World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

One million jobs at risk

Ten US states face budget disaster

ஒரு மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து

பத்து அமெரிக்க மாநிலங்கள் வரவு-செலவு திட்ட பேரழிவை எதிர்நோக்குகின்றன

By Patrick Martin
12 November 2009

Back to screen version

புதனன்று வெளியிடப்பட்ட இரு அறிக்கைகள் அமெரிக்காவில் சமூக மற்றும் நிதிய நெருக்கடிகளின் மகத்தான பரிமாணங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கலிபோர்னியாவும் மற்றும் ஒரு 9 அமெரிக்க மாநிலங்களும் தற்போதுள்ள வரவு-செலவு திட்ட காலத்தில் நெருக்கடியைச் சந்திக்கும்போது ஏராளமான பொதுத் துறை ஊழியர்கள் பணிநீக்கம் பெறுவர் என்றும் பள்ளிகள், மற்ற துறைகளிலும் பெரும் குறைப்புக்கள் இருக்கும் என்பதை ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. மற்றொன்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில அரசாங்கங்களை பொருளாதார நெருக்கடியின் முழுப்பாதிப்பு தாக்குகையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளது.

Pew Center மாநிலங்கள் பற்றி வெளியிட்டுள்ள ஆய்வு "Beyond California: States in Fiscal Peril"-"கலிபோர்னியாவிற்கு அப்பால்: மாநிலங்கள் பெரும் நிதியப் பேராபத்தில்" என்ற தலைப்பை கொண்டுள்ளது. கலிபோர்னிய மாதிரியில் வரவு-செலவு திட்ட நெருக்கடியை எதிர்கொள்ளும் அரிசோனா, புளோரிடா, இல்லிநோய், மிச்சிகன், நெவடா, நியூ ஜேர்சி, ஒரேகான், ரோட் ஐலந்து மற்றும் விஸ்கான்ஸின் என்னும் 9 மாநிலங்களைப் பற்றிய ஆய்வை அது கொண்டுள்ளது.

வடகிழக்கு, தெற்கு, மத்திய மேற்கு, பசிபிக் வடமேற்கு மற்றும் கிட்டத்தட்ட முழு தென்மேற்கும். என கலிபோர்னியாவையும் சேர்த்து பத்து மாநிலங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளன: இவை அனைத்திலும் மோத்தமாக 100 மில்லியனுக்கும் மேலான மக்கள் உள்ளனர்; இவை அமெரிக்கப் பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டது ஆகும்.

ஆய்வின்படி, உலகெங்கிலும் உள்ள மந்தநிலை, வீடுகள் குமிழிச்சரிவு என்ற அதே அழுத்தங்கள், கலிபோர்னியாவை கோடை காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும், பொருட்களை அளித்தவர்களுக்கும் கடன்பத்திரங்களை எழுதிக் கொடுக்க வைத்தவை, "இப்பொழுது பல மாநிலங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன; இவை நாடு முழுவதும் பெரும் சேத விளைவுகளைக் கொடுக்கும் திறனுடையவை" என்று உள்ளது.

கலிபோர்னியா, நெவடா, அரிசோனா மற்றும் புளோரிடா என்னும் நான்கு மாநிலங்களில், வீட்டுச் சரிவு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நியூ ஜேர்சியின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை பெரும்பாலும் வோல் ஸ்ட்ரீட் 2008 ல் சரிவுற்றதின் பக்க விளைவுதான்; மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு அது பொறுப்பாக இருந்தது. மற்ற ஐந்து மாநிலங்கள் உற்பத்தித் தொழில்களில் ஏற்பட்டுள்ள சரிவினால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2009 ஜூலை 31 வரை கிடைத்த மாநிலங்களில் புள்ளிவிவரங்களை Pew ஆராய்ந்தது; இதையொட்டி இன்னும் குறிப்பான பொருளாதாரச் சரிவு, குறிப்பாக தொழில்துறை மாநிலங்களான மிச்சிகன், இல்லிநோய் போன்றவற்றிற்கு விளக்கம் தேவையில்லை. மொத்தத்தில் 50 மாநிலங்களுக்கும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் கூட்டுத் தொகை என்பது ஜூலை மாதத்தில் $162 பில்லியனாக இருந்தது; அந்த இலக்கம் பின்னர் மற்றும் ஒரு $16 பில்லியன் உயர்ந்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசாங்க வருவாய், மாநில பட்ஜேட் இடைவெளி, வேலையின்மை விகிதத்தில் மாற்றம், முன்கூட்டி விற்பனை விகிதம், வரிகளை அதிகப்படுத்த அல்லது வரவு-செலவு திட்டங்களுக்கு ஒப்புதல் மாநில சட்டமன்றங்களில் தேவைப்படும் மிகப் பெரிய அறுதிப் பெரும்பான்மை போன்ற அரசியல் தடைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வு 50 மாநிலங்களையும் தரப்படுத்தியுள்ளது. நீண்ட கால கடன்கள், பொதுத்துறை ஓய்வூதியச் செலவினங்கள் ஆகியவற்றை ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; இவை இன்னும் இருண்ட சித்திரத்தைத் தோற்றுவித்திருக்கும்.

கலிபோர்னியாவின் மகத்தான $46 பில்லியன் பற்றாக்குறை மற்ற ஒன்பது மாநிலங்களின் கூட்டுப் பற்றாக்குறையைவிட அதிகமாக இருக்கும் நிலையில், அந்த மாநிலங்கள் அவற்றின் அளவு, மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ளும்போது அதேபோன்ற கணிசமான பற்றாக்குறையைத்தான் எதிர்கொள்ளுகின்றன. மூன்றில் இரு கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் திவால் கொடுத்து, 15 சதவிகிதத்திற்கும் மேலான வேலையின்மையைக் கொண்டிருக்கும் மிச்சிகன் "இன்றைய பிரச்சினைகளை 1960 தர வரவு-செலவு திட்டம் மூலம் தீர்க்க முயல்கிறது" என்பது Pew ஆய்வின் பல கண்டுபிடிப்புக்களில் ஒன்றாக உள்ளது.

குறைந்த தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் என்ற இரு துறைகளிலும் இணைந்து ஏற்பட்ட சரிவால்--lumber மற்றும் கணினி சில்லு உற்பத்தித் துறைகள்--ஓரேகான் பாதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவின் மக்கள்தொகை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல்தடவையாக குறைந்துள்ளது. மாநில வரவு-செலவு திட்டம் பற்றாக்குறையில் இல்லிநோய் இரண்டாம் இடத்தில், கிட்டத்தட்ட $13.2 பில்லியன் பட்ஜேட்டுடன் உள்ளது; ஓய்வுதியப் பணங்களைக் கொடுக்க அது கடன் வாங்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

(Center on Budget and Policy Priorities) வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் பற்றிய மையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆய்வு, மாநிலங்களின் நிதிய நெருக்கடி அடுத்த ஆண்டு இன்னும் மோசமாகப் போகும் என்று எச்சரித்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஜூலை 1ல் துவங்கிய, 2010 நிதிய ஆண்டில் 50 ல் 18 மாநிலங்கள், அதாவது மோன்டனா, வட டக்கோட்டாவைத் தவிர மற்றவை, எதிர்கொண்ட நெருக்கடியின் கடுமை ஓரளவிற்கு கூட்டாட்சி உதவி மற்றும் கடந்த மார்ச் மாதம் இயற்றப்பட்ட ஊக்கப் பொதித்திட்டத்தின் கீழ் குறைந்தது. இந்த உதவி பெரும்பாலானவற்றிற்கு டிசம்பர் 31, 2010 உடன் முடிந்துவிடும்; எனவே புதிய நிதியாண்டு 2011ல் மாநில வரவு-செலவு திட்டங்கள் ஆழ்ந்த மந்தநிலை மற்றும் கூட்டாட்சி ஆதரவு திரும்பப் பெற்றுவிட்டதை அடுத்து, பாதிப்பை இருமடங்காக எதிர்கொள்ளும்.

CBPP அறிக்கை கூறுகிறது: "இந்தத ஆண்டின் பொருளாதார மீட்புச்சட்டத்தின் கீழ் தங்கள் மருத்துவ உதவித் திட்டங்களுக்காக மாநிலங்கள் பெற்று வந்த கூட்டாட்சி உதவி டிசம்பர் 31, 2010ல் ஒரு "உச்சக் கட்டத்தில்" முடிவடைந்துவிடும்; அதையொட்டி மாநிலங்களுக்கு கல்வி, பிற பணிகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவித் தொகைகளும் பெரிதும் தீர்ந்துவிடும். இன்னும் அந்தத் தேதிக்கு ஓராண்டு உள்ளது என்றாலும், பிரச்சினை இப்பொழுதே பெரிதாகிவிட்டது."

மாநில அரசாங்கங்கள் 2011 நிதி ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட தயாரிப்புத் திட்டத்தை விரைவில் துவங்கும் என்பதே இதற்குக் காரணம்; ஏனெனில் பெரும்பாலான கவர்னர்கள் டிசம்பர் 2009ல் இருந்து பெப்ருவரி 2010க்குள் சட்டமன்றங்களுக்கு வரவு-செலவு திட்டங்களை அனுப்ப வேண்டும்; அப்பொழுதுதான் அது விவாதத்திற்குட்பட்டு, இயற்றப்பட நேரம் கிடைக்கும். இதன் பொருள் பெரும்பாலான மாநில கவர்னர்கள் வரவிருக்கும் வசந்த காலத்திற்கு முன்பே மகத்தான வரவு-செலவு திட்ட குறைப்புக்களையும் வரி அதிகரிப்புக்களையும் முன்மொழிவர் என்பதாகும்.

மாநிலங்களுக்கு இன்னும் கூடுதலான கூட்டாட்சி உதவி இல்லை என்று வைத்துக் கொள்ளும்போது--இதுதான் ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரஸில் இரு கட்சித் தலைவர்களும் கொண்டுள்ள நிலைப்பாடு--மாநில அரசாங்கங்கள் எடுக்கும் பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கைகள் "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஒரு முழு சதவிகிதப் புள்ளியைக் கொள்ளக்கூடும். அதையொட்டி பொருளாதாரத்திற்கு 900,000 வேலையிழப்புக்கள் அடுத்த ஆண்டு நேரிடும்" என்று CBPP அறிக்கை கூறுகிறது.

மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் செயற்பாடுகள் அமெரிக்க உள்நாட்டு மொத்த உற்பத்தியில் எட்டில் ஒரு பங்கு உள்ளன; இதனால் மாநில வருவாய்களில் 25 சதவிகிதச் சரிவு என்பது செலவினங்களில் அதே போன்ற சரிவைக் கொடுக்கும் என்று வைத்துக் கொண்டால், அமெரிக்கப் பொருளாதாரம் முழுவதிலும் அது கணிசமானவிளைவைக் கொடுக்கும்.

"இந்த மந்த நிலையின்போது வருவாய்ச் சரிவு என்பது முன்னோடியில்லாத வகையில் உள்ளது; இரண்டாம் உலகப் போர்க் காலத்திற்குப் பின் இது மிக அதிகமானது ஆகும். மாநில வரி வருமானங்கள் 2008 ன் கடைசிக் காலாண்டில் இருந்து குறைந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல்-ஜூன் காலாண்டு என்னும் முக்கியமான காலத்தில், மாநில வரி வருமானங்களின் மிக அதிகப் பகுதி வசூலிக்கப்படுகையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 2009 ல் 16.6 சதவிகிதமாகக் குறைந்தது. வருமான வரிமூலம் கிடைக்கும் வருவாய் 27.5 சதவிகிதம் சரிந்தது; விற்பனை வரி மூலம் கிடைக்கும் வருவாய் 9.5 சதவிகிதம் குறைந்தது." என்று CBP ஆய்வு தெரிவிக்கிறது.

கூட்டாட்சியின் ஊக்கப்பொதி இந்த நிதியாண்டு மாநிலப் பற்றாக்குறைகளில் 30 முதல் 40 சதவிகிதம் வரை நிரப்பியது: இதையொட்டி மாநிலங்கள் 255,000 கல்வித்துறை பணிகள் மற்றும் பிற பகுதிகளில் 63,000 வேலைகளையும் தக்க வைக்க முடிந்தது; இது கல்வித்துறை மற்றும் வெள்ளை மாளிகை கொடுத்துள்ள மதிப்பீடுகளில் இருந்து தெரிய வருகிறது. இப்பொழுது இந்த வேலைகள் அனைத்தும் ஆபத்திற்கு உட்படும்; இதைத்தவிர வரும் ஆண்டு வரவிருக்கும் நூறாயிரக்கணக்கான வேலையிழப்புக்களுடன் இவையும் சேரும்.

ஏற்கனவே வேலையின்மை விகிதத்தை 10.2 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்திவிட்ட நடைபெற்றுவரும் பொருளாதாரப் பின்னடைவானது, மாநிலங்களை ஒரு பெரும் நிதியச் சிக்கலில் தள்ளியுள்ளது. விற்பனை மற்றும் வருமான வரிமூலம் கிடைக்கும் வருவாய்கள் இரண்டும் சரிந்து விட்டன; அதே நேரத்தில் அரசாங்கப் பணிகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கும்; குறிப்பாக மருத்துவ உதவி என்று தேவையை ஒட்டி வரும் திட்டங்களில். வேலையின்மை விகிதம் 11 சதவிகிதத்தை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உணவுத் தேவைகள், உஷ்ணப்படுத்துதல் மற்றும் வீடுகளுக்கான உதவிகளுக்கு தேவை அதிகரிக்கையில், பல மாநிலங்களும் நேரடி திவால்தன்மையைத்தான் எதிர்கொள்ளும்.

நிதிய நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சமூகத் தேவைகளின் பரிமாணங்கள் மாநில அரசாங்கங்களின் பட்ஜேட்டுகளைக்காட்டிலும் அதிகம் உயர்ந்துள்ளன. ஆனால் இந்தத் தொகைகள் ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி கட்டுப்படுத்தும் காங்கிரஸ் இப்பொழுது அவற்றின் இரு முக்கிய முன்னுரிமைகளுக்கு கொடுக்கும் இருப்புக்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்தது ஆகும்: அதாவது வோல் ஸ்ட்ரீட்டின் நிதிய நலன்களுக்கு பிணை எடுப்பு கொடுத்தல் மற்றும் புஷ் நிர்வாகம் துவங்கிய இரு போர்களைத் தொடர்தல் (ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை விரிவாக்கம் செய்தல்) எனபவையே அவை.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்கு ஆகும் மொத்த செலவு--பென்டகன் வரவு-செலவு திட்டத்தில் $130 பில்லியன் மற்றும் "நெருக்கடி" செலவு சட்டவரைவில் எதிர்பார்க்கப்படும் கூடுதலான $40-50 பில்லியன்--அனைத்து மாநிலலங்களின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகளை ஈடுகட்ட முடியும். பெரும் செல்வந்தர்களுக்குப் பிணையெடுப்பு, $23.7 டிரில்லியன்கள் கடன்கள், உத்தரவாதங்கள், நேரடி ரொக்கம் உட்செலுத்தல் ஆகியவற்றில் நேர்ந்தவை மொத்த மாநிலங்கள் பற்றாக்குறையைப் போல் 100 மடங்கையும்விட அதிகம் ஆகும்.

இவ்விதத்தில் மாநிலங்களின் நெருக்கடி பொருளாதாரப் பின்னடைவின் தவிர்க்க முடியாத, வருந்தத்தக்க ஆனால் தவிர்க்க முடியாத பக்க விளைவு அல்ல. ஒபாமாவும் காங்கிரஸில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரும் வேண்டுமென்றே விரும்பிய கொள்கையின் விளைவுதான்--இதற்கு காங்கிரஸின் குடியரசுக் கட்சியினர் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தின் முழு ஆதரவு உண்டு; இது பல மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது. "எந்த முக்கிய" அரசியல் குரலும் முக்கிய கூட்டாட்சி வளங்கள் திசைதிருப்பப்பட்டு மாநில திவால்கள் தடுக்கப்பட வேண்டும் என்றோ கல்வி, பொதுச் சுகாதாரம் போன்ற அடிப்படைப் பணிகள் காக்கப்பட வேண்டும் என்றோ வெளிப்படவில்லை; இவை பெரிதும் கூட்டாட்சி நிதிமூலம், மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் செயல்படுத்துபவை ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved