World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German defence minister defends Kunduz massacre

ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி குண்டுஸ் படுகொலையை நியாயப்படுத்துகிறார்

By Ulrich Rippert
12 November 2009

Back to screen version

பாதுகாப்பு மந்திரி பதவிப் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு பின்னர், கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்-CSU), ஆப்கானிஸ்தானத்தில் நடத்தப்பட்ட குண்டுஸ் படுகொலையை நியாயப்படுத்தினார். ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 4ம் தேதி இரு பெட்ரோல் டாங்கர்கள் மீது வான் தாக்குதலை நடத்த உத்தரவிட்ட கேர்னல் ஜோர்ஜ் கிளைனின் முடிவிற்கு அவர் பகிரங்கமாக ஒப்புதல் கொடுத்தார். இத்தாக்குதலில் 100 பொதுமக்களுக்கு மேல் இறந்து விட்டனர்.

நடந்து கொண்டிருக்கும் விசாரணையின் முடிவிற்குக்கட காத்திராமல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனிய இராணுவப் படைகளில் பெரும் இரத்தம் சிந்திய இந்த கொடூர நிகழ்வை ஆதரிக்கும் வித்த்தில் கூட்டன்பேர்க் பேசினார். பாதுகாப்பு அமைச்சரகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குண்டூஸ் அருகில் நடைபெற்ற கனரக வாகனங்களின் மீதான தாக்குதல் "இராணுவ ரீதியாக பொருத்தமானதுதான்" என்று அவர் அறிவித்தார்.

சமீபத்தில் முடிந்த நேட்டோ நடத்திய விசாரணை பற்றி குறிப்பிட்ட அவர் அதன் முடிவுகள் பகிரங்கமாக வெளியிட மறுத்துவிட்டார். அதன் விவரம் இதுவரை ஜேர்மனியின் பாராளுமன்றக் கட்சிகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை படித்தபின், இராணுவப்படைகளின் தலைமை ஆய்வாளர் Wolfgang Schneiderhan இன் கருத்துக்கள் முழுமையாச் சரிதான் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லை என்று கூட்டன்பேர்க் கூறினார். நிகழ்ச்சி நடந்த சில மணி நேரத்தில் Schneiderhan ஏற்கனவே குண்டுத் தாக்குதல் பொதுமக்கள் இறப்புக்கள் இருந்தாலும், ஒரு இராணுவரீதியாக அவசியமானதும் பொருத்தமானதும் என்று கூறியிருந்தார்.

செய்தி ஊடகத்திடம் பொதுமக்கள் இறப்புக்களும் இருந்தன என்றும் அது பற்றி "என் இதய அடித்தளத்தில் இருந்து" நான் வருத்தப்படுகிறேன் என்றும் கூட்டன்பேர்க் கூறினார். அத்தகைய பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இப்பொழுது தெரிந்துவிட்டதா, கடந்த சில வாரங்களில் அது பற்றி முரணான தகவல்கள் வந்தனவே எனக் கேட்கப்பட்டதற்கு கூட்டன்பேர்க் நேட்டோ அறிக்கையின்படி கிட்டத்தட்ட 142 பேர் இருந்திருக்கலாம் என்றார். ஆனால் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் இந்த எண்ணிக்கையை அவர் உறுதிபடுத்த முடியவில்லை.

முதலில் விசாரணை நடத்திய ட்ரெஸ்டன் தலைமை அரசாங்க வக்கீல் அலுவலகம் வழக்கை Karlsruhe ல் இருக்கும் கூட்டாட்சி அரசாங்க வக்கீல் அலுவலகத்திற்கு மாற்றியது. அங்கு அடுத்த நடவடிக்கைகள் பற்றி எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை.

உத்தியோகபூர்வ விசாரணை இவ்விதத்தில் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தெளிவாக முடிவின்றி இருக்கையில், பாதுகாப்பு மந்திரி இராணுவக் கட்டுப்பாட்டின் நடவடிக்கைகளை பாதுகாத்து, குண்டுஸ் செயற்பாடு இராணுவமுறையில் "பொருத்தமானதுதான்" என்கிறார். இந்தக் கருத்திற்கு ஆதரவு தேடும் வகையில் அவர் ஜேர்மனிய உயர்மட்ட தளபதியின் கருத்தை மேற்கோளிடுகிறார். கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஜேர்மனிய இராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை அடுத்து அவர் தலைமைத் தளபதி என்று அழைக்கப்படாமல் தலைமை அதிகாரி என்று அழைக்கப்படுகிறார்.

கூட்டன்பேர்க்கின் அறிக்கை இதுவரை தொலைதூரவிளைவுகளை கொண்டுள்ளது. இதைப்பற்றி இந்த தகுதி பெற்ற வக்கீல் முழுமையாகத்தான் அறிந்துள்ளார். இராணுவப் படைகளின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு சட்ட அமைப்புமுறை தக்க அடித்தளத்தைக் கொடுக்கவில்லை என்றால், இராணுவத் தலைமையே அத்தகைய அடித்தளத்தில் இராணுவம் சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் கட்டுப்பட்டதல்ல என்ற கருத்துக்களைக் கொள்ளவதற்கு அனுமதிக்கின்றது.

நேட்டோ அறிக்கை "சில நடைமுறைப் பிழைகள்", "சில பகுதிகளில் பயிற்சியின்மை" உள்ளது என்ற முடிவைக் காட்டுகிறது என்பதை கூட்டன்பேர்க் ஒப்புக் கொண்டாலும், "நடைமுறைப்பிழைகள் இல்லை என்றாலும், இது [இந்நிகழ்வு] எப்படியும் ஒரு வான்வழித் தாக்குதலுக்கு வகை செய்திருக்கும்" என்றார்.

ஏன்? கூட்டன்பேர்க் கொடுக்கும் ஒரே காரணம் ஒரு இராணுவத்தின் பார்வையில் அது தேவை, எனவே இது இராணுவத்தால்தான் மதிப்பீடு செய்யப்பட முடியும் என்பதாகும்.

இராணுவத் தலைமை முதலில் மறுத்து பின்னர் குண்டுஸ் படுகொலையை நியாயப்படுத்திய பிரச்சாரத்தை மூடிமறைக்கும் நடவடிக்கைகளுக்கு வந்துள்ள எதிர்ப்பை மெளனப்படுத்தும் அல்லது மிரட்டும் வகையில் கூட்டன்பேர்க் முற்பட்டுள்ளார். அப்பொழுது கடமை அதிகாரியாக இருந்த கேர்னல் கிளைன் தன்னுடைய மேலதிகாரிகளைக் கேட்காமல் இரண்டு டாங்கர்களையும் அழிக்க உத்தரவிட்டதற்கு அவர் குண்டுஸில் இருந்த ஜேர்மனிய முகாம் அலுவலகத்தின் மீது ஒரு தற்கொலைத் தாக்குதல் வரக்கூடும் என்பதால் அது பெரும் அழுத்தத்தில் இருந்தது என்றும் ஏற்கமுடியாத கொடுத்த அறிக்கையைத்தான் கூட்டன்பேர்க்கும் கூறியுள்ளார்.

செய்தி ஊடகம் மற்றும் உள்ளூர் விசாரணைகள் இராணுவத்தின் இத்தகைய அறிக்கைகளுக்கு முரணாக இருப்பது பற்றி இவர் விடையிறுக்க முற்படவில்லை. ஏற்கனவே செப்டம்பர் நடுப்பகுதியில் Der Spiegel அப்பகுதியின் வரைபடம் ஒன்றை வெளியிட்டு, நிகழ்வுகளைப் பற்றி சரியான நேரத் தொகுப்பையும் கொடுத்திருந்தது. இதில் எரிபொருள் ட்ரக்குகள் ஜேர்மனிய முகாமில் இருந்து சில நூறு மீட்டர்களுக்குக் கடத்திச் செல்லப்பட்டன என்றும் பின்னர் 6 கி.மீ. தூரம் ஓட்டப்பட்டன, இறுதியில் குண்டுஸ் ஆற்றின் மணற்படுகையில் சிக்கிக் கொண்டன என்றும் தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில்தான் இரவு நேரத்திலும் காணக்கூடிய தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்த ஒரு அமெரிக்க விமானத் தாக்குதல் பிரிவு ட்ரக்குகளை கண்டுபிடித்து ஜேர்மனிய தளத்திற்கு ஒளிப்பதிவு காட்சிகளை உடனே அனுப்பியது. நள்ளிரவு வரை கடத்தப்பட்ட ட்ரக்குகள் விமானத்தின் கண்காணிப்பில் இருந்தன. அதன் பின் அதற்குப் பதிலாக இரண்டு F 15 தாக்குதல் விமானங்கள் 1.08 வரை பணியில் இருந்தன. அவை இன்னும் ஒளிப்பதிவு படங்களை அனுப்பிவைத்து, இறுதியில் 1.50 க்கு உயிரைக் குடித்த குண்டுகள் போடப்பட்டன.

இவ்விதத்தில் கிளைன் வான் தாக்குதலுக்கு முன் நாலரை மணி நேரம் கண்காணிப்பில் கடத்தல்காரர்களை வைத்திருந்தார். ஒரு நிதானமாக, நெறியுடன் செல்படும் தளபதி என்று ஊடகத்தால் விவரிக்கப்படும் இந்த தளபதி தன்னுடைய மேலதிகாரிகளை கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறுவது மிகவும் நம்பத்தகுந்தது இல்லை. மேலும் ISAF எனப்படும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் நெறிக்கு புறம்பானதுதான் தாக்குதலுக்கான உத்தரவு என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். படையினர் போரில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது நேரடி ஆபத்தை எதிர்கொண்டால்தான் வான்வழி ஆதரவு கொடுக்கப்படும் என்று விதிகள் கூறிகின்றன. இரண்டில் எதுவும் குண்டுஸில் நடக்கவில்லை.

பல விவரங்கள், செயற்பாட்டின் நேர வழிநடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி தான் பேச முடியாது என்றும் இதற்குக் காரணம் நேட்டோ விசாரணை அறிக்கை இரகசியம் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்று கூட்டன்பேர்க் செய்தி ஊடகத்திடம் கூறினார். இதுவும் ஓரளவுதான் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனிய இராணுவ உயர் கட்டுப்பாடுதான் அறிக்கை இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

ஒரு நேட்டோ செய்தித் தொடர்பாளர் பிரஸ்ஸல்ஸில் அறிக்கைத் தயாரிப்பு முடிந்து, ஜேர்மனிய அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டபின், விவகாரம் இப்பொழுது நேட்டோவைப் பொறுத்தவரையில் முடிந்துவிட்டது என்று வலியுறுத்தினார். இப்பொழுது அனைத்தும் பேர்லின் முடிவுதான் என்று நவம்பர் 4ம் தேதி Deutsche Presse Agentur (DPA) எழுதியுள்ளது.

மற்ற செய்தி ஊடகத் தகவல்கள்படி, "பிரஸ்ஸல்ஸில் உள்ள உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள் பொறுப்பான ஜேர்மனிய அதிகாரியை" விதிகள், உத்தரவுகளை மீறி நடந்ததாக குற்றம்சாட்டினர் என்று விசாரணை அறிக்கையை மேற்கோளிட்டு தெரிய வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க போர் ஜெட் விமானங்களை தாக்குதல் நடத்துவதற்கு கிளைன் மட்டும் உத்தரவிட்டிருக்க முடியாது. அது ஆப்கானிஸ்தானத்தின் பாதுகாப்பு ISAF படைகளின் தளபதி, அமெரிக்க ஜெனரல் ஸ்ரான்லி மக்கிரிஸ்டலால்தான் செய்யப்பட முடியும்.

பல முறையும் கூட்டன்பேர்க் தன்னுடைய முக்கிய நோக்கங்களில் ஒன்று அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு இன்னும் கூடுதலான சட்டபூர்வ பாதுகாப்பு கொடுக்கப்படுவது என்று வலியுறுத்தியுள்ளார். இருக்கும் சட்டபூர்வ தடைகளில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டை அகற்றுதல், இராணுவம் அதன் இராணுவ அதிகார வரம்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள் என்று அவர் நன்கு அறிந்துள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் பாதுகாப்பு மந்திரி பல முறையும் கூறியுள்ள கூற்றான ஆப்கானிஸ்தானில் இராணுவம் நிலைகொண்டுள்ளமை "சர்வதேசரீதியான ஆயுதமேந்திய மோதல் அல்ல" என்பது காணப்பட வேண்டும். ஜேர்மனிய வாராந்திர ஏடான Focus கடந்த வாரம் இந்த ஏற்க முடியாத "சர்வதேசரீதியான ஆயுதமேந்திய மோதல் அல்ல" --(அரசாங்க சக்திகளுக்கும், அரசாங்க முறைசாரா போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்)-- உண்மையில் "பொதுவாகப் போர் என்று கருதப்படுவதைத்தான்" குறிப்பிடுகிறது என்று எழுதியுள்ளது.

கட்டுரையின் கருத்துப்படி கூட்டன்பேர்க்கின் பார்வையில் ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் நடவடிக்கைகள் சமாதான காலத்திற்கான வடிவமைப்பு கொண்டுள்ள ஜேர்மனிய குற்றவியில் சட்டத் தொகுப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படக்கூடாது. இதையொட்டி ஜேர்மனிய படையினர் கொலைகாரத் தாக்குதலை தற்காப்பிற்கு நடத்தினரா அல்லது வேறு தேவைக்கா என்ற வினாவிற்கும் முற்றுப் புள்ளி வைக்கிறது. இலக்கின் மீதான தாக்குதல் என்பது இராணுவரீதியானது என நியாயப்படுத்தப்படும்."

பதவி ஏற்ற சில வாரங்களிலேயே, அதிபர் அங்கேலா மேர்க்கெல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடும் முன்பே, புதிய நிர்வாகம் ஜேர்மனிய இராணுவவாதத்தின் மோசமான மரபின் நிலைப்பாட்டிற்கு ஆதரவை நிரூபித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்த நிலைப்பாடு அரசாங்கத்திற்குள் ஒரு அரசாங்கமாக உள்நாட்டு விவகாரங்களிலும் பெரும் கொடூரப் பாத்திரத்தை வகித்திருந்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved