World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama seeks to boost US influence in Asia ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கிற்கு ஏற்றம் கொடுக்க ஒபாமா முற்படுகிறார் By John Chan ஆசியாவில் தன்னுடைய முதல் பயணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஏற்கனவே அதன் முக்கிய நோக்கம் முக்கிய நட்பு நாடுகளுக்கு ஆதரவை உறுதியளித்து அமெரிக்க பொருளாதார, மூலோபாய நலன்களை அப்பகுதியில் வாஷிங்டனின் முக்கிய போட்டி நாடுகளுக்கு எதிராக, குறிப்பாக சீனாவிற்கு எதிராக, விரிவுபடுத்துவது என்பதையும் தெளிவாக்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தன் மூலோபாய நட்பு நாடான ஜப்பானை முதலில் செல்லுமிடமாக தேர்ந்து எடுத்து, அமெரிக்க மற்றும் ஆசியா பற்றி முக்கியக் கொள்கைகளைக் கூறும் இடமாகவும் தேர்ந்தெடுத்தார். டோக்கியோவின் Suntory Hall ல் ஞாயிறன்று பேசிய ஒபாமா தான் "அமெரிக்காவின் முதல் பசிபிக் ஜனாதிபதி" என்று அறிவித்துக் கொண்டார்--தான் ஹவாயில் பிறந்து இந்தோனேசியாவில் வளர்ந்தது பற்றிய குறிப்பு--மேலும் அமெரிக்கா "ஒரு பசிபிக் நாடு" என்றும் கூறினார். ஆசியாவை ஒபாமா அரவணைத்துச் செல்வது அமெரிக்க அரசியல் நடைமுறையில் முந்தைய புஷ் நிர்வாகம் இந்த பொருளாதார, மூலோபாய முக்கிய பகுதியை சீனா நலன்பெறும் விதத்தில் புறக்கணித்தது என்ற குறைகூறல்களை பிரதிபலித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் உலகளவில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, அதிகம் கொடுக்க இயலாத நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்கா வலுவிழந்த நிலையில் வந்துள்ளார். ஜப்பானுடன் நீண்ட கால உறவுகளைப் பற்றி ஜனாதிபதி வலியறுத்துகையில், சீனப் பிரச்சினை எப்பொழுதும் பின்னணியில் இருந்தது. அமெரிக்க உறவுகள் சீனாவுடன் இருப்பது பற்றி நேரடியாக கதைக்கும் வகையில் ஒபாமா அறிவித்தார்: "உலக அரங்கில் சீனா ஒரு பெரிய பங்கைக் கொள்ளும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்.... சீனாவை ஒன்றும் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை; சீனாவுடன் ஆழ்ந்த உறவு என்பதும் நம்முடைய இருதரப்பு உறவுகளை வலுவிழக்கச் செய்யும் என்ற பொருளைத் தராது." ஆயினும்கூட, அமெரிக்க பத்திரங்களை சீனா வாங்கினால்தான் தன்னுடைய பெருகிய கடன்களுக்கு உதவும், சீனச் சந்தைகளில் கூடுதலான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியுள்ள நிலையில், வாஷிங்டன் சீனா ஒரு போட்டி நாடு என்று எழுச்சி பெறுவதை ஆழ்ந்த கவலையுடன்தான் பார்க்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா அதன் முறையான நட்பு நாடுகளுடன்--ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட-- உறவை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளைத் தொடர்ந்து, இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய உறவுகளை, சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, உறுதியாக்கிக் கொள்ளுகிறது. இக்கருத்தை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் அணுசக்தி குடை பற்றி ஒபாமா குறிப்பிட்டார்: "நான் தெளிவாகக்கூற விரும்புகிறேன்: இந்த அணுவாயுதங்கள் இருக்கும் வரை, அமெரிக்கா ஒரு வலுவான அணுவாயுத எதிர்ப்பை கொடுத்து அதன் நட்பு நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்-- இதில் தென் கொரியா மற்றும் ஜப்பானும் அடங்கும்." ஒபாமா வட கொரியாவை ஆபத்தானது என்று பிரித்துக் காட்டிய நிலையில், அடித்தளத்தில் இருந்த செய்தி சீனாவின் பெருகும் இராணுவ வலிமை பற்றி கூறப்பட்டது. சீனாவின் பொருளாதார ஏற்றம் ஜப்பானிய நடைமுறையை ஆழ்ந்த சங்கடங்களை எதிர்கொள்ள வைத்துள்ளது. அமெரிக்க-ஜப்பானிய கூட்டை மூலோபாய வகையில் நம்பியிருந்தாலும், டோக்கியோ சீனாவை ஒரு சந்தை, குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு என்று அதிகம் நம்பியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானிய பிரதம மந்திரி யூகியோ ஹடோயமா, சீனா உட்பட ஆசியாவுடன் நெருக்கமான உறவுகள், அமெரிக்காவுடன் "சம அந்தஸ்து" என்ற விதத்தில் வெளியுறவுக் கொள்கை இருக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார். ஐம்பது ஆண்டுகளில் பெரும்பகுதியை அதிகாரத்தில் கழித்திருந்த தாராளவாத ஜனநாயகக் கட்சியை (LDP) ஹடோயமாவின் ஜனநாயகக் கட்சி தேர்தலில் தோற்கடித்தது. அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்பாடு ஜப்பானிய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று ஒபாமாவிற்கு ஹடோயமா உத்தரவாதம் கொடுத்தார். அதே நேரத்தில் அவர் கிழக்கு ஆசிய சமூகம், ஒரு வணிக, நாணய முகாம் என்னும் தன் திட்டத்தையும் குறிப்பிட்டு, "வெளிப்படையான வட்டாரத் தன்மை"யை தான் விரும்புவதாகவும், "ஒதுக்கி வைத்தலை" எதிர்ப்பதாகவும் கூறினார். ஆனால் இவருடைய திட்டம் அமெரிக்காவிற்கு வாய்ப்பு கொடுப்பதைக் குறிப்பாக உள்ளடக்கி இல்லை. அடுத்த ஆண்டு "இன்னும் ஆக்கபூர்வ, வருங்காலச்சார்பு உடைய கூட்டை" அமெரிக்காவுடன் கொள்ள இருப்பதாகவும் அது அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கை 1960ல் கையெழுத்தாகி 50 ஆண்டுகள் நிறைவில் நிகழ்வுப் பொருத்தம் உடையதாக வரும் என்றும் கூறினார். அமெரிக்க இராணுவவாதத்திற்கு ஜப்பானில் உள்ள பரந்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் இரண்டு பிரச்சினைகள், திறமையுடன் ஒருபுறத்தே ஒதுக்கப்பட்டன. தன் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹடோயமா ஜப்பானில் எதிர்ப்பிற்குட்பட்ட ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா ஆக்கிரமிப்பிற்கு ஜப்பானிய கடற்படை எரிபொருள் அளித்து உதவுவது நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார். இத்தகைய நடவடிக்கை நிறுத்தப்படும் என்று இன்னமும் வலியுறுத்திய ஹடோயமா ஜப்பானின் அமெரிக்க போருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் விதத்தில் ஐந்து ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானிற்கு பில்லியன் உதவித் தொகை அளிக்கப்படும் என்றார். தேர்தலுக்கு முன்னதாக ஹடோயமா 2006ம் ஆண்டு அமெரிக்காவுடன் ஓகினாவா தீவில் உள்ள அமெரிக்க தளங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவது பற்றிய உடன்பாடு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார். அந்த உடன்பாட்டின்படி, Futenma விமானத் தளம் Ginowan City என்ற பகுதியில் இருந்து தீவின் மறுபுறத்திற்கு மாற்றப்படும். அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை ஆழ்ந்து எதிர்க்கும் உள்ளூர்வாசிகள் இத்தளங்கள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஹடோயமாவும் ஒபாமாவும் உயர்மட்ட கூட்டு செயற்குழு இப்பிரச்சினை பற்றி விவாதிக்கும் என்று அறிவித்தனர்; ஆனால் அமெரிக்க அதிகாரிகள் 2006 ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்படாது என்று வலியுறுத்தியுள்ளனர். ஒபாமா நிர்வாகம் ஜப்பானிடம் அமெரிக்காவிற்கு அதன் முக்கியத்துவம் பற்றி உத்தரவாதம் அளிக்கும் முயற்சிகள் இருந்தாலும், டோக்கியோ திறமையுடன் ஒதுக்கப்படுகிறது என்ற கவலை ஐயத்திற்கு இடமின்றி ஜப்பானிய ஆளும் வட்டங்களில் தொடர்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜப்பானை, அமெரிக்காவிற்கு அடுத்த உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் என்று சீனா கடக்கக்கூடும். கடந்த ஆண்டு எழுச்சி பெற்றுவரும் G2--அமெரிக்கா மற்றும் சீனா--பற்றிய விவாதம் ஒன்று ஜப்பானில் அது "சீன-அமெரிக்காவால்" மதிப்புக் குறைவிற்கு உட்படக்கூடும் என்ற ஆழ்ந்த கவலையுடைய விவாதத்தைத் தோற்றுவித்தது. ஆசியாவில் உள்ள மற்ற அமெரிக்க நாடுகளும் இதேபோன்ற கவலைகளை கொண்டுள்ளன. கடந்த வாரம் சிங்கப்பூரின் முன்னாள் பிரதம மந்திரி லீ குவான் யூ அமெரிக்க தொலைக்காட்சியிடம் ASEAN (Association of South East Asian Nations) "அமெரிக்கா சீனாவுடன் ஒரு சமசீர்நிலையை கொள்ள வேண்டும்" என விரும்புவதாக அப்பட்டமாகக் கூறினார். அமெரிக்காவிற்கு இதில் உள்ள பணயம் பற்றிச் சுட்டிக் காட்டிய லீ கூறினார்: "21ம் நூற்றாண்டு பசிபிக்கில் மேலாதிக்கத்திற்கான போட்டியை காணும்; ஏனெனில் அங்குதான் வளர்ச்சி உள்ளது. பசிபிக்கில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை என்றால், உலகத் தலைமையாக இருக்க முடியாது." ஒபாமா வார இறுதியில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒற்றுமை (APEC) உச்சி மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூரில் இருந்தார். கூட்டத்திற்கு இடையே அவர் ASEAN தலைவர்களுடன் பேசினார் --இது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் முதல் தடவையாகச் செய்வது ஆகும்; அமெரிக்கா, ஆசியாவில் ஒரு வலுவான நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது என்பதை முக்கியமாக அடிகோடிட்டுக் காட்ட விரும்பினார். பர்மிய இராணுவத் தலைமைக்கு --சீனாவில் நெருங்கிய நட்புக்குழு-- எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கியை விடுவிக்குமாறும் பகிரங்கக் குரல் கொடுத்தார். சிங்கப்பூர் கூட்டங்கள் முக்கியமாக அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிலை பற்றிக் குவிப்பு காட்டியது. APEC -ல் இருக்கும் ஆசிய நாடுகளுக்கு --அவற்றுள் சில வாஷிங்டனுக்கு அதிக கடன் கொடுத்துள்ளவை-- தான் "அமெரிக்காவின் நீண்ட கால பற்றாக்குறையை குறைக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகக் கூறினார். கடன் உந்துதல் கொண்டுள்ள வளர்ச்சி அமெரிக்காவின் நீண்டகால வளமைக்கு உதவாது" என்றார். பெய்ஜிங், டோக்கியோ மற்றும் பிற ஆசியத் தலைநகரங்களில் உள்ள அச்சம் அமெரிக்க டாலரின் சரிவு அமெரிக்காவிற்கு கடன்கொடுத்தவர்களின் மதிப்பைக் குறைத்துவிடும் என்பதாகும். ASEAN நாடுகள் சீன எழுச்சியின் அரசியல், மூலோபாய உட்குறிப்புக்கள் குறித்து கவலை கொண்டிருக்கையில், அவற்றின் பொருளாதாரங்களோ பெருகிய முறையில் சீனாவுடன் ஒருங்கிணைந்துள்ளன; குறிப்பாக, 1997-98 ஆசிய நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்து ஆகும். இதன் விளைவாக ASEAN தலைவர்கள் ஒபாமா நிர்வாகத்தின் காப்புவாத நடவடிக்கைகள் குறித்து பெய்ஜிங்கின் கவலையை பகிர்ந்து கொள்ளுகின்றன. APEC உச்சி மாநாட்டிற்கு முன் சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ ஆகியவை காப்புவாதக் கொள்கை மீண்டும் தலையெடுப்பது பற்றிக் குறை கூறின.டோக்கியோவில் ஆற்றிய உரையில் ஒபாமா ஆசியா நாடுகள் அமெரிக்க சந்தையை மட்டும் இனி நம்பியிருக்க வேண்டியதில்லை என்று வலியுறுத்தினார்; தற்போதைய உலக சமசீரற்ற தன்மையும் நீடித்து இருக்கக்கூடாது. ஒரு கூடுதலான ஆசிய நம்பகத்தன்மை உள்நாட்டு நுகர்வில் இருக்க வேண்டும்; அமெரிக்க பொருட்களுக்கும் இறக்குமதி வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். தங்கள் பொருளாதார, சமூக நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஆசியப் பொருளாதாரங்களில் சீனா உட்பட எதுவும் அந்த நிலையில் இல்லை. வளமையை பெருக்குவதற்கு இன்னும் திறந்த சந்தைகள் உலகெங்கிலும் வேண்டும் என்று ஒபாமா அழைப்பு விடுக்கையில், உலக வணிகப் பேச்சுக்களின் டோகா சுற்றுக்கள் தேக்கம் அடைந்துள்ளன, காப்புவாதக் கொள்கைகள் உலகம் முழுவதும் பெருகியுள்ளன. சீனாவை முக்கியமாக அதன் நாணயத்தை மறுமதிப்பீடு செய்யுமாறு ஒபாமா கூறிவருகிறார். ஆனால் APEC யின் இறுதி அறிக்கை நாணயங்கள் பிரச்சினை பற்றி குறிப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. "சந்தைச் சார்புடைய நாணய மாற்று விகிதங்களின்" தேவை பற்றி ஒரு விதி குறிப்பட்டுள்ளது; இது எந்த உடன்பாடும் அடையப்படவில்லை என்பதற்கு பின்னர் சேர்க்கப்பட்டது. ஏற்றுமதியை நம்பியிருக்கும் பல ஆசிய நாடுகள் சரிந்து கொண்டிருக்கும் டாலருடன் யுவான் இன்னும் பிணைந்திருப்பது பற்றிக் கவலை கொண்டுள்ளனர்; இது சீனப் பொருட்களுக்கு எதிராக அவற்றின் பொருட்களை குறைந்த போட்டித் தன்மை உடையதாக செய்துவிடுகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இன்று சீனாவிற்கு ஒபாமா வருகையில் மீண்டும் வெளிப்படும் --இதுதான் அவருடைய பயணத்தின் மையக் குவிப்பு ஆகும். |