WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Palestinians and the perspective of Permanent
Revolution
பாலஸ்தீனியர்களும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்
26 November 2009
Chris Marsden
Use this version
to print | Send
feedback
மஹ்மூத் அப்பாஸும் ஃபத்தா தலைமையும் பாலஸ்தீனிய மக்கள் மத்தியில் தங்களது
சரிந்து கொண்டிருக்கும் அதிகாரத்தை மீட்பதற்கு எடுத்துவரும் பல முயற்சிகளும், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்
அமெரிக்கா ஆகியவற்றின் உடன்பாட்டின் மூலம் ஒரு பாலஸ்தீனிய நாட்டை அடையலாம் என்ற ஃபத்தாவின்
முன்னோக்கின் பரிதாபகரமான தோல்வியைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.
ஏற்கனவே ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த நிலையில் உள்ள அப்பாஸ் ஜனவரி 24ம்
தேதி நடக்கவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்; அவருடைய செய்தித் தொடர்பாளர்
பாலஸ்தீனிய அதிகாரம் சரிந்து விடும் என்று அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன்
மத்திய கிழக்கில் சாலை வரைபடம் எனப்பட்டதின் ஒரு பகுதியாக இருந்த குடியேற்றங்களை கட்டமைத்தலை நிறுத்துவதற்கான
முறையீடுகளை பகிரங்கமாக ஒதுக்கிய நிலையில் அப்பாஸ் அவமானத்திற்கு உட்பட்டபின், அவ்வாறு கூறியிருந்தார்.
தங்கள் கட்டமைப்புக்களை குறைப்பதாக "முன்னோடியில்லாத" வகையில் சலுகைகள் காட்டிய இஸ்ரேலையும் கிளின்டன்
புகழ்ந்திருந்தார்.
குடியேற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று
அப்பாஸ் கூறிவிட்டார்; அதிகாரிகளும் கிழக்கு ஜெருசெலம்தான் வருங்கால பாலஸ்தீனிய நாட்டின் தலைநகராக
இருக்கும் என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக்கியுள்ளனர். இதற்கு ஒபாமா நிர்வாகத்திடம்
இருந்து பெரும் மெளனம்தான் விடையிறுப்பாயிற்று; குறிப்பாக அமெரிக்கர்களை எதிர்க்கும் காசா பகுதியை ஹமாஸ்
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வரை தேர்தல்கள் நடப்பது இயலாது என்ற கருத்தில்தான் வாஷிங்டன் உள்ளது. தேர்தல்களை
முற்றிலும் இரத்து செய்ய விரும்புவதாக அப்பாஸ் விரும்புகிறார் என்பது பின்னர் உறுதியாகியுள்ளது.
ஃபத்தாவின் அடுத்த நடவடிக்கை சுதந்திரத்திற்கான ஒருதலைப்பட்ச அறிவிப்பிற்கு
அரேபிய ஆட்சிகளின் ஆதரவை நாடிக் கொண்டிருந்தது பற்றிய அறிவிப்பாகும். அதன் பின்
ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் அங்கீகாரத்தை அவர் கோருவார். ஆனால் பல அரேபிய சர்வாதிகாரிகளிடம் இருந்து
அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவு ஏதும் வரவில்லை. அமெரிக்காவும் அங்கீகாரத்திற்கு இடமில்லை என்று
உடனடியாக கூறியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியமும் அவ்வாறே கூறியுள்ளது.
இறுதியாக அப்பாஸ், BBC
க்கு மூத்த ஃபத்தா உறுப்பினர்கள் "ஒரு மூன்றாம் இன்டிபதாவிற்கு" அழைப்பு விடுத்துள்ளதை தான் ஆதரிப்பதாகக்
கூறியுள்ளார். ஆனால் இதன் பொருள் குடியிருப்புக் கட்டமைப்புக்களுக்கு எதிர்ப்புக்கள் விரிவு செய்யப்படுவதுதான்
என்றும் ஃபத்தா இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போருக்கு ஒப்புதல் தராது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார். அப்பாஸ் வெளிப்படையாகக் கூறினார்: "ஒரு இராணுவ விருப்புரிமை உள்ளது; அது
நடைமுறையில் சாத்தியம் இல்லை; ஒரு இராணுவத் தீர்வு என்று கூறும்போது நான் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு
எதிராகப் போரைத் தொடக்குவது என்று பொருள் கொள்ளுகிறேன்; எந்த அரேபிய நாடும் அதற்குத் தயாராக
இல்லை. ஆயுதமேந்திய போராட்டம் உள்ளது, ஆனால் நான் அதற்கு விரோதப்போக்கை கொண்டுள்ளேன்,
ஏனெனில் அது பாலஸ்தீனிய மக்களுக்கு அழிவையும் பேரழிவையும்தான் கொண்டுவரும்; கடந்த காசாப் போர்
அதைத்தான் நிரூபித்தது."
ஃபத்தாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீனிய மக்கள் முற்றிலும் சோக விளைவுகளை
கொடுத்துள்ள முன்னேற்றமில்லாத பாதையில்தான் உள்ளனர். இஸ்ரேலிய படைகளால் அவர்கள் வீடுகளில் இருந்து
முக்கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக மாற்றப்பட்ட நக்பா நடந்து 71 ஆண்டுகள் ஆகின்றன. ஃபதா
நிறுவப்பட்டபின் ஒரு ஜனநாயக, மத சார்பற்ற பாலஸ்தீனிய நாட்டிற்கான போராட்டத்தை தொடங்கி 55
ஆண்டுகள் ஆகின்றன. இந்த முன்னோக்கும் ஒரு "இரு-நாடுகள்" தீர்விற்காக கைவிடப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன;
1993ம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தங்கள் அராஃபத் மற்றும் அப்பாஸால் கையெழுத்திடப்பட்டு, இஸ்ரேலுடன் ஒரு
சுதந்திர பாலஸ்தீனிய நாடு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னோடியாக ஒரு ஐந்து ஆண்டு இடைக்கால பாலஸ்தீனிய
அதிகாரம் அப்பொழுது நிறுவப்பட்டது.
ஆனால் இன்று பாலஸ்தீனியர்கள் இரு தனித்தனி இராணுவ வகைச் சேரிகளில்
முடங்கியுள்ளனர்; இவை இஸ்ரேலியர்களால் சூழப்பட்டுள்ளன பல குருதி கொட்டப்பட்ட படையெடுப்புக்களுக்கு
உட்பட்டுள்ளனர்; போட்டியிடும் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளனர்; ஒரு ஊழல் மலிந்த
முதலாளித்துவ அடுக்கு பெரும் செல்வக் கொழிப்புடன் வெளிப்பட்டு இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது;
அதேவேளை தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேலைகள், மருத்துவ உதவி, கெளரவமான உணவு, நல்ல
குடிநீர் கூட டெல் அவிவினால் மறுக்கப்படுகிறது. இதற்கிடையில் "சமாதான வழிவகை" என்பது கிழக்கு ஜெருசெலம்
மற்றும் மேற்குகரையில் சிறந்த நிலப்பகுதியின்மீது இஸ்ரேல் தன்னுடைய கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்கப்பதற்கு ஒரு
திரையாகத்தான் உள்ளது. இஸ்ரேல் தன்னுடைய குடியேற்றங்களை பெருக்கியுள்ளது; அதையொட்டி பாலஸ்தீனிய
அதிகாரத்தின் பகுதிகள் பல துண்டுகளாக சிதற அடிக்கப்பட்டு, பல சாலைகளும் இராணுவச் சோதனைச்
சாவடிகளுக்கு உட்பட்டு, இழிந்த "பாதுகாப்புச் சுவரும்" வந்துள்ளது.
ஓஸ்லோவில் தொடங்கிய வாஷிங்டனுடனான கூட்டுடன் ஒரு நாட்டைப் பெறும் முயற்சியை
அவர் முற்றிலும் உருவகப்படுத்தி நிற்கும் முயற்சியில் இருந்தாலும் கூட, இதன் விளைவு அப்பாஸின் தோல்வியை மட்டும்
பிரதிபலிக்கவில்லை. இந்த தோல்வியுற்ற முன்னோக்கிற்கு ஒரு மாற்றீடு கொடுக்கும் வகையில் ஃபத்தாவின் எந்தப்
பிரிவும் இல்லை. செளதி அரேபியா, ஈரான் ஆகியவற்றில் உள்ள அதன் ஆதரவாளர்கள் உதவியுடன் இன்னும் தீவிர
வகையிலான எதிர்ப்பைத்தான் ஹமாஸ் காட்ட விரும்புகிறது; ஆனால் அத்தகைய முன்னோக்கில் மதசார்புடைய நாடு
வேண்டும் என்ற பிற்போக்குத்தனம் பிணைந்துள்ளது.
இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில், காலம் கடந்த முதலாளித்துவ வளர்ச்சி
ஏற்பட்டுள்ள நாடுகளில் முதலாளித்துவம் உண்மையான பொருளாதார, அரசியல் சுதந்திரத்தை ஏகாதிபத்தியத்தில்
இருந்து அடைய இயலாது என்று லியோன் ட்ரொட்ஸ்கி தன்னுடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில்
நிறுவியுள்ளார். இந்த முன்கணிப்பு முற்றிலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில், தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரங்கள் அரிப்பிற்கு உட்பட்டுள்ளன; அதே நேரத்தில் ஊழல் மிகுந்த முதலாளித்துவ
குழுக்கள், இருக்கும் பொருளாதார, சமூக ஒழுங்கிற்கு பாதுகாப்பாக உள்ளன. பரந்த எண்ணெய் செல்வங்களை
கட்டுப்படுத்தினாலும் அரேபிய ஆட்சிகள் சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட
உலகப் பொருளாதார ஒழுங்கிற்குள்தான் உள்ளன. அவற்றின் செல்வம் தொழிலாள வர்க்கத்தை பொருளாதார
வகையில் சுரண்டுவதில்தான் தங்கியுள்ளது. தங்கள் ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்தால் சவால் எழுந்துவிடுமோ என்ற
அச்சம்தான் இந்த நாடுகள் ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு விசுவாசமாக இருப்பதற்குக் காரணம் ஆகும்.
இக்காரணத்தால் அரேபிய அரசுகள் பலமுறையும் பாலஸ்தீனிய மக்களை காட்டிக்
கொடுக்கும் இழிந்த பங்கைத்தான் கொண்டுள்ளன. இன்றும் அவை இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை அடக்குவதற்கு நேரடி
உடந்தையாகத்தான் செயல்படுகின்றன. இத்தகைய வராற்றுத்தன்மை வாய்ந்த குற்றம் தொடர்கையில், எகிப்தைப்
போல் எல்லா இடங்களிலும் பெயரளவு உயர் சொற்கள்தான் வெளிவருகின்றன.
ஒரு சிறிய பாலஸ்தீனிய நாடு, பாலஸ்தீனிய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கு
உட்பட்டு அமைக்கப்படுவதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. இஸ்ரேலிய ஒடுக்குமுறையில் இருந்து தங்கள்
விடுதலைக்கு, மத்திய கிழக்கு முழுவதும் அனைத்து அரேபிய முதலாளித்துவ கன்னைகளுக்கும் எதிரான எதிர்ப்பில்
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை ஒன்றுபடுத்துவதுதான் தொடக்க கட்டம் என்று
பாலஸ்தீனியர்கள் போராட்டம் இடம்பெறாத வரை அங்கு வெற்றி இருக்க முடியாது.
அத்தகைய போராட்டத்திற்கு மையத்தானமாக யூதத் தொழிலாள வர்க்கத்தை
நாடும் ஒருங்கிணைந்த முயற்சி இருக்க வேண்டும். அரேபிய மக்கள் முழு யூத மக்களையும் இஸ்ரேலிய அரசு
நிகழ்த்தும் கொலைகளுக்கு பொறுப்புடன் பிற்போக்குத்தனமாய் அடையாளம் காணுவதை நனவாக கைவிட வேண்டும்.
இஸ்ரேலுக்கான அஸ்திவாரம் ஐரோப்பிய யூதர் இனம் கொடுமையான இனப்படுகொலைகளுக்கு
உட்பட்டதற்கு விடையிறுப்பாக சியோனிச இயக்கத்தால் முன்வைக்கப்பட்டது. பாசிசம், ஸ்ராலினிசத்தின் குற்றங்கள்
மற்றும் இன அழிப்பின் கொடூரங்கள் ஆகியவை மிருகத்தனமான அடக்கு முறை, மற்றும் கட்டாயமாக அங்குள்ள
மக்களை வெளியயேற்றும் செயற்பாடு மூலம் இஸ்ரேலை தோற்றுவிப்பதற்கு நெறிகளாகப் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது
முதல் சியோனிசம் யூதத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் தடையாகச் செயல்பட்டு
வந்துள்ளது. ஆனால் அதன் ஆதிக்கம் அகற்றப்பட முடியும்.
பரந்த, பெருகிய சமத்துவமின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவற்றில் வேரூன்றிய
சமூகப் பொருளாதார முரண்பாடுகளால் இஸ்ரேல் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இதுதான் புறநிலைரீதியாக
தொழிலாள வர்ககத்தை ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் இராணுவக் கருவி யுடன் மோதலில் தள்ளுகிறது. தன்னுடைய
நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக இஸ்ரேலிய முதலாளித்துவம் இன்னும் கொடூரமான முறையில் பாலஸ்தீனியர்களை
ஒடுக்க முற்படும் என்பது மட்டும் இல்லாமல், உள்நாட்டிலும் சமூக நிலைமை, ஜனநாயக உரிமைகள் மீது காட்டுமிராண்டித்தன
தாக்குதல்களையும் நடத்த முற்படும்.
அரேபிய, யூதத் தொழிலாளர்களின் பொது நலன்கள் என்ற அடிப்படையில் ஒரு சக்தி
வாய்ந்த அரசியல் கூட்டானது, இஸ்ரேல் அரசிற்கு எதிராக மட்டும் என்று இல்லாமல் அப்பகுதியில் இருக்கும் முதலாளித்துவ
சக்திகள் அனைத்திற்கும் எதிராக அமைக்கப்பட முடியும்.
பாலஸ்தீனிய மக்களின் விதி தவிர்க்க முடியாமல் அப்பகுதியில் உள்ள அனைத்து
தொழிலாள வர்க்கத்துடனும் பிணைந்துள்ளது. இப்பொழுதுள்ள முதலாளித்துவ தேசிய அரசுகள் வடிவமைப்பிற்குள் இது
தீர்க்கப்பட முடியாது; ஏனெனில் இதன்மூலம்தான் ஏகாதிபத்தியம் தன்னுடைய கட்டுப்பாட்டை செலுத்துகிறது. இதற்கு
மத்திய கிழக்கில் ஒரு சோசலிச கூட்டமைப்பை தோற்றுவிப்பதற்காக அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தை
ஐக்கியப்படுத்தலும், அதேபோல அதன் பின்னே கிராமப்புற வறியவர்ளை ஒன்றாக கொண்டுவருவது
தேவைப்படுகிறது. அது ஒன்றுதான் இப்பகுதியின் முக்கிய வளங்களை எல்லா மக்களுக்கும் மற்றும் முழு உலகிற்கும்
நன்மை பயக்கக்கூடிய வகையில் அறிவார்ந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையைத் தோற்றுவிக்க
முடியும். |