World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The US government's double standard on extradition: CIA agents vs. Roman Polanski

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் இரட்டை வேடம்: CIA முகவர்கள், ரோமன் போலன்ஸ்கி பற்றிய நிலைப்பாட்டில் வேறுபாடுகள்

By David Walsh
6 November 2009

Back to screen version

தண்டனைக்குட்பட்ட 23 CIA மற்றும் விமானப் படையைச் சேர்ந்த கடத்தல்காரர்களை இத்தாலிக்கு அனுப்ப அமெரிக்க அரசாங்கம் மறுப்பதற்கும் லாஸ் ஏஞ்சல்ஸின் திரைப்படத்தயாரிப்பாளர் ரோமன் போலன்ஸ்கி "நீதியை நடைமுறைப்படுத்துவதற்காக" அங்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அதன் உறுதியான முயற்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பரிசீலிப்பது முக்கியமாகும்.

CIA முகவர்களும் (ஒரு விமானப்படை கேர்னலும்), இத்தாலிய உளவுத்துறை அதிகாரிகளுடைய ஒத்துழைப்புடன், அபு ஒமர் என்று அறியப்பட்டிருந்த ஒசாமா முஸ்தபா ஹாசான் நாசர் என்ற எகிப்து சமயகுருவை மிலான் நகர தெருவில் இருந்து பெப்ருவரி 2003ல் கடத்தி அவரை எகிப்திற்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் குரூரமான முறையில் பல ஆண்டுகள் சித்திரவதைக்கு உட்பட்டார். எந்த குற்றச் சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை, ஒரு நீதிமன்றத்தின் முன் அவர் நிறுத்தப்படவும் இல்லை.

உலக சோசலிச வலைத் தளத்தில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மற்றொரு கட்டுரை இவ்வழக்கின் கொடூரத்தன்மையை விளக்குகிறது. ஆனால் அபு ஒமர் தன்னைச் சிறைபிடித்த CIA அலுவலர்கள் கடுமையாக தாக்கினர் என்றும், பின்னர் அவர் எகிப்தில் ஒரு நிலவறைச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், "அங்கு பகலுக்கும் இரவிற்கும் வேறுபாடு காணமுடியாது, எலிகளும், கரப்பான்களும், பூச்சிகளும் ஏராளமாக அவர் உடல்மீது ஊர்ந்து சென்றன", ஒரு வெட்டப்பட்ட மிருகம் போல் "அவர் தலைகீழாக, கால்கள் மேலாக, கைகள் பின்பறும் கட்டப்பட்ட நிலையில், தொங்கவிடப்பட்டிருந்தது", "அடிக்கடி என் உடல் முழுவதும் மின்சார அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டன, என்னுடைய மூளையை வலுவிழக்கச் செய்ய குறிப்பாகத் தலைப் பகுதியில் கொடுக்கப்பட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலானில் வழக்கு நடத்தும் அரசாங்க வக்கீல்கள் நாசரை எகிப்திய அதிகாரிகளுடம் ஒப்படைத்ததுடன் அமெரிக்கத் தொடர்பு முடிந்துவிடவில்லை என்று காட்டும் சான்றுகளை அளித்தனர். CIA ன் மிலான் தலைவரான ரோபர்ட் செல்டன் லேடியும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரும் (நீதிமன்றத்திற்கு வராவிடினும் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவரும்) அபு ஒமர் எகிப்திற்கு அனுப்பப்பட்டபின் நான்கு நாட்களில் கெய்ரோவிற்கு பயணித்து அங்கு இரு வாரங்கள் இருந்ததற்கும் வக்கீல்கள் கைத்தொலைபேசி, விடுதி பதிவு சான்றுகளைக் கொடுத்துள்ளனர். அவர்கள் எகிப்த்தில் சித்தரவதை ஏதேனும் பயனளித்துள்ளதா என்று பார்க்க சென்றிருக்கவேண்டும்.

அபு ஒமர் வழக்கு விசாரணை தீவிரமானதும் வடக்கு இத்தாலியில் இவர் ஓய்வுபெற்று வந்து தங்கியிருந்த வீட்டில் இருந்து லேடி ஓடிவிட்டார். இவர் அமெரிக்காவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்க செய்தி ஊடகத்தில் அவருடைய தீவிரக் குற்றங்களுக்காக "லேடி நீதியை எதிர்கொள்ள வேண்டும்" என்ற கூக்குரல் ஒன்றும் எழவில்லை.

பெப்ருவரி 2007ல் மிலானில் ஒரு நீதிபதி அமெரிக்க முகவர் குழு ஒன்று கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்த பின்னர், புஷ் நிர்வாகம் CIA அதிகாரிகளைக் காப்பாற்ற இருப்பதாக அறிவித்தது. வெளிவிவகாரத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோன் பெலிங்கர் செய்தியாளர் கூட்டத்தில்: "இத்தாலியில் இருந்து அவரை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எதையும் நாங்கள் பெறவில்லை....இத்தாலியில் இருந்து அவ்வாறு வந்தாலும் நாங்கள் அமெரிக்க அதிகாரிகளை இத்தாலிக்கு அனுப்ப மாட்டோம்." என்றார்.

எந்த சந்தர்ப்பத்திலும், வக்கீல்களின் கோரிக்கையான தொடர்புடைய நபர் இத்தாலிக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இத்தாலிய அரசாங்கம் தொடர்ந்து நிராகரித்துள்ளது. அரசாங்க வக்கீலான ஆர்மண்டோ ஸ்பாடரோ செய்தி ஊடகத்திடம் "நீதியில் இருந்து ஓடும், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை பிடிக்க ரோம் ஒரு சர்வதேச பிடியாணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோர இருப்பதாகக் கூறினார். வலதுசாரி பெர்லுஸ்கோனி அரசாங்கம் அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்கும் எனத் தோன்றவில்லை.

இத்தாலிய தீர்ப்பு பற்றி அதன் "ஏமாற்றத்தை" வெளிப்படுத்திய ஒபாமா நிர்வாகம் புஷ்ஷின் கொள்கையைத் தொடர்கிறது. அது CIA குற்றவாளிகளை ஒப்படைப்பதாக இல்லை என்றும் உறுதியாக உள்ளது.

அமெரிக்காவின் CIA முகவர்கள் ஒப்படைக்கப்படுவது பற்றி இத்தாலிய வேண்டுகோளை பரிசீலிக்கும் அலுவலகமான அமெரிக்க நீதித்துறையின் சர்வதேச விவகாரங்கள் அலுவலகம் (OIA) போலன்ஸ்கி விவகாரத்தை முற்றிலும் வேறுவிதமாக நடத்தியுள்ளது. இதன் முகவர்கள் திரைப்பட இயக்குனரின் ஐரோப்பிய நடவடிக்கைகளை குறைந்தபட்சம் கடந்த டிசம்பர் முதல் கண்காணித்துவருகிறது. அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு கிடைத்துள்ள மின்னஞ்சல்களின்படி ஸ்விட்சர்லாந்தில் தங்குமுன் ஆஸ்திரியாவில் கைதுசெய்யப்படக்கூடும் என்பதற்காகத்தான் அங்கு தங்கவில்லை என்றும் செப்டம்பரில் அங்கு இருந்த அதிகாரிகள் அத்தகவலை அவருக்குக் கொடுத்தனர் என்றும் தெரிகிறது.

செப்டம்பர் 25 அன்று OIA அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் வட்டார அரசாங்க வக்கீலுக்கு மின்னஞ்சல் அனுப்பினர். அதில் ஸ்விட்சலாந்து போலன்ஸ்கியை நிறுத்தி வைக்கும் என்று நம்பிக்கையுடன் அதில் கணிப்பு கூறப்பட்டிருந்தது. "பொதுவாக ஸ்விட்சர்லாந்து ஒப்படைக்காக கோரப்படும் நீதியில் இருந்து ஓடுபவர்களை விடுவிப்பதில்லை. ஸ்விஸ் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் ஒப்படைக்கத் தேவையில்லை என உறுதிசெய்யும் வரை அல்லது ஒப்படைக்கலாம் என்று கூறும் வரை தப்பிஓடிவந்தவரை பாதுகாப்பில் வைத்திருக்கும்" என்று மின்னஞ்சல் விளக்கியுள்ளது.

1977ல் இளவயது பெண்ணுடன் பாலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டு அதற்குப் பின்னர் ஒரு உடன்பாட்டை காண நடவடிக்கை எடுத்தபோது ஒரு நீதிபதி அதை ஏற்க முடியாது என்று கூறியபோது அமெரிக்காவை விட்டு ஓடிப்போன போலன்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரத்தில், அமெரிக்கா முற்றிலும் பழிவாங்கும் தன்மையைத்தான் காட்டுகிறது. வலதுசாரி "குடும்ப மதிப்புக்களுக்கு" ஆதரவு கொடுக்கும் செயல் ஆகும். அந்தக்கூட்டம்தான் இப்பொழுது அமெரிக்காவில் சமூகக் கொள்கையின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி போலன்ஸ்கி சார்பில் ஒரு வக்கீல் குழு நீதித்துறை அதிகாரிகளைச் சந்தித்தது. அவ் அதிகாரிகளில் கிளின்டன் நியமித்த துணை உதவி அரசாங்கத் தலைமை வக்கீல் ப்ரூஸ் ஸ்வார்ட்ஸும் உள்ளார். இவர்தான் OIA மேற்பார்வையாளர் ஆவர். இச்சந்திப்பின் நோக்கம் ஒப்படைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று அதிகாரிகளை நம்ப வைத்தல் ஆகும். வக்கீல்கள் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு போலன்ஸ்கியை திருப்பி எடுப்பதற்கு எதிரான வாதங்களைக் கொடுத்தனர். 1977 வழக்கு தொடர்பான நீதித்துறை மற்றும் வழக்கு விசாரணையின் பிழையான குற்றச்சாட்டுக்களை இக்குழு சுருக்கமாக எடுத்துக்கூறி போலன்ஸ்கி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் கலிபோர்னிய விசாரணையில் நியாயமான தன்மை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பிராந்திய அரசாங்க வக்கீல் அலுவலகம் "செல்வாக்கு செலுத்தும்" முயற்சி இந்த வழிவகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. பொதுத் தகவல் அதிகாரியான சாண்டி கிப்பன்ஸ்: "எல்லா சர்வதேச ஒப்படைப்புக்களிலும் பின்பற்றப்படும் வழிவகைகளையும் இதிலும் கையாள்வோம். தேவையான ஆவணங்களை வாஷிங்டனுக்கு அனுப்பி அங்கிருந்து வேண்டுகோள் அனுப்பப்படும்." என்றார்.

உண்மையில் அமெரிக்க அரசாங்கம் பேர்னில் உள்ள அதன் தூதரகத்தின் மூலம் முந்திய மாலையில் போலன்ஸ்கி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று முறையாகக் கேட்டதாக ஸ்விட்சலாந்து அறிவித்துள்ளது.

உளவுத்துறை அலுவலர்கள் முக்கிய குற்றங்களைப் புரிந்தவர்கள் என்று வரும்போது, இதற்கு முன்னால் இருந்த புஷ் நிர்வாகத்தைப் போலவே, ஒபாமா நிர்வாகமும் சர்வதேச சட்டத்தை மீறி குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குற்றத்திற்காக தேடப்படும் ஒரு திரைப்பட இயக்குனர்மீது வழக்கு என்று வரும்போது அது பெரும் ஆர்வத்துடன் செயல்படுகிறது. அவர்மீது விசாரணை நடத்துவது சமூகப் பிற்போக்குத்தனத்தை தூண்டிவிடும் என்பதுடன் அரசாங்கத்தின் அதிகாரங்களையும் வலுப்படுத்தும். இதைவிடத் தெளிவாக ஒரு இரட்டை வேட நடவடிக்கை இருக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved