்கியிருந்தனர். இத்தகைய பகட்டும், கோலாகலமும், இந்திய-அமெரிக்க உறவுகளை ஒபாமாவின்கீழ் வாஷிங்டன் கணிசமாக குறைமதிப்பிற்குட்படுத்தியுள்ளது என்ற கருத்தில் உள்ள இந்திய அரசாங்கம் மற்றும் உயரடுக்கை அமைதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். சீன எழுச்சிக்கு ஒரு எதிர்கனமாக வேண்டும் என்ற நிலையில், ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் குடியரசுக் கட்சி நிர்வாகம் இந்தியாவுடன் "உலக மூலோபாயப் பங்காளித்தனத்தை" ஏற்படுத்திக் கொண்டு இந்தியா ஒரு "உலக சக்தியாவதற்கு" அமெரிக்கா உதவத் தயார் என்றும் அறிவித்தது. அதற்கு சான்றாக புஷ் நிர்வாகம் உலக அணுக்கட்டுப்பாட்டு அதிகாரத்தில் இருந்து தனிப்பட்ட விலக்கை பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டுவந்தது; இந்தியா அணுவாயுதப் பரவா உடன்பாட்டை மீறி அணுவாயுதங்களை தயாரித்திருந்தாலும் இந்த சிறப்பு நிலை கொடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பதவியை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஒபாமா நிர்வாகம் இந்திய-அமெரிக்கப் பங்காளித்தனத்தில் குவிப்புக் காட்டாமல், இந்தியாவின் இரு முக்கிய போட்டி நாடுகளான பாக்கிஸ்தான், சீனா மீது குவிப்புக் காட்டியுள்ளது. ஆப்கனிஸ்தானை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு நடத்தப்படும் அமெரிக்காவின் போரில் பாக்கிஸ்தானின் ஆதரவு மிகவும் முக்கியமாகும். பாக்கிஸ்தானில் உள்ள பஷ்டூன் பேசும் எல்லைப் பகுதிகளில் ஆப்கானிய எழுச்சிக்கு உள்ள ஆதரவை அடக்குவதற்கு இஸ்லாமாபாத்தை மிரட்டுதல், லஞ்சம் கொடுத்தல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக வாஷிங்டன் இஸ்லாமாபாத்திற்கு பொருளாதார இராணுவ உதவிகள் இரண்டையும் அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெருகும் தேசியக்கடனுக்கு உதவி கொடுக்கும் விதத்தில் கருவூலப் பத்திரங்களை வாங்கும் சீனாவைப் பொறுத்தவரையில், ஒபாமா நிர்வாகம், பெருமந்த நிலைக்குப் பின் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சீனாவின் ஆதரவை நாடி நிற்கும் நிலை உள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கை திருப்தி செய்யும் பரபரப்பில் ஒபாமா நிர்வாகம் இந்தியாவின் நலன்கள்பற்றி போதுமான அக்கறை காட்டவில்லை என்று இந்திய நடைமுறை கவலைகளையும் அச்சங்களையும் பல முறை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படைத்தலைவர், தளபதி ஸ்ரான்லி மக்கிரிஸ்டல் ஆகஸ்ட் மாத இறுதியில் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியில் ஆப்கானிஸ்தானில் பெருகும் இந்திய செல்வாக்கு "வட்டார பதட்டங்களை அதிகரிக்கக்கூடும்", பாக்கிஸ்தானை "எதிர் நடவடிக்கைகளை" எடுக்கத் தூண்டும் என்று கூறப்பட்டது, இந்திய செய்தி ஊடகத்தில் அதிக வர்ணனைகளுக்கு உள்ளாயிற்று. ஒபாமாவின் கிழக்கு ஆசியப் பயணம் இம்மாதம் முன்னதாக நடந்தது இந்திய அரசியல் மற்றும் புவி-மூலோபாய வட்டங்களில் வாஷங்டன் புது டெல்லியைக் கைவிட்டுவிட்டது என்ற கருத்தை உறுதிப்படுத்தத்தான் உதவியது. ஆசியாவில் புவி-அரசியில் ஒழுங்கின் வளர்ச்சி பற்றி அமெரிக்கக் கருத்தை ஜப்பானில் ஒரு முக்கிய உரையில் முதலில் வெளியிட்ட ஒபாமா, இந்தியா பற்றி எக்குறிப்பையும் கூறவில்லை. பின் சீன ஜனாதிபதி ஹு ஜின்டோவோவுடன் உச்சிமாநாடு நடத்தி முடித்தபின், அமெரிக்க ஜனாதிபதி ஒரு விரிவான அறிக்கையில் கையெழுத்திட்டார்; வாஷிங்டனுடன் பெய்ஜிங்கும் "தெற்கு ஆசியாவில் சமாதானம், உறுதிப்பாடு, வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த" ஒரு பங்கு கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. 1962ல் ஒரு குறுகிய கால எல்லைப் போரை சீனாவுடன் நடத்திய இந்தியா, பல தசாப்தங்களாக "எல்லா நேரங்களிலும்" பெய்ஜிங் இஸ்லாமாபாத்துடன் கொண்டுள்ள நட்பை எதிர்க்கிறது; இத்தகைய கருத்தை வேறு எந்த நேரத்திலும் ஒப்புதலுக்கு உட்படுத்தாமல் இருந்திருக்கும். ஆனால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், இது புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் பதட்டங்கள் இருக்கும் நேரத்தில் இக்கருத்து கூறப்பட்டது. சமீபத்திய மாதங்களில் இந்தியாவும் சீனாவும் தொடர்ச்சியான தூதரக கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டுள்ளன; இந்தியச் செய்தி ஊடகம் சீனத் துருப்புக்கள் பல முறையும் இந்திய எல்லையைக் கடந்து வந்ததாக முழங்கியுள்ளன. இந்திய-பாக்கிஸ்தானிய உறவுகளில் "மூன்றாம் தரப்பினர்" தொடர்பிற்கு இடமில்லை என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சரகம் பரபரப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஒபாமா மற்றும் அவர் நிர்வாகம் பற்றி இந்தியச் செய்தி ஊடகக் கருத்துக்கள் சீராகக் குறைகூறுகின்றன அல்லது அப்பட்டமாக விரோதப் போக்கைக் காட்டுகின்றன. "இறுதியில் அமெரிக்கா நினைக்கக்கூடியது எல்லாம் தன்னுடைய சொந்த தேசிய நலனைத்தான். இந்திய நலன்கள் தூர எறியப்படுகின்றன. எமது பாதுகாப்புக் கொள்கை பற்றி அமெரிக்கா பொதுவாக முடிவெடுக்கவும், குறிப்பாக கடந்த தசாப்தத்தில் நம் பாக்கிஸ்தான் கொள்கை பற்றி முடிவெடுக்க அனுமதித்ததற்கும் இந்த விலையைத்தான் ஒருவேளை இந்தியா கொடுக்க வேண்டும் போலும். நம்முடைய பிரதம மந்திரி பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளுவதற்கு பதிலாக இந்த நபரை (ஒபாமா), இந்தியாவின் சுயமரியாதை, பாதுகாப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதவரைக் காண செல்கிறார்." என்று டெக்கான் கிரானிக்கிளின் கட்டுரையாளர் எஸ். ரகோத்தம் எழுதியுள்ளார். "ஒபாமாவிற்கு சற்றே புரியவில்லை" என்ற தலைப்பில் முன்னாள் அரசாங்க மற்றும் உளவுத்துறை அதிகாரி பி.ராமன், "சீனாவின் மூலோபாய நிலைப்பாடு மற்றும் இந்திய அண்டை நாடுகளில் பெருகிக் கொண்டிருப்பது பற்றி இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், ஒபாமா மற்றும் அவருடைய கொள்கை பற்றிய ஆலோசகர்கள் சீனாவை ஒரு கருணை நிறைந்த சக்தி, தேர்ந்த பங்கை தெற்கு ஆசியாவில் கொள்ளும் என்று சித்தரிக்க முற்பட்டிருப்பது வியப்புத் தரும், உணர்வற்ற, அதிர்ச்சிச் செயலாகும்" என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்தியாவின் முன்னாள் தூதராகவும் முன்னாள் வெளியுறவுச் செயலராகவும் இருந்த லலின் மான்சிங், நியூ யோர்க் டைம்ஸிடம் "ஜப்பானிய பேரரசர் முன் ஒபாமா தலைகுனிந்து வணங்கியது, ஒரு மரியாதைக்குரிய செயல், ஆனால் பின்புறமாகவும் வளைந்து சீனர்களுக்கு முன் நின்றது திருப்திப்படுத்தும் செயலாகும் என்றார். இந்த வாரம் சிங்கின் பயணத்தின்போது ஒபாமாவும் அவருடைய உதவியாளர்களும் சேதத்தை சீரமைக்கும் விதத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி உரக்கப் பல முறை கூவினர்; ஆசியாவில் இந்தியாவின் முக்கிய பங்கு, ஆப்கானிஸ்தானில் இந்தியா ஈடுபட்டுள்ள தன்மையில் உள்ள ஆதரவு இவற்றை அவை வலியுறுத்தியதுடன், பாக்கிஸ்தான் இந்திய எதிர்ப்பு எழுச்சியாளர்களை அடக்க வேண்டும் என்று புது டெல்லி கூறுவதை எதிரொலித்து, இந்தியாவை சர்வசாதாரணமாக ஒரு அணுவாயுத நாடு என்றும் வாஷிங்டன் விளக்கியது. செவ்வாயன்று தங்கள் பேச்சுக்களின் முடிவில் ஒபாமாவும் சிங்கும் வெளியிட்ட கூட்டு அறிக்கை, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உலக மூலோபாய பங்காளித்தனத்தை மறு உறுதி செய்வதாகவும்", "உலக சமாதானம், பாதுகாப்பிற்கு அது மிகவும் முக்கியமானது" என்றும் மலரும் இந்திய அமெரிக்க இராணுவ உறவுகள், "கூட்டுப் பாதுகாப்பு, அமைதிகாக்கும், மனிதாபிமானப் பணிகள், கடல்களை ரோந்து பார்த்தல் உட்பட அனைத்தும் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா, ஆசியாவை உருவாக்குவதில் "இந்தியாவின் தலைமைப் பங்கை அமெரிக்கா வரவேற்கிறது, ஊக்குவிக்கிறது என்றும் "ஆசிய-பசிபிக்கில் இதன் முக்கிய பங்கு பற்றியும் பேசப்பட்டது. இந்தியா பசிபிக்கில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது, ஆசிய பசிபிக் பொருளாதார அரங்கில் (APEG) அது உறுப்பு நாடு கூட இல்லை. ஆனால் கிழக்கு ஆசியாவில் ஒரு முக்கிய பங்கை கொள்ள வேண்டும் என்று உறுதியாக உள்ளது; அப்பகுதியோ இப்பொழுது உலகில் மிகப் பெரும் ஆற்றல்வாய்ந்த பொருளாதாரப் பகுதியாக இருக்கிறது. தன்னுடைய பங்கிற்கு அமெரிக்காவானது, தான் ஒதுக்கப்படக்கூடிய சீனா மற்றும்/அல்லது ஜப்பான் கிழக்கு ஆசிய வணிக முகாம் ஒன்று தோற்றுவிப்பதைத் தடுக்க ஆர்வத்துடன் உள்ளது; இந்தியா இதில் நட்பாக இருக்கும் என்று காண்கிறது. ஆப்கானிஸ்தானில் "பகிர்ந்து கொள்ளப்படும் நலன்கள்" பற்றியும் ஒபாமா, மன்மோகன் சிங் கூட்டறிக்கை உறுதிப்படுத்துகிறது; "ஆப்கானிஸ்தானில் நடக்கும் மறு கட்டமைப்பு முயற்சிகளில் இந்தியா கொண்டுள்ள பங்கையும்" அமெரிக்க ஜனாதிபதி பாராட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்திய வணிகக் குழுவில் திங்களன்று பேசிய இந்தியப் பிரதம மந்திரி, அமெரிக்க-நேட்டோ ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கு முழு ஆதரவை அறிவித்து, எத்தகைய "முன்கூட்டிய வெளியேற்றமும்" கூடாது என்றும் எச்சரித்தார். தாலிபனை இந்தியா பாக்கிஸ்தானின் மாற்றுக் கை என்றுதான் நினைக்கிறது; வாஷிங்டன் அல்லது காபூல் ஆப்கானிய எழுச்சியாளர்களின் எந்தப் பிரிவுடனும் பேச்சு வார்த்தைகள் அல்லது சமரசத்திற்கு போக வேண்டும் என்ற கருத்தை முறியடிக்க ஆர்வத்துடன் உள்ளது. கூட்டறிக்கை மற்றொரு இந்தியக் கவலை பற்றியும் குறிப்பிட்டது. தாலிபன் எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கும் பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் கூறுபாடுகளுக்கு எதிராக இஸ்லாமாபாத் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற தன் கோரிக்கையில் அமெரிக்கா உறுதியாக இருக்கையில், புது டெல்லி வருந்தும் அளவிற்கு, அது அதே அவசரப் போக்கை காஷ்மீரில் இருக்கும் இந்திய எதிர்ப்பு எழுச்சியாளர்களிடம் பாக்கிஸ்தான் காட்ட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வில்லை. "இரு தலைவர்களும் பயங்கரவாதிகள், அவர்களுடைய செயல்களுக்கு பாதுகாப்பும் புகலிடமும் அளிக்கும் இடங்களை அகற்ற உறுதியான, நம்பகத்தன்மை நிறைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உடன்படுகின்றனர்" என்று அறிக்கை அறிவித்துள்ளது. இம்மாதம் முன்னதாக இந்திய உள்துறை மந்திரி பி. சிதம்பரம் இந்தியாவில் மற்றொரு பெரும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீர் எழுச்சித் தளங்கள் மீது எல்லை கடந்த தாக்குதலைத் திறமையுடன் இந்தியா நடத்தும் என்று அச்சுறுத்தினார். ஒரு தலையங்கத்தில் இந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது போல், "இந்தியாவின் அத்தகைய நடவடிக்கை ஒரு பெரும் பூசலாக வெளிப்பட்டு தெற்கு ஆசிய மக்கள் அனைவருக்கும் துயரங்களைக் கொண்டுவரும்." ஒபாமா நிர்வாகம் அமெரிக்கா இந்தியாவுடன் பொருளாதார, இராணுவப் பாதுகாப்பு உறவுகளைத் தீவிரப்படுத்த சிங்கிடம் உத்தரவாதம் கொடுக்க ஆர்வத்துடன் இருக்கையில், பல வர்ணனையாளர்களும் இந்திய அமெரிக்க சிவிலிய அணு சக்தி ஒப்பந்தத்தை "நடைமுறைப்படுத்தும் விதத்தில்", முன்னேற்றமான அமெரிக்க இராணுவக் கருவிகளை இந்தியாவிற்கு விற்க அனுமதிப்பது பற்றிய நீண்டகால பேச்சுவார்த்தைகள் முடியாததால், உச்சிமாநாட்டை ஒட்டி அவை வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்க முடியாமல் போய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். அணுசக்தி உடன்பாட்டை இறுதிபடுத்துவதில் வந்துள்ள தோல்வியின் முக்கியத்துவம் பற்றி சிங் உதறித்தள்ளிய விதத்தில், சில புள்ளிகள் வைத்தல், கோடுகள் போடுவதுதான் பாக்கி எனக் கூறினார். ஆனால் அணுசக்தி சோதனை பற்றிய விரிவான தடை உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்னும் ஒபாமா நிர்வாகத்தின் அழைப்புக்கள் நன்கு தெரியப்பட்டவை; அந்த உடன்பாடு அணுவாயுதங்களுக்கு தேவையான உலைக்கூட பொருட்கள் தயாரிப்பை சட்டவிரோதமாக்கியுள்ளது, மற்றும் சிவிலிய அணுசக்தி அமைப்புக்களை கடுமையான சர்வதேச ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இதை இந்தியாவின் புவி-அரசியல் மற்றும் இராணுவ நடைமுறைகள் வன்மையாக எதிர்க்கின்றன; இவை ஏற்கத்தக்கவை அல்ல என்றும் இந்தியாவின் அணுவாயுதத்திட்ட வளர்ச்சிக்கு தடைகள் என்றும் அவை கூறுகின்றன. (தன்னுடைய பரந்த அணுவாயுத மேலாதிக்கத்தில் முழு நம்பிக்கையுடன் இருக்கும் ஒபாமா இத்தகைய நடவடிக்கைகள் தன்னுடைய அணுசக்தி நலன்களைக் காக்க உதவும் என்றும், ஈரானுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு ஒரு சட்டபூர்வ, "முன்னேற்றகரமான" ஆயுதங்கள் களைதல் என்னும் அரசியல் மூடுதிரையைக் கொடுக்கும் என்றும் நினைக்கிறார்.) புது டெல்லியும் வாஷிங்டனும் பல மற்ற பிரச்சினைகளிலும் ஒத்துப் போகவில்லை; அவற்றுள் பொருளாதாரச் சுமைகள், சுற்றுச் சூழல் மாற்றத்தைக் குறைக்கும் செலவினங்கள் மற்றும் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் டோஹா பேச்சுவார்த்தைகள் ஆகியவை உள்ளன. சிங்கின் பயணத்திற்கு முன்பு, புஷ் நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் ஒபாமாவை இந்திய-அமெரிக்கப் பங்காளித்தனத்திற்கு மறு ஊக்கம் கொடுக்குமாறு வலியுறுத்தினர்; சீனாவின் பேரவாக்களை குறைக்க அல்லது தகர்க்க இது மிக முக்கியம் என்றும் வாதிட்டனர். Boston Globe ல் எழுதிய இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை இயற்றியவர்களில் முக்கியமானவரான Nicolas Burns, "சீனாவில் பெருகும் அதிகாரம் மத்திய சவாலாக இருக்கும் வருங்காலத்தை அமெரிக்கா சிந்தித்துப் பார்க்கையில், இந்தப் புதிய அமெரிக்க-இந்திய பங்காளித்தனத்தைக் கட்டமைப்பது ஆசியாவில் நாம் சாதிக்க வேண்டியதற்கு அடிப்படையாகும். இந்திய அரசியல், இராணுவப் பிணைப்புக்களுடன் வலுவான பிணைப்புக்கள் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இருப்பதுதான் இந்த ஜனநாயக சக்திகளுக்கு சமச்சீர் நிலையை தக்க வைக்கச் சிறந்த வகை; வரவிருக்கும் தசாப்தங்களில் சீன எழுச்சியின் ஆபத்துத்திறன் நிறைந்த கூறுபாடுகளைக் குறைக்கவும் அது உதவும்." தன்னுடைய பங்கிற்கு சிங் சீனாவுடனான இந்திய விரிசல்களை பகிரங்கமாகவும், ஒபாமாவுடன் தனிப் பேச்சுக்களிலும் எடுத்துரைத்தார். "திங்கள் இரவு வெளியுறவுக்கொள்கை குழுவிற்கு கூறிய கருத்துக்களில், சீனாவைப் பற்றி அதிக நயமற்ற கருத்துக்களை கூறினார்; அது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருக்கும் எல்லைப் பூசல்கள் பற்றி குறிப்பிட்ட அவர் சீனாவின் வளர்ச்சி இந்தியாவுடையதை விட வேகமாக இருந்தாலும், 'மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட முக்கியான மற்ற மதிப்புக்கள் உள்ளன என்றுதான் நான் எப்பொழுதும் நம்புகிறவன்' என்றார். " சீனாவில் "கூடுதலான மேலாதிக்கத் தன்மைக்கான" காரரணங்களை தன்னால் "முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று சிங் கூறினார். உண்மையில் இவை அமெரிக்காவுடன் மலரும் இந்தியாவின் உறவுகளுடன் பிணைந்தவை ஆகும். வெளிப்படையான காரணங்களுக்காக, பெய்ஜிங் அமெரிக்காவிற்கு எதிராக மிரட்டல் தன்மை காட்டுவதை விட இந்தியாவிற்கு எதிராகக் காட்டுவது உகந்தது என்று நினைக்கிறது. மற்றொரு கருத்தும் இங்கு கூறப்பட வேண்டும். முன்பு மேற்கோளிடப்பட்ட இந்திய வர்ணனை நிரூபிப்பது போல் பெய்ஜிங்கைப் போலவே பதட்டங்களை அதிகரிப்பதில் இந்திய நடைமுறையும் மிகவும் செய்துள்ளது. இந்திய புவி-அரசியல், இராணுவ நடைமுறைகள் தெற்கு ஆசியாவில் சீனாவின் பெருகிய பொருளாதார, அரசியல் செல்வாக்கினால் கோபமுற்றுள்ளன. இவை இந்தியா அப்பகுதியின்மீது உரிமையுடன் கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்று அவை கருதுகின்றன; இந்திய வணிகம் இந்திய உள்நாட்டு சந்தையிலேயே சீனத்தளத்தைக் கொண்ட நிறுவனங்கள் ஊடுருவி உயர்ந்து வெற்றி பெற்று நிற்பதில் கோபமடைந்துள்ளன. செவ்வாயன்று ஒபாமாவை சிங் சந்திப்பதற்கு சில மணி நேரம் முன்பு, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கு ஒபாமாவின் சிறப்பு தூதராக உள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ருக், "இந்தியப் பிரதம மந்திரி மீது செலுத்தப்படும் பெரும் கவனத்தை பாக்கிஸ்தானில் உள்ளவர்கள் தங்கள் மீது கவனக் குறைப்பு உள்ளது என்று நினைக்கக்கூடாது" என்று ஒரு உரையில் கூறினார். உண்மை என்னவென்றால், ஆப்பாக் போர் பற்றிய அதன் திட்டங்களை இந்தியாவிடம் கலந்து வாஷிங்டன் ஆலோசிக்கிறது என்பது பற்றி பாக்கிஸ்தான் கோபமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளது. இது இஸ்லாமாபாத்தை என்ன நடக்கிறது என்று தெரியாத இருட்டில் தள்ளுவதுடன், இன்னும் அடிப்படையில் இந்தியாவுடன் மூலோபாயத்தை தொடரும் பங்காளித்தனம் பாக்கிஸ்தானுக்கு நலன்களை தராது என்ற உணர்வில்தான் இருத்தும். உண்மையில் சிங்கும் ஒபாமாவும் வாஷிங்டனில் சந்தித்தபோது, இந்திய பாக்கிஸ்தானிய பதட்டங்கள் கொதிநிலையை அடைந்தன. இந்த வாரம், இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி தீபக் கபூர் குளிர்காலம் தொடங்குவதற்கு முன் பாக்கிஸ்தான் 2,500 போராளிகளை காஷ்மீருக்குள் அனுப்புவதற்குத் தயாராக இருக்கிறது என்றும், "அணுவாயுத அச்சத்தில் ஒரு குறைந்த அளவு போர் என்பது குறைந்த பட்சம் இந்தியத் துணைக்கண்டத்தில் உண்மையாகிவிடுமோ என்ற கவலை உள்ளது" என்றும் கூறினார். பாக்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சரகம் இந்தியா ஒரு குறைந்த அளவு போரை பாக்கிஸ்தானுக்கு எதிராக தயாரித்து வருகிறது என்ற குற்றச் சாட்டை இதை எதிர்கொள்ளும் வகையில் முன்வைத்தார். பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி Yousuf Raza Gilani இஸ்லாமாபாத் விரைவில் பாக்கிஸ்தானிய பலூசிஸ்தானிய எழுச்சியாளர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுத்து வருவது பற்றி சான்றுகளை வெளியிடும் என்றும் ஆப்கானிஸ்தானை இதற்காக அது பயன்படுத்தி வருகிறது என்றும் கூறினார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெருகிவரும் கடும் உந்துதலானது --மத்திய ஆசியாவின் எண்ணெய் இருப்புக்கள் மீது கட்டுப்பாட்டை பெறுதல், சீனாவைக் கட்டுப்படுத்துல் என்ற முயற்சி-- இன்னும் அதிக அழிவைத் தரும் மோதல்களுக்கான விதைகளைத்தான் தூவியுள்ளது. |