World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குEurope backs Afghanistan strategy aimed at "regionalization" "வட்டாரமயமாக்குதல்" நோக்கத்தைக் கொண்ட ஆப்கானிஸ்தான் மூலோபாயத்திற்கு ஐரோப்பா ஆதரவு Ulrich Rippert அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தான் போரில் பெரும் விரிவாக்கத்தை திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அடுத்த செவ்வாயன்று West Point இராணுவக் கல்விக் கழகத்தில் இருந்து ஒரு தொலைக்காட்சி உரையை நிகழ்த்த இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தற்போதைய அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையான 68,000 த்துடன் கூடுதலான 30,0000 சிப்பாய்களை அனுப்ப இருப்பதை அறிவிக்க உள்ளார். அதே நேரத்தில் நேட்டோ தலமைச் செயலாளர் Anders Fogh Ramussen ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னும் கூடுதலாக 10,000 சிப்பாகள் அனுப்பப்பட வேண்டும் என்று முரசு கொட்ட இருக்கிறார். அவருக்கு தேவையானது கிடைக்கும் என்பதற்கான குறிப்புக்கள் உள்ளன. அமெரிக்காவுடன் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும்கூட, ஐரோப்பிய சக்திகள் ஆப்கானிஸ்தான் போருக்கு முழு ஆதரவைக் கொடுக்கின்றன. ஆரம்பத்தில் இருந்து போரை ஆதரித்துள்ள நிலையில் ஐரோப்பிய சக்திகள் வியட்நாம் போர் பாணியில் சங்கடம் ஏதேனும் நேர்ந்தால் அதை அமெரிக்காவுடன் உடன் அனுபவிக்கும். ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடோர் ஜு குட்டன்பேர்க்கின் கருத்துப்படி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் "வெற்றியை" உறுதியாகப் பெறுவர். துருப்புக்களை அனுப்புவது "ஒரு அட்லான்டிக் கடந்த கூட்டிற்கு மட்டும் இல்லாமல் முழு மேற்கிற்கும் லிட்மஸ் சோதனை (Litmus test) போன்றது" என்று அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ஒபாமாவின் முடிவிற்கு முன்னதாக அமெரிக்கத் தலைமைக்கும் நேட்டோவிற்குள்ளும் கடுமையான பூசல்கள் இருந்தன. இதன் விளைவு துருப்புக்கள் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு என்பதோடு, ஒரு புதிய மூலோபாயம் வரையப்பட்டுள்ளது; அதன் துல்லியமான உட்குறிப்புக்கள் "வட்டாரமயமாக்குதல்" என்ற சொல்லின்மூலம் குறைத்துக் கூறப்படுகிறது. தன்னுடைய வாஷிங்டன் முதல் பயணத்தின்போது குட்டன்பேர்க் "மேற்கத்தைய முன்மாதிரி வகையில் நாடு முழுவதையும் ஜனநாயகப் படுத்துதல் என்ற ஆர்வம் நிறைந்த கருத்து" ஒதுக்கி வைக்கப்பட வேண்டும், அதற்குப் பதிலாக "படிப்படியாக தனித்தனி மாநிலங்கள் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார். இத்தகைய திட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தாலும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன; அமெரிக்க நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட விவாதங்களில்தான் அவை விளைந்தன. நான்கு வாரங்களுக்கு முன்புதான் பதவியேற்றிருந்த குட்டன்பேர்க் வாஷிங்டனில் பெரும் வரவேற்பைப் பெற்றார். பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், செனட்டர் ஜோன் மக்கெயின் மற்றும் துணை செக்ரடரி ஆப் ஸ்டேட் ஜிம் ஸ்டீன்பேர்க் போன்ற செல்வாக்கு மிகுந்த அரசியல் வாதிகளுடன் அட்லான்டிக்கடந்த நெருக்கமான தொடர்புகளை அவர் நீண்ட காலமாகக் கொண்டுள்ளார். தன்னுடைய இளைய சக ஊழியரை கேட்ஸ், பாதுகாப்புக் கொள்கையில் "மதிப்பிற்குரிய குரல்", அமெரிக்காவின் "பெரும் நண்பர்" என்று வரவேற்றுள்ளார். Center for Strategic and International Studies ன் வெளியுறவு சிந்தனைக் குழுவின் தலைவரான John Hamre குட்டன்பேர்க்கை "வாஷிங்டனில் அடிக்கடி இருக்கும் விருந்தாளி, ஜேர்மனிய, ஐரோப்பிய அரசியல்வாதி" என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிய-பாக்கிஸ்தானிய எல்லையில் தன்னுடைய ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் ஜேர்மனிய அரசாங்கத்தின் விருப்பத்தையும், "கூடுதலான சுமையை" ஏற்பதற்கு தயார் என்பதையும் குட்டன்பேர்க் தெரிவித்தார். ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பற்றிய சர்வதேச மாநாடு வரை உத்தியோகபூர்வமாக எந்த முடிவும் காத்திருக்கும். ஆனால் ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி தன் அரசாங்கம் போர் விரிவாக்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகத்தையும் கொடுக்கவில்லை. "வட்டாரமயமாக்குதல்" என்னும் புதிய மூலோபாயம் ஆப்கானிஸ்தானை சிறு மாநிலங்களாக பிரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது--லெபனானிலும் முன்னாள் யூகோஸ்லாவியாவிலும் நடந்ததைப் போல். இதுவரை அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பு ஹமித் கர்சாய் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து, அந்த வழிவகையில் இது "ஜனநாயகப்படுத்தப்படுதல்" என்று மக்களிடையேயும் கூறிவந்துள்ளது. ஆனால் அத்தகைய வட்டார சக்திகள் ஏகாதிபத்திய எஜமானர்கள் கூறுவதைப் பின்பற்றும் என்ற நினைப்பில் ஆக்கிரமிப்புப் படைகள் பெருகிய முறையில் வட்டாரப் போர்ப்பிரபுக்களுக்கும் அவர்களுடைய போராளிகளுக்கும் அதிகாரத்தை மாற்றிக் கொண்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஆபத்து இல்லை என்றால், சர்வதேசத் துருப்புக்கள் அப்பகுதியில் இருந்து திரும்பப்பெறப்படும் என்று குட்டன்பேர்க் அறிவித்துள்ளார். The Frankfurter Neue Presse ஆப்கானிஸ்தானில் புதிய மூலோபாயம் பற்றி கீழக்கண்டவாறு கருத்துக் கூறியுள்ளது: "ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி, இனவழி சமூகம் ஆகும்; இதில் இன உட்பிரிவுத் தலைவர்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். போதுமான இனவழித் தலைவர்களுடைய ஆதரவு இருந்தால் ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார்." இதன்பின் செய்தித்தாள் பிரிட்டிஷ் தளபதி பாேல் நியூட்டனை மேற்கோளிட்டுள்ளது; அவர் முற்றிலும் இழிந்த முறையில் புதிய போர் மூலோபாயத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகையில் வட்டார ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பை விலைக்கு வாங்க "தங்கக்கட்டிகளினால் பைகளை நிரப்ப வேண்டும்" என்று அறிவித்தார்.ஆக்கிரமிப்பு சக்திகளின் கைப்பாவையான ஹமித் கர்சாய் முக்கியமான வட்டார, இனவழித் தலைவர்களின் ஆதரவை விலைக்கு வாங்கியதின் மூலம்தான் பதவியில் தொடர முடிந்தது. ஆக்கிரமிப்பு சக்திகள் பகிரங்கமாக கர்சாயை ஊழல், வேண்டியவருக்கு ஆதரவு கொடுத்தல் இதற்கு எதிராக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்; இப்பொழுது அவை ஆப்கானிஸ்தானின் மிகுந்த ஊழல் நிறைந்த கூறுபாடுகளின் ஒத்துழைப்பைப் பெறும் மூலோபாயத்தை ஏற்றுள்ளன. அமெரிக்க-நேட்டோ பிரச்சாரத்தில் போரை நியாயப்படுத்த முக்கிய பங்கை இதுகாறும் கொண்டிருந்த தாலிபனை தூற்றுதலும் இத்தகைய ஒத்துழைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. செய்தி ஊடகத் தகவல்கள்படி, அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள "நிதானமான தாலிபன்களுடன்" தொடர்பை நிறுவியுள்ளாக தெரிகிறது. ஜேர்மனிய இதழான Der Spiegel கருத்துப்படி, இத்தகைய தொடர்புகளுக்கு முக்கிய மத்தியஸ்தர் செளதி அரச குடும்பம் ஆகும். புதிய போர் மூலோபாயம் ஆப்கானிய மக்களுக்கு பேரழிவு விளைவுகளைத் தரும். துருப்புக்களின் எண்ணிக்கை கூடுதல் என்பது பூசல்கள் விரிவாக வழிசெய்யும்: அதையொட்டி சாதாரண மக்களின் பாதிப்பும் உயர் நிலையை அடையும். வட்டார இனவழித் தலைவர்கள் மற்றும் போர்ப்பிரபுக்களுடைய அந்தஸ்தை வலுப்படுத்துவது பெருகிய முறையில் நாட்டை முடக்கி இன்னும் அதிக பழங்குடி, உள்நாட்டுப் பூசல்களுக்கு வழிவகுக்கும். வட்டாரப் பூசல்களை இடைவிடாமல் திரித்தல் நாட்டை நீண்ட காலப் பார்வையில் ஏகாதிபத்திய நலன்களுக்கு விளையாடும் திடலாக மாற்றும். தனக்கே உரிய திமிர்த்தன முறையில் குட்டன்பேர்க் இதை "தானே முன்வரும் பாதுகாப்பு கட்டமைப்பு" என்று அழைத்துள்ளார் உண்மையில் இது காலனித்துவ போர் நூலில் மிகப் பழைய தந்திரமான பிரித்து ஆளும் சூட்சிதான். ஆப்கானிஸ்தான் போரின் உண்மைத் தன்மை இன்னும் வெளிப்படையாக வந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்சினை ஜனநாயகத் தன்மை பற்றியது அல்ல; தாலிபனை விரட்டுவதோ, அல் குவைதாவிற்கு தண்டனை அளிப்பதோ அல்ல; பிந்தைய அமைப்பிற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு சில டஜன் பேர்தான் ஆதரவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணயம் வைக்கப்பட்டிருக்கும் பிரச்சினை பல தசாப்தங்கள் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ள நாட்டை, ஈரானுக்கும் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இடையே அது இருக்கும் காரணத்தை ஒட்டியும், உலகின் மிக அதிக உற்பத்தியாகும் எண்ணெய் வளமுடைய வளைகுடா, மத்திய ஆசியாவிற்கும் இடையே இருப்பதாலும், அதன் மீது ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இந்தப் போர் ஆப்கானிய மக்களுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை; அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் முதுகுக்குப் பின், போரை நிராகரித்துள்ள பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கு எதிராக இது நடத்தப்படுகிறது. |