World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government attempts to dupe voters by delaying budget

இலங்கை அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை தாமதப்படுத்துவதன் மூலம் வாக்காளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது

By Nanda Wickremasinghe
10 November 2009

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாமதப்படுத்துகிறது. கடந்த வியாழக்கிழமை அது அடுத்த நான்கு மாதங்களுக்கான செலவை ஈடு செய்வதற்காக, ஒரு குட்டி வரவு செலவுத் திட்டமான கணக்கு மீதான வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய குட்டி-வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படுவது வழமை என அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இந்த முடிவானது அரசாங்கத்தின் நிதி மற்றும் பொருளாதார நிலையை ஆராய்வதை தவிர்ப்பதற்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள மூர்க்கமான வயிற்றிலடிக்கும் நடவடிக்கையை அமுல்படுத்துவதை தேர்தல் முடியும் வரை ஒத்திப் போடுவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு தெளிவான முயற்சியாகும்.

20011ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலையும் அதே போல் ஏப்பிரலில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலையும் முன்கூட்டியே நடத்துவதற்கான திகதிகளை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இராஜபக்ஷ, சீரழிந்துவரும் பொருளாதாரம் வாழ்க்கைத் தரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றிய அவதானத்தை திசை திருப்புவதன் பேரில், கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை சுரண்டிக்கொள்ள எதிர்பார்க்கின்றார்.

நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், இராணுவச் செலவை அதிகரிப்பதே இந்த குட்டி வரவு செலவுத் திட்டத்தின் மைய அம்சமாகும். அரசாங்கம் தீவின் வடக்கு மறும் கிழக்கில் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பை ஸ்தாபிப்பதன் பேரில், முன்பு புலிகளின் கட்டுப்பட்டில் இருந்த பிரதேசங்களில் புதிய இராணுவத் தளங்களையும் பொலிஸ் நிலையங்களையும் கட்டியெழுப்புவதோடு இராணுவத்தின் அளவையும் பெருக்குகிறது.

இந்த மினி-வரவு செலவுத் திட்டத்தின் மொத்த தொகை 363 பில்லியன் ரூபாய்கள் (3 பில்லியன் அமெரிக்க டொர்) இதில் 71 பில்லியன் ரூபா, அல்லது 20 வீதம் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முழு ஆண்டுக்கும் திட்டமிடப்பட்டிருந்தால், பாதுகாப்புச் செலவு 220 பில்லியன் ரூபாவாக, 2009 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதை விட 20 பில்லியன் ரூபா அதிகமாக இருக்கும். பொதுக் கல்விக்கும் சுகாதார சேவைக்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள 29 பில்லியன் ரூபாவை விட இரு மடங்கு அதிகமாக இராணுவச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மினி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசாங்கம் தலைவணங்காது என பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறெனினும், உண்மையில், கணக்கு மீதான வாக்கெடுப்பானது கடந்த ஜூலை மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொண்ட 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு ஏற்றவாறு, கடுமையான வரவு செலவுத் திட்ட வரையறைகளை திணிப்பதை தாமதப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சியே ஆகும்.

இந்த கடன் நிபந்தனைகளின் கீழ், அரசாங்கம் மொத்த தேசிய வருமானத்தில் வரவு செலவுப் பற்றாக்குறையை 2009ல் 7 வீதமாகவும், 2010ல் 6 வீதமாகவும் மற்றும் 2011ல் 5 வீதமாகவும் குறைக்க வாக்குறுதியளித்துள்ளது. அக்டோபர் 30 நாணய நிதியத்துக்கு அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் கடிதமொன்றில், சியம்பலாபிட்டியவும் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ராலும், இந்த மினி-வரவு செலவுத் திட்டம் "முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறு திட்டமிடப்பட்ட நிதியமைப்பு சீர்திருத்த நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான எமது இயலுமையில் தாமதத்தை" ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பிடத் தக்கவாறு, இந்த அபிப்பிராய கடிதம் தெரிவிப்பதாவது: "நாம், மீள் கட்டமைப்புக்கான செலவு தவிர்ந்த, அடிநிலையில் உள்ள வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 2010ல் மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதமாக குறைக்கும் எமது அசல் இலக்கை அடைய அர்ப்பணித்துள்ளோம். இதுவரையான எங்களுடைய சிறந்த செயற்பாட்டை பராமரிக்க திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதே சமயம், 2010 ஏப்பிரலில் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் நிதி அமைப்பில் மறு சீரமைப்பு நடவடிக்கையை அனுமதிக்க முடியும் என நாம் நம்புகிறோம்."

அடுத்த அரசாங்கம் நாடகபாணியில் அரச செலவுகளை வெட்டி, வரிகளை அதிகரிப்பதுடன் தேர்தல் முடிந்தவுடனேயே அரசாங்கத் துறைகளில் தனியார்மயத்தையும் மறுசீரமைப்பையும் துரிதப்படுத்தும் என்பதை இந்த அறிக்கை வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர் சிறிமல் அபேரட்னவின் மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டின் முடிவில் வரவுசெலவு துண்டு விழும் தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 11.4 வீதத்தை எட்டும் எனவும், அது 2010 இலக்கை அடைவதற்கு கிட்டத்தட்ட இதை அரைவாசியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் சூழ்ச்சியை மெளனமாக ஏற்றுக்கொள்வதாக காட்டும் சர்வதேச நாணய நிதியம், மினி-வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை, கடனின் இரண்டாவது பகுதியை வழங்கியது. நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர். கோஷி மாதாய், நாணய நிதியம் "கணக்கு மீதான வாக்கெடுப்பை பற்றி அக்கறை செலுத்துகிறது" என சுட்டிக் காட்டிய போதிலும், அரசாங்கத்தின் திட்டங்கள் வரவு செலவு திட்ட இலக்குடன் "முரணானதாக இல்லை" எனவும் கூறினார். நாணய நிதியத்தின் உப முகாமைத்துவ ஆணையாளர் அகாடோஷி காடோ, "அதிகாரிகள் 2010ல் முழு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒன்றை புதிய பாராளுமன்றத்தில் முன்வைக்க எண்ணுகின்றனர், அது திட்டத்தின் வரவு செலவு பற்றாக்குறை இலக்குடன் ஒத்திருப்பதோடு வரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது" என்ற உண்மையை கோடிட்டுக் காட்டினார்.

இராணுவம் தவிர்ந்த ஏனைய பொதுத் துறை பூராவும், விளைவுகள் கொண்ட சம்பள மற்றும் தொழில் கட்டுப்பாட்டை அரசாங்கம் ஏற்கனவே விதித்துள்ளது. கடந்த வாரம் இராணுவப் படையணி ஒன்றுடன் பேசிய இராஜபக்ஷ, நவம்பர் மாதத்தில் இருந்து துருப்புக்களுக்கு ஒரு உடனடி சம்பள உயர்வை அறிவித்தார். அதே சமயம், அரசாங்கம் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வரும் சம்பள உயர்வை கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் மின்சார சபை, துறைமுகம், எண்ணை கூட்டுத்தாபனம் உட்பட அரசுக்குச் சொந்தமான ஏனைய துறைகளையும் சார்ந்த தொழிலாளர்களை கசப்புடன் எதிர்க்கின்றது.

அரசு தனது நிதி நிலைமையை தூக்கி நிறுத்தவும் சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை இட்டு நிரப்பவும் முயற்சிக்கின்ற நிலையில், அரசாங்க துறையில் மேலும் வெட்டுக்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகும். 2009ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், வரி உள்ளடங்கியவை 5 பில்லியன் ரூபா வீழ்ச்சியுடன் வருவாய் 132 பில்லியன் ரூபா வீழ்ச்சி கண்டுள்ளது. அரசாங்கம் வட்டி மற்றும் கடன் மிதக்கவிடுதலுக்கான செலவுக்காக 10.6 பில்லியன் ரூபாவுக்கு அக்டோபர் 21 அன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கோரியது.

ஃபிட்ச் தரப்படுத்தல் அமைப்பு (Fitch ratings), "இலங்கையின் தூய வெளிநாட்டு கடன் வீதம் மிகவும் உயர்வாக இருப்பதோடு... உத்தியோகபூர்வ வருவாயில் அதிகரிப்பு ஏற்பட்டாலும் அது அவ்வாறே இருக்கும்," என கடந்த மாதம் எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் படி, இராஜபக்ஷவின் கீழ் தேசிய கடனானது 2006ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில் 2.2ல் இருந்து 3.9 ரில்லியன் ரூபா வரை 60 வீதத்தால் அதிகரித்துள்ளது. யுத்தம் நடந்த கடந்த ஆண்டில், கடன் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

பூகோள நிதி நெருக்கடியின் மத்தியில், இராஜபக்ஷ உள்நட்டு மற்றும் சர்வதேச வர்த்தகச் சந்தைகளில் உயர்ந்த வட்டியுடன் மேலும் மேலும் கடன்களைப் பெறத் தள்ளப்பட்டார். மத்திய வங்கியும் அரசாங்கமும் உயர்ந்த அந்நிய நாணய இருப்பைப் பற்றி பெருமை பேசிக்கொள்ளும் அதே வேளை, நாடு அந்நிய செலாவனி நெருக்கடியை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் திரும்பத் தள்ளப்பட்டுள்ளது. பிணைப் பத்திரங்களை விற்பதன் ஊடாக மேலும் அரசாங்கம் கடன் பெறுவதற்கு எதிராக நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி மாதாய் எச்சரிக்கை விடுத்தார்.

அரசாங்கம் மினி வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கடந்த வாரம் பாராளுமன்ற பெரும்பான்மையை வசதியாகப் பெற்றுக்கொண்டது. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான எதிர்க் கட்சிகளும் முன்னர் புலிகளை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதற்கு எதிராக வாக்களித்தன.

ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஒரு பொது வேட்பாளரை ஆதரிப்பதை நோக்கி இழுபடும் யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும், வீணடிப் மற்றும் மோசடி சம்பந்தமாக அரசாங்கத்தை விமர்சித்த போதிலும், பிரமாண்டமான இராணுவச் செலவைப் பற்றி மெளனமாக இருக்கின்றன. இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த இந்த இரு கட்சிகளும், இராணுவத்தின் வெற்றியை பாராட்டியதோடு 250,000க்கும் அதிகமான பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் ஆதரிக்கின்றன.

தேர்தல் முடிந்தவுடன் தொழிலாள வர்க்கத்தின் மீது அரசாங்கம் பிரமாண்டமான தாக்குதலைத் தொடுக்க தயாராகின்றது என எந்தவொரு கட்சியும் எச்சரிக்கவில்லை. வீண் செலவும் மற்றும் மோசடி பற்றிய தமது சகலவிதமான மக்கள்வாத வாய்வீச்சுக்கள் ஒரு புறம் இருக்க, யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி.யும் தாமும் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுச் செலவை வெட்டித் தள்ள நேரும் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்திருந்த போதும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்னுமொரு மாதத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால விதிகளின் கீழ், விசாரணையின்றி எதேச்சதிகாரமாக கைதுசெய்யவும், ஊடகங்களை தணிக்கை செய்யவும், வேலை நிறுத்தங்களை சட்டவிரோதமாக்கவும் மற்றும் எதிர்ப்புக்களை நசுக்க இராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவிட ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது. வாக்கெடுப்பில் உண்மையில் தமிழ் கூட்டமைப்பு மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளது. ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. யும் விளைபயனுள்ள விதத்தில் வாக்களிப்பை புறக்கணிப்பதன் மூலம் அரசாங்கத்தை ஆதரித்துள்ளன.

அவசகால நிலைமையை நீடிப்பதும் மற்றும் பாதுகாப்புப் படைகளை மீண்டும் கட்டியெழுப்புவதும் தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றன. இந்த நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கில் கட்டுப்பாட்டை கைக்குள் கொண்டுவருவதை மட்டுமன்றி, அடுத்த அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான புதிய தாக்குதல்களை தொடுக்க முயற்சிக்கும் போது, தவிர்க்க முடியாமல் வெடிக்கும் தொழிலாளர்களின், மாணவர்களின் மற்றும் கிராமப்புற வறியவர்களின் போராட்டத்தை நசுக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளன.