World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German Social Democrats invoke failed and abandoned reformist program

ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியினர் தோற்றுவிட்ட, கைவிடப்பட்ட சீர்திருத்தவாத வேலைத்திட்டத்திற்கு அழைப்புவிடுகின்றனர்

Ulrich Rippert
16 November 2009

Back to screen version

ஞாயிறன்று நடந்த முடிந்த ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) மாநாடு ஒரு உண்மைற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது. செப்டம்பர் மாதம் தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் மிக மோசமான முடிவுகளைக் கண்டிருந்த கட்சி நீண்டநாட்களுக்கு முன்னரே இந்த சீர்திருத்தவாத வேலைத்திட்டம் வீழ்ச்சிகண்டுவிட்டது என்ற காரணியை புறக்கணித்து "சமூக ஜனநாயகத்தின் வேலைத்திட்டத்திற்கு திரும்புவது" என்று உறுதியெடுத்துக் கொண்டது.

கிட்டத்தட்ட 500 பிரதிநிதிகள் பங்கு பெற்ற மூன்று நாள் மாநாடு, அரசியல் உண்மையை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய திறனற்றது என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. சோசலிச ஐக்கிய கட்சி (SED) என்னும் கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலிச ஆளும் கட்சியின் கடைசி நாட்களைத்தான் சமூக ஜனநாயகக் கட்சியின் மாநாடு நினைவிற்குக் கொண்டுவந்தது.

அக்டோபர் 7, 1989ல் ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (GDR-கிழக்கு ஜேர்மனி) நிறுவப்பட்ட 40ம் ஆண்டு நிறைவு நாளில் சோசலிச ஐக்கிய கட்சியின் தலைவரும் நாட்டின் தலைவருமான எரிக் ஹொனேக்கர் கிழக்கு ஜேர்மனியினதும் சோசலிச ஐக்கிய கட்சியினதும் பெருமைமிகுந்த வருங்காலத்தில் தன் நம்பிக்கையைத் தெரிவித்த விதத்தில் பின்வருமாறு கூறினார்: "சோசலிச சமூகத்தின் போக்கு காளையினாலோ, கழுதையினாலோ தடுத்து நிறுத்தப்பட முடியாதது." இச்சொற்களை அவர் கூறியபோது கிழக்கு ஜேர்மனியும் சோசலிச ஐக்கிய கட்சியும் கலைக்கப்படுவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருந்தன.

டிரெஸ்டன் மாநாட்டில் சமூக ஜனநாயகக் கட்சியின் பழைய, புதிய கட்சித் தலைமை இரண்டின் பேச்சுக்களும் குறைந்த வனப்புரையுடையதாக இருந்தாலும், உண்மையற்றதாக இருந்தது. கட்சியின் புதிய தலைவர் சீக்மார் காப்ரியல் (Sigmar Gabriel) ஒரு ஒன்றரை மணி நேர உரை நிகழ்த்தினார். பல நிமிடங்கள் நீடித்த கரவொலியை இது பெற்றது. அவருடைய செய்தியின் உட்கருத்து, "நாம் செய்தது அனைத்தும் மோசமானதல்ல" என்று சுருக்கமாகக் கூறப்படலாம்.

"இதற்காக மனம் தளரத் தேவையில்லை" என்று காப்ரியல் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார். "எமது காலத்தில பல அரிய செயல்களைச் செய்தோம், அவற்றைப் பற்றி நாம் பெருமிதம் அடையலாம்." "நாம் என்ன சாதித்தோம், எப்படி நன்கு சாதித்தோம்" என்பதில் உள்ள பெருமிதத்தில் இருந்துதான் புதுப்பிக்கப்படுவதற்கு உள் வலிமை வரும்."

ஆனால் கட்சி மாநாட்டில் ஒன்றும் புதுப்பித்தலுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை. செயற்பட்டியல் 2010ல் பொதிந்திருந்த பொதுநலங்கள் மற்றும் தொழிலாளருக்கு எதிரான சீர்திருத்தம் என்ற தன்னுடைய முந்தையே கொள்கையை சமூக ஜனநாயகக் கட்சி இன்னும் உறுதியாகத்தான் கொண்டுள்ளது.

ஹார்ட்ஸ் விதிகளின்கீழ் செயல்படுத்தப்பட்ட சமூக நலக் குறைப்புக்களை திரும்பப் பெறவதற்கான அழைப்புக்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஓய்வூதிய வயது 67 ஆக உயர்த்தப்பட்டதும் மாற்றப்படவிலை. அதிகபட்சமாக இந்த நடவடிக்கைகள் வருங்காலத்தில் "மறு பரிசீலனைக்கு உட்படக்கூடும்."

காப்ரியல் கூறியபடி, "அன்புள்ள தோழர்களே, சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தில் அது இருந்த காலத்தை மறுக்காது, மறுக்கவும் கூடாது. 11 ஆண்டுகளில் சாதித்தைவை பலவும் தொடர்கின்றன.

புதிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் கட்சித் தலைவர்களை பாராட்டினார். அவர்களோ சமூகவிரோத செயற்பட்டியல் 2010 கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதுடன், இரக்கமற்ற அதிகாரத்துவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்பைத் தோற்கடித்தனர். "கட்சி மாநாடு பிரன்ஸ் முன்டபெரிங்கைப் (Franz Müntefering) பாராட்டியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அவர்.

Die Welt பத்திரிகையின் கருத்துப்படி காப்ரியலும் முன்டபெரிங்கும் மாநாட்டிற்கு முன்பு ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தனர். இதன்படி பழைய கட்சித் தலைமை "நியாயமாகவும் நிதானமாகவும்" செயல்பட உறுதி பூண்டு, அதற்கு ஈடாக புதிய தலைமை செயற்பட்டியல் 2010 ஐ கைவிடவில்லை என்று உறுதியளித்தது.

பல பிரதிநிதிகளும் "சமூக ஜனநாயக மதிப்புக்களுக்கு" திரும்ப வேண்டும் என்று கோரியபோது, மாநாட்டின் தீர்மானங்கள் சமூக ஜனநாயகக் கட்சி தேர்தலில் அதற்குப் பேரழிவுதரும் முடிவுகளை ஏற்படுத்திய, கணிசமான உறுப்பினர்கள் எண்ணிக்கையை இழக்கச் செய்த கொள்கைகளை விடாப்படியாக பிடித்துக் கொள்ளும் என்பதைத்தான் காட்டுகின்றன.

உண்மையில், கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் சமூக ஜனநாயக மரபுகளை கைவிட்டதால் உருவானவை அல்ல. மாறாக முதலாளித்துவ நெருக்கடிக் காலத்தில் அவற்றைச் செயல்படுத்திய விதத்தில்தான் இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி தன்னை அரசியல் ரீதியாக புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்கு ஆழ்ந்த புறநிலை, வரலாற்று வேர்கள் உள்ளன.

டிரெஸ்டன் கூட்டம் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அடிப்படை மதிப்புக்கள் குழுவின் தலைவரான 82 வயதுடைய ஏர்ஹார்ட் எப்லரின் (Erhard Eppler) பேச்சுடன் முடிவடைந்தது. அவர் ஐம்பது ஆண்டுகள் முன்னால் நடந்த கட்சியின் கோடஸ்பேர்க் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். ஒரு இளைஞராக எப்லர் அந்த சமூக ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பங்கு பெற்றிருந்தார். அதில் கட்சி தொழிலாள வர்க்கத்துடன் தன்னடைய பிணைப்புக்களை முறித்துக்கொண்டு தன்னை "மக்கள் கட்சி" என்று அமைத்துக் கொண்டது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி (KPD) தடைசெய்யப்பட்டமை மறுபடியும் ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவத்தை (Bundeswehr) அமைத்தல் பற்றிய விவாதத்தில் முக்கிய பங்கை வகித்த சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கை வலிமைப்படுத்தியது. கோடஸ்பேர்க்கில் அது முற்றிலும் வலது நோக்கி திரும்பியதை பூர்த்திசெய்து அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயாராயிற்று.

சமூக ஜனநாயகக் கட்சி கோடஸ்பேர்க் வேலைத்திட்டத்தின் மையமாக "தடையற்ற சந்தைப்" பொருளாதாரத்தின் பாதுகாப்பினையும் மற்றும் அதன் சமூக ஒழுங்கமைப்பையும் இருத்தியது. முதலாளித்துவ இலாபமுறை தக்க வைக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் இது சமூக சீர்திருத்தத் திட்டத்துடனும் பிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவியிருந்தது. அந்த நேரத்தில் போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றச் சூழ்நிலையில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை முதலாளித்துவத்தை எதிர்க்காமல் முன்னேற்ற முடிந்தது. ஊதியங்களும் சமூக நலச் செலவுகளும் அதிகரித்தன.

இச்சூழ்நிலையில் சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. 1971 இலையுதிர் காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் வில்லி பிரண்ட் கட்சியின் நூறாண்டு வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் முடிவுகளைச் சாதித்தார்.

ஆனால் அத்தகைய இனிப்பான சமூகச் சீர்திருத்த நாட்கள் அதிக காலம் நீடிக்கவில்லை. ஏற்கனவே 1970 களின் நடுப்பகுதியில் நிலைமை மாறிக் கொண்டிருந்தது. உலகெங்கிலும் இருந்த மந்த நிலை எரிபொருள் விலைகளில் தீவிர அதிகரிப்பை ஏற்படுத்தியது. அதுதான் எண்ணெய் நெருக்கடி என்று அழைக்கப்பட்டிருந்தது. இது ஜேர்மனிய ஏற்றுமதிகள், தொழில்கள் ஆகியவற்றிற்கு பேரழிவு விளைவுகளை கொடுத்தது. வில்லி பிரண்ட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஹெல்முட் ஷ்மித் சமூகநல வெற்றிகளை திட்டமிட்டு தகர்க்கத் தொடங்கினார்.

அப்பொழுது முதல் சமூக சீர்திருத்தக் கடிகாரம் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருந்தது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையும், அத்துடன் இணைந்திருந்த சர்வதேச நிதியப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கமும் சமூக சீர்திருத்தக் கொள்கையை முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தின. நிதிய உயரடுக்கு மற்றும் முதலாளிகள் சங்கங்கள் இன்னும் அதிக சமூகநல குறைப்புக்கள் வேண்டும் என்று வலியுறுத்தின.

முதலாளித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் என்பது இனியும் பரந்த தொழிலாள வர்க்கப் பெரும்பான்மையின் சமூகத் தேவைகளுடன் சமரசப்படுத்துவதற்கு முடியாததாயிற்று. ஊதியங்கள், வேலைகள், கடந்தகால சமூகநலன்கள் ஆகியவற்றை பாதுகாத்தல் என்பதற்கு ஒரு சோசலிச முன்னோக்கும், முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான அரசியசல் போராட்டமும் தேவைப்படுகின்றன.

இத்தகைய முன்னோக்கை சமூக ஜனநாயகக் கட்சி முற்றிலும் நிராகரித்து, தொடர்ந்து வலதிற்கு மாறும் விதத்தைத்தான் எதிர்கொண்டது. சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் (1998-2005) அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் அனைத்து முந்தைய கிறிஸ்துவ ஜனநாயகத் தலைமை அரசாங்கங்களையும் விட கூடுதலான குறைப்புக்களை செயல்படுத்தியது. மற்றும் அதைத் தொடர்ந்து 2005ல் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் பெரும் கூட்டணி பதவிக்கு வந்தபோது சமூக ஜனநாயகக் கட்சி மந்திரிகள்தான் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பைக் கொண்டிருந்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், முதலாளித்துவ ஒழுங்கைக் காத்தல், முதலாளித்துவ சொத்து உரிமைகளை காத்தல் ஆகியவை மிக உயர்ந்த முன்னுரிமை கொடுக்கப்பட்டது. 1970களில்கூட, கட்சியின் சமூக சீர்திருத்தங்கள் எப்பொழுதும் முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டிருந்தன. சமூகநல அரசாங்கம் வர்க்க மோதலை கட்டுப்படுத்தவும், நிதானப்படுத்தவும் உதவியது.

ஆனால் சர்வதேசப் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில், சமூகநல அரசாங்கம் மற்றும் முதலாளித்துவம் என்பவை தொடர்ந்து சமரசத்திற்கு உட்படுத்த முடியாதவை ஆயின. சமூக ஜனநாயகக் கட்சி சமூகநல அரசாங்க கருத்தை, இலாபமுறையின் சன்னதியில் கைவிட்டு, தன்னை ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சியாக மாற்றிக் கொண்டது.

வலதுசாரி மாற்றமும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் சிதைவும் ஒரு ஐரோப்பிய, உலகந்தழுவிய அரசியல் நிகழ்வு ஆகும். பிரிட்டிஷ் தொழிற்கட்சி இவ்வாறான சரிவின் அதியுச்ச நிலையில் உள்ளது. பிரான்சிலும் இந்நிலையில் வேறுபாடு இல்லை. சார்க்கோசி அங்கு அதிகாரத்தில் இருக்க முடிவதற்கு காரணமே சோசலிஸ்ட் கட்சிதான். இத்தாலியை பற்றி கூறவேண்டியதில்லை. அங்கு பெர்லுஸ்கோனியின் வலதுசாரி ஆட்சி "இடது" என்று கூறப்படும் அமைப்புக்களின் திவால் தன்மையின் விளைவு ஆகும்.

ஜேர்மனியில் டிரெஸ்டன் கட்சி மாநாடு சமூக ஜனநாயகக் கட்சி சரிவில் ஒரு புதிய கட்டத்திற்கு கட்டியம் கூறுகிறது. பல பிரதிநிதிகள் பலமுறையும் "எதிர்க்கட்சியில் புதுப்பித்தல்" என்பதற்கு ஆதரவு கொடுத்து முந்தைய அரசாங்கத்தின் கொள்கையை பாதுகாத்தல் கிறிஸ்துவ ஜனநாயக-சுதந்திர ஜனநாயகக் கட்சியின் கூட்டாட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவு கொடுக்கும் என்றை அர்த்தப்படும் என கூறினர். வாக்காளர்களும், உறுப்பினர்களும் சமூக ஜனநாயகக் கட்சியை விட்டு தொடர்ந்து ஏராளமாக கைவிட்டு விலகுவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சோசலிச ஐக்கிய கட்சிக்கு (SED) நடந்தது போல், அந்த அரசியல் பெரு வெளியேற்றம் சிலர் நினைப்பதைவிட விரைவாக நடைபெறக்கூடும். இம்முறை தொழிலாள வர்க்கம் தீவிரமாகக் குறுக்கிட்டு தன் நலன்களை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு புதிய கட்சியை சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் கட்டமைக்க வேண்டும். இந்த சோசலிச மாற்றீட்டிற்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-PSG) போராடுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved