World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Australia-Sri Lanka deal for joint crackdown on Tamil asylum seekers

தஞ்சம் கோரும் தமிழர்கள் மீது இணைந்து தாக்குவதற்காக ஆஸ்திரேலியா-இலங்கை உடன்பாடு

By Richard Phillips
13 November 2009

Back to screen version

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஸ்மித்தும், இலங்கை வெளியுறவு மந்திரி ரோகிதா போகோல்லகாமாவும் திங்களன்று கொழும்பில் இலங்கைத் தமிழர்கள் தீவை விட்டு ஓடி ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடுவதை இணைந்து தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

முன்பு ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் பல நாடுகளுடன், சமீபத்தில் இந்தோனேசியா உட்பட, படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகளை தடுத்து நிறுத்தி, அவர்கள் ஆஸ்திரேலிய பகுதிக்கு வந்து அகதிகள் அந்தஸ்து கோருவதைத் தடுக்கும் விதத்தில் ஒப்பந்தங்களை செய்திருந்தது. ஆனால் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு பொறுப்பான அரசாங்கமான கொழும்புடன் ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவகையில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் சர்வதேச சட்டத்தின்கீழ் மக்கள் தஞ்சம்கோர முயலும் அடிப்படை உரிமையை பயனற்றதாக ஆக்கும் வகையில் அதன் பொலிஸ் அரச நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்கியுள்ளது.

ரூட் அரசாங்கத்தின் "இந்தோனேசிய தீர்வு" என அழைக்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள தொடர்ந்த அரசியல் நெருக்கடியை அடுத்து, ஸ்மித் கொழும்பிற்கு வந்துள்ளார். நான்கு வாரங்களாக 78 தமிழ் தஞ்சம் கோருவோர் இந்தோனேசியாவில் இறங்குவதற்கு மறுத்து ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் ஆஸ்திரேலிய சுங்கத்துறைக் கப்பலான Oceanic King இனால் மீட்கப்பட்டிருந்தனர். இந்தோனிசியாவில் அகதிகளை "கழித்துவிடும் தளமாக" பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வந்துள்ள நிலையில், இலங்கையுடனான உடன்பாடு ஆரம்ப இடத்திலேயே தமிழ் அகதிகளைத் தடுத்துவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

1951, சர்வதேச அகதிகள் மரபின் மட்டுப்படுத்தப்பட்ட வரையறையின்படிகூட (International Refugee Convention) முழுத் தமிழ் சிறுபான்மையினரும் இனவழிக் கொடுமை என்னும் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட அச்சத்தின்கீழ் தகுதி பெற்றிருப்பர். பல தசாப்தங்களாக இலங்கை அரசாங்கங்கள் நெறிப்படுத்தியுள்ள தமிழ்-பாகுபாடுகள் 1983ல் ஒரு உள்நாட்டுப போரைத் தூண்டிவிட்டன. அவை தற்போதைய ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சவினால் மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) தோற்கடித்ததின் மூலம் ஒரு மிருகத்தனமான முடிவிற்கு வந்தது.

ராஜபக்ச அரசாங்கம் இப்பொழுது 250,000 தமிழ் குடிமக்களை இழிந்த இராணுவம் நடத்தும் காவல் முகாம்களில் அவர்களுடைய அரசியலமைப்பு, சட்டபூர்வ உரிமைகளை வெளிப்படையாக மீறிய விதத்தில் வைத்துள்ளது. விடுவிக்கப்பட்டவர்கள் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறப்படக்கூடிய நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளனர். இராணுவம் கலைக்கப்படுவதற்கு பதிலாக விரிவாக்கம் செய்யப்படுகிறது நாட்டின் கடுமையான அவசரகாலச்சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அரசாங்கத்தைக் குறைகூறுபவர்கள், குறிப்பாக தமிழர்கள், உண்மையான ஆபத்தான விசாரணை இல்லாத ஒருதலைப்பட்ச காவல் அல்லது அரசாங்க சார்புடைய கொலைப்படையினரால் கொல்லப்படுவதை எதிர்நோக்கியுள்ளனர்.

ரூட் அரசாங்கம் இப்பொழுது இந்தக்குற்றங்களுக்கு நேரடி உடந்தையாகிறது. ராஜபக்ச ஆட்சியுடனான உடன்பாட்டின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அரசாங்கம், மே மாதத்தில் இருந்து இலங்கைக்கு கொடுக்கும் உதவியை 49 மில்லியன் டாலர் என்று அதிகரித்துள்ளது. கூட்டு அறிக்கை இழிந்த முறையில் கான்பெர்ராவும் கொழும்பும் இடம் பெயர்ந்துள்ள தமிழக் குடிமக்களை "அவர்களுடைய வீடுகளில் கெளரவம், அமைதி, சுதந்திரமாக" மறு குடியமர்த்த விரும்புவதாகக் கூறியுள்ளன. இலங்கையின் போர்ச்சூறையாடலுக்கு உட்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் "மறு வாழ்விற்கு" வழிவகுக்க விரும்புகின்றன.

உண்மையில், காவல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையுடைய சாதாரண குடிமக்கள் தங்கள் கிராமங்களுக்கு எந்த உதவியும் இன்றித்தான் திரும்பினர். பலரும் அவர்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டதால், தற்காலிக உறைவிடங்களில்தான் வாழும் கட்டாயத்தில் உள்ளனர். ஒரு சில அடிப்படை வசதிகள் மறுகட்டமைக்கப்பட்டுள்ளன என்றாலும், போலீசும் இராணுவமும் அதிகமாக்கப்பட்டு திரும்பி வந்துள்ளவர்களை இடைவிடாமல் கடுமையாக கண்காணிக்கின்றன.

அறிக்கையின் முக்கிய நோக்கம் "மக்கள் கடத்தலை எதிர்க்கவும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கவும், இவை தொடர்புடைய நிறுவனச் செயல்களைக் கண்காணிக்கவும்" உறுதியளிக்கும் விதியில் சுருக்கமாகக் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது; இதில் போலீஸ் முறை, தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பு என்பதும் அடங்கியுள்ளது. வேறுவிதமாகக்கூறினால், படகில் அகதிகள் தப்பி ஓடுவதை கொழும்பு தடுப்பதற்கு பிரதியுபகாரமாக கான்பெர்ரா "பயங்கரவாதத்தை" ஒடுக்கும் நடவடக்கைகளுக்கு உதவும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று எவரேனும் சந்தேகிக்கப்பட்டால் அவரைத் தாக்க உதவும்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மீது அமெரிக்க நடத்தும் போர்களை முன்மாதிரியாகக் கொண்டு, ராஜபக்ச அரசாங்கம் அதன் தமிழ்-எதிர்ப்பு போரை "பயங்கரவாதத்தை எதிர்க்கிறது" என்ற போலிக்காரணம் கூறி நடத்தியது. பொறுப்பற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பகுதிகளில் குண்டு வீசியதின் மூலம் அது ஜனவரியில் இருந்து மே மாதத்திற்குள்ளாக 7,000க்கும் மேற்பட்ட குடிமக்களுடைய உயிர்களை பறித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களை "மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியது" என்ற கூற்றையும் முன்வைத்தது. கால் மில்லியன் தமிழ்மக்களை காவல் முகாம்களில் வைத்ததற்கு போலிக்காரணம் "பயங்கரவாதிகளை" களையெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது ஆகும். பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அடையாளம் காட்டப்படாது சித்திரவதைக்கு இழிபெயர்பெற்ற "மறு சீரமைப்பு முகாம்களுக்கு" அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி ஊடகங்கள்படி, வரவிருக்கும் ஆஸ்திரேலிய அதிகாரிகள், இலங்கை சிறைச்சாலை சீர்திருத்த சட்டத்தை (Prisons Reform Act) விவாதித்து, கான்பெர்ரா "தேவையான கட்டிடங்களுக்கான" நிதியை அளிக்கும் என்றும் நீதிபதிகள், அரசாங்க வக்கீல்கள், மற்றும் சிறை அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுப்பதுபற்றியும் விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்படும் அரசாங்க அடக்குமுறையில் நேரடிப்பொறுப்பு ஏற்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் என்பதாகும்.

தொழிற்கட்சி ஏற்கனவே பல வகை ஊடக விளம்பரப் பிரச்சாரத்தை இலங்கையில் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் CCTV எனப்படும் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்படுதலுக்கும் நிதியளித்தது. குறைந்தது 29 தமிழர்களாவது விமானநிலையத்தில் இந்த மாதம் ஆஸ்திரேலிய புகைப்படக் கருவிகளின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் சிலர் "காணாமற் போய்விட்டனர்."

அதே நேரத்தில் ரூட் அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கம் மற்றும் இராணுவம் உள்நாட்டுப் போரின்போது செய்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் தவறாக பறிக்கப்படுவது பற்றி பேரமைதி காக்கிறது. இந்த வாரம் இப்பிரச்சினைகளில் தொழிற்கட்சி மெளனமாக இருப்பது பற்றி கேட்கப்பட்டபோது, பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி ரூட் அரசாங்கம் இன்னும் "ஆக்கபூர்வ" அணுகுமுறையை விரும்புவதாகக் கூறினார்.

இக்கூட்டறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது. ஜனாதிபதி ராஜபக்ச இந்த ஒப்பந்தத்தை பாராட்டி இது "குடியேறுபவர்கள் பலவித தொந்திரவிற்கு உட்படுவதாக பிழையான குற்றச்சாட்டுக்களை கூறி குற்றவாளிகள் இலங்கையின் நல்ல தோற்றத்தை சேதப்படுத்துவதற்கு இடமில்லை" என்று கூறினார்.

மற்ற இலங்கை அதிகாரிகள் தமிழ் தஞ்சம் கோருவோருக்கு அகதி அந்தஸ்து நாடுவதற்கான நியாயபூர்வமான கோரிக்கை கிடையாது, ஏனெனில் இலங்கையில் இனவழி அடக்குமுறை இல்லை என்று அப்பட்டமாக அறிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடைவிதிக்கும் சட்டத்தையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி பாலிதா கோஹன, ABC தொலைக்காட்சியின் "Lateline" நிகழ்ச்சியில், தமிழ் புகலிடம் நாடுபவர்கள் "அகதிகள் அல்லர்" என்றும், ஆஸ்திரேலியாவில் அவர்கள் நுழையும் முயற்சிகள் "சட்டவிரோதமானவை" என்றும் கூறினார். தமிழ் தஞ்சம் கோருவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கூறிய அவர், "அப்படி ஏற்பட்டால் மற்றவர்கள் இந்தப் பயணத்தை மீண்டும் கொள்ளமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் சொந்த இடத்திற்கு திருப்பியனுப்பப்படுவர் என்பதை அறிவர்." என்றார்.

உண்மையில், கோஹனவின் கருத்துக்கள் 1951 சர்வதேச அகிதகள் மரபுகளை தலைகீழாக மாற்றுகின்றன. அம்மரபுகளின்படி எப்படி தப்பிவந்திருந்தாலும், எப்படி குறிப்பிட்ட இடங்களுக்கு வந்திருந்தாலும் எவரும் தஞ்சம் கோரும் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் "இன, சமய, தேசிய, குறிப்பிட்ட சமூக குழுவை சேர்ந்தமைக்காக அல்லது அரசியல் கருத்துக்களை கொண்டுள்ளதால் துன்புறுத்தப்பட நேரிடும் என்ற ஆதாரமுள்ள அச்சம்" கொண்ட எவருக்கும் அகதிகள் அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்.

1951 சர்வதேச அகதிகள் மரபின்படி சட்டவிரோதமானது கோஹன கூறும் துன்புறுத்தப்படும் இடத்திற்கு அகதிகளை மீண்டும் அனுப்ப வேண்டும் என்னும் வாதம்தான். இன்றுவரை, ரூட் அரசாங்கம் இந்த நடவடிக்கையை நிராகரித்துள்ளது. ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடனான இலங்கையில் இருந்து எவரும் ஓட முடியாது என்பதை உறுதிப்படுத்தும் உடன்பாடு சர்வதேச சட்டத்தின் எழுத்தை என்று இல்லாவிட்டாலும் உணர்வை (spirit) நிச்சயமாக மீறுகிறது.

நவம்பர் 2007ல் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தொழிற்கட்சி வாக்காளர்களிடம், ஹோவர்டின் லிபரல்-தேசிய அரசாங்கக் கொள்கைக்கு மாறாக, அது "கருணை நிறைந்த" அகதிகள் கொள்கையை கொண்டிருப்பதாக கூறியது. இக்கூற்றுக்கள் எப்பொழுதுமே போலித்தனமானவை. வரலாற்று ரீதியாக தொழிற்கட்சி ஆஸ்திரேலியாவின் இனவெறி நிறைந்த குடியேற்றக் கொள்கைகளை இயற்றுவதில் முக்கிய பங்கைக் கொண்டது. ஆனால் சமீபத்திய வாரங்களில் இது கன்சர்வேடிவ் கூட்டாட்சி அரசாங்கத்தின் இரக்கமற்ற உறுதிப்பாடான தஞ்சம் கோருவோரைத் தடுத்தல் என்பதிலும், அவர்களுடைய பரிதாப நிலையைச் சிறிதும் பொருட்படுத்தாத்தன்மையையும் விஞ்சி விட்டது.

தன்னுடைய "எல்லைப் பாதுகாப்பு" கொள்கையை வலியுறுத்தி பேசுகையில் பிரதம மந்திரி ரூட் இந்த வாரம்: "எவ்வித எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள், தீமை வருதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற எந்த வகையினாலும் நாங்கள் மாற மாட்டோம்." என அறிவித்தார். அவருடைய அரசாங்கம் ஆஸ்திரேலிய கரையை அகதிகள் அடைவதை தடுக்க எதுவும் செய்யும் என்ற உறுதி, உள்நாட்டில் சமூக, பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதற்கு எதிரான நடவடிக்கையை ஆகும். கடந்த காலத்தைப் போலவே அகதிகளை அவதூறாகப் பேசுதல் (குறிப்பாக ஆசியாவில் இருந்து வந்தவர்களை) மோசமாகி வரும் உள்நாட்டு வேலையின்மை, வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு அதன் கொள்கைகள்தான் பொறுப்பு என்பதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் தொழிற்கட்சியின் முயற்சி ஆகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved